அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட எதுவும் மாறவில்லை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
நடை நல்லது வரிசையில் இதோ இன்றைக்கு அடுத்த பகுதி! பதிவுகளுக்கு முகநூலிலும் இங்கேயும் நீங்கள் அனைவரும் தரும் ஆதரவிற்கு மனம் நிறைந்த நன்றி. என்னதான் முகநூலில் ஒவ்வொரு தினமும் நடை நல்லது என்ற தலைப்பில் இந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்றாலும், இங்கே, வலைப்பூவில் பகிர்ந்து கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி அங்கே இல்லை என்பது என் எண்ணம். எனக்கான சேமிப்பாகவும், முகநூலில் இல்லாதவர்கள் படிக்க வசதியாகவும், நடை நல்லது பதிவுகள் இங்கேயும்!
தமிழ் தேரி மா - 27 செப்டம்பர் 2024:
நடை நல்லது தொடரில் சில நாட்கள் இடைவெளி வந்துவிட்டது - இருந்தாலும் தொடர்ந்து நடப்பதில் இடைவெளி இல்லை என்பதில் மகிழ்ச்சி.
இன்னும் சில நாட்களில் நவராத்திரி… வீடுகளில் கொலு வைக்க கொஞ்சம் கொஞ்சமாக எல்லோரும் தயாராகி வருகிறார்கள். திருவரங்கத்திலும் திருச்சியிலும் பொம்மை கடைகள் வரத் தொடங்கி விட்டன. திருச்சி மங்கள் & மங்கள் கடையிலும் திருவரங்கத்தில் மூன்று பொம்மை கடைகளிலும் பொம்மைகளை பார்த்து வந்தேன். பெரும்பாலும் மண் பொம்மைகள் என்றாலும் சில இடங்களில் கொல்கத்தா பொம்மைகள் வந்து இருக்கின்றன. எல்லாம் பார்க்க அழகு என்றாலும் சில பொம்மைகளின் முகம் நேர்த்தியாக இல்லை. சில பொம்மைகளின் விலை நமக்கு கட்டுப்படாத அளவுக்கு இருக்கிறது.
ஒரு கடையில் விற்பனையாளராக இருப்பவரிடம் கேட்டதற்கு புதிதாக ஒரு அச்சு செய்ய கிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகிறது என்பதால் இந்த வருடம் கொஞ்சம் விலை அதிகம். புதிய பொம்மைகள், புதிய அச்சுகள் என்பதால் கொஞ்சம் விலை அதிகம் என்றார். பழைய அச்சை வைத்து பொம்மைகள் தொடர்ந்து செய்தால் finishing சரியாக வராது என்பதோடு நேர்த்தியும் இருக்காது என்பது அவருடைய வாதமாக இருந்தது. இதைத் தவிர பொம்மைகள் செய்யும் இடமும் விற்பனை செய்யும் இடமும் வேறு வேறு - பொம்மைகளை எடுத்து வரும்போது கொஞ்சம் உடைந்தால் கூட விற்கவும் முடியாது மொத்த உழைப்பும் பாழ் என்று அடுத்த வாதத்தை எடுத்து வைக்கிறார்.
திருவரங்கத்தில் அக்கா கடை என்று அழைக்கப்படும் சரோஜா பொம்மை கடை கொஞ்சம் பிரபலம். பல வருடங்களாக ராகவேந்திரா ஆலயம் அருகே நவராத்திரி சமயத்தில் கடை போடுவார்கள். அரங்கநாதன் ஆலயத்திற்குச் சொந்தமான அந்தக் கட்டிடம் பாழடைந்து விட்டதால் சென்ற வருடம் இடித்து விட்டார்கள். அதனால் இந்த வருடம் அவர்கள் கடை அம்மாமண்டபம் சாலையில் மங்கம்மா நகர் அருகே (ஶ்ரீ சீனிவாச பெருமாள் ஆலயம் வாயிலில்) போட்டு இருக்கிறார்கள். நேற்றைய நடையின் போது அந்தக் கடைக்குச் சென்று வந்தேன்.
