சனி, 14 டிசம்பர், 2013

[G]குட்கா மூதாட்டி....சாலைக்காட்சிகள் – பகுதி 8

சிகரெட்டா சாப்பாடா? – சாலைக்காட்சிகள் பகுதி 7 - இங்கே
தலைநோக்குப் பார்வை – சாலைக்காட்சிகள் பகுதி 6 - இங்கே
Bloody Indian - சாலைக் காட்சிகள்பகுதி 5 - இங்கே
வெங்கலக் கடைக்குள் யானை- சாலைக் காட்சிகள்பகுதி 4 - இங்கே
அலட்சியம்சாலைக் காட்சிகள் பகுதி – 3 - இங்கே
கிச்சு கிச்சு - சாலைக் காட்சிகள் பகுதி – 2 - இங்கே
இளம் யுவதி - சாலைக்காட்சிகள் பகுதி – 1 – இங்கே


படம்: உதவி கூகிள்

எங்கள் வீட்டின் அருகில் ஒரு CNG பம்ப் இருக்கிறது. தில்லியில் மாசுக் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த சில வருடங்களாகவே, பேருந்துகள், மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவை பெட்ரோலியம்/டீசல் மூலம் இயக்குவது தடை செய்யப்பட்டு மேற்கண்ட அனைத்து வாகனங்களையும் இயக்க CNG மட்டுமே பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  அதன் பின்னர் தில்லியில் பெட்ரோல் பம்ப்களை போலவே CNG பம்ப்களும் ஆங்காங்கே நிறுவப்பட்டன.
அப்படி நிறுவப்பட்ட CNG பம்ப்களில் ஒன்று எனது வீட்டின் மிக அருகில் உள்ள சாலையில் இருக்கிறது. அந்த சாலையின் பெயர் UDYAN MARG. சாலையின் இரு மருங்கிலும் சப்தபர்ணி மரங்கள் அணிவகுத்து நிற்க, குளிர்காலத்தில் அதன் பூக்கள் கொத்து கொத்தாக பூத்து இரவு நேரஙளில் அதன் மணத்தினை பரப்பிக் கொண்டிருக்கும். