அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு அடுத்த பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம். எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!
செல்லங்கள் - 15 அக்டோபர் 2024:
அனைவரிடத்தும் அன்பு செலுத்துவோம் என்று சொல்வது மிக எளிது. Practically Speaking நம்மில் பலரால் இப்படி சந்திக்கும் அனைத்து சக மனிதர்களிடமும் அன்பு செலுத்துவது என்பது முடியாத காரியம். நாம் சந்திக்கும் மனிதர்கள், நம்முடன் தொடர்புடையவர்கள், உடன் பணிபுரிபவர்கள் என அனைவரிடமும் அன்பு செலுத்துவது, அதிலும் அவர்கள் செய்யும் காரியங்கள் நமக்குப் பிடிக்காதவை ஆனாலும் அவர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது 99% முடியாத விஷயம். சக மனிதர்களிடம் இப்படி எனும்போது மற்ற உயிரினங்கள் மீது அன்பு செலுத்துவது என்பது ஒரு சிலரால் மட்டுமே முடியும்.
வீட்டின் அருகே ஒரு மனிதர் இருக்கிறார். அவர் ஒரு ஆட்டுக்கிடை வைத்திருக்கிறார். சுமார் 30 ஆடுகள் அவரது ஆட்டுக்கிடையில் இருக்கலாம். அவ்வப்போது வீட்டிலிருந்து அவற்றை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மேய்ச்சலுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்ப அழைத்துவருவார். நான் பார்க்கும் சமயங்களில் எல்லாம் தனது ஆடுகளுடன் பேசிக்கொண்டே வருவார். ஒரு சில ஆடுகளை கொஞ்சுவார் என்றால், ஒரு சில ஆடுகளிடம் கண்டிப்பு காட்டுவார் - “இப்பதானே மேஞ்சிட்டு வந்த, ரோட்டுல வரும்போது என்ன அங்கேயும் இங்கேயும் பாய்ச்சல்… ஒழுங்கா, நேரா வீட்டுக்கு போகணும் பார்த்துக்க, இல்லைன்னா வெளுத்துடுவேன் வெளுத்து!” என்பார். ஒரு நாள் கூட ஆடுகளை அடித்து நான் பார்த்ததில்லை. In fact, கையில் ஒரு குச்சி கூட கிடையாது. என்னதான் ஆடுகளை இறைச்சிக்காக வளர்க்கிறார் என்றாலும் வளர்க்கும் வரை பாசத்துடனேயே வளர்க்கிறார்.
இதே போல, வீட்டின் அருகே அடிக்கடி பார்க்கும் ஒரு பெண்மணி - வீட்டு வேலைகள் செய்பவர். நிறைய வீடுகளில் வேலை செய்கிறார் என்று தோன்றுகிறது. எல்லா இடங்களுக்கும் நடந்தே செல்கிறார். அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். வெளியே யாரிடமும் பேசி பார்த்ததில்லை. நேற்று மாலை காய்கறி சந்தைக்குச் செல்லும் வழியில் அவரைப் பார்க்க நேர்ந்தது. அங்கே தான் அவர் வீடு இருக்கிறது போலும். எல்லா இடங்களைப் போல திருச்சியிலும் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் அங்கங்கே மழை நீர் தேங்கியிருக்கிறது. பெரும்பாலும் சாலைகள் ஈரமாகவே இருக்கிறது.
