அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட தூங்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு அடுத்த பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம். எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!
நான் பிச்சைக்காரன் அல்ல - 27 அக்டோபர் 2024:
தலைநகர் தில்லியில் உள்ள பிரபலமான இடங்களில் ஒன்று கன்னாட் பிளேஸ் (Connaught Place). Outer Circle, Inner Circle என்கிற இரண்டு வட்ட வடிவ பாதைகளும் அதில் இருக்கும் ஒரே மாதிரியான வடிவமைப்பு உள்ள கட்டிடங்களும் இருக்கும் இடம். International முதல் இந்திய brand வரை எல்லா பெரிய, பிரபல நிறுவனங்களும் கடை விரித்து இருக்கும் இடம். இந்த இடத்தைப் பார்த்தால், இங்கே சென்றால் நமக்கு Inferiority Complex வந்து விடும் என்று ஒரு நண்பர் சொல்வார். ஏனெனில் அங்கே கிடைக்கும் பொருட்களின் விலை அப்படி. வரும் மக்களும் பெரிய பணக்காரர்கள் என்றும் சொல்வார்.
சாதாரண மக்களும் இங்கு வருகிறார்கள் என்றாலும் சும்மா சுற்றிப் பார்த்து செல்லலாமே தவிர ஒன்றும் வாங்க முடியாது. அவர்களுக்கு பக்கத்தில் இருக்கும் பாலிகா பஜார், ஜன்பத் மார்கெட் போன்றவை தான் பொருட்கள் வாங்கும் இடமாக இருக்கும். வரும் மக்களின், நடை, உடை, பாவனை என அனைத்திலும் ஒரு வித பணக்கார தோரணை பார்க்கும் போது பலருக்கும் எனது நண்பர் சொல்வது போல தாழ்வு மனப்பான்மை வரக்கூடும். ஆனாலும் என்னைப் போன்ற சிலர் அங்கே சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.
நேற்றைய மாலை நேரம் எனது நடை இந்தப் பகுதியில் தான். Inner Circle முழுவதும் ஒரு சுற்று சுற்றி அங்கிருந்து அப்படியே வீடு திரும்பினேன். எத்தனை எத்தனை மனிதர்கள், எத்தனை விதமான உடைகள், மொழிகள், காதில் விழும் சம்பாஷனைகள், செல்ல கொஞ்சல்கள் என பல விஷயங்கள் பார்க்கவும் கேட்கவும் கிடைக்கும் ஒரு இடம். ஆங்கிலத்தில் சொல்வதென்றால் It's the most happening place in Delhi. பாதையில் பல இடங்களில் நாம் அமர்ந்து கொள்ள இருக்கைகளும் உண்டு. அப்படி ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருந்தால், மக்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தால் நன்கு பொழுது போகும்.
பலவித மனிதர்களையும் இங்கே சந்திக்க முடியும். பெரிய கடைகளைத் தவிர நடைபாதை கடைகளும் இங்கே உண்டு. ஒரு கை ரேகை பார்ப்பவர் கூட அங்கே இருக்கிறார். தவிர சில கலைஞர்களும். ஒரு இளைஞர் Guitar வாசித்தபடி ஹிந்தி திரைப்பட பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். அவர் முன்னர் ஒரு Backpack bag வைத்து அதில் ஒரு QR code….. அவர் வாசிப்பதும் பாடுவதும் பிடித்தால் விருப்பட்ட பணத்தை Online மூலம் அனுப்பலாம். அவர் அருகே நிறைய இளைஞர்கள் கூட்டம். படம்/காணொளி எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அங்கிருந்து நடக்க சற்றே தொலைவிலிருந்து இனிமையான குழலோசை ஒன்று காதில் விழுகிறது. ஒரு முதியவர் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தார். அவர் அருகே “நான் பிச்சைக்காரன் அல்ல….. என் இசையால் உங்கள் மனதைத் தொட விரும்பும் கலைஞன்” என்று எழுதி வைத்திருக்கிறார். அவர் வாசிப்பதை காணொளி ஆக எடுப்பதற்குள், படம் எடுப்பதற்குள் சில காவலர்கள் வந்து “சீக்கிரம் இடத்த காலி பண்ணு” என்று துரத்த ஆரம்பித்தார்கள். அதனால் தெளிவான படம் எடுக்கவும் முடியவில்லை. அவருக்கு ஒரு சிறு அன்பளிப்பு அளித்து நகர்ந்தேன்.
