அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பதினைந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் ரசித்த காணொளி : Value of Life
கொஞ்சம் பழைய காணொளி தான் - ஆனாலும் எப்போது பார்த்தாலும் மனதைத் தொடும் விதத்தில் இருக்கும். நமது வாழ்வின் விலை என்ன என்று கேட்கும் ஒரு சிறுவனுக்கு அவனது அம்மா சொல்லித்தந்த பாடம்… இங்கே காணொளியாக… பாருங்களேன்.
மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம்.
What Is The Value Of Your Life? (youtube.com)
******
இந்த வாரத்தின் ரசித்த ஓவியம் : உழைப்பு
முதுமையிலும் உழைக்கும் ஒரு பெண்மணியை ஓவியமாக வரைந்திருக்கிறார் இந்த ஓவியர். மிகவும் சிறப்பாக இருக்கிறது அல்லவா இந்த ஓவியம். வரைந்த ஓவியருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்! நான் ரசித்த ஓவியம் உங்களது பார்வைக்கு இங்கே!
******
பழைய நினைப்புடா பேராண்டி : வெங்கலக் கடைக்குள் யானை
2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - வெங்கலக் கடைக்குள் யானை - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
வியாழன் மதியம் இரண்டரை மணி இருக்கும். வீட்டிலிருந்து கிளம்பி திருவரங்கம் ராஜகோபுரத்தினைத் தாண்டி ஒன்றாம் எண் பேருந்தினைப் பிடிக்க நடந்து வந்து கொண்டிருந்தேன். கோபுரம் தாண்டியவுடனேயே திருவரங்கத்திலிருந்து திருவானைக்கா வழியாக மத்தியப் பேருந்து நிலையம் செல்லும் ஒரு பேருந்து காலியாக வரவே அதிலேயே ஏறிக்கொண்டேன்.
முன்வாசல் அருகே இருக்கும் இரண்டு இருக்கைகளில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டுவிட பேருந்து மெதுவாக ஊர்ந்து வந்து வளைந்து நின்றது. சில நிமிடங்கள் பயணிகளுக்காக காத்திருந்த பின் ஏமாற்றத்துடனே அங்கிருந்து பேருந்தின் ஆறு சக்கரங்களையும் காலாலே [அட Accelerator-ஐ மிதித்து தான்!] உருட்டினார் ஓட்டுனர். பத்தடி கூட தாண்டியிருக்காது பேருந்து – அதற்குள் சாலையில் ஏதோ ஊர்வலம் போவது போல மக்கள் கூட்டம்.
யானைக்கட்டி சத்திரம் என ஒன்று அந்த சாலையில் உண்டு. பல சமயங்களில் அங்கே புத்தகக் கடைகளும், எதை எடுத்தாலும் 10 ரூபாய் கடைகளும் [உள்ளே போன பிறகு தான் தெரியும் வாசலில் உள்ள சில பொருட்கள் மட்டுமே 10 ரூபாய், உள்ளே அதை விட அதிக விலையில் பொருட்கள் வைத்திருப்பது!] போடுவார்கள். அந்த யானைக்கட்டி சத்திரத்தின் எதிரே ஒரு கல்யாண சத்திரம்!
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது : Buddy
இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது பகுதியில் ஒரு குறுங்கதை.
விவசாயி ஒருவரிடம் குதிரை ஒன்று இருந்தது. Buddy என்று அதற்குப் பெயர் வைத்திருந்தார் அவர். அவருடைய நிலத்து வேலைகளுக்கு உதவுவது Buddy தான். ஒரு மாலை நேரத்தில், தன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார், அந்த விவசாயி.
அவரைத் தேடிக்கொண்டு ஒருவர் வந்தார். வெகுதூரத்திலிருந்து வருகிறார் என்பதை அவருடைய கலைந்த தலையும் கசங்கிய ஆடைகளும் உணர்த்தின. வந்தவர், வணக்கம் சொன்னார். விவசாயி, அவர் அமர்வதற்கு ஒரு நாற்காலியைக் கொண்டு வந்து போட்டார். அவர் உட்கார்ந்ததும், சூடாக டீ குடிக்கிறீங்களா? என்று கேட்டார். வந்தவர், அவசரமாக “வேண்டாம்” என்று சொன்னார். சொல்லுங்க, என்ன விஷயம்? விவசாயி கேட்டார்.
