செவ்வாய், 12 நவம்பர், 2024

குதர்க்கம் - கருப்பாயி - சமையல் - ராஜா காது கழுதைக் காது


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பதினாறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


குதர்க்கம் - 11 அக்டோபர் 2024: 


வலைப்பூவில் என்னை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு “ராஜா காது கழுதைக் காது” என்ற தலைப்பு பரிச்சயமான ஒரு தலைப்பு.  அவ்வப்போது என் காதில் விழும் சுவாரஸ்யமான விஷயங்களை, காத்துவாக்கில் கேட்கும் வசனங்களை எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வது வழக்கம்.  சனிக்கிழமைகளில் காஃபி வித் கிட்டு என்ற தலைப்பில் இது போன்ற விஷயங்களை ஒரு பகுதியாகக் கொண்டு பதிவிடுவது வழக்கம். முகநூலில் இதுவரை பகிர்ந்து கொண்டதில்லை.  சமீபத்தில் பகிர ஆரம்பித்தேன். அவற்றின் தொகுப்பு இங்கே எனது சேமிப்பாகவும், முகநூலில் என்னைத் தொடராத நண்பர்களின் வசதிக்காகவும் ஒரு தொகுப்பாக! 


இன்று திருவரங்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த போது, எனத்தருகே ஒரு முதியவர் அமர்ந்து இருந்தார்.  இரு சக்கர வாகனம் ஒன்றில் வந்த பெரியவருடன் இரண்டு சிறுமிகள்.  பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த முதியவர் அருகே வண்டி நின்றது.  வண்டியின் பின் அமர்ந்து இருந்த சிறுமி, முதியவரிடம் இப்படி கேட்டார். “நல்லா இருக்கீங்களா தாத்தா?”


அதற்கு அந்த முதியவர் சொன்ன பதில் - “நல்லா இருக்கறதினால தான் நான் உன்னை இப்ப பார்க்கிறேன்……”


இங்கே யாருக்குமே நேரடியாக பதில் சொல்லவே பிடிப்பதில்லை போல! 😃 குதர்க்கமான பதிலாகவே இருக்கிறது. 


******


கருப்பாயி - 14 அக்டோபர் 2024: 


திருச்சியில் ஒரு மினி பேருந்தில், பேருந்து புறப்பட காத்திருந்த சமயம், அந்தப் பேருந்தில் பயணிக்க அமர்ந்திருந்த ஒரு பெண்மணி அலைபேசியில் சத்தமாக பேசிக்கொண்டிருந்தார்.  


“கருப்பி, கருப்பாயி என்றெல்லாம் உன்னை சொன்னபோதே, உங்க அம்மாவோ இல்லை அப்பாவோ, அந்த பக்கத்து வீட்டு பொம்பளைய ஓங்கி ஒரு அப்பு அப்பியிருக்கணும். அதை விட அடுத்து ஒண்ணு சொன்னாளே, “கருப்பு தே…” ன்னு, அப்பவாது அவளை அடிச்சிருக்கணும்…  சரி அடிக்க வேண்டாம்னா, அவளை திட்டி, அவ வண்டவாளத்தை எல்லாம் கேட்டிருக்க வேணாமா? நானா இருந்தா சும்மாவே விட்டிருக்க மாட்டேன்… ஒரு கை பார்த்திருப்பேன் பாத்துக்க!”


யாரோ வீட்டு பிரச்சனையில் இவர் மூக்கை நுழைத்து, உசுப்பி விடுகிறார் என்று தோன்றியது.  அடுத்தவர் பிரச்சனையில் மூக்கை நுழைப்பதே இங்கே பலருக்கும் வேலையாக இருக்கிறது! அவரவர் பிரச்சனைகளை அவரவர்களே சரி செய்து கொள்வதே நல்லது.  பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பிரச்சனைகளைக் கூட, அடிதடி சண்டையில் கொண்டு வந்து விட்டு விடுவார்கள் இது போன்றவர்கள் என்பதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! என்ன நான் சொல்றது?


ராஜா காதுக்கு இப்படியான விஷயங்கள் விழுந்து கொண்டே தான் இருக்கிறது - ராஜா விரும்பாவிடிலும்! 🙂


******


சமையல் - 23 அக்டோபர் 2024: 





தலைநகரில் வீட்டின் அருகிலேயே ஒவ்வொரு தினமும் மாலை வேளைகளில் காய்கறி, பழங்கள் மற்றும் சில அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளை வரிசையாக ஒரு தெருவில் சந்தை போன்று நடத்துவார்கள்.  காய்கறி கடைகளைத் தாண்டி சற்றே ஒதுக்குப்புறமாக மீன் வியாபாரமும் உண்டு.  இப்படியான காய்கறி கடைகள் இருப்பது பல விஷயங்களில் சௌகரியம்.  தில்லி திரும்பிய பின்னர், அலுவலக வேலைகளுக்குப் பிறகு மாலை தான் அங்கே சென்று காய்கறிகள் வாங்கி வந்தேன்.  அங்கே காதில் கேட்ட ஒரு விஷயம் தான் இன்றைய ராஜா காது கழுதைக் காது விஷயம். 


