எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, November 10, 2016

அதிகாலை பயணம் – நண்பருக்கு டாடா


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 66

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


காலை நேரச் சூரியன்...

அதிகாலையிலேயே எழுந்து தயாராக வேண்டும் என்பதால் நானும் நண்பர் ப்ரமோத்-உம் நித்திரையில் மூழ்க, மற்ற நண்பர்கள் லவ்பானி, ரெக்ஸியில் மூழ்கினார்கள் என்று சென்ற பகுதியில் சொல்லி இருந்தேன். அவர்களோடு சிங்சூ நண்பர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்படியும் நான்கு பாட்டில்களும் காலி ஆகவில்லை! அதன் சுவை அத்தனை பிடித்தமாக இல்லையாம்.  இரண்டு பாட்டில்கள் அப்படியே வைத்து விட்டு, வேறு ஏதோ சரக்கு வாங்கிக் கொண்டார்களாம். இது காலையில் தான் எங்களுக்குத் தெரிந்தது. 

நான் வெகு சீக்கிரமாகவே எழுந்து தயாராக, மற்றவர்களும் எழுந்து தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிகாலை நேர சிங்சூ கிராமம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள அப்படியே ஒரு நடைப்பயணம் மேற்கொண்டேன்.  ஆஹா... என்னவொரு உணர்வு. அதிகாலை, சற்றே மிதமான குளிர், அதிலே யாருமற்ற சாலையில், ஒரு வித மயான அமைதியில் ஒரு நடைப்பயணம்... சுகமான காலையில் அந்த நடை மிகவும் ரசிக்கும்படியாகவே இருந்தது.  மூன்று நான்கு கிலோமீட்டர் மலைப்பாதையில் பயணித்து தங்குமிடம் திரும்ப மற்ற நண்பர்களும் தயாராக இருந்தார்கள். 

இருந்த இரண்டு பாட்டில் நாட்டுச் சரக்கில் ஒன்றை தங்குமிடத்து சிப்பந்திகளுக்குக் கொடுத்து, மீதி ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள் நண்பர்கள். சிங்சூவில் இருந்த மலையாள நண்பர்களுக்கு மீண்டுமொருமுறை நன்றி சொல்லி அங்கிருந்து புறப்படும் சமயத்தில் தான் ஒரு விஷயம் எனக்குத் தெரிய வந்தது. அங்கே இருந்த மலையாளி ஒருவர் என்னிடம் நான் பணிபுரியும் அலுவலகம் பற்றிக் கேட்டு, அதை நான் சொல்லவும் அவருடைய உறவினரும் என் அலுவலகத்தில் வேலை செய்தது பற்றிச் சொன்னார். அப்படியே விசாரிக்கையில் தான் தெரிந்தது என்னுடன் பணி புரிந்த ஒரு மலையாளியின் அக்கா மகன் அவர் என்பது.

எங்கள் பயணத்திற்கு இரண்டு மாதம் முன்பு தான் அவர் காலமானார் – அதற்கு தன்னால் வர இயலவில்லை என்பதை அவரது குடும்பத்தினரிடம் சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார் அவர்.  உலகம் தான் எத்தனை சிறியது. எங்கோ வந்து இருக்கும் இடத்திலும் இப்படி நமக்குத் தெரிந்தவர் ஒருவரின் உறவினரைக் காண முடிகிறதே....  அவர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி கூறி அந்த அதிகாலை நேரத்தில் தேஸ்பூர் நோக்கிப் பயணித்தோம்.

வழியில் பாலிபாரா எனும் இடத்தில், அருணாச்சலப் பிரதேசத்தின் இடாநகரிலிருந்து வந்திருந்த நண்பர் வின்ஸ் எனும் வின்செண்ட்-ஐ இறக்கி விட வேண்டும். ஒன்பது மணிக்குள் அவரை அங்கே இறக்கிவிட்டால் இடாநகருக்கு மதியம் ஒரு மணிக்குள் சென்று, அலுவலகத்தில் சேர வேண்டும் என்பதால் தான் இந்த அதிகாலைப் பயணம். ஓட்டுனர் ஷம்புவுக்கும் சீக்கிரம் சென்றால் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்பதால் வண்டியை விரைவாகவே செலுத்தினார்.  அதிகாலை நேரத்துப் பயணத்தில் மலைப்பகுதியில் காட்சிகளை ரசித்தபடியே பாலிபாரா வந்து சேர்ந்தோம்.


அசாம் சாலைக் காட்சி...

அங்கே இருந்த கடை ஒன்றில் நாங்களும் தேநீரும் சிற்றுண்டியாக பூரி-சப்ஜியும் சாப்பிட்டு, ஓட்டுனர் ஷம்புவிற்கும் சாப்பிட வாங்கிக் கொடுத்து, அருணாச்சலப் பிரதேசப் பயணத்திற்கு அத்தனை உதவிகள் செய்திருந்த நண்பர் வின்செண்ட் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டோம். ஜாலியான மனிதர். அவர்தான் இங்கி பிங்கி பாங்கி சொல்லி சரக்கு பாட்டில்களிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுத்தவர்.  ஆங்காங்கே எங்களுக்கு இருந்த Entertainer-உம் அவர்தான்.  அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தபின், மற்ற ஐந்து பேரும் தேஸ்பூர் வரை பயணித்தோம்.