ஒண்ணுமில்லை. நான் வெளியூரில் இருந்து வர்றேன். இது எனக்குப் பழக்கமில்லாத பாதை. வழியில கன்ட்ரோல் பண்ண முடியாம நான் வந்த கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்ககிட்ட ஒரு குதிரை இருக்குன்னு சொன்னாங்க. அதைக் கொண்டு காரை வெளியே எடுத்துடலாம் என்று சொன்னாங்க. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம் என்று. “ரொம்பப் பெரிய காரா?” என்று கேட்டார் விவசாயி. “இல்லை, இல்லை. சின்ன கார்தான்” என்றார் வந்தவர். விவசாயி கயிறு உட்பட சில உபகரணங்களை எடுத்துக்கொண்டார். குதிரையின் கட்டை அவிழ்த்து, அதையும் நடத்தியபடி அவருடன் சென்றார். விவசாயி, கார் விழுந்திருக்கும் பள்ளம், அதன் நிலை எல்லாவற்றையும் பொறுமையாகப் பார்த்தார். கார் சிறியதாகத்தான் இருந்தது.
ஆனால், காரை வெளியே எடுக்கும் முயற்சியில் ஒருவேளை அவருடைய குதிரைக்குக் காயம் ஏற்படலாம் என்றும் அவருக்குத் தோன்றியது. விவசாயி ஒரு கயிற்றை எடுத்து காரில் கட்டி, குதிரையோடு இழுப்பதற்குத் தோதாகப் பிணைத்தார். கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தார். பிறகு, எங்கடா கேஸி (Casey) இழு பார்ப்போம்! என்று சத்தமாகக் குரல் கொடுத்தார். குதிரை அசையாமல் அப்படியே நின்றிருந்தது. பெய்லி (Bailey) இழுடா ராஜா! இன்னும் சத்தமாகச் சொன்னார் விவசாயி. குதிரை நகரவேயில்லை. டேய் மேண்டி (Mandy) வேகமா இழு! மறுபடியும் உரத்த குரலில் சொன்னார். குதிரை ஒரு இஞ்ச்கூட நகரவேயில்லை. என் செல்லம் Buddy நீயும் சேர்ந்து இழுடா! என்றார். அவ்வளவுதான் குதிரை கயிற்றை இழுக்க ஆரம்பித்தது. அடுத்த ஐந்தாவது நிமிடம் கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.
வெளியூர்க்காரர் விவசாயிக்கு நன்றி சொன்னார். ஐயா, நீங்க ஏன் உங்க குதிரையை விதவிதமான பேர்ல கூப்பிட்டீங்க?அதுதான் எனக்குப் புரியலை.” என் குதிரைக்கு கண்ணு தெரியாது. தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப் போறோம்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா?அதான் அதுகூட இன்னும் மூணு குதிரைகள் இருக்குற மாதிரி நம்ப வெச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்துடுச்சு. காரை வெளியே இழுத்துடுச்சு! அன்பான வார்த்தைகளைச் சொல்வதற்கு நாம் காசு எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. ஆனால், அவை சம்பாதித்துக் கொடுப்பவையோ ஏராளம்.......
