அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினைந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு அடுத்த பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம். எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!
வறண்ட கொள்ளிடம் - 6 அக்டோபர் 2024:
“நவராத்திரியே இதோ வந்தாச்சு… இன்னும் சதுர்த்திக்கு வாங்கின மண் பிள்ளையாரை கரைச்ச பாடில்லை…” என்று சொல்லிக்கொண்டிருந்தார் இல்லத்தரசி. இதற்கு மேல் தாமதித்தால் பின்விளைவுகள் பலமாக இருக்கலாம் என்பதால் நவராத்திரிக்கு ஒரு நாள் முன்னர் துணி பையில் போட்டு வைத்திருந்த பிள்ளையாரை எடுத்துக் கொண்டு சைக்கிளில் கொள்ளிடம் வரை சென்றேன். கொள்ளிடக் கரைக்குச் சென்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மணல்… தில்லியிலிருந்து சில நாட்கள் முன்னர் இரயிலில் வரும்போது பார்த்ததில் தண்ணீர் இருந்தது. பத்து நாட்களில் வறண்டு கிடக்கிறது. “கொள்ளும் இடம் கொள்ளிடம்” என்று சொல்வதுண்டு. காவிரி ஆற்றில் அதிக நீர் வரத்து இருக்கும் சமயம், ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட முக்கொம்பு அணை மூலம் உபரி நீரை கொள்ளிடத்திற்கு திருப்பி விடுவார்கள். அப்படி இருந்தாலும் கொள்ளிடத்திலும் அதிக நீருடன் பார்த்ததுண்டு.
மணலில் இறங்கி பார்த்தபோது ஒரு சில வெளி மாநில பக்தர்கள் குளித்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சரி எங்கோ ஒரு ஓரத்தில் கொஞ்சமேனும் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது என்று அக்கரையை நோக்கி மணலில் நடக்க ஆரம்பித்தேன். சாதாரணமாக சாலைகளில் நடப்பதற்கும் மணல்வெளியில் நடப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அதிலும் செருப்பு போட்டுக்கொண்டு மணலில் நடப்பது மிகவும் கடினம். முன்னும் பின்னும் மணல் பறக்க நடப்பது ஒரு வித அனுபவம். செருப்பில்லாமல் நடக்கலாம் என்றால் ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள், பெரிய பெரிய மரத்தின் கிளைகள், பைகளில் கட்டி போடப்பட்ட ஏதேதோ குப்பைகள் என பார்த்ததால் செருப்பில்லாமல் நடக்கத் தோன்றவில்லை. கொள்ளிடத்தின் இக்கரையிலிருந்து அக்கரை தெரியும் வரை நடந்து சென்ற பிறகு தான் அக்கரையில் கொஞ்சமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதனை நோக்கி நடப்பது கடினமாகவே இருந்தது. என்ன ஆனாலும் இன்றைக்கு வேலையை முடித்தே ஆகவேண்டும் என்று தொடர்ந்து நடந்தேன்.
ஒரு வழியாக கொள்ளிடம் ஆற்றின் மறுகரையில் தண்ணீர் பார்த்ததும் மனதில் மகிழ்ச்சி. கணுக்கால் வரை ஓடிக்கொண்டிருந்த தண்ணீரில் சில நிமிடங்கள் நின்று உடம்பு முழுக்க ஒரு சிலிர்ப்பு வரும் வரை காத்திருந்தேன். வடக்கில் பல புண்ணிய நதிகளில் நீராடி இருக்கிறேன் என்றாலும் நம் ஊரில் இப்படி கொள்ளிடம், காவிரி என ஆறுகள் இருக்க, அவற்றில் இறங்கி குளிப்பது ஒரு வித ஆனந்தம் தான். ஆனால் இந்தப் பயணத்தில் ஆற்றுக்குளியல் இல்லை. சில நிமிடங்கள் தண்ணீரில் நின்று ஒரு சில நிழற்படங்களையும் ஒரு காணொளியும் எடுத்துக் கொண்டேன். பிறகு வந்த வேலையை முடிப்போம் என மண் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, “அடுத்த வருடம் மீண்டும் சந்திப்போம்” என்று விடைகொடுத்து கரைத்து முடித்தேன். வண்ணம் சேர்க்காத, களிமண் பிள்ளையார் என்பதால் சில நிமிடங்களில் மொத்தமாக கரைந்து விட்டார். ஆற்றில் நம்மால் மாசு உண்டாகவில்லை என்ற மனநிம்மதியுடன் மீண்டும் கரையை நோக்கி மணலில் நடை…