சரியாக அந்தக் கடைக்கு அருகே சென்றபோது கடையின் வாசலில் அமர்ந்து இருந்த கடைப்பெண்மணி, என்னிடம் விதம் விதமாக சைகைகள் காண்பிக்க, புரியாமல் என்னம்மா சொல்றீங்க என்றவுடன், சிரித்தபடி, “தமிழ் தெரியுமா? உங்களைப் பார்த்தா வடக்கன் மாதிரி இருக்கீங்களா, நீங்க வடக்கிலிருந்து வரிங்கன்னு நினைச்சு படுத்து இருக்கும் பெருமாளை பார்த்தீர்களா என்று கேட்டேன்” என்கிறார். தமிழ் தேரி மா (தமிழ் தெரியுமா என்பதை வடக்கில் இப்படிச் சொல்வதுண்டு……) என்று சில நகைச்சுவைகள் உண்டு. தெரியுமா என்று அடிக்கடி சொல்வதைக் கேட்ட வடக்கர் அதை ஹிந்தியில் தேரி மா அதாவது உன் அம்மா என்று ஆக்கிவிட்டார். அதனால் என்ன நமக்கு தமிழும் அன்னைதான் அல்லவா…..
******
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் - 5 அக்டோபர் 2024:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய், ஒவ்வொரு பாதையாய்… நடை தொடர்கிறது. நடப்பது மட்டுமே பிரதான தேவையாக இருக்கிறது. எங்கே செல்கிறோம், எதற்காகச் செல்கிறோம் என்பது காரணியாக இருக்கவில்லை. சில சமயங்களில் மிதிவண்டி பயணம்! சில சமயங்களில் நடை - கொஞ்சம் சாலைகளில் என்றால் ஒரு நாள் திருச்சி புத்தகத் திருவிழாவில், மற்றொரு நாள் கடைத்தெருவில். புத்தகத் திருவிழா/கடைத் தெருவில் நடை என்றால் எப்போதும் நடக்கும் வேகமான நடையாக இல்லாமல், நின்று நிதானித்து, சுற்று முற்றும் பார்த்து நடக்க வேண்டியிருக்கும். புத்தக திருவிழாவில் புத்தகங்களையும் கவனித்து ஒரு நடை என்றால், கடைத் தெருவில் பராக்கு பார்த்தபடியான நடை.
புத்தக திருவிழா பெரிய அளவில் நடத்துகிறார்கள் என்றாலும், பெரும்பாலான பதிப்பகங்களை நான் அறிந்திருக்கவில்லை. அது எனது அறியாமை என்று தான் கொள்ளவேண்டும். எனக்குத் தெரிந்த பதிப்பகங்கள் என்று பார்த்தால் வானதி, கிழக்கு, உயிர்மை, திருமகள், நியூ செஞ்சுரி, திரு வேடியப்பன் அவர்களின் டிஸ்கவரி என கைவிட்டு எண்ணிவிடும் அளவுக்கே இருந்தது. வழக்கம் போல, உயிர்மை வாயிலில் பதிப்பக உரிமையாளர் சக்கர நாற்காலியில் அமர்ந்து வாசகர்களுக்கு தனது புத்தகங்களில் கையொப்பம் இட்டும், நிழற்படங்கள் எடுக்க போஸ் கொடுத்துக் கொண்டும் இருந்தார். வேறு எந்த எழுத்தாளர்களையும் என்னால் பார்க்க முடியவில்லை - இல்லை இல்லை வந்திருந்தவர்களை எனக்குத் தெரியவில்லை - அப்படிச் சொல்வது தான் சரி. இரண்டு வீதிகள், வீதிக்கு இரு புறமும் கடைகள் என மொத்தம் நான்கு வரிசைகளில் புத்தகக் கடைகள். சுஜாதா, பாலகுமாரன், இந்திரா சௌந்தரராஜன், காலச்சக்கரம் நரசிம்மா, லக்ஷ்மி, சிவசங்கரி, என பல தெரிந்த எழுத்தாளர்கள் புத்தகங்கள் என்றால் பல எனக்குத் தெரியாத எழுத்தாளர்களின் புத்தகங்கள்.
