எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 14, 2016

வாவ்… என்ன அழகு…. – பேப்பர் கூழ் பொம்மைகள்பேப்பர் கூழ் பொம்மைகள்

சமீபத்தில் தில்லியில் நடந்த இரண்டாவது கலாச்சாரத் திருவிழா பற்றி இதுவரை சில பதிவுகளில் எழுதி இருக்கிறேன் – குறிப்பாக கச்சி கோடா நடனம் பற்றி ஒரு பதிவே எழுதி இருக்கிறேன். மற்ற விஷயங்களும் அவ்வப்போது ஃப்ரூட் சாலட் பகுதிகளாக வெளியிட்டு இருப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். இன்றும் அந்த திருவிழாவில் பார்த்த ஒரு விஷயம் தான் பதிவாக. இன்று நாம் பார்க்கப் போவது பேப்பர் கூழ் பொம்மைகள்.

நமது வீடுகளில் முன்பெல்லாம் கிடைக்கும் காகிதங்களை ஊறவைத்து, ஆட்டுரலில் அரைத்து அதை ஏதாவது ஒரு பாத்திரத்தின் பின் பக்கத்தில் பூசி காய வைத்து கூடைகள் செய்வதைப் பார்த்திருக்கலாம்.  எங்கள் வீட்டில் அம்மா/அத்தைப் பாட்டி செய்வார்கள். அதற்கு பேப்பர்கள் கொடுத்து, அதனை ஊற வைத்து, ஊறிய பின் ஆட்டுரலில் அரைக்கவும் செய்திருக்கிறேன்.  இட்லி, தோசைக்குக் கூட சுலபமாக அரைத்து விடலாம், ஆனால் இந்த பேப்பர் கூழ் அரைப்பது மிகவும் கடினம் என்றாலும் அதை வைத்து கூடை செய்வதைப் பார்க்க ரொம்பவே ஆசை என்பதால் அரைத்துக் கொடுத்திருக்கிறேன். இப்போது கேட்டால் செய்வேனா என்பது தெரியாது!அப்படிப்பட்ட பேப்பர் கூழ் கொண்டு பொம்மைகள் தயாரிப்பார்கள் என்பதும் பின்னர் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.  சமீபத்தில் நடந்த இந்த கலாச்சாரத் திருவிழாவில் நாக்பூரில் இருந்து வந்திருந்த திருமதி ஒய். ரமணி எனும் பெண்மணி, இந்த பேப்பர் கூழ் பொம்மைகளை வைத்து ஒரு கடை வைத்திருந்தார்.  ஆஹா எத்தனை அழகான பொம்மைகள்.  பேப்பர் கூழில் பொம்மைகள் செய்து, அதற்கு இயற்கை வண்ணங்கள் பூசி, அதன் பிறகு உடைகளும், நகைகளும் அணிவித்து அழகிய பொம்மைகளை உருவாக்குகிறார் இவர்.  ஒவ்வொரு பொம்மையும் அத்தனை அழகு!

இந்திய நடன வகைகள் [பரதம், கதக்களி, குச்சிப்புடி, மணிப்பூரி], பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள், இந்தியாவின் பல மாநில மணப்பெண்கள், நாட்டுப்புற மக்கள், பல மாநில/நாட்டு ஆண், பெண் உருவங்கள், கிராமிய மனிதர்கள், புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள் என பலவற்றையும் இந்த பேப்பர் கூழ் பொம்மைகளில் வடித்து விடுகிறார்கள். நவராத்த்ரி கொலுவிற்கும் இந்த பொம்மைகளை விற்பனை செய்கிறார்கள். 

இந்த பொம்மைகளைத் தயார் செய்வதற்கு முக்கிய மூலப் பொருள், நியூஸ் பேப்பர்கள், கருவேல மரத்தின் பிசின் மற்றும் மார்பிள் துகள்கள் ஆகியவை தான்.  GI wire கொண்டு பொம்மை உருவத்தினை வடித்து அதன் மேல் பேப்பர் கூழ் கலவையைப் பூசி அதனை காய வைத்து, வண்ணங்கள் பூசி, உடை, நகைகள் அணிவித்து அழகுபடுத்தி, இந்த பொம்மைகளை தயாரிப்பதற்கு நிறையவே பொறுமை வேண்டும்.


காயத்ரி தேவி….

