சனி, 8 மார்ச், 2014

மங்கையராய் பிறப்பதற்கே....
இந்த கேள்வியை  தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு தான் . வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு,  அது பிரசவ வேதனையை  அனுபவிக்கும் அந்த நேரம்!   

நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் இல்லை.  நர்ஸ் வந்து செக்  பண்ணி விட்டு இந்த வலி போதாது இன்னும் கொஞ்சம் வலி வர வேண்டும், அப்போதுதான் குழந்தை பிறக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.  எனக்கு எப்படி இருக்கும்?!  இந்த வலியே உயிர்  போகுது, இதை விட அதிக வலி என்றால் எப்படி இருக்கும்,  நினைக்கும்போதே வலியுடன் இப்போது பயமும் சேர்ந்து விட்டது.  

என் உறவினர்கள் வேறு உட்காராதே அப்படியே மெதுவாக  நட என்று அன்பாக கட்டளை இட்டார்கள்.  என்ன செய்ய அனுபவஸ்தர்கள் சொல்கிறார்களே என்று பெரிய வயிற்றை தூக்கி கொண்டு நடந்தேன்.     

வலியை அதிகரிக்க ஜெல் என்ற ஒன்றை வைத்தார்கள்,   வைக்கும்போது அது வேற  வித்தியாசமான ஒரு வேதனையாக  இருந்தது.  இது போதாது என்று குளுக்கோஸ் வேறு ஒரு கையில் ஏறி கொண்டு இருந்தது.  அதிகம் இல்லை ஒரு 5 பாட்டில் தான்.  ஒரு பாட்டில் முடிந்ததும் நர்ஸ் செக் அப்,  பின்னர் வாக்கிங், மறுபடி ட்ரிப்ஸ், மறுபடி செக் அப் இப்படியாக கிட்டத்தட்ட 36  மணி நேரம் கடந்தது.   இதில் தூக்கம் என்ற ஒன்றை மறந்து விட்டேன்.  எப்ப குழந்தை பிறக்கும் என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. 

டாக்டர் மறுபடி ஜெல் முயற்சி பண்ணுவோம் என்று சொன்னார்கள்,  நல்ல ஹாஸ்பிடல் என்பதால் சிசரியன்  பற்றி யாருமே அங்கே  பேசவில்லை.  (எனக்கு தான் வேற இடம் போய் இருக்கலாம் என்று தோன்றியது) மறுபடி ஜெல் என்றவுடன் பயம் அதிகமாகி விட்டது.  

இந்த நரக வேதனையில் தான் என் மனதில் தோன்றியது " ஏண்டா பெண்ணாக  பிறந்தோம்? "  மனதில் தோன்றியதை வாய் விட்டு கதறி சொல்லிவிட்டேன்,  அதற்க்கு என் அத்தை ' என்ன செய்ய நம்ம தலை எழுத்து, அனுபவிக்கத்தான் வேண்டும் '  என்று அவர்களுக்கு தெரிந்த ஆறுதலை கூறினார்கள்.   எனக்கு அந்த கேள்வி மட்டும் அல்ல வேறு ஒன்றும் தோன்றியது, ' எதை எதையோ கண்டுபிடித்தோம் என்று பெருமை பட்டு கொள்கிறோமே,  வலி இல்லாமல் பிள்ளை பெறுவதற்கு ஒரு மாத்திரை மாதிரி எதையாவது கண்டுபிடிக்கலாம் அல்லவா என்பதுதான் அது'.   

என் கதறல்  தாங்காமல் கடைசியில் ஆபரேஷன் ரூமிற்கு அழைத்து சென்றார்கள். போவதற்கு முன் இனிமா என்ற வேறொரு இம்சை, அதையும் அனுபவித்தேன்.  ஆபரேஷன் செய்யலாமா இல்லை மறுபடி  ஜெல் வைக்கலாமா என்று அவர்களுக்குள் ஒரு ஆலோசனை நடந்தது,    அரைமணி நேரம் கழித்து சரியாக 40 மணிநேர அவஸ்தைக்கு பின் கடவுள் மனம் இரங்கி பெரிய வலியை  கொடுத்தார்.

என்னை சுற்றி பலர் இருந்தனர், வலி கூட கூட என் கதறலும் கூடுகிறது, பயத்தில் என் கைகள் உதவிக்காக அலைபாயுகிறது ,  தானாகவே என் கரங்கள் அருகில் இருக்கும் நர்சின் கையை பற்றி அழுத்தியது.  நெஞ்சின் படபடப்பு  அதிகரிக்கிறது, இதயம் அதிக ஆக்சிசனுக்காக துடிக்க என் திறந்த வாய் வேகமாக காற்றை உள்ளிழுக்கிறது. அருகில் இருக்கும்  நர்ஸ் என் காதருகில் வேகமாக உந்தி தள்ளுமாறு கூறினார்கள்.  

