அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
சென்ற வருடம் இதே நாளில் சென்னை மாநகரை உலுக்கி எடுத்த மிசாங்க் புயலும் அதனால் நகரம் முழுவதும் வெள்ளப்பெருக்கு எடுத்து ஓடியதும் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். வருடங்கள் ஓடிக்கொண்டே இருந்தாலும், ஒவ்வொரு மழையிலும் அரசியல்வாதிகள்/ஆட்சியாளர்கள், வெள்ளப்பெருக்கை சமாளிக்க சரியான ஏற்பாடுகள் செய்திருக்கிறோம் என்று சொன்னாலும், மழை வந்தபின்னர் உண்மை நிலை புரிகிறது. ஒவ்வொரு மழையிலும் அவதிப்படுவது என்னவோ பொதுஜனம் மட்டுமே. சென்ற வருட மழையின் போது திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய சில வரிகளை இன்றைய பதிவாக - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
மழையே மழையே!
குடிக்கத் தானே கேட்டேன்; எங்களை முடிக்கக் கேட்டேனா?
ஒரு வாய் முழுங்கக் கேட்டேன் ; ஒரேயடியாய் மூழ்கக் கேட்டேனா?
நீராடக் கேட்டேன்,எனை நீராட்டக் கேட்டேனா?
நிலத்தடி நீர் எடுத்தது நானல்ல;
காட்டை அழித்தது நான் அல்ல;
ஏரியைத் தூர்த்ததும் நானல்ல;
செய்தவனை விட்டுவிட்டு எமை ஏன் வெச்சு செய்கிறாய்?
கோடியிலே புரளும் கோமான்களை விட்டுவிட்டு,
ஊர்க்கோடி குடிசையில் உழலும் எமை ஏன் சோதிக்கிறாய்?
எய்தவன் இருக்க அம்பை ஏன் வாதிக்கிறாய்?
மீண்டும் மீண்டும் எமையே ஏன் சோதிக்கிறாய்?
பஸ்ஸில் போகவே காசில்லை;
இதில் படகில் போவதும் லேசில்லை;
கூரையை பிய்த்துக்கொண்டும் வருகிறாய்;
தரையைத் தகர்த்துக் கொண்டும் நுழைகிறாய்;
கிழிந்த பாய், உடைந்த சட்டியில் என்னத்தைக் கண்டாய்?
அடுப்பில் அனலில்லை;
சோறாக்க அரிசியுமில்லை;
குளிரடங்க ஒரு போர்வையில்லை;
குழந்தை அழுகுரல் கேட்கத் த்ராணியில்லை!
கூலியில் கூழ் குடித்த எமை பிச்சையும் எடுக்க வைத்தாய்;
எம் தன்மானத்தை மேலும் தகர்த்து வைத்தாய்!
கூப்பிடா இடத்திற்கு வரலாமா? வந்தும் பேரிடர் தரலாமா?
போதும், உன் ஆட்டத்தை நிறுத்திக்கொள்;
இயற்கையை இனி சீண்டமாட்டோம்!
இது எம் உறுதிமொழி, ஏற்றுக்கொள்!🙏🏻🙏🏻🙏🏻
மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
5 டிசம்பர் 2024
// எய்தவன் இருக்க அம்பை ஏன் வாதிக்கிறாய்? //
பதிலளிநீக்குவதைக்கிறாய் என்று வந்தால் பொருத்தமாக இருக்கும்.
சோதிக்கிறாய் - வாதிக்கிறாய்.மீட்டர்...
நீக்குவிஜி.
அருமையாக எழுதியிருக்கிறார் V V.
பதிலளிநீக்குவரிகள் அனைத்தும் ஷார்ப்.
எய்தவர் இவர்கள் இல்லை எனும்போது இவர்கள் எப்படி வாக்குறுதி தரமுடியும்?!! அப்பாவி தரும் வாக்குறுதியை அதனால்தான் மழையாமி நம்புவதில்லை!!
வாசகர் அனைவரின் சார்பாகவும் உறுதிமொழி.நம்மால் முடிந்தது ஏரியில் கட்டிய கட்டிடங்களை வாங்க வேண்டாம்.மரங்களை வெட்ட வேண்டாம்.முடிந்தால் மரங்கள் நட உதவலாம்.
நீக்குவிஜி.
விஜி, வரிகள் அனைத்தும் அருமை. ரொம்ப அருமை....
பதிலளிநீக்குஇயற்கையும் சக்தி வடிவம்தானே. அவள் ஆடத் தொடங்கினால் அவள் முன் நாம் எம்மாத்திரம்? மனிதர்கள் நாம் ரொம்பவே சீண்டுகிறோம். குறிப்பாகப் பெரும்புள்ளிகள். மாட்டிக் கொள்வது அப்பாவி ஜனங்கள்.
கீதா
நன்றிகள் பாராட்டுக்கு.
பதிலளிநீக்குவிஜி.
கவிதை நன்றாக இருக்கிறது. கேள்விகள் நன்றாக இருக்கிறது, பதில்கள் தான் எப்படி வரப்போகிறது என்று தெரியவில்லை. இயற்கையை சீண்டியவர்கள் ஏழைகள் இல்லையே!இவர்கள் உறுதிமொழி எடுத்து பயன் இல்லையே! இயற்கையை அழித்தவர்கள், ஏரியில், குளம் , குட்டையில் வீடு கட்டியவர்கள் அல்லவா உறுதி மொழி எடுக்க வேண்டும்.
பதிலளிநீக்கு"அரசியல் வாதிகளும், கோடியில் புரளும் சீமான்களும் தப்பி இருக்க கூலிக்கு உழைத்து உழலும் ஏழைகள் இருக்க இடமின்றி,கஞ்சிக்கும் வழி இன்றி அல்லாட்டம் "
பதிலளிநீக்கு.......சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.