மனதில் சிந்தனைகள் ஓடிய வண்ணம் எனது நடை தொடர்ந்தது. ஒரு பக்கம் கோடிகளில் பணப்புழக்கம்….. அதே இடத்தில் ஒரு சிலர் ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடும் விதத்தில் வாழ்க்கை. ஒரு சிலர் ஃபேஷன் என்ற பெயரில் விலை உயர்ந்த Torn Jeans அணிந்து தனது உடல் பாகங்களைக் காண்பித்தபடி நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசி நடக்க, வேறு சிலரோ கிழிந்த தனது ஆடைகளால் மானத்தை மறைக்க போராடிக்கொண்டு அதே இடத்தில் பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
பெரிய அளவில் I am not a beggar என்று எழுதிய பதாகையுடன் அமர்ந்து குழல் வாசித்துக் கொண்டிருந்த முதியவர் மனதை விட்டு அகல மறுக்கிறார். எல்லோருக்கும் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது……
வேறு சில சிந்தனைகளுடன் மீண்டும் ஒரு நடை நல்லது தொடரில் சந்திப்போம்.
******
கோடிகள் புரளும் இடம் - 28 அக்டோபர் 2024:
தலைநகர் தில்லியின் பழைய தில்லி என அழைக்கப்படும் இடத்தில் ஒரு பிரபலமான இடம் ச(dh)தர் பஜார். பார்ப்பதற்கு மூத்திர சந்துகள் போல இருந்தாலும் சந்துக்குள் பல கடைகள். ஒவ்வொரு கடையும் நடத்தும் வியாபாரம் குறித்த கணக்கே இல்லை. கடைகளின் எண்ணிக்கையோ அல்லது அங்கே நடக்கும் வியாபாரம் எத்தனை கோடிகள் என்றோ துல்லியமான கணக்கீடுகள் இல்லை என்றே சொல்ல வேண்டும். தோராயமாக சில கணக்குகள் இருந்தாலும் உண்மையில் அங்கே எத்தனை கோடிகளுக்கு வியாபாரம் நடக்கிறது என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். இந்த இடத்தில் இன்னது தான் கிடைக்கும் என்றில்லை, குண்டூசியிலிருந்து பெரிய குத்தடுக்கு வரை, அழகு சாதனங்களிலிருந்து கடைசி பயணத்திற்கான விஷயங்கள் வரை, பிளாஸ்டிக்கிலிருந்து இரும்பு வரை என இங்கே கிடைக்கும் பொருட்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
பெரும்பாலும் Wholesale விற்பனை என்றாலும் Retail விற்பனையும் இங்கே உண்டு. சின்னச் சின்ன கடைகள் - ஒரு கடைக்கு 10 * 6 அடி தான் என்றாலும் அங்கே இருக்கும் பொருட்கள் விதம் விதமானவை. அவர்களுக்கு தனியாக Godown இருக்கும் என்றாலும், சிறு கடையிலிருந்து தான் பிரதான வியாபாரம். இந்தப் பகுதியில் இருக்கும் பல கடைகளிலிருந்து பொருட்களை மொத்தமாக வாங்கிக் கொண்டு சென்று அவரவர் இருக்கும் பகுதியில் சில்லறை விலையில் விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் அதிகம். பேட்டரி ரிக்ஷாக்கள் மூலம் பிரதான சாலைக்கு வந்து விட்டாலும் இந்த இடத்திற்கு நடந்து சென்று தான் பொருட்களை வாங்க முடியும். எப்போதும் மக்கள் கூட்டம் அலைமோதும் இடம் இது. தவிர பொருட்களை தலையில் சுமந்து செல்ல நிறைய மனிதர்கள் நடமாடுவார்கள். சாதாரண நாட்களில் இங்கே நடக்கும்போதே மற்றவர்கள் நம் மீது மோதிக்கொண்டு செல்வது வழக்கம். அதிலும் பண்டிகை நாட்கள் எனில் கேட்கவே வேண்டாம். கட்டுக்கடங்காத கூட்டம் இருக்கும்.