என் முழு உடலும் என் கட்டுபாட்டில் இல்லை,  என் கண்கள் நிலை குத்த, கைகள் பரபரக்க, இதயம் துடிக்க, நெஞ்சில் ஒரு பந்துபோல் ஏதோ வந்து அடைக்க, வேகமாக என் மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி உள்ளிழுத்த காற்றுடன் அழுத்தம் கொடுத்து உந்தி தள்ள, இதோ என் குழந்தை பிறந்து விட்டது. என் அழுகை சத்தம் நின்று என் குழந்தையின் அழுகுரல் தொடங்கியது.   நான் மெதுவாக மூச்சை இழுத்து விட்டு இயல்பு நிலைக்கு வர தொடங்கினேன். (அந்த நேரத்திலும் அனிச்சையாக சினிமாவில் பார்த்த மாதிரி மயக்கம் வரும்  என்று கண்ணை மூடி பார்த்தேன், ஆனால் வரவில்லை) 

நர்ஸ் அருகில் வந்து 'உங்களுக்கு ஆண் குழந்தை' என்று சொன்னார்கள். எந்த குழந்தை என்றாலும் பரவாயில்லை , பிறந்தால் சரி என்றுதானே இருந்தேன். அதனால் மனதில் ஒன்றும் பெரிதாக பூ எல்லாம் பூக்கவில்லை,  நர்சிடம் சும்மா லேசாக சிரித்து வைத்தேன்.
 இன்னும் விட்டார்களா இந்த நர்ஸ்கள், என்னவோ இன்னும் சரியாக வெளியேறவில்லை என்று என்னை அடுத்த 20   நிமிடத்திற்கு பாடாய் படுத்தினார்கள், தையல் போட்டார்கள்.  என்ன மாதிரியான  விதவிதமான வேதனைகள், வலியில் இத்தனை விதங்களா?, அனுபவித்தேன் கொடூரமாக.....!

என்னே ஆனந்தம்:

இதற்குள் குழந்தையை சுத்தம் செய்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வைத்து என்னிடம் கொண்டு வந்து காட்டினர்.  மெதுவாக திரும்பி முகம் பார்த்தேன்...கடவுளே! இது என் குழந்தையா..?  இதன் தாய் நானா..?  நாந்தான் பெற்றேனா..? வெள்ளை துணியில் சிகப்பு ரோஜா மலராய் கண்மூடி என் அருமை மகன்... ! சின்ன சின்ன மணி விரல்கள், இதழ் பிரியா  மல்லிகை  மொட்டுபோல் உதடுகள்,  தாமரை இதழாய் கன்னம், மூடிய இமைக்குள் அலையும் கருவிழிகள்,  வர்ணிக்க வார்த்தைகள் தோணவில்லை,  ஆனந்தத்தில் எனக்கு போதை ஏறி சிறிது மயக்கம் வருவதுபோல் இருந்தது!

இதுவரை நான் அனுபவித்தது வலிகளா இல்லை, என் கண்மணியை தேடி கண்டுபிடிக்க நான் எடுத்த பிரயாசங்களா ....!? ஒரே வினாடியில் என்னை தாய் என்று உணர வைத்தான்.   பால் அருந்த என் அருகில் படுக்க வைத்தனர்,  என் ரத்தம் என் மகனுக்காக பாலாக மாறி அவனை அருந்த வைத்தது....!  பெண்மை எதுவென இந்த இன்ப வலியை அனுபவிக்கும்போது தான் உணருகிறேன்,  கடவுள் வரம் கொடுத்தால் மீண்டும்  பெண்ணாகவே பிறப்பிக்க வேண்டுவேன் என்பதை... !

பெண்களே இனி ஒரு முறை கூட கூறாதிர்கள் , ' ஏன் பெண்ணாய் பிறந்தேன் என்று '.


உண்மைதான் ," மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா "    

இன்றைக்கு உலக மகளிர் தினம்.  ஒரு சிறப்பு பதிவு எழுதலாம் என நினைத்து மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மாஎனும் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல் முழுவதும் இணையத்தில் கிடைக்குமா என தேடினேன். அப்போது வலையுலக சகோதரி ‘மனதோடு மட்டும் கௌசல்யா’ 2010-ஆம் ஆண்டு எழுதிய இந்த பதிவு பார்த்தேன். பார்த்ததும் அதையே இங்கே இந்த மகளிர் தினத்தின் சிறப்பான பதிவாக தருவது பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். 

மிகச் சிறப்பாய் இருக்கும் இந்த கட்டுரையை எழுதிய சகோதரி கௌசல்யா அவர்களுக்குப் பாராட்டுகள்...... 