ஐந்து சிரங்களும், எட்டு திசைகள் மற்றும் பூமி ஆகாயம் ஆகியவற்றைப் பார்க்கும் பத்து கண்களும் பத்து கரங்களில் விஷ்ணுவின் எல்லா ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு சிவப்பு தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் காயத்ரி தேவியின் பொம்மை ஒன்றைப் பார்த்தபோது நம்ம வீட்டு கொலுவில் வைக்கலாமே என்று தோன்றியது.  புகைப்படங்கள் எடுத்தபடியே அதன் விலையைக் கேட்க, ரூபாய் மூன்றாயிரம் என்று சொன்னார்.  கலைக்கு விலையேது? இருந்தாலும் என் பாக்கெட்டுக்கு ஒத்து வராது என்பதால் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். இத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் இருக்கும்போது விலையும் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதும் தெரிந்தது. தசாவதார செட் கூட கிடைக்கிறது – 4, 6, 8, 12, 18, 30 இஞ்ச் அளவுகளில் பொம்மைகள் தவிர, ஆளுயர பொம்மைகள் கூட பேப்பர் கூழில் செய்கிறார்கள்.  11 இஞ்ச் தசாவதார செட் ஒன்றின் விலை – இருபதாயிரம் ரூபாய்! இப்படி நிறைய பொம்மைகள் பேப்பர் கூழில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.  விருப்பம் இருப்பவர்கள் மின்னஞ்சல் மூலம் விசாரித்து, பொம்மைகள் வேண்டுமெனில் வாங்கிக் கொள்ளலாம்.

அதிகம் எடை இல்லாத, கைகளால் மட்டுமே தயாரிக்கப்படும் இந்தப் பேப்பர் கூழ் பொம்மைகள் தயாரிப்பவர்களின் முகவரி – Artefakt Mrs. Y. Ramani, A-12, Shreenath Sainagar, Near Omkar Nagar, Ring Road towards Manewada, Nagapur – 400027, Maharashtra.  e-mail: ramani.y17@gmail.com மற்றும் yvasudevrao@gmail.com.

One who works with his hands are labourer. One who works with his hands and head is craft person. One who works with his hands, head and heart is an Artist! எனச் சொல்லுவார்கள்.  இந்த பேப்பர் கூழ் பொம்மை செய்பவர்களும் Artist தான் சந்தேகமில்லை…

உங்கள் ரசனைக்காக, விழா சமயத்தில் காட்சிக்கு வைத்திருந்த பேப்பர் கூழ் பொம்மைகளை, நான் எடுத்த சில புகைப்படங்களையும் இங்கே இணைத்துள்ளேன். பொம்மைகள் பற்றியும், பதிவு பற்றியுமான உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

30 comments:

 1. பொம்மைகள் தத்ரூபமாய் அழகாய் இருக்கின்றன. அபாரக் கலைத்திறன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. அழகுப் பொம்மைகள் ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. ஆகா... என்ன அழகு... என்ன அழகு...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 4. காகிதக்கூழ் பொம்மைகள் அச்சுஅசலாக உள்ளன. உண்மையில் இதை தயாரித்தவர்கள் நல்ல கற்பனை வளம் கொண்ட கலைஞர்கள் என்பதில் ஐயம் இல்லை.வழக்கம்போல் அந்த பொம்மைகளுக்கு தங்களின் புகைப்படத்தின் மூலம் உயிரூட்டிவிட்டீர்கள். பாராட்டுகள்! பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அந்த கலைஞர்களின் கற்பனை வளம் ஆச்சரியப்படுத்தியது.... இரண்டு முறை அங்கே சென்று பார்த்து ரசித்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. பேப்பர் கூழ் பொம்மைகள் அருமை.

  "இப்போது கேட்டால் செய்வேனா என்பது தெரியாது" - பொதுவாக, மனைவி இந்த மாதிரி வேலைகளை நமக்குக் கொடுத்திடுவார்களோ என்று எஸ்கேப் ஆவது வழக்கம். ஆனால் குழந்தை கேட்டால், உட்கார்ந்து செய்துதானே தந்தாகவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. குழந்தைகள் கேட்டால் - செய்து தந்தாக வேண்டும் - வேறு வழியில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத்தமிழன்.

   Delete
 6. வெகு நுணுக்கமாகச் செய்திருக்கிறார்கள். முக அமைப்பு... அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இமா.....

   Delete
 7. விலை அதிகம் காரணம் அதில் வேலை அதிகம்
  நான் செய்ய ஆரம்பித்து முடிக்காமல் பாதியிலேயே விட்டுவிட்டேன் Too time consuming

  ReplyDelete
  Replies
  1. அதிக வேலை, அதிக நேரம் எடுக்கும் கலை - உண்மை தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 8. பேப்பர் கூழ் பொம்மைகள் அதிசயம் ஆந்திராவில் கொண்டபள்ளி எனும் கிராமத்தில் மரத்தில் இம்மாதிரி பொம்மைகள் செய்கிறார்கள் இதில் விசேஷம் என்னவென்றால் அவை எடையில் மிகவும் குறைந்தவை நான் ஒரு தசாவதார செட் வாங்கி இருக்கிறேன் விலை 2000 ஆவது ஆண்டில் ரூ400/