இந்த முறை செருப்பை கைகளில் பிடித்துக் கொண்டு வெறும் காலில் நடந்தேன். சரியாக கொஞ்சம் தொலைவு நடந்தபிறகு, காலில் சுருக்… என வலி. பார்த்தால் ஒரு கருவேல முள் காலை பதம் பார்த்திருந்தது! குனிந்து முள்ளை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு கரையைக் கடந்து போடலாம் என நடையை தொடர்ந்தேன். மணலில் நடப்பது சிரமம் என்றாலும் அதுவும் ஒரு வித சுகம் தான். மாலைக் கருக்கலில் மறையும் சூரியன் வானத்தில் வர்ணஜாலம் காட்டிக் கொண்டு இருக்க, மேகமும் போட்டிக்கு தனது திறமைகளை காண்பிக்க எல்லாவற்றையும் ரசித்தபடி தூரத்தே தெரியும் திருவரங்கம் இராஜகோபுரம் நோக்கி ஒரு கும்பிடு… மனதில் மகிழ்ச்சியும் கவலையும் ஒரு சேர இருந்தது - மகிழ்ச்சி இயற்கை எழிலால்… கவலை - வறண்டு கிடைக்கும் கொள்ளிடம் நிலை கண்டு! இயற்கையை போற்றி பாதுக்காக்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் சொன்னாலும் ஏனோ நம் மனித குலத்திற்கு இயற்கை மீது ஒரு கவனிப்பு இல்லாமலே போகிறது என்கிற எண்ணங்களோடு, கரையை அடைந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். நடைப்பயணம், சைக்கிள் பயணம் என இரண்டு சேர்ந்த கலவையாய் இன்றைய அனுபவம்…
******
சாத்தார வீதி பூ மார்க்கெட் - 7 அக்டோபர் 2024:
பல்லவன், வைகை, குருவாயூர், மலைக்கோட்டை என எந்த இரயில் திருவரங்கம் இரயில் நிலையத்தில் நின்றாலும், உடனடியாக இரயிலில் பயணிப்பவர்கள் பூ விற்கும் பலரை பார்க்க முடியும். இரயில் வரும் எல்லா நேரத்திலும் இங்கே பூ விற்றுக்கொண்டிருப்பார்கள். சில சமயம் விலை அதிகம் என்று தோன்றினாலும், அவர்களுக்கும் உழைப்பு இருக்கிறதே. மார்க்கெட் சென்று பூ வாங்க வேண்டும், அதனை கொண்டு வந்து விற்க வேண்டும் என எல்லா வேலைகளுக்கும் சேர்த்து தானே வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்க வேண்டும்… ஆனால் ஒரு விஷயம் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது! அது பூ வாங்க அந்த பெண்மணிகள் தொலைதூரம் எங்கும் செல்ல வேண்டியதில்லை!
திருவரங்கம் இரயில் நிலையத்தின் அருகிலேயே, சாத்தார வீதி என்று ஒரு வீதி இருக்கிறது. அங்கே தான் பூ மார்க்கெட் இருக்கிறது. திருச்சியின் பல இடங்களுக்கும் இங்கேயிருந்து தான் வகை வகையாய் பூக்கள் விநியோகம். மொத்த அளவில் இங்கே வாங்கி அவற்றை அவரவர் இடத்திற்குக் கொண்டு சென்று, பூக்களாகவோ, தொடுத்தோ அல்லது மாலையாக கட்டியோ விற்பனை செய்து விடலாம். இங்கே எல்லாம் கிலோ கணக்கில் தான் - எந்தப் பூவாக இருந்தாலும் கிலோ கணக்கு தான். ரோஜா, மல்லி, முல்லை, அரளி, இட்லிப் பூ, செவ்வந்தி, சாமந்தி என பல வித பூக்கள் இங்கே கிலோ கணக்கில் கிடைக்கின்றன. பூக்களின் வரத்தைப் பொறுத்தும், நாள் கிழமைகளைப் பொறுத்தும் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்.
இது நவராத்திரி சமயம் என்பதால் கொஞ்சம் விலை அதிகம் தான். பன்னீர் ரோஜா கிலோ 120 ரூபாய், சாமந்தி 200/- மல்லி 400/- என ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில். மொத்தமாக வாங்குவது இல்லாமல் ¼ கிலோ அளவில் கூட வாங்கிக் கொள்ளலாம். இங்கே கிலோ கணக்கில் வாங்கி பத்து பதினைந்து பூக்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு பத்து/இருபது ரூபாய்க்கு விற்கிறார்கள். கொஞ்சம் உழைத்தால், மெனக்கெட்டால் நல்ல லாபம் கிடைத்து விடும். உழைப்பு தான் முக்கியம். வாங்குவதற்கு வாடிக்கையாளர்களும் நிறையவே இருக்கிறார்கள் (உள்ளூர்வாசிகள், வெளியூரிலிருந்து ஆலயத்திற்கு வருபவர்கள்) என்பதால் காலையில் வாங்கினால் மாலைக்குள் விற்று விடலாம். அதே வீதியில் பூ மாலைகள் கட்டி விற்பவர்களும் உண்டு. இதைத்தவிர, பூ கட்டுவதற்கான நூல்கள், வாழை நார்கள், போட்டுத் தருவதற்கான பிளாஸ்டிக் கவர்கள் என அனைத்துமே இங்கே கிடைத்துவிடுகிறது.
காலையில் கமகமவென்று மணக்கும் இந்தச் சாலைக்கு சென்று காட்சிகளை பார்த்தாலே மனதுக்குள் ஒரு வித புத்துணர்வு கிடைத்துவிடும். என்ன பூக்கள் விற்கும் இடம் என்பதால் குப்பைகளும் நிறையவே தென்படும். கூடவே சின்னச் சின்ன உணவகங்கள், தேநீர் கடைகள் என பரபரப்பிற்கு பஞ்சமே இல்லை! காலையில் பூ வாங்க வரும் வியாபாரிகள், தங்களது சைக்கிள்கள், வண்டிகள் என அனைத்தும் அங்கே கொண்டு வருவதால் எப்போதும் சாலைகளில் கூட்டம் இருக்கும். அப்படியே எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே ஒரு நடை நடந்து நமக்குத் தேவையான பூக்களை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம்! நவராத்திரி சமயம் என்பதால் இந்த சாலையில் அடிக்கடி நடக்கிறேன். அப்படியே சில தகவல்களும் உங்களுக்கு நடை நல்லது பதிவு வழியாக சொல்லியும் விட்டேன். சரி தானே!
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
11 நவம்பர் 2024
சவாலான வாசகம்!
பதிலளிநீக்குகொள்ளிடம் வறண்டிருந்தாலும் வானம் வறண்டிருக்கவில்லை! அழகான மேகக்கூட்டங்கள்.
மணலில் நடப்பது ஒரு சுகம் குப்பைகள் பதம் பார்க்கும் பொருட்கள் இல்லாமல் இருந்தால் அந்த நடை நல்லதுதான். ஆடுகால் தசைக்கு quadriceps, and glutes க்கு நல்லது என்று சொல்வதுண்டு!
கீதா
கொள்ளிடப் படங்கள் சூப்பர் காணொளியும்.
பதிலளிநீக்குபூக்கடைகள் பார்ப்பதற்கே இதமாக இருக்கும். பூக்களின் மீது தண்ணீர் தெளிப்பதாலோ என்னவோ கடைப்பகுதிக்குள் செல்லும் போது குளிர்ச்சியாகவும் இருக்கும்.
ஆனால் கீழே கிடக்கும் பூக்களை மிதித்துக் கொண்டு செல்வது மனதிற்குக் கஷ்டமாக இருக்கும் கூடியவரைத் தவிர்ப்பது வழக்கம். அது போல் எங்கு பூக்கள் சிந்தியிருந்தாலும், கோவில், கல்யாணங்களில் எல்லாம் கூட.
பயணிகள் ரயில்களில் இப்படி பெண்மணிகள் பூக்கள் கூடையை ஏற்றிக் கொண்டு ரயில் பயணத்திலேயே மாலை கட்டிவிடுவார்கள், தலைக்கு வைத்துக் கொள்ளும் பூச்சரமும் கட்டி விடுவார்கள் பார்த்திருக்கிறேன்.
கீதா
மணலில் நடப்பது ஒரு அனுபவம் தான். கால்கள் புதைய புதைய.... ஆனால் செருப்பு இல்லாமல் நடந்தால் முள் குத்துமே என்று நினைத்தேன். அதே போலவே குத்தியிருக்கிறது.
பதிலளிநீக்குசெருப்பு போட்டுக் கொண்டு நடந்தாலும் செருப்பை மீறி வரும் முட்களும் உண்டு. கணுக்காயில் கீறுவதும் உண்டு, கொஞ்சம் புதைய நடப்பதால்.
இந்த மணலையும் பார்த்தால் சில மணல் திருடர்கள் விடமாட்டார்கள் என்றும் தோன்றும்!!
கொள்ளிடம் வற்றி ஆற்றில் சிறிது நீர்தான் உள்ளது. இருந்தும் அழகாக உள்ளது.
பதிலளிநீக்குபூக்கடை வர்ணப் பூக்கள் நிறைந்திருப்பது பார்க்க அழகாக உள்ளது.
சிறிய வயதில் ஆற்று மணலில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வருகிறது. அப்போது யாரிடம் செருப்பு இருந்தது? வளர்ச்சி பெற்றோம் என்று சொல்லும்போது ஆற்று மணல் மறைந்ததும், பிளாஸ்டிக் குப்பை எங்கெங்கும் பரந்து கிடப்பதும்தான் மனதில் நினைவுக்கு வருது.
பதிலளிநீக்குஒரு வாரத்திற்கு முன்பு ஸ்ரீரங்கபட்டினம் காவேரியில் அருமையான குளியல். அதற்கு முன்பு கிட்டத்தட்ட நகராத கும்பகோணம் அருகில் காவேரியில் குளியல். கொள்ளிடத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே தண்ணீர் குறைவா?
பதிலளிநீக்குஆஹா! கொள்ளிடத்தில் வெள்ளம் இல்லாவிட்டாலும் மணலாவது இருக்கிறதே என்று சந்தோஷப் படுவோம். ஆற்று மணல் ஈரமாக இருப்பதால் வெயிலில் ஆறப் போட்டுருக்காங்களோ?
பதிலளிநீக்குகொள்ளிடத்தில் முதலை உண்டா, அதை மொத(ல்)ல சொல்லுங்கோ.