பள்ளிக்குச் செல்ல எத்தனை கஷ்டம்...

சீரான வேகத்தில் பயணித்து தேஸ்பூர் வந்து சேர்ந்ததும், வாகனம் ஏற்பாடு செய்திருந்த நபருக்கு கொடுக்கவேண்டிய பணத்தினைக் கொடுத்து, ஓட்டுனருக்கும் கொஞ்சம் தனியாக கவனித்து, கூடவே மீதி இருந்த ஒரு பாட்டில் லவ்பானியையும் கொடுத்தோம்.  பைசாவை விட அந்த லவ்பானி மீது தான் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது! நாங்கள் அங்கே இருந்த போதே அந்த லவ்பானியை அவரும் அவரது நண்பர்களுமாகச் சேர்ந்து குடித்து விட்டார்கள்! அவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்து விட்டு தேஸ்பூரிலிருந்து கௌஹாத்தி பயணிக்க வேண்டி, அசாம் மாநில பேருந்து ஒன்றில் புறப்பட்டோம். 

அந்தப் பேருந்து பயணமும், அதிலே கிடைத்த அனுபவங்களும் அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
   
தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

22 comments:

 1. சுவையான பயணக்குறிப்புகள். தொங்கிக்கொண்டு பள்ளிக்குப் போகும் பிள்ளைகளைக் கண்டால் பாவமாக இருக்கிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. பள்ளி செல்லும் குழந்தைகளை நினைத்தால் பயமாக இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. போதிய போக்குவரத்து வசதி இல்லாததால், இப்படிக் கஷ்டப்பட்டுதான் பள்ளிக்கு செல்கிறார்கள் பல வட மாநிலங்களில்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. கற்கை நன்றே, ஆயினும், மனதில் கவலை எழத்தான் செய்கிறது!
  இயற்கை புகைப்படம் வெரி நைஸ்!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

   Delete
 4. 'நல்ல பயணக்குறிப்பு. அசாம் பேருந்துப் பயணம், நம்ம ஊர் அரசுப் பேருந்துகளை வால்வோ மாதிரி நினைக்கவைத்துவிட்டது என்று சொல்லிவிடாதீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அசாம் பேருந்தும் நம்ம ஊர் அரசுப் பேருந்தும்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 5. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு போக்குவரத்துத்துறை போதிய வசதி செய்து கொடுக்கலாம்.
  பார்க்க கஷ்டமாய் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. செய்து கொடுக்கத்தான் வேண்டும். ஆனால் செய்வதில்லை என்பது தான் கொடுமை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   Delete
 6. பயண நிரல் ஒன்று முடிவுக்கு வருகிறது எத்தனை எத்தனை விஷயங்கள் பாராட்டுகள்

  ReplyDelete
  Replies
  1. இந்தப் பயணம் இன்னும் தொடரும்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 7. பள்ளி செல்லும் குழந்தைகளின் நிலை இப்படி இருக்கின்றதே....

  ReplyDelete
  Replies
  1. பல ஊர்களில்/மாநிலங்களில் இப்படியான நிலை தான்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 8. மக்கள் நலம் பேணும் அரசியல் தலைமைகள் அவசியம்
  குழந்தைகள் இப்படி செல்வது குற்றம்
  தம +

  ReplyDelete
  Replies
  1. குற்றம் - குற்றவாளிகள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல பள்ளிச் சிறுவர்களின் பெற்றோர்களும் தான்.... பிள்ளைகளுக்கு பணம் கொடுத்து பேருந்தில் பயணம் செய்யச் சொன்னால், காசு கொடுக்காமல் இப்படி தொங்கியபடி சென்று அந்தக் காசில் புகை பிடிப்பதும் மற்ற செலவுகளுக்கும் வைத்துக் கொள்கிறார்கள்! அதையும் பார்த்தேன் மது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   Delete
 9. வருங்கால இந்தியா, இப்படி தொங்குவதைப் பார்த்தால் பயமாய் இருக்கிறது :)

  ReplyDelete
  Replies
  1. தொங்கும் இந்தியா! :(

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 10. பயண அனுபவம் படிக்கும்போது உடன் பயணிக்கும் உணர்வை ஏற்படுத்த வேண்டும்...அது உங்கள் அனுபவப் பகிர்வுகளில் நன்றாகவே இருக்கிறது...வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பி. பிரசாத் ஜி!

   Delete
 11. பயணம் முற்றுப் பெறுவது போல் தோன்றினாலும் தொடரும் என்பதும் தெரியும். எனவே தங்களின் பயணக் குறிப்புகளுக்குக் காத்திருக்கிறோம் ஜி!.

  பள்ளிப் பிள்ளைகள் தொங்கிக் கொண்டு செல்கிறார்களே! ஆபத்து இல்லையோ...பெற்றோர் கவனிப்பு இல்லை போலும்...

  ReplyDelete
  Replies
  1. தொங்கிக் கொண்டு செல்லும் பிள்ளைகள் - வீட்டை விட்டு வெளியே சென்றபிறகு பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பது பல பெற்றோர்கள் கவனிப்பதில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....