இப்பகிர்வின் ஆரம்பத்தில் இருக்கும் பெண் குழந்தை தில்லி நண்பர் மனோஜ் என்பவரின் மனைவி சில நாட்களுக்கு முன் ஈன்றெடுத்த மகராணி.... பொதுவாகவே வடக்கில் பெண் குழந்தை பிறக்கும்போது என்னுடைய மகராணி வந்துவிட்டாள்என்று கூறுவதுண்டு....  அது போல எல்லா பெண்களையும் மகராணி ஆக்கிவிடுகிறோமோ இல்லையோ அடிமைகள் ஆக்கிவிடவேண்டாமே!

எல்லா பெண்களுக்கும் இந்த உலக மகளிர் தினம் மட்டுமன்றி எல்லா நாட்களும் சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துகள்......

மீண்டும் சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

52 கருத்துகள்:

 1. படிப்படியாக மாறும் அந்த உணர்வுகளை அழகாகச் சொல்லியுள்ளார். நம்மால் படிக்க மட்டுமே முடியும். வெளிநாடுகளில் பிரசவ சமயத்தில் கணவனும் கூட நிற்க அனுமதி உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

  தோழிகள் அனைவருக்கும் மகளிர்தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 15 வருடத்திற்கு முன் (எனக்குத் தெரிந்து) சென்னையில் ஒரு மருத்துவமனையில் அனுமதி உண்டு...

   பல பெண்கள் வலியை அறிய வைக்க விரும்புவது இல்லை... அனுமதி இருந்தும் பல ஆண்கள் உள்ளே செல்ல நினைப்பதே இல்லை...

   நீக்கு
  2. இங்கு ஆஸ்திரேலியாவில் கண்டிப்பாக கணவன் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.. இருமுறை என் மனைவியின் பிரசவத்தில் நான் கூட இருந்திருக்கிறேன்.

   "//" மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா "// - நான் கண்ட உண்மை.

   நீக்கு
  3. பிரசவ சமயத்தில் இங்கே இருக்கும் மருத்துவமனைகளில் அனுமதி அளித்தாலும் இருப்பார்களா என்பது பெரிய கேள்வி......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  4. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
  5. ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் இந்த விஷயம் சாத்தியம். இங்கே?

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு
 2. மிகச் சிறப்பாய் இருக்கும் கட்டுரையை எழுதிய சகோதரி கௌசல்யா அவர்களுக்குப் பாராட்டுகள்...... மகளிர் தினத்தில் பகிர்ந்த தங்களுக்கு நன்றிகள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 3. வாவ்.. மகளிர் தினத்திற்கு பொருத்தமான பதிவு..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 4. பொருத்தமான சிறப்பான பகிர்வு...

  சர்வதேச மகளின் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. மாதவம் செய்தவர்களே மங்கையராய் பிறப்பர்!..
  சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 6. ஒரு பிரசவ வேதனை எப்படியிருக்கும் என்பதை நேர்த்தியாகபதிவிட்ட சகோதரிக்கும் அதை மீண்டும் வெளியிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 7. பெண்கள் படும் வேதனையை சிறப்பாக பதிவின் மூலம் வெளிப்படுத்திய திருமதி கௌசல்யா அவர்களுக்கும், அவரது பதிவை உலக மகளிர் தினமான இன்று பகிர்ந்து இந்த தினத்தை சிறப்பித்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 8. பொருத்தமான ஒரு பகிர்வு! உண்மைதான் பெண்கள், குழந்தை பிறக்கும் போது மட்டுமல்ல பல சமயங்களில் அதுவும் ஆண்களால் வஞ்சிக்கப்படும்போதும், சமூகம் இழிவு படுத்தும் போதும்,,,ஏன் பெண்ணாய் பிறந்தோம் என்று நினைப்பதுண்டு!!!

  பெண்களுக்கு போராடும் குணம் இன்னும் வேண்டும் !!

  //அது போல எல்லா பெண்களையும் மகராணி ஆக்கிவிடுகிறோமோ இல்லையோ அடிமைகள் ஆக்கிவிடவேண்டாமே!//

  நச்! நறுக் வார்த்தைகள் இந்த சமூகத்திற்கு!

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி மற்றும் கீதா ஜி!

   நீக்கு
 9. கெளசல்யா அவர்களின் பதிவு இன்றைய நாளுக்கு பொருத்தமானது. சிறப்பாக எழுதியுள்ளார். ஒன்பது வருடங்களுக்கு முன் சில நிமிடங்கள் சென்று வந்தது போல் இருந்தது. ”ஜெல்” சமாச்சார வேதனை எனக்கும் நேர்ந்ததே. பாவம்! அவர்களுக்கு மூன்று முறையா!!!

  அனைத்து தோழிகளுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆதி.....