ஆனாலும் இங்கே வரும் மக்களின் எண்ணிக்கையில் எப்போதுமே குறைவு இருப்பதில்லை. இந்த மக்கள் வெள்ளத்தில் நீங்கள் புகுந்து வெளியே வருவது என்பது பிரம்மப்பிரயத்தனம் போலதான். ஆனாலும் நானும் சில சமயங்களில் இந்த இடத்திற்குச் சென்று வருவதுண்டு - Just to feel the vibe! ”தேவையா இது உனக்கு ?” என்று என்னை நானே கேட்டுக்கொண்டாலும், வருடா வருடம் இங்கே சென்று விடுகிறேன்! சென்ற சனிக்கிழமை அன்று கூட இங்கே சென்று வந்தேன். சில அலங்காரப் பொருட்களை வாங்கி வருவதற்காக! தீபாவளி என்பதால் அதீத அளவில் கூட்டம் இருந்தது. இருந்தும் ஒரு எல்லை வரை பேட்டரி ரிக்ஷாவில் சென்று அங்கேயிருந்து நீண்ட நெடும் நடை - முடிந்த வரை யார் மீதும் மோதிக்கொள்ளாமல் நடந்து தப்பித்து வந்தேன்! எத்தனை எத்தனை மனிதர்கள், எத்தனை விஷயங்கள் அங்கே விற்பனைக்கு இருக்கிறது, மனிதர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்றெல்லாம் பார்க்கும்போது, நமது கஷ்டங்கள் எதுவுமே பெரிதல்ல என்று தோன்றிவிடும்.
நம் ஊரில் பாழும் வயிற்றுக்காக உழைக்க வேண்டியிருக்கிறது என்று சொல்வோம் இல்லையா, அது போல, இங்கே ஹிந்தியில் தாம் செய்யும் செயல்கள் அனைத்தும் “பாபி பேட் கா சவால் ஹே!” என்று சொல்வது வழக்கம். அதாவது பாவப்பட்ட வயிற்றுக்காக என்று அர்த்தம் கொள்ளலாம்! அங்கே பெரிய பெரிய மூட்டைகளை அனாயாசமாக சுமந்து, மக்கள் கூட்டத்தில் எடுத்துச் செல்லும் மனிதர்களைக் காணும்போது நமது வாழ்க்கை பெரிய சுமையாகவே தெரியாது. சின்னச் சின்ன சந்துகள் என்பதால் இங்கே வண்டிகள் எதுவும் ஒரு எல்லைக்குப் பிறகு வராது. கடைக்கு வர வேண்டிய பொருட்கள், எத்தனை பாரமாக இருந்தாலும் தலையில் சுமந்து கொண்டு தான் வருகிறார்கள். ஒரு பெரிய சுமையுடன் இந்தக் கூட்டத்தில் நடப்பதை சற்றே யோசித்துப் பாருங்கள்… யோசிக்கும்போதே நமக்கு தலையும், உடலும் வலித்து, அசதியாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.
மனிதர்கள் இப்படியும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். உங்களுக்கு சந்தேகம் இருப்பின், எனது தொல்லைகள், பணிகள் மட்டுமே கடினம் என்ற நினைப்பு இருப்பின் ஒரு முறை இது போன்ற இடத்திற்குச் சென்று வாருங்கள். நிச்சயம் உங்கள் எண்ணங்கள் மாறும். வேறு ஒரு நடை நல்லது பதிவில் இன்னும் சில எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
29 நவம்பர் 2024
எத்தனை எத்தனை மனிதர்கள்... எத்தனை எத்தனை வாழ்க்கை முறைகள்...
பதிலளிநீக்குமதுரையில் 80 களில் டவுன் ஹால் ரோடில் இதே போல ஒருவர் அமர்ந்து அருமையாக - மிக அருமையாக - புல்லாங்குழல் இசைத்துக் கொண்டிருப்பார். அபார திறமை.
பதிலளிநீக்குஉழைக்கும் வர்க்கம்.
பதிலளிநீக்குநம்மில் பலர் பகட்டாக வாழும் மனிதர்களைப் பார்த்துதான் ஏங்குகின்றார்கள்.