எங்கள் பகுதியில் சில தென்னிந்தியர்களும் இருக்கிறார்கள்.  பலர் இங்கே இருந்த வீடுகளை காலி செய்து கொண்டு சென்றுவிட சிலர் புதியதாக வந்திருக்கிறார்கள்.  அவர்களில் பலரை எனக்குத் தெரியாது.  இந்த முறை மார்க்கெட் சென்ற பொது கையில் நம் ஊர் துணிக்கடைகளில் கொடுக்கும் கட்டை பையுடன் ஒரு மனிதரும் அவரது துணைவியாரும் வந்திருந்தார்கள்.  பார்க்கும்போதே நம் ஊர் மனிதர்கள் என்று தெரிந்தது. ஆனாலும் புதிதாக எவரிடமும் பேசும் பழக்கம் இல்லை என்பதால் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  இங்கே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் - நம் ஊரில் கிடைக்காத பல காய்கறிகள் இங்கே கிடைக்கின்றன.  உதாரணமாக டிண்டா, கக்ரோடா போன்ற சிலவற்றை சொல்லலாம்.  டிண்டா என்பதை ஆங்கிலத்தில் Indian round gourd, apple gourd or Indian baby pumpkin என பல பெயர்களில் அழைக்கிறார்கள்.   அதே போல கக்ரோடா என்பது பாவக்காய் போல வெளித்தோற்றம் கொண்டிருந்தாலும் சின்னச் சின்ன உருண்டைகளாக இருக்கும். சுவையும் பாவக்காய் போலவே இருக்கும். நம் ஊரில் இவை கிடைப்பதில்லை.


கடையில் இந்த கக்ரோடாவைப் பார்த்து, “இது என்ன காய்?” என்று அந்த தமிழர் கேட்க, அவரிடம் அந்த விற்பனையாளர், “இது பாவக்காய் மாதிரி தாங்க, அதே மாதிரி சுவை தான் இருக்கும். சின்னச் சின்னதா நறுக்கி, கூட வெங்காயமும் சேர்த்து சப்ஜி செய்தா சுவையா இருக்கும். சப்பாத்தி கூட தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்” என்றெல்லாம் விளக்கமாக சொல்லிக் கொண்டிருந்தார்.  அந்த மனிதரும் எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டு தலையை ஆட்டிக் கொண்டிருந்தார்.  அப்போது பக்கத்தில் இருந்த அவரது மனைவி சொன்னது தான் இந்த இற்றையின் ஹைலைட்!  


“அவருக்கு வெந்நீர் கூட போடத் தெரியாது! இந்த அழகுல அவருக்கு சப்ஜி செய்ய சொல்லிக் கொடுக்கறீங்க நீங்க!” 


அந்த பெண்மணியின் கணவர், ஐயோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அது வரை வாங்கிய காய்கறிகள் போட்டு இருந்த பையை முதுகில் சுமந்து கொண்டு தேமேவென நின்றிருந்தார்! வேற வழி! 🙂


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

12 நவம்பர் 2024


7 கருத்துகள்:

  1. சில நேரங்களில் இவற்றைக் கேட்க நிகழ்ந்தால் புன்னகையோ சிரிப்போ வந்துவிடும். எப்படிச் சமாளிக்கறீங்க?

    பதிலளிநீக்கு
  2. மனைவிக்கு வீட்டு ஃபைனான்ஸ் அறிவும் கணவனுக்கு சமையைலறை மற்றும் வீட்டு வேலைகளில் பரிச்சயமும் மிகவும் அத்தியாவசியம் என்று நான் நினைப்பேன். வெந்நீர் கூடப் போடத் தெரியாது என்பது பெருமையா?

    பதிலளிநீக்கு
  3. வடிவேலு காமெடி போல  "ஏன் நான் நல்லா இல்லைன்னா என்ன செய்யப் போறே?" என்று கேட்காமல் போனாரே அந்த முதியவர்.

    பதிலளிநீக்கு
  4. அடுத்த வீட்டுப் பிரச்னையில் மூக்கை நுழைக்கக் கூடாதுதான்.  ஆனால் அந்தஸ் சம்பவத்தில் அப்படி பேசப்பட்டிருந்தால் தட்டிக் கேட்கப்பட்டிருக்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
  5. மூன்றாவது சம்பவத்தின் வரிகள் சட்டென சிரிக்க வைத்து விட்டன!

    பதிலளிநீக்கு
  6. அந்த முதியவர் - ஹாஹாஹா சிலருக்கு என்ன வயதானாலும் இப்படியான பதில்கள் சொல்லும் குணம் போவதில்லை போலும்! அதுவும் அந்தக் குழந்தையிடம்!

    அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பது கூடாதுதான். அவரவர் வீட்டுப் பிரச்சனை அவரவருடையது.

    அந்தப் பெண்மணி பேசியதைப் பார்க்கறப்ப, எதிரில் பேசியவர் மிகவும் நெருங்கிய நபர் என்றும் தோன்றுகிறது. தட்டிக் கேட்கச் சொன்னது சரிதான் ஒரு சில விஷயங்களில் நாம் ரொம்பவே பார்த்தால் நம்மை ஏறி மிதித்துக் கொண்டுதான் போவார்கள். எனவே தைரியம் வேண்டும் இல்லை என்றால் எல்லைக் கோடு போட்டுக் கொண்டு ஒதுங்கிவிட வேண்டும் பேச்சு வார்த்தை இல்லாமல்.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இங்கு கக்ரோடா / காட்டுப்பாகற்காய் கிடைக்கிறது. நிறைய. அது போல டிண்டாவும். நான் அடிக்கடி வாங்குவதுண்டு. சென்னையில் கூட டிண்டா பார்த்திருக்கிறேன் விலை சற்று கூடுதலாக இருக்கும். இங்கு அப்படி இல்லை. காட்டுப் பாகற்காய் நன்றாகவே இருக்கிறது. இதையும் டிண்டாவையும் சப்பாத்திக்கு நான் சப்ஜி செய்வதுண்டு.

    அந்தப் பெண்மணி சொன்னது சிரிப்பை வரவழைத்தாலும், பொதுவெளியில் சொல்லாமல் இருந்திருக்கலாமோ?

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....