சனி, 23 நவம்பர், 2024

காஃபி வித் கிட்டு - 212 - சுரால் Bபட்டோரி - தலை நோக்குப் பார்வை - கம்பீரம் - Together With Joy - படம் சொல்வதென்ன - அனுபவ அறிவு - படமும் வரிகளும்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பத்தொன்பது பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் சுற்றுலா தலம் :  சுரால் Bபட்டோரி



ஹிமாச்சல் மற்றும் உத்திராகண்ட் ஆகிய இரண்டு மாநிலங்களும் என்றைக்கும் பயணிக்க எனக்கு பிடித்த மாநிலங்கள்.  இந்த இரண்டிலும் நிறைய பிரபலமான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன என்றாலும் பலரும் அறியாத ஆனால் அட்டகாசமான இடங்கள் பார்க்க உண்டு.  அப்படி ஒரு இடம் சுரால் Bபட்டோரி என்கிற இடம்.  பாங்கி சமவெளிப்பகுதியில் இருக்கும் இந்த இடம் வருடத்தின் 6 மாதங்களுக்கு மேல் பனி உறைந்திருக்கும், மேலும் இரண்டு மாதங்கள் மழைக்காலம். ஆக மொத்தம் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் இங்கே செல்ல முடியாது. மீதி மூன்று மாதங்களில் மட்டுமே இங்கே செல்ல முடியும் என்றாலும் மிக மிக சிறப்பான இடமாக இருக்கிறது.  மிகவும் ஆபத்தான சாலைகள் வழி இங்கே பயணிக்க வேண்டியிருக்கும் என்பதையும் சொல்லிவிடுகிறேன்.  இந்த இடத்தின் அழகு நிச்சயம் வைக்கும் என்பதை நீங்களும் உணர கீழே உள்ள சுட்டி வழி அந்த இடத்தினை பார்க்கலாம். பாருங்களேன். 


Sural Bhatori - India’s Most Beautiful and Hidden Tourist place in Pangi, Chamba, Himachal Pradesh (youtube.com)

 

******

 

பழைய நினைப்புடா பேராண்டி : தலை நோக்குப் பார்வை


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - தலை நோக்குப் பார்வை - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


எனக்கு முன்னே ஒரு இளம் ஜோடி – என்னை விட மெதுவாக கையைப் பற்றியபடியே Sweet Nothings பேசியபடி – நடந்து கொண்டிருந்தார்கள்.  நான் அவர்களைத் தாண்டிச் சென்று ஒரு ரவுண்ட் முடித்து அடுத்த முறை பார்க்கும்போது அவர்கள் அருகே ஒரு சிறிய கும்பல்.


என்னடா எனப் பார்த்தால் – அங்கே ஒருவரிடம் அந்த இளம்பெண் சண்டை பிடித்தபடி இருந்தார்! என்ன விஷயம் எனப் பார்த்தபோது - அந்த இளைஞரின் தலையைப் பார்த்தபடியே சிரித்துக் கொண்டிருந்திருக்கிறார் ஒருவர்.  அந்த இளைஞருக்கு தலை முடி இல்லை – சற்றே இள வழுக்கை போல!


”கல்யாணம் பண்ணிக்கொண்ட நானே அவரைப் பார்த்து சிரித்ததில்லை, நீ எப்படி அவர் தலையைப் பார்த்து சிரித்தாய், உனக்கு மட்டும் என்ன தலைமுடி என்ன ஆறடியா இருக்கிறது? உனக்கும் தான் சொட்டை” என கண்டபடி திட்ட, திட்டு வாங்கிக் கொண்டிருக்கும் அந்த ஆளை அப்போது தான் பார்த்தேன் – அட நமக்குத் தெரிந்த மனிதர் தான்! அவருக்கு வேலையே இது தான்!


எங்கே அவரைப் பார்த்தாலும் அவர் முதலில் பார்ப்பது நம் தலையைத் தான்! அடுத்தவர் தலையில் முடி இருந்தால் இவர் முகத்தில் சோகம் ததும்பும்! அப்படி வழுக்கையாக இருந்துவிட்டால் இவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் பல்பு போல அப்படி ஒரு பிரகாசம்! அவரது வழுக்கையை விட பெரிய வழுக்கையாக இருந்தால் பத்தாயிரம் வாட்ஸ் பல்பு அவர் முகத்தில்!


மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!  


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை : கம்பீரம்



கடந்து வந்த வாழ்வின் 

மேடு பள்ளங்கள்

முகத்தில் பிரதிபலிக்க

கரடுமுரடான தரையிலும்

கம்பீர அமர்வு. 

எழும்பிப் பறக்க

சிறு காற்றுக்கு 

காத்திருக்கும் காகிதமாய்

வெறித்த பார்வையில்

எஞ்சியிருக்கும் ஆன்மா. 

அவிழ்த்து நின்றால்

தரைபுரளுமோ 

கருமை மாறா

அடர் கூந்தல்.,?! - நிலா மகள்


படம்: Prakash Sethu 


******



இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : Together With Joy


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக VIVO MOBILE விளம்பரம் ஒன்று உங்கள் பார்வைக்கு.  தீபாவளி சமயத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த விளம்பரம் - ஹிந்தியில் இருந்தாலும், ஆங்கிலத்தில் சப் டைட்டில் இருக்கிறது என்பதால் புரிந்து கொள்வதில் சிரமம் இருக்காது. பாருங்களேன்.


மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால், கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம். 


Celebrate this Diwali #TogetherWithJoy (youtube.com)


******


இந்த வாரத்தின் ரசித்த படம் :  படம் சொல்வதென்ன?




