அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நடை நல்லது - பகுதி பதிமூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : கவர்ந்து இழுக்க எத்தனை வழி…
திருச்சி பயணத்தில், கடைத்தெருவில் இருக்கும் ஒரு மிகப் பெரிய வணிக வளாகத்திற்குச் சென்றபோது இவற்றைப் பார்த்தேன். இவை என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா? இவை தின்பண்டம் அல்ல! அப்படி என்றால்? இவை குழந்தைகளுக்கான தலையணைகள். குழந்தைகளுக்கு பிடிக்கும் லேஸ் சிப்ஸ், ஆலூ Bபுஜியா போன்றவை வரும் பாக்கெட்டுகள் போலவே வடிவமைத்தது இருக்கிறார்கள் இந்தத் தலையணைகளை! எப்படியாவது குழந்தைகளைக் கவர்ந்து இழுத்து இவற்றை அப்பா, அம்மா வாங்கிக் கொடுத்துவிடுவார்கள் என்பது தான் இதன் சூட்சுமம். ஆனால் எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரிகிறது. இந்தியாவில் காப்பி ரைட் குறித்த கவலைகள் ஒருவருக்கும் இல்லை என்பது தான் அது! பொதுவாக மற்ற நாடுகளில் பிரபலமான ஒரு நிறுவனத்தின் எந்த விஷயத்தினையும் மற்ற நிறுவனங்கள், நபர்கள் தங்களது பொருட்களை மார்க்கெட் செய்ய பயன்படுத்த முடியாது! அப்படிச் செய்து மாட்டினால் அதிக அளவில் அபராதம் போடுவார்கள். இங்கே அந்த கவலை இல்லை! யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்! கேட்பார் யாருமே இல்லை என்பது தான் நிதர்சனம்.
******
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : பார்ட்டி - OLX
ஒன்பது வருடங்கள் முன்னர் எடுக்கப்பட்ட OLX விளம்பரம். இன்றைக்கு அலைபேசிகள் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. அந்தக் காலத்தில் இப்படியான வசதிகள் குறைவு. ஆனால் இன்றைக்கும் பார்க்கும்போது மனதில் நம் இராணுவ வீரர்களின் மாசற்ற தியாகம் நினைவுக்கு வந்து உடல் சிலிர்க்கும், மனது அவர்களுக்காக பாராட்டு மழை பொழியும், கண்கள் துளிர்க்கும்… இதற்கு முன்னர் இங்கே வெளியிட்டு இருக்கிறேனா என்பது நினைவில் இல்லை. அப்படியே வெளியிட்டு இருந்தாலும் பரவாயில்லை. இன்னொரு முறை பாருங்களேன்…
மேலே உள்ள காணொளி வழி பார்க்க இயலவில்லை என்றால் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாம்.
A phone. A picture. And a lifetime of friendship in Kashmir. (youtube.com)
******
பழைய நினைப்புடா பேராண்டி : கச்சி கோடி
2016-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - கச்சி கோடி - ராஜஸ்தானின் பொய்க்கால் குதிரை நடனம்..... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
தமிழகத்தின் தஞ்சைப் பகுதிகளில் பொய்க்கால் குதிரை நடனம் மிகவும் பிரபலம். கால்களில் மரக்கட்டைகளைக் கட்டிக்கொண்டு, குதிரை உருவத்தினை சுமந்தபடி ஆடும் பொய்க்கால் குதிரை நடனத்தினை நம்மில் பலரும் பாத்திருக்க வாய்ப்புண்டு. இதே மாதிரி குதிரை நடனம் ராஜஸ்தானிலும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? ராஜஸ்தானிலும் இப்படி குதிரை உருவத்தினை தனது இடுப்பில் மாட்டிக்கொண்டு, அலங்கார உடைகள் அணிந்து பாரம்பரிய இசை இசைக்க, சுற்றிச் சுற்றி நடனமாடுவார்கள். அந்த நடனத்திற்குப் பெயர் கச்சி கோடி [Kachhi Godi] நடனம்.
சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டாவது தேசிய கலாச்சாரத் திருவிழா சமயத்தில் ராஜஸ்தானிலிருந்து ஒரு குழு தலைநகரின் IGNCA-வில் தொடர்ந்து இந்த கச்சி கோடி நடன்ம் ஆடிக்கொண்டிருந்தார்கள். நடனம் ஆட மூன்று பேர், இசைக்குழுவில் நான்கு-ஐந்து பேர் என சுமார் பத்து பேர் கொண்ட குழு. அவ்வப்போது இடைவெளி கொடுத்து நாள் முழுவதும் ஆடியபடியே இருந்தார்கள் அந்த மூன்று பேரும். அதில் ஒருவர் பொய்க்குதிரையைச் சுமந்தபடி ஆட, மற்ற இருவரும் [ஒரு பெண், ஒரு ஆண்] முக்கிய ஆட்டக்காரருடன் ஆடுகிறார்கள்.
ராஜஸ்தானின் ஷேகாவத்தி பகுதியில் தான் இந்த நடனம் முதன் முதலாக ஆடினார்கள் என்றும் அங்கே இருந்த கொள்ளைக்காரர்களின் வீர பராக்கிரமங்களை பாடல் மூலம் தெரிவிக்க நடனம் ஆடுபவர்கள் கைகளில் கத்திகளோடு நடனமாடுவார்கள் எனத் தெரிகிறது. ஆனால் நான் பார்த்த நாட்டியக்காரர்கள் கத்தியுடன் ஆடவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே குதிரை வேடமிட்டிருந்ததால் கத்தியுடன் ஆடவில்லை போலும். ஆனாலும் சுற்றிச் சுற்றி மூவரும் ஆடுவதைப் பார்க்கும் நமக்கே தலைசுத்துகிறது. ஆனால் சுற்றும் அவர்களோ எந்தவித தயக்கமோ, சோர்வோ இல்லாது தொடர்ந்து ஆடிக்கொண்டே இருக்கிறார்கள்.
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படித்து ரசிக்கலாமே - இது வரை நீங்கள் படித்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் ஓவியம் : புகை
நண்பர் பத்மநாபன் அவர்களின் உறவினரும் ஆசிரியருமான திரு இராஜேஷ் சங்கரப்பிள்ளை அவர்களது முகநூல் இற்றைகள் அவ்வப்போது வாசிப்பது வழக்கம். அவர் தேர்ந்தெடுத்த சில படங்களுக்கு (யார் வரைந்தது, எடுத்தது என்பது தெரியாது!) கவிதைகளும் எழுதுவார். வட்டார வழக்கு மொழியில் அவரது இற்றைகள் வாசிக்க எனக்கு மிகவும் பிடிக்கும் - அவர்களது வட்டார வழக்கில் சில எனக்கு புரியாது என்றாலும்! சமீபத்தில் அவரது பக்கத்தில் பார்த்த ஒரு ஓவியம்/நிழற்படம் மிகவும் இரசிக்கும் விதமாக இருந்தது… அந்த படம் இங்கே இந்த வாரத்தின் இரசித்த படமாக/ஓவியமாக! உங்கள் பார்வைக்கு.
******
இந்த வாரத்தின் படித்ததில் பிடித்தது : சொர்க்கம்…
ஜீயெஸ் என்பவர் எழுதிய சிறுகதை இந்த வாரத்தின் படித்ததில் பிடித்த சிறுகதையாக இங்கே. மயிலையில் இருக்கும் சிறு வீடுகள் - திருச்சியில் ஸ்டோர் என்று சொல்வதுண்டு - அதனைப் பற்றி எழுதி இருக்கும் முதல் பத்தியே மனதுக்குள் அந்த வீட்டினை கொண்டு வந்து விடுகிறது. அரசியல் அராஜகம், அப்பா - மகன் உறவு, என பல விஷயங்களை தொட்டுச் செல்கிறது இந்தச் சிறுகதை. முதல் பத்தி மட்டும் கீழே!
