எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, November 12, 2016

அசாம் பேருந்து – கையைப் பிடித்து இழுத்த நடத்துனர்….
ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 67

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

படம்: இணையத்திலிருந்து.... 

தேஸ்பூரிலிருந்து கௌஹாத்தி சுமார் 175 கிலோமீட்டர் தொலைவு தான்.  தேஸ்பூரில் நாங்கள் அமர்த்திக் கொண்ட வாகனத்தினை விட்டு அரசுப் பேருந்து மூலம் கௌஹாத்தி செல்வது எங்கள் திட்டம்.  தேஸ்பூர் பேருந்து நிலையத்தில் தான் எங்களை ஓட்டுனர் ஷம்புவும் இறக்கி விட்டார் என்பதால் உடனேயே அங்கிருந்து கௌஹாத்தி செல்லும் அரசுப் பேருந்து ஒன்றில் பயணச்சீட்டு வாங்கி அமர்ந்து கொண்டோம். இதோ இப்போது எடுத்து விடுவோம் என்று சொல்லிச் சொல்லியே அரை மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்திலேயே நின்று கொண்டிருந்தார் அந்த பேருந்தின் ஓட்டுனர். நடத்துனரோ, போவோர் வருவோரை எல்லாம் கௌஹாத்தி வரச் சொல்லி மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.


படம்: இணையத்திலிருந்து....

ஒரு வழியாக பேருந்து புறப்பட்டது. அது ஒரு 2 X 2 இருக்கைகள் கொண்ட பேருந்து. நடுவே நல்ல இடைவெளி. நின்று வர வசதியாக இருக்கும்.  பெரும்பாலான இருக்கைகளில் மக்கள் அமர்ந்திருக்க, ஏதோ பேருந்து முழுவதும் காலியாக இருப்பது போல புலம்பிக்கொண்டே வண்டியைச் செலுத்தினார் ஓட்டுனர். அவருக்கு ஒத்து ஊதும் நடத்துனர்.  எங்களுக்கு கௌஹாத்தி செல்ல ஐந்து டிக்கெட்டுகள் எடுத்துக் கொண்டோம்.  இரண்டு பேர் அமரக்கூடிய இருக்கைகள் என்றாலும் இரண்டு குண்டான ஆசாமிகள் உட்கார்ந்தால் பக்கத்தில் இருப்பவரின் பாதி பிருஷ்டம் வெளியே தான் இருக்க முடியும்!

எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண்மணி, அசாமி மொழியில் ஏதோ சொல்ல நான் ஹிந்தியில் பதில் சொன்னேன் – அவர்கள் சொல்வது புரியவில்லை என! அப்பெண்ணும் விடாது அசாமியில் ஏதோ சொல்ல, என்னடா இது வம்பு என ஹிந்தியில் எனக்கு அசாமி தெரியாது என்பதை நிறுத்தி நிதானமாய் சொன்னேன்.  பிறகு அந்தப் பெண்மணி சொன்னது – “கொஞ்சம் தள்ளி உட்காருங்க....” நானோ ஏற்கனவே ஜன்னலை ஒட்டி, கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தேன். இன்னும் தள்ளி உட்கார வேண்டுமென்றால் ஜன்னலில் தான் உட்கார வேண்டும்! வேறு வழியில்லை.  இன்னும் உடலைக் குறுக்கி, மூச்சைப் பிடித்து தள்ளி உட்கார்ந்து கொண்டேன். பெண்மணி இன்னும் கொஞ்சம் இடித்துக் கொண்டு உட்கார்ந்தார்.  இந்த வேதனை எது வரைக்கும் என தெரியவில்லையே என யோசித்துக் கொண்டிருந்தேன்.  நல்ல வேளை நடத்துனர் வழியில் உள்ள எல்லா ஊர்களுக்கும் பயணிகளை ஏற்றியிருந்தார். கனத்த சரீர பெண்மணி 30 நிமிடங்களில் இறங்கிவிட்டார். கௌஹாத்தி வரை அப்படியே பயணித்திருந்தால் என் கதி அதோகதி!

வழியில் இருக்கும் எல்லா கிராமங்களிலும் பேருந்து நின்று பயணிகளை ஏற்றிக்கொண்டு தான் சென்றது.  இருக்கைகள் இருக்கிறதோ, இல்லையோ, நடத்துனர் சீட் இருக்கு, சீட் இருக்கு, என கூவிக் கூவி ஏதோ தேர்தல் சீட் போல அழைத்துக் கொண்டிருந்தார்.  அவர் வலையில் விழுந்த சில பயணிகளை புளிமூட்டை போல ஏதோ ஒரு இடத்தில் திணித்துக் கொண்டிருந்தார் அந்த நடத்துனர். ஒவ்வொரு முறையும் அரை மணி நேரத்திற்கு ஒரு பயணியாக என் பக்கத்து இருக்கையில் மாறிக் கொண்டே இருந்தார்கள். பேருந்துப் பயணத்தின் போது பெரும்பாலும் உறங்குவதில்லை. அன்று மட்டும் ஏனோ தூக்கம் தூக்கமாய் வந்தது. பக்கத்து இருக்கை பயணிகள் மாறிக்கொண்டே இருக்க தூங்கமுடியவில்லை.