  ReplyDelete
  Replies
  1. கொண்டப்பள்ளி பொம்மைகளும் பார்த்து வாங்கி இருக்கிறேன் - ஆந்திரத்தின் கொண்டப்பள்ளி போலவே கர்நாடகத்திலும் ஒரு இடத்தில் மர பொம்மைகள் செய்வார்கள் - அவ்விடத்தின் பெயர் மறந்து விட்டேன்... உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. தொடர்ந்து அழகழகான கலை வடிவங்கள். இந்த பொம்மைகளைப்பார்த்ததும் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் நினைவிற்கு வந்துவிட்டன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. ஆர்டிஸ்ட் விளக்கம் செமை..
  இன்னும் கொஞ்சம் விரிவாக இந்தப் பொம்மைகள் எப்படி தயாராகின்றன என்பதை அறியும் ஆவலைத் தூண்டி விட்டீர்கள்..

  யூ டியூப் செய்து பார்கிறேன்

  தம +

  ReplyDelete
  Replies
  1. பேப்பர் கூழ் பொம்மைகள் தயாரிக்கும் காணொளி இருக்கிறதா என நானும் பார்க்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 11. பொம்மைகள் மிக மிக அழகு! எங்கள் பாட்டியும் நியூஸ் பேப்பர்களை துண்டுகள் செய்து ஊற‌வைத்து வெந்தயம் சேர்த்து அரைத்து குடத்தை தலைகீழாக கவிழ்த்து ஈரத்துணியை மேலே போட்டு அதன் மேல் தட்டி காய வைப்பார்கள். அழகான கூடை உருவாகி விடும்.

  ReplyDelete
  Replies
  1. வெந்தயம் சேர்த்து அரைப்பது எனக்கு மறந்து விட்டது! நானும் அரைத்திருக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

   Delete
 12. பேப்பர் கூழ் பொம்மைகளை உங்களைப் போல் நானும் படத்தில் பார்த்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 14. என்ன ஒரு கலைத்திறன் ஜி! அழகு அழகு பொம்மைகள். கல்லூரியில் படித்த போது நீங்கள் அரைத்தது போல் நானும் பேப்பர் அதனுடன் வெந்தயமும் ஊற வைத்து அரைக்க வேண்டும் என்று அப்போது சொல்லப்பட்டதால் ஊற வைத்து அரைத்து அதனுடன் கொஞ்சம் சென்ட் கலந்து இல்லை என்றால் வெந்தயம் சேர்த்திருப்பதால் கொஞ்சம் வாடை அடிக்கும் என்பதால்..பின்னர் அதனுடன் வேப்ப மரத்துக் கோந்து சேர்த்து, அல்லது மைதா பசை தயாரித்து அதைச் சேர்ப்பது அப்போது மார்பிள் துகள்கள் இல்லாததால் கொஞ்சம் சாக்பீஸ் பொடி கலந்து கொண்டு கூடைகள், பொம்மைகள் என்று ஆனால் பொம்மைகள் இப்போது இப்படி செய்வது போல் அல்ல....பறவைகள், மனிதர்கள் எல்லாம் உருண்டைகளாக, நீளா உருளைகளாகச் செய்து கலர் அடிப்பது காலியான தீப்பெட்டிகளின் மேல் நிற்க வைப்பது....வீட்டில் இருக்கும் கிழிந்த புடவைகளின் பார்டர்கள் டிசைன்கள், கவுன்களின் லேஸ்கள், ரிப்பன்கள் இப்படிப் பல எடுத்துக் கொண்டு அலங்கரிப்பது, கண்ணாடி வலையல்களை உடைத்து நகைகள் போல் ஒட்டுவது என்று என்னென்னவோ மனதில் தோன்றிய படி செய்வதுண்டு...அப்புறம் எல்லாம் போயே போச்...மகனுக்கு வேண்டிச் செய்யக் கற்றுக் கொடுத்தது எளிதான முறை வேண்டிய மோல்டுகளை எடுத்துக் கொண்டு அதன் மீது பேப்பரை ரிப்பன் போலக் கிழித்துக் கொண்டு ஒட்டி ஒட்டி பின்னர் கலர் செய்வது அலங்கரிப்பது என்று....

  ப்ழைய நினைவுகளை மீட்டெடுத்த பதிவு ஜி! நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பழைய நினைவுகளை மீட்டெடுக்க இந்தப் பகிர்வு உதவியதில் மகிழ்ச்சி. அம்மா, அத்தை, சகோதரிகள் என எல்லோருடனும் இருந்து இப்படி பல வேலைகள் செய்தது ஒரு கனாக்காலம். காலத்தின் பிடியில் சிக்கி, இன்று அனைவரும் ஒவ்வொரு மூலையில்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

   Delete
 15. எனது மேலே உள்ள கருத்தில் கீதா என்று பெயரிட விடுபட்டுவிட்டது ஜி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தங்களது மீள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....