மைலாப்பூர் சித்திரக் குளத்தருகில், மூன்றாவது குறுக்குத் தெருவில், பத்தாம் இலக்கம் கொண்ட இந்த கடைசி வீட்டிற்கு நீங்கள் வந்திருக்கிறீர்களா? காலை எட்டு மணிக்கு முன்னே வந்தால், வாசலில் உள்ளே நுழைய கொஞ்சம் சிரமப்படுவீர்கள். காரணம் இரண்டு வரிசைகள் நின்று கொண்டிருக்கும். டவல், சோப்பு டப்பா சகிதம் குளிக்க ஒரு வரிசை. டாய்லெட் போக இன்னொரு வரிசை. ஆண், பெண் என்கிற பேதமெல்லாம் இங்கில்லை. நூறு வருட பழமையான அந்த வீட்டில், பத்து குடித்தனங்களுக்கு ஓரே டாய்லெட், ஒரே பாத்ரூம். ஒலிம்பிக்ஸ் போட்டியைவிட மிகக் கடுமையான டைமிங் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தது. யாராவது ஐந்து நிமிடத்திற்கு மேல் வெளியே வரவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். என்ன சார், முகம் சுளிக்கிறீர்கள்? சென்னையில் இந்த இடத்தில், இவ்வளவு குறைந்த வாடகைக்கு யார் சார் வீடு கொடுப்பார்கள்? யாரும் காலி செய்து கொண்டு போகமாட்டார்கள். அப்படியே தப்பித்தவறி யாராவது காலி செய்து கொண்டு போனால், அடுத்த அரைமணி நேரத்தில் இன்னொரு குடும்பம் வந்திருக்கும், இன்னும் அதிக ஜனத்தொகையுடன்.
முழுக்கதையும் படிக்க சுட்டி கீழே!
சொர்க்கம் – சொல்வனம் | இதழ் 327 | 22 செப் 2024 (solvanam.com)
******
இந்த வாரத்தின் பகிர்வு : ஆப்பிள் சூசு
தமிழ் கோரா தளத்தில் படித்து ரசித்த ஒரு பகிர்வு… நீங்களும் ரசிக்கலாமே! எழுதியது யாராக இருந்தாலும் அவருக்கு நன்றி! நிஜமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இப்படியான பாசப் பிணைப்பு இன்றைக்கும் ஒரு சிலரிடமேனும் இருக்கிறது என்றால் மகிழ்ச்சியே!
"என்னங்கய்யா வேணும்.... டீ சாப்பிடுறீங்களா ?"
"சூஸ்... சூஸ்... வாங்கி தா கண்ணு.. ஆசையா இருக்கு"
"என்ன ஜூசுங்க ஐயா வேணும்?"
"ஆப்பிள் சூசு"
கடையில் சுற்றி நிற்பவர்கள் கேலியுடன் "பார்ரா" என்கிறார்கள்.
சிரித்தவாறு ஜூஸ் வாங்க உள்ளே போகிறார் அந்த முகம் தெரியாத மனிதர்.
அந்த கேப்பில் அந்த முதியவரை நானொரு படமெடுத்துக் கொண்டேன். உள்ளே போனவர் பெரிய கப் நிறைய ஜூஸுடன் வெளியே வந்தார்.
பெரியவர் ஆசையாசையாக இரு கைகளிலும் ஜூஸ் கப்பை ஏந்தி, ஸ்ட்ரா வழியாக மெல்ல உறிகிறார். அவர் கண்கள் சொக்கிப்போகிறது. முகத்தில் அப்படி ஒரு திருப்தி.
அளவு பார்த்து பார்த்து பாதி ஜூஸை குடித்துவிட்டு மெல்ல அங்கிருந்து நகர்ந்தார். வாங்கிக்கொடுத்தவர் பதறிப்போய்... "ஐயா... அந்த டம்ளரை கொடுத்துட்டு போங்க" என்று அழைக்க... கையால் சைகை காட்டிவிட்டு முன்னாள் சென்றார்.