பதிலளிநீக்குஏழை மனிதர்களை கண்டு கொள்வதில்லை.
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.
- கவிஞர் கண்ணதாசன்
காலையிலேயே கனாட்ப்ளேஸ், ஜன்பத், பாலிகா பஜார் எல்லா இடங்களுக்கும் அழைத்து சென்றதற்கு நன்றி 🙏
பதிலளிநீக்குகனாட்ப்ளேஸ் ல் ஒரு பக்கம் திறமைகளை வெளிப்படுத்துவோரும் உண்டு, ஒரு பக்கம் ஊனமுற்றோர் போல வேஷம் போட்டு கொண்டு ஏமாற்றி பிச்சை எடுப்போரும் உண்டு. பதிவினை படிக்கும் போது தீபாவளி சமயத்தில் சதர் பஜார் போய் வந்த நினைவுகள் வந்து சென்றது.
கன்னாட் பிளேஸ் (Connaught Place), ஜன்பத், பாலிகா பஜார் - ஆஹா எனக்கு இதை வாசித்ததும், எவ்வளவு வருஷம் ஆச்சு இந்த இடங்கள் போய்....எனக்கு ரொம்பப் பிடிக்கும் இந்த இடங்களில் சுற்ற. ஆனால் வெயில் காலத்தில் அல்ல!!!!!!! இப்பலாம் தில்லி சென்றாலும் அதன் எல்லையில் இருக்கும் குருகிராமம் மட்டுமே இருந்துவிட்டு சட்டுபுட்டுனு வந்துவிடுகிறேன். இனியேனும் போக வாய்ப்பு கிடைத்தால் ஒரு 4, 5 நாளாவது தங்கி இந்த இடங்கள் மீண்டும் சென்று வர வேண்டும் என்ற ஆசை வருகிறது. கூடவே இன்னும் சில இடங்கள் ..
பதிலளிநீக்குகீதா
பழைய தில்லியும் ஆஹா....இதுவும் மேலே சொன்ன கருத்தின் லிஸ்டில்
பதிலளிநீக்குஅந்த இடம், சென்னை பாரிஸ் கார்னர், பெங்களூர் சிட்பெட், commercial street - சிவாஜிநகர் மார்க்கெட் போன்று எனலாம். கூட்டம்...மோதிக்கொள்ளாமல் செல்வது ரொம்பக் கடினம்...இந்த இடங்களுக்குச் செல்லும் போது நீங்கள் சொல்லியிருக்கும் வரிகளை நானும் நினைப்பதுண்டு டிட்டோ, அது போல இந்த இடங்களுக்குச் செல்லும் போது ஒரு vibe யெஸ்.....அதற்காகவே நானும் சென்றதுண்டு சென்னையில் இருக்கறப்ப. இங்குதான் அதிகம் செல்ல முடிவதில்லை. போவதற்கு 1 1/2 - 2 மணிநேரம் ஆகிவிடும் அதனால் முடிவதில்லை. இவர்களைப் பார்க்கும் போது நம் கஷ்டம் எதுவும் கஷ்டமே இல்லை என்றே தோன்றும்.
கீதா
“நான் பிச்சைக்காரன் அல்ல….. என் இசையால் உங்கள் மனதைத் தொட விரும்பும் கலைஞன்” என்று எழுதி வைத்திருக்கிறார். //
பதிலளிநீக்குஅழகான வரி...இவர்தான் மனதைக் கவர்கிறார்.
கீதா
அதிக பணத்தை வைத்துக்கொண்டு ப்ராண்டட் பொருட்களை வாங்கி அணிந்து செழிப்பைக் காட்டும் மனிதர்கள். இதே நேரம் உழைப்புக்கு அல்லாடும் மக்கள் படும்பாடு என கண்முன்னே காணும் பல காட்சிகள் கண்டோம். இதுதான் உலகம்.
பதிலளிநீக்குஎல்லோருமே வயிற்றுப்பாட்டுக்குத்தான் உழைக்கிறோம். நமக்கு மேலே உள்ளவர்களைப் பார்க்கும் மனம், நமக்குக் கீழே உள்ளவர்கள் கோடி என்பதைப் பார்க்க மறந்துவிடுகிறது
பதிலளிநீக்கு