Bihuguri, Sirajuli, Orang, Rowta, Batabari, Balugaon, Chapai, Sipajhar என வித்தியாசமான பெயர் கொண்ட ஊர்களைக்கடந்து ஒவ்வொரு ஊரிலும் நின்று பயணிகளை இறக்கிவிட்டு, வேறு சில பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது.  நாங்கள் தேஸ்பூரில் கேட்டபோது எக்ஸ்பிரஸ் பேருந்து என்றும் எங்கேயும் நிற்காது என்றும் அந்த நடத்துனர் சொன்னது பொய் என்பதை பிறகு தான் தெரிந்து கொள்ள முடிந்தது. பெரும்பாலான பேருந்து நடத்துனர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.  முதன் முதலில் கேட்கும்போது எங்கேயும் நிற்காது என்பார்கள், ஆனால் பயணிக்கும்போது ஒவ்வொரு சிற்றூரிலும் நிறுத்துவார்கள்!  என்ன அந்தப் பயணத்தின் மூலம் அசாம் மாநிலத்தின் பல சிற்றூர்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.  எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதைத் தான் தெரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு வழியாக எங்களை கௌஹாத்தி வரை கொண்டு சேர்த்தார். புறப்படும் சயமத்தில் பால்டன் பஜார் பேருந்து நிலையம் வரை செல்லும் என்று சொன்னவர், கௌஹாத்தி வந்ததும் அங்கே செல்லாது எனச் சொல்லி இரயில் நிலையம் அருகே இறக்கி விட்டு, இப்படியே நடந்து சென்றால் ஐந்து நிமிடத்தில் செல்ல முடியும் என இறக்கி விட்டார். அவரைத் திட்டியபடியே நடந்தோம். அங்கிருந்து எங்கள் தங்குமிடம் வரை நடந்து செல்ல பதினைந்து நிமிடங்களுக்கு மேலானது. தங்குமிடம் சென்று ஏற்கனவே முன்பதிவு செய்திருந்ததைச் சொல்லி எங்களுக்கான அறைக்குச் சென்று சேர்ந்தோம். 

அன்றைய நாள் முழுவதுமே பயணத்தில் தான் கழிந்தது.  எந்த இடமும் பார்க்க முடியவில்லை. மாலையே கௌஹாத்தி வந்து சேர்ந்தாலும் எங்கேயும் சென்று பார்க்க மனதில்லை. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம் என அறைக்குள்ளேயே இருந்தோம். கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு அறையிலிருந்து கீழே வந்து பால்டன் பஜார் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு அறையில் வைத்திருந்த எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு, அடுத்த நாள் பயணத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்து திரும்பினோம்.  இரவு உணவை தங்குமிடத்திலேயே முடித்துக் கொண்டோம்.  அடுத்த நாள் பயணம் எங்கே, அப்போது கிடைத்த அனுபவங்கள் என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  அது ஒரு த்ரில்லான பயணம்......

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

20 comments:

 1. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ப. கந்தசாமி ஐயா.

   Delete
 2. Replies
  1. தங்களது வருகைக்கும் தொடர்வதற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. திரில்லான பயணம்தான் நண்பரே....
  உயிரை பணயம் வைத்து இருக்கையில்
  நெருங்கி அமர்ந்தது சிரிப்பை மூட்டியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய் சுனில்கர் ஜோசப்.

   Delete
 4. பயணத்தில் அடிக்கடி இப்படியான அனுபவங்கள் கிடைக்கத்தான் செய்கின்றன. அருமையான பதிவு.
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

   Delete
 5. திரில்லர் அனுபவமா..?
  தொடர்ந்து பயணிக்கிறோம் அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 6. எப்போதும் போல் தொடர் பயணம் ரசிக்க வைத்தது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. வட இந்தியாவில் இப்படித்தான் அடாவடியாக உட்காருவார்கள் . ஆனால் தப்பு என்னவோ நம் மீது தான் என்பது போலப் பேசுவார்கள்

  ReplyDelete
  Replies
  1. அடாவடியாக உட்காருவது எங்கும் உண்டு! தமிழகத்திலும் இப்படி சிலர் எனக்கு வாய்த்ததுண்டு - பக்கத்து சீட்டில்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி!

   Delete
 8. அடுத்த நாள் பயணம் குறித்து ஆவலாக உள்ளேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 9. நல்ல அனுபவங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 10. பயணம் தொடர்கிறது என்று நினைத்தோம் முந்தைய பதிவில் சரிதான்...த்ரில்லான அனுபவத்தை வாசிக்கச் செல்கிறோம்...ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....