******
இந்த வாரத்தின் கேள்வி : இது என்ன…
திருச்சி சென்ற சமயம், ஒரு பெரிய கடையில் பார்த்த பொருட்கள் இவை? இவை என்ன? எதற்குப் பயன்படும் என்று தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். சரியான விடையா இல்லையா என்று நானும் பதில் தருகிறேன்.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : எழுதுகிறேன் ஒரு கடிதம்…
முகநூலில் சில நாட்களாக “எழுதுகிறேன் ஒரு கடிதம்” என்ற தலைப்பில் பல நண்பர்கள் கடிதம் எழுதி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். முன்பு வலைப்பூக்களில் எழுதிக்கொண்டிருந்த நண்பர்கள் கூட அப்படி சில கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். நண்பர் T.N. முரளிதரன் அவர்கள் திண்டுக்கல் தனபாலன் இப்போதெல்லாம் பதிவுகளே எழுதாமல் இருக்கிறாரே என்று அவருக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார். ஆசிரியருக்கு ஒரு கடிதம், தோழிக்கு ஒரு கடிதம் என அப்படி இன்னும் சில கடிதங்களும் படிக்கக் கிடைத்தது. முன்பெல்லாம் கடிதம் எழுதுவது ஒரு பழக்கமாக இருந்தாலும் இப்போது கடிதம் எழுதுவதே கிடையாது. நான் அப்படி ஒரு கடிதம் எழுத நினைப்பது தில்லியில் எனக்கு நட்பாகி, இப்போது தொடர்பில்லாமல் போய்விட்ட ஒரு நண்பருக்கு! நம்மில் யாருக்குமே கடிதம் எழுதும் வழக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்காது என்று தான் தோன்றுகிறது. உங்களை அப்படி ஓர் கடிதம் எழுத சொன்னால், யாருக்கு எழுதுவீர்கள், எப்படி எழுதுவீர்கள் என்று சொல்லுங்களேன். அப்படி ஒரு கடிதம் எழுதி அனுப்பினால் அதனை எனது பக்கத்தில் வெளியிட நான் ரெடி!
******
இந்த நாள் இனிய நாள் : உத்தராகண்ட் திவஸ்
உத்தராகண்ட் மாநிலம் எனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்று. மலைகளும், பல்வேறு ஆலயங்களும், பல நதிகளும் நிறைந்த இந்த மாநிலம் முதலில் உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது என்றாலும், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 2000 ஆம் ஆண்டு உத்திரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலமாக இதே நாளில் அறிவிக்கப்பட்டது. அந்த சமயத்தில் உத்திராஞ்சல் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், 2007-ஆம் ஆண்டு உத்திராஞ்சல் என்ற பெயரையும் மாற்றி உத்தராகண்ட் என்ற பெயரிட்டார்கள். தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்னர் நிறைய முன்னேற்றம் இந்த மாநிலத்தில் ஏற்பட்டு இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். முன்பும் அங்கே பயணித்து இருக்கிறேன் என்றாலும் இப்போது வசதிகள் நிறைய இருக்கிறது. உத்தராகண்ட் மாநிலம் சுற்றுலா செல்ல ஏற்ற இடம் என்பதோடு, நிறைய ஆலயங்கள் (கேதார், பத்ரி, கங்கோத்த்ரி, யமுனோத்ரி என வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்) இருப்பதால் இந்த மாநிலத்தையும் தேவ் பூமி என்றும் சொல்வதுண்டு. சிறப்பான பல இடங்களை தன்னகத்தே கொண்டுள்ள உத்தராகண்ட் தந்து சிறப்பு தினத்தினை கொண்டாடும் இந்த நாளில் அம்மாநில மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளும் உங்களது வாழ்த்துகளும்…
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
9 நவம்பர் 2024
குதிரைக்கதை ஸூப்பர்.
பதிலளிநீக்குகாணொளி ரசித்தேன். கடிதம் யாருக்குஎழுதலாம் என்று யோசிக்கிறேன்.சாய் பல்லவி?
ஓவியம் மிக மிக அழகு!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய காஃபி வித் கிட்டு பதிவு அருமை இன்றைய வாசகமும் நன்றாக உள்ளது.
இந்த வார ஓவியம் மிக நன்றாக உள்ளது. நானும் நிறைய நேரம் பார்த்து ரசித்தேன்.
இந்த வார கதையாக வெளியிட்டிருக்கும் பகுதியில் குதிரையின் தன்னம்பிக்கை ஊட்டும் கதை படித்து ரசித்தேன். நன்றாக உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டேன். அம்மாநில மக்களுக்கு எங்களது வாழ்த்துக்களை தந்ததற்கு மிக்க நன்றி.