அங்கே அவர் மனைவி பிச்சை எடுத்துக்கொண்டு இருக்க. அவர் கையில் மீதி ஜூஸை கொடுத்து குடிக்க சொல்கிறார். "ஏது?" என்று அந்த அம்மா கேட்க... வாங்கிதந்தவரை நோக்கி விரல் நீட்டுகிறார்.
"குடி... இனிப்பா இருக்கு..." என்று ஆசையாய் அவர் சொல்ல, பாட்டி கண்ணில் காதல் மின்னுகிறது.. வாங்கிக்கொடுத்தவர் சிரித்துக்கொள்கிறார்.
நான் அந்த காதலை, கண்களில் ஹார்டின்களோடு வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறேன்.
******
இந்த வாரத்தின் தகவல் : கோவர்த்தன் பூஜை
Braj பூமி என்று அழைக்கப்படும் பகுதிகளில் (மதுரா, பிருந்தாவன், கோவர்த்தன், Bபர்ஸானா) இன்றைக்கு கோவர்த்தன் பூஜை கோலாகலமாக கொண்டாடுவார்கள். கோவர்த்தன கிரியை குடையாக்கி மழையிலிருந்து காப்பாற்றிய கிருஷ்ண பகவானின் லீலை நடந்த நாள். தீபாவளியிலிருந்து நான்காம் நாள் கொண்டாடப்படும் பண்டிகை. வட இந்தியாவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு தீபாவளி கொண்டாட்டங்கள் உண்டு - அதில் இந்த கோவர்த்தன் பூஜையும் ஒன்று. Braj பூமியில் ஒரு சில நாட்களேனும் தங்கி அங்கே இருக்கும் இடங்களில் நடக்கவும், ஒவ்வொரு இடமாக உணர்ந்து, ரசிக்க, ஆசை உண்டு. பார்க்கலாம் எப்போது வாய்ப்பு அமையும் என!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
2 நவம்பர் 2024
இன்றைய கதம்பம் ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குதலையணை... ஓசி விளம்பரம்தானே... தலையணை மந்திரம்போல் குழந்தைகளின் மனதில் இறங்கி, அந்த உணவுக்கு அடிமையாகாமல் இருந்தால் சரிதான். நான் இருந்த ஊரில், வேலை பார்த்த கம்பெனி இந்த சிப்ஸ் விநியோகிக்கும் உரிமை வாங்கி டன் டன்னாக வியாபாரத்தைப் பெருக்கியது நினைவுக்கு வருகிறது.
புகை பிடிப்பது ஆயுளை அதிகரிக்கும் என்று சொல்லும் விளம்பரம் போன்று இருக்கிறதே
இன்றைய வாசகம் சிறப்பு.
பதிலளிநீக்குஆப்பில் சூசு மனதை கலக்கி விட்டது.
விளம்பர யுத்தி குழந்தைகளை டார்கெட் செய்கிறது.
இன்றைய வாசகம் அருமை.
பதிலளிநீக்குஆனால் எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரிகிறது. இந்தியாவில் காப்பி ரைட் குறித்த கவலைகள் ஒருவருக்கும் இல்லை என்பது தான் அது! பொதுவாக மற்ற நாடுகளில் பிரபலமான ஒரு நிறுவனத்தின் எந்த விஷயத்தினையும் மற்ற நிறுவனங்கள், நபர்கள் தங்களது பொருட்களை மார்க்கெட் செய்ய பயன்படுத்த முடியாது! அப்படிச் செய்து மாட்டினால் அதிக அளவில் அபராதம் போடுவார்கள்.//
இங்கு என்ன சட்டதிட்டம் தான் இருக்கு ஜி? வெளி நாட்டுல இப்படிச் செஞ்சா அவ்வளவுதான் அபராதம் மட்டுமில்லை பிஸினஸே காலி. சொத்தே போய்விடும்.
அந்த அளவு சட்டங்கள் இங்கு வேண்டும். ஆனா நாமதான் 'சுதந்திர நாடாச்சே'! business ethics என்பது சுத்தமாக இல்லை.