அந்த சாலையில் இரண்டு தெரு நாய்கள் ஈரமான இடத்தில் படுத்துக் கொண்டிருந்தன. அந்தப் பெண் அவற்றைப் பார்த்து, “டேய் சொல்லறதை கேளுங்கடா… ஈரத்துல படுக்காம, காய்ந்து இருக்கும் இடத்துல படுங்கடா… உடம்புக்கு வந்துடும் பார்த்துக்க… எங்க வீட்டுக்கு உள்ள படுக்க சொல்லலாம்னா, என்னோட செல்லம் (நாய்) உங்களை விடாது! சொல்றத கேளுங்கடா… ஈரத்துல படுத்தா உடம்புக்கு வந்துடும்டா” என்று கெஞ்சிக்கொண்டிருந்தார். என்னதான் அவருக்கே வாழ்க்கையை நடத்துவது கடினமாக இருந்தாலும், சக உயிரினங்கள் மீதான அவரது அன்பு மனதைத் தொட்டது. இப்படி மற்ற உயிரினங்கள் மீதும், சக மனிதர்கள் மீதும் அன்பு செலுத்தும் நபர்கள் குறைந்து கொண்டே தான் இருக்கிறார்கள் என்றாலும் ஏதோ ஒன்றிரண்டு பேராவது இன்னமும் அன்பு செலுத்துகிறார்கள் என்று பார்க்கும்போது மனதில் நம்பிக்கை இழையோடுகிறது. இது குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
******
இடியாப்பம் தேங்காய்ப்பால் - 17 அக்டோபர் 2024:
வீதிகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களை (குச்சி ஐஸ், சோன் பாப்டி, பஞ்சு மிட்டாய்) என எதையுமே எனது சிறு வயதில் வீட்டில் அம்மா/அப்பா வாங்கித் தந்ததில்லை. ஒரு பால் ஐஸ் (25 பைசா) வாங்க அம்மாவிடம் அப்படி அழுது புரண்டு கெஞ்ச வேண்டியிருக்கும் - நான், எனது சகோதரிகள் என மிகவும் கெஞ்சி அம்மா மூவருக்குமாகச் சேர்த்து 75 பைசா செலவு செய்ய, sanction செய்வதற்குள் ஐஸ்காரர் இரண்டு தெரு தாண்டியிருப்பார். ஒரு கையில் அரை trouser-ஐ பிடித்துக் கொண்டு மற்றொரு கையில் டம்ளர் பிடித்துக் கொண்டு ஓடிப் போய் வாங்கி வருவேன். வீட்டிற்குள் வருவதற்குள் உருகி விடலாம் என்பதற்காக கையிலே டம்ளர் எடுத்துச் செல்வோம். அப்படி அழுது புரண்டு வாங்கித் தின்ற பால் ஐஸில் என்ன சுவை இருந்ததோ, ஆனால் இப்போதும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. இப்போது Brick - ஆக ஐஸ்க்ரீம் வாங்கி எவ்வளவு வகைகளில் சுவைத்தாலும் அந்த சுவை மீண்டும் வராது என்றே தோன்றுகிறது.
அப்படி வீதிகளில் விற்கும் தின்பண்டங்களை வாங்கி சுவைக்க பாடுபட்ட காலம் போய், இப்போது வீட்டிலே எதுவும் செய்யாமல் வெளியிலேயே வாங்கி சுவைக்கவே பலரும் விரும்புகிறார்கள். திருவரங்கத்து வீதிகளில் காலை நேரத்தில் ஒரு மனிதர் இரு சக்கர வாகனத்தில் பின்புறம் ஒரு பெரிய Drum முழுக்க இடியாப்பம் வைத்து எடுத்துக் கொண்டு வந்து விற்பனை செய்கிறார். இடியாப்பத்திற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ப்பால். வண்டியில் ஒலிபெருக்கி வேறு கதறிக்கொண்டே இருக்கிறது - “இடியாப்பம் தேங்காய்ப்பால்” என விதம் விதமாக! பல வீடுகளில் காலை உணவே இவரிடம் வாங்கிக்கொள்ளும் இடியாப்பம் மற்றும் தேங்காய்ப்பால் தான் என்று தோன்றுகிறது. காலை நடைப் பயணத்தில் இவரை அடிக்கடி சந்திக்கிறேன். பல வீடுகளில் இவர் வண்டி நிற்க வீட்டிலிருந்து பாத்திரங்கள் கொண்டு வந்து இடியாப்பம், தேங்காய்ப்பால் வாங்கிச் செல்கிறார்கள். என் சிறு வயதில், எனது நெய்வேலி வாழ்க்கையில் இப்படியான விஷயங்கள் விற்பனை செய்து பார்த்ததில்லை. மற்ற ஊர்கள் பற்றி தெரியவில்லை.