Pawel Kuczynski எனும் நபர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். 48 வயதான இவர் தற்கால நிகழ்வுகளை பிரதிபலிக்கும் விதமாக பல படங்களை/ஓவியங்களை உருவாக்குகிறார்.  அப்படி உருவாக்கிய படங்களில் சுமார் 140 படங்களுக்கு அந்த நாட்டில் பரிசும் வென்றிருக்கிறார் என்று தெரிகிறது.  அப்படி அவர் உருவாக்கிய இந்த படம் மூலம் என்ன சொல்லவருகிறார் என்று உங்களுக்குப் புரிகிறதா? ஒரே ஒரு படம் (மேலே உள்ளதில் முதல் படம்) முகநூலில் பார்த்தேன்.  அதன் பிறகு இவரைக் குறித்து இணையத்தில் தேடியபோது, இவரது உருவாக்கங்கள் பலவற்றை ஒரு தளத்தில் பார்க்க நேர்ந்தது. என்ன ஒரு கற்பனை இவருக்கு. அவரது கைவண்ணத்தில் உருவான படங்களை நீங்களும் பார்க்க விரும்பினால் கீழே உள்ள சுட்டி வழி சென்று பார்க்கலாம்.  பாருங்களேன். 


Pawel Kuczynski Art Collection (pictorem.com)


******


இந்த வாரத்தின் பகிர்வு :  அனுபவ அறிவு எப்படி உதவும்?



ஒரு கிராமத்தில் ஒரு மிகப் பெரிய மைதானம். அதில் ஒரு தொழிற்சாலை கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.


அதற்காக பெரிய அலுவலர்களும், பொறியியல் வல்லுநர்களும், தொழில் அதிபர்களும் வந்து அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.


தொழிற்சாலை வாசற்பகுதி என்று தீர்மானிக்கப்பட்ட இடத்தில் ஒரு மிகப் பெரிய பாறாங்கல் இருந்தது. இதை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று யோசித்தனர். ஒவ்வொருவரும் அவரவருக்குத் தோன்றிய யோசனையைச் சொன்னார்கள்.


ஒரு என்ஜினியர் ஒரு டைனமைட் வெடிகுண்டு வைத்துப் பாறாங்கல்லை வெடித்து சிதற வைத்து அப்புறப்படுத்தலாம் என்றார். ஒருவர் பெரிய பெரிய துண்டுப் பாறைகள் ஆக்கி 'கிரேன்' மூலம் தூக்கி அப்புறப்படுத்தலாம் என்றார். இவர்கள் சொன்ன யோசனைக்கு நேரமும், பொருள் செலவும் அதிகமாக இருந்தன.


நண்பகல் வந்தது. அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவர், என்ன எல்லோரும் பேசிக்கிறாங்க என்று வினவ, பாறாங்கல்லை அகற்றுவது பற்றிப் பேசுவதாகச் சொன்னார்கள். அதற்கு இவர் "இதற்கு ஏன் இவ்வளவு யோசனை? பக்கத்திலேயே,பெரிய அளவில் பள்ளம் தோண்டி கல்லைத் தள்ளிவிட்டு, மண்ணால் மூடிவிட வேண்டியதுதானே” என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருந்தார். யோசிக்காமல் ‘டக்' கென்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு கூடியிருந்தவர்கள் ஆச்சரியத்தால் வியந்தனர். இதுதான்  'அனுபவ அறிவு' என்பது.


******


இந்த நாளின் சவால் :  படமும் வரிகளும்


சமீப நாட்களாக மத்யமர் முகநூல் குழுவில் புதன் கிழமைகளில் புதன் சவால் என்ற தலைப்பில் ஒரு படம் பகிர்ந்து அதற்கான வரிகளும் எழுதுகிறார்கள். நிறைய படங்களும் அதற்கான வரிகளும் வருகின்றன.  நிறைய சுவாரஸ்யமான, நகைச்சுவையான பதிவுகள் வெளிவருகின்றன.  படமும் வரிகளும் முன்னர் வலைப்பூவிலும் இப்படி நிறைய பேர் வெளியிட்டது உண்டு.  இப்பக்கத்தில் இப்படி பதிவுகள் இப்போதும் வருகின்றனவே.  அப்படி பார்த்த ஒரு படமும் அதற்கான வரிகளும் கீழே. எழுதியவர் தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன் அவர்கள். படம் அளித்தால் நீங்கள் வரிகள் எழுத தயாரா? சொல்லுங்களேன். 



என்ன ரொம்பத்தான் ஒட்டிட்டு நிக்கிறே?


போன பிறவியிலே  கணவன் மனைவியா தினமும் காரசாரமா சண்டை போட்டோம்ல.... கடவுள் நம்மை பச்சைமிளகாயா படைச்சு தள்ளிட்டாரு... ம்ம்ம்...

 

******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

23 நவம்பர் 2024

2 கருத்துகள்:

  1. தலை நோக்குப் பார்வைக்கும், எல்லாரையும் ரோடு ரோலர் போன்ற ஒன்றை உபயோகித்து பூமியில் அழுத்தும் படத்துக்கும் தொடர்பு உண்டு போலத் தெரிகிறதே

    பதிலளிநீக்கு
  2. பூனைச் சவாரி, முன்னால் எலி... எனக்கு நினைவில் வந்தது நம் அரசியல்வாதிகள்தாம். அடுத்த ஆட்சியில் பாலாறும் தேனாறும் என்று ஆசை காட்டிக்கொண்டே மக்கள் முதுகில் சவாரி செய்வதைத்தான் படம் பிரதிபலிக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....