கீதா
OLX - விளம்பரம் அருமையான ஒன்று. மனதை நெகிழ்ச்சியடைய வைத்துவிட்டது.
பதிலளிநீக்குகச்சி கோடி என்பது நினைவில்லாவிட்டாலும், ராஜஸ்தான் பொய்க்கால் குதிரை நடனம் என்பதைப் பார்த்ததும் படங்களும் பதிவும் பார்த்த நினைவு வந்தது. அங்கு போய்ப் பார்த்தால் யெஸ்ஸூ!
அந்தப் பாட்டி ஓவியம் சூப்பர் ஆனா பாருங்க கையில்!!! என்ன புகையிதுன்னு.,.
சொர்கம் - கதை வாசிக்கிறேன்..ஜி வாசித்துவிட்டு வருகிறேன்.
சூ சு என்பதைப் பார்த்ததும் நாம் மற்ற பொருளில் சொல்லும் நினைவு வந்துவிட்டது!!! ரொம்ப ரசித்தேன் ஜி. சூப்பர் ல!!? கோரா தளத்தில் இப்படிப் பதிவும் போடலாமா!!?
ஆமாம் இன்று கோவர்த்தன் பூஜை. நேற்று லக்ஷ்மி பூஜை. எங்கள் நெருங்கிய உறவினர் வீட்டில் நேற்று லக்ஷ்மி பூஜை. சோட்டி தீபாவளி, படா தீபாவளி லக்ஷ்மி பூஜை, கோவர்த்தன பூஜை என்று...
//Braj பூமியில் ஒரு சில நாட்களேனும் தங்கி அங்கே இருக்கும் இடங்களில் நடக்கவும், ஒவ்வொரு இடமாக உணர்ந்து, ரசிக்க, ஆசை உண்டு. பார்க்கலாம் எப்போது வாய்ப்பு அமையும் என!//
மீ க்கும்.
கீதா
நாளை भाई दूज இல்லையா!
பதிலளிநீக்குகீதா
சொர்கம் - அருமையான கதை எழுதிய விதமும் அருமை. தொடத்தில் சில நையாண்டியும்!!!
பதிலளிநீக்குயதார்த்தம். இப்போதெல்லாம் நிலங்கள் சும்மானாலும் கோயில் சொத்து என்று பறிக்கப்படுவதையும் அரசியல் பலமும், இப்படி பல சொத்துகள் கொள்ளையடிக்கப்படுவதையும் சாதாரண பொதுஜனம் இதை எதிர்க்க முடியாததையும் வைத்து அழகாகப் புனையப்பட்ட கதை. ரொம்பப் பிடித்தது. கோயில் நிலம் என்று சொல்லி ஒரு குடிமகனின் சர்வ சட்ட டாக்குமென்டுடள் இருந்தும் சொத்து பறிக்கப்பட்டு கோவிலுக்குப் பயன்படுத்தப்படாமல் மீண்டும் பெரிய புள்ளிக்குக் கைமாறுவதை நாம் பார்க்கிறோமே!!!
கீதா
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.
தங்கள் எண்ணங்களாகிய பதிவு அருமை. குழந்தைகளை ஈர்க்க எப்படியெல்லாம் செய்கிறார்கள்.? பொய்கால் குதிரை ஆட்டத்தின் பதிவை படித்து ரசித்தேன். அருமை.
ஆப்பிள் ஜுஸ் பதிவு மனதை நெகிழ்த்தியது. வயதான காலத்திலும், மாறாத அவரின் அன்பான மனதைக் கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது.
இந்த வார புகைப்படம் நன்றாக உள்ளது. இவ்வளவு வயதான பாட்டியும் புகைக்கு அடிமையா?
சொர்க்கம் கதை அருமை. இன்றைய நிதர்சனத்தை உணர்த்தும்படிக்கு நன்றாக எழுதியுள்ளார் கதையின் ஆசிரியர்.
மொத்தத்தில் இன்றைய கதம்பம் அருமையாகவும், பல விஷயங்களை தெரிந்து கொள்ளும்படியும் இருக்கிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.