ஒரு புத்தகக் கடையில் பார்த்த பதாகை கொஞ்சம் கலவரப்படுத்தியது…… என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நிழற்படம் எடுத்துக் கொண்டேன். அந்தப் படம் கீழே இணைத்திருக்கிறேன். நீங்கள் சொல்லுங்களேன் என்ன சொல்ல வருகிறார் என!
தற்போதெல்லாம் அச்சு புத்தகங்களை வாங்குவதில் எனக்கு அவ்வளவு ஈடுபாடு இல்லை. முன்பு நிறைய வாங்கிக் கொண்டு இருந்தேன். பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்பதால் தற்போது வாங்குவதே இல்லை. மனைவியும் மகளும் அவர்களுக்கு வேண்டிய சில நூல்களை வாங்கிக் கொண்டார்கள். நான் வேடிக்கை பார்த்ததோடு சரி. என்னிடம் தில்லியில் வைத்திருந்த அச்சுப் புத்தகங்கள் பலவற்றை நண்பர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட்டேன். அவர்கள் படிப்பதோடு, பராமரிக்கவும் செய்யட்டுமே என்ற நல்லெண்ணம் தான் காரணம். நான் கிண்டில் மூலமோ, அலைபேசி/கணினி மூலமோ மட்டுமே நூல்களை வாசிக்கிறேன். அச்சுப் புத்தகங்கள் என்றால் நூலகத்தில் எடுத்தால் மட்டுமே. எனக்கென்று அச்சுப் புத்தகங்களை வாங்குவதில்லை.
திருச்சி/திருவரங்கம் இம்முறை வந்த பிறகு தினமும் நடப்பதும், சைக்கிள் ஓட்டுவதும் தொடர்கிறது என்றாலும், தினமும் நடை நல்லது பகிர்வுகளை எழுத முடிவதில்லை. காரணம் என்று பெரிதாக ஒன்றுமில்லை. ஏதேதோ வேலைகள் இருந்துகொண்டே இருக்கின்றன. கூடவே நவராத்திரி வந்துவிட, என்னதான் பெண்களுக்கான பண்டிகை என்றாலும் கூடமாட உதவி செய்யவேண்டியிருக்கிறது. அதனால் தினமும் நடை நல்லது பதிவு எழுதுவதற்கென்று மடிக்கணினி முன்போ அல்லது அலைபேசியை வைத்துக் கொண்டோ அமர்ந்து விட முடிவதில்லை. அதனால் இடைவெளி வந்துவிட்டது. நேற்று கூட வீட்டில் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன்… “உங்களை எழுத வேண்டாம்னு யாரும் சொல்லலையே? எழுத வேண்டியது தானே?” என்றார்… சரி என்றேன். இதோ இன்றைக்கு நடை நல்லது பதிவொன்றை வெளியிட்டு விட்டேன்.
மேலும் நடப்போம்…… மேலும் பேசுவோம்……
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
8 நவம்பர் 2024
பொம்மை விற்பவர் வாதமும் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் விலை கட்டுப்படியாகா விட்டால் வாங்க தோன்றுவதில்லை. முகமும் சரியாய் இல்லாவிட்டால் எப்படி வாங்குவது?!
பதிலளிநீக்குகும்பகோணத்தில் ஒரு அக்கா கடை சொன்னார்கள். ஆனால் அது பஜ்ஜி கடை. அதுசரி, உங்களை பார்த்தால் வடக்கன் போலவா தெரிகிறதாம்? வீட்டில் என்ன சொன்னார்கள்?!!
பதிலளிநீக்குஎழுத்தாளர்கள் பெருகி விட்டார்கள். வாசகர்கள் குறுகி விட்டார்கள்! எல்லோரும் எழுதினால் யார் படிப்பது?!! நானும் புத்தகங்கள் வாங்குவதைக் குறைத்திருக்கிறேன் என்று பெயர்!
பதிலளிநீக்கு