மொத்தத்தில், இன்றைய பதிவு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
காணொளி, ஓவியம் சூப்பர்.
பதிலளிநீக்குகுதிரைக் கதை நன்று.
படத்தில் இருக்கும் பொருட்கள் தெரியவில்லை.
வாசகம் மிகவும் யதார்த்தம்.
பதிலளிநீக்குகாணொளி மனதைத் தொட்டது. ரசித்தேன் ரொம்ப அழகா எடுத்திருக்காங்க
கீதா
வெங்கலக்கடைக்குள் யானை!!! ஹாஹாஹா பஸ்ல பெரிய கும்பல் ஏறினா அப்படித்தான் சல சலன்னு அதுவும் டவுன் கிராம பேருந்துகளில் அப்படித்தான். ஆனால் இங்கு பேருந்தில் அப்படி ஒரு குழு ஏறி சத்தமாகப் பேசி கலாய்த்துக் கொண்டிருந்த போது பேருந்து நடத்துனரும் ஓட்டுநரும் ஒரு சத்தம் போட்டு அடக்கினாங்க! பாவம் அந்தக் கும்பல் அதன் பின் கப்சிப்.
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் அப்படி அடக்கிப் பார்த்தது இல்லை நான் பயணித்த வரையில்
கீதா
குதிரைக்கதை சூப்பர். ரசித்து வாசித்தேன் ஜி.
பதிலளிநீக்குஅந்தப் பொருட்களில்முதல் படத்தில் இருப்பது பூஜைகளில் சங்கு வைக்கும் ஸ்டான்ட். கரெக்ட்டா? இப்படி வேறு வடிவங்களிலும் இருக்கின்றன பார்த்திருக்கிறேன்.
இரண்டாவதும் சங்கும் வைக்கலாம் அகல் விளக்கு பெரிய விளக்குகள் வைக்கும் ஸ்டான்ட் ஆகவும் இல்லைனா ஆனால் அழகுப் பொருளாகவும் வைச்சிருக்காங்க antique என்று பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். மேசை மீது அதன் மீது சூடான கிண்ணங்கள் இல்லைனா பழங்கள் வைத்த பீங்கான் கிண்ணங்கள், கண்ணாடி கிண்ணங்களை வைப்பதையும் பார்த்திருக்கிறேன். அதாவது வரும் விருந்தினரைப் பொருத்து! antique சேகரிப்பில் இவை இடம் பெறுகின்றன இப்போதெல்லாம்.
கீதா
ஓவியம் சூப்பர். கையின் சுருக்கங்கள் கூட!
பதிலளிநீக்குகடிதம் யாருக்கு என்று யோசித்ததும். அட! நாம ஒன்ன்று கொரோனா காலத்தில் கதையாக எழுதி வைத்தோமே என்று நினைவுக்கு வருகிறது...அதை முடித்தேனா தட்டி கொட்ட என்று வைத்து அப்படியே மறந்துவிட்டேனோ என்று பார்க்கிறேன்..... தேட வேண்டும்.
உத்ராஞ்சல் மிகவும் பிடித்த மாநிலம் ஆம் தேவ் பூமி...அது போல எனக்கு இமாச்சலும் ரொம்பப் பிடிக்கும். இயற்கை பல ரகசியங்களை ஒளித்து வைத்திருக்கும் இடங்கள்!
கீதா
ஓவியம் தத்ரூபமாக உள்ளது. இது போன்ற வயோதிக வியாபாரிகள் பலரை ஒளிப்படம் எடுத்துள்ளேன். குறுங்கதை சிறப்பு. மனம் விட்டு எழுதும் கடிதங்களின் காலம் முடிந்து போன நிலையில் முகநூலில் ‘எழுதுகிறேன் ஒரு கடிதம்’ தொடர் நன்றாக உள்ளது. இங்கும் எதிர்பார்க்கிறேன். தொகுப்பு நன்று.
பதிலளிநீக்கு