திருவரங்கத்தில் தினமும் இவருக்கு நல்ல விற்பனை ஆகிறது என்றே தோன்றுகிறது - ஏனெனில் தினம் தினம் வீதி வீதியாகச் சுற்றி வருகிறாரே! விற்பனை இல்லாவிட்டால் இப்படி வருவாரா? ஏற்கனவே Zomato/Swiggy போன்ற செயலிகள் மூலம் உணவுப் பொருட்களை ஹோட்டல்களிலிருந்து வரவழைத்துச் சாப்பிடுவது பெருகியிருக்கிறது. பல வீடுகளில் காபி கூட போடுவதில்லை - எல்லாம் Zomato/Swiggy-யில் Order போட்டுவிடுகிறார்கள். பைசா கொடுத்தால் வீட்டுக்கு வந்து தருகிறார்கள், நான் எதற்கு இந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதே பலருடைய வாதமாக இருக்கிறது. இது போதாதென்று இப்படியான இடியாப்ப வியாபாரிகள்… அவரது பிழைப்பு சரியில்லை என நான் சொல்ல வரவில்லை - அவர் உழைத்துச் சம்பாதிக்கிறார் - அவருக்கு பாராட்டுக்கள். ஆனால் இதே இடியாப்பத்தினை வீடுகளிலும் செய்யலாம் - கொஞ்சம் நச்சு வேலை தான். இருந்தாலும் வீட்டில் கிடைக்கும் சுவை இது போன்ற வியாபாரிகளிடம் வாங்கும்போது கிடைக்குமா என்பது தெரியவில்லை - ஏனெனில் நான் இது வரை அவரிடம் வாங்கியதில்லை.
வேலையே செய்யாமல் அனைத்தும் காசு கொடுத்தால் கிடைக்கவேண்டும் என்ற மனப்போக்கு அதிகரித்துவிட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. உங்கள் சிந்தனைகள் என்ன? உங்கள் ஊர்களிலும் இது போல இடியாப்பம்/தேங்காய்ப்பால் விற்பனை நடக்கிறதா? சொல்லுங்களேன்.
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
22 நவம்பர் 2024
என் அலுவலகத்தில் எனக்கு கீழே ஒருவர் வேலை பார்த்தார். சொல்வதைக் கேட்கும் பழக்கம் அவரிடம் கம்மி. ஆனால் புத்திசாலி. வேலை பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும். ஆனால் வேலை சரியாக செய்ய மாட்டார். மதியம் ஆனதும் குவார்ட்டரை உள்ளே தள்ளி விடுவார். தலைமை ஆசிரியர்- கணக்கு டீச்சரின் மகன். ஏனோ எனக்கு அவரை ரொம்பப் பிடித்திருந்தது. அவர் செய்யும் தவறுகளை கண்டித்தாலும் கண்டுகொள்ள மாட்டேன்.
பதிலளிநீக்குசெல்லங்களின் வாழ்வு நிலை என்பது சிரமம்தான். அங்கும் உண்டு இன பாகுபாடு.
பதிலளிநீக்குபால் ஐஸ் எங்கள் காலத்தில் பத்து பைசா. இன்றுவரை அதற்கு ஈடான ருசியை நாக்கு உணரவில்லை!
பதிலளிநீக்குஇடியாப்பம் தேங்காய்ப்பால், குருமா இங்கும் சைக்கிளில் ஸ்பீக்கரில் அலறியபடி விற்பனை செய்கிறார்கள்.
பதிலளிநீக்குமுன்பெல்லாம் சைக்கிள் தயிர் எடுத்து வந்து விற்பார்கள். மண்பானையில் கொண்டு வருவார்கள். அவர்கள் அதை தயிர் என்று சொன்னாலும் அது தயிர் பதத்துக்கு மோர் பதத்துக்கு இடைப்பட்டதாய் இருக்கும். ஒருமாதிரி அதன் சுவை எனக்கு அப்போது பிடித்திருந்தது!
பதிலளிநீக்குமனிதம் இன்னும் சில மனிதர்களிடம் உயிர்ப்போடு இருக்கின்றது
பதிலளிநீக்கு