   இரவு முழுவதும் வெளியில் காத்திருந்தேன் அந்த நாளில்..... :)

   நீக்கு
 10. ஏற்கெனவே படிச்சிருந்தாலும் மீண்டும் படிக்கப் பகிர்ந்தமைக்கு நன்றி. வெளிநாடுகளில் கணவன் கட்டாயமாய் மனைவியுடன் உள்ளே இருந்தாக வேண்டும். இங்கேயும் இப்போது வந்திருக்கிறது. ஆனால் இன்றைய பெண்கள் வலியை அனுபவிக்க விரும்பவில்லை என்பதே உண்மை. பெரும்பாலான பெண்கள் நல்ல நாள், நக்ஷத்திரம் பார்த்து சிசேரியனுக்கு நாள் குறித்துக் கொண்டுவிடுகின்றனர். சென்னையில் எனக்குத் தெரிந்து அக்கம்பக்கம், நட்பு, சுற்றங்களில் இது தான் நடக்கிறது. வலி வரும்வரை பொறுத்திருக்க முடியாது என்பதோடு வலியை எல்லாம் அனுபவிக்க முடியாது, தாங்காது என்பதும் ஒரு காரணம். பெற்றோர்களும், சுற்றத்தார்களுமே எங்க பொண்ணாலே வலியை எல்லாம் அனுபவிக்க முடியாதுனு ஆதரவும் தெரிவிச்சுடறாங்க. ஆகவே வலி எடுத்துப் பிள்ளை பெறுவது என்பது எல்லாம் நடுத்தர, கீழ் மத்தியதர, கீழ்மட்ட, கிராமக் குடும்பங்களின் பெண்களாக இருக்கலாமோ என்னமோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   நீக்கு
 11. அருமையான கருத்துடன் கூடிய
  அற்புதமான கட்டுரையை
  மகளிர் தின சிறப்புப் பதிவாகக் கொடுத்தது
  மனம் கவர்ந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 12. மகளிர்தினநாளில் சிறப்பான பகிர்வு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   நீக்கு
 13. மீண்டும் அந்த நாள் ஞாபகத்தை வரவைத்து விட்டீர்கள். அந்த நாள், அந்த மணித்துளிகள் அப்படியே இப்போது என் கண் முன் வந்து போகிறது. வார்த்தைகளில் வடிக்க முடியாத அற்புத நிமிடங்கள் !!

  மகளிர் தினதன்று இதனை பதிவிட்டு பெண்மையை பெருமை படுத்திவிட்டீர்கள், என்னையும் தான்.

  என் அன்பான நன்றிகள் வெங்கட் நாகராஜ்

  வாசித்து கருத்திட்ட அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள் பல !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌசல்யா ராஜ்.....

   நீக்கு
 14. அருமையான பொருத்தமான பகிர்வு. வாழ்த்துக்களும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டி.பி.ஆர். ஜோசப் ஜி!

   நீக்கு
 15. என் மனைவியின் பிரசவ காலத்தை நியாபகப்படுத்தி விட்டது, கௌசல்யா அவர்களின் இந்த பதிவு. அதை பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.
  என் மனைவி எந்த அளவிற்கு பிரசவ வேதனையை அனுபவித்தார்கள் என்பதையும் பிறகு குழந்தை வெளிவந்தவுடன் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை அனுபவித்தார்கள் என்பதையும் உடன் இருந்த பார்த்த எனக்கு, அப்பொழுது தான் "தாய்மை" எந்த அளவிற்கு வலிமையானது என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நிச்சயம் பிரசவ வேதனை - வலிகளில் அதிகமானது தான்.....

   நீக்கு
 16. கௌசல்யா அவர்களின் கட்டுரையைப் படித்ததும் கொஞ்சம் தலை சுற்றியது போல் இருக்கிறது.... மகளிர் தினத்துக்கேற்ற பொருத்தமான பதிவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.....

   நீக்கு
 17. பிரசவம் பெண்களின் மறுபிறப்பு என்று சொல்லுவார்கள்! இங்கே அதை அருமையாக சொல்லிவிட்டார் கௌசல்யா அவர்கள்! சிறப்பான பதிவு! இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.....

   நீக்கு
 18. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

   நீக்கு
 19. மகாராணி அழகாவே இருக்கிறார். நீடுழி வாழ்க !
  பதிவும் அருமை சகோ!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி கஸ்தூரி ரெங்கன்.

   நீக்கு
 20. பெண்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் பதிவு. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்....

   நீக்கு
 21. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.....

   நீக்கு
 22. #இதுவரை நான் அனுபவித்தது வலிகளா இல்லை, என் கண்மணியை தேடி கண்டுபிடிக்க நான் எடுத்த பிரயாசங்களா ....!?#
  பிரசவ வைராக்கியம் என்பது இதுதானோ ?
  த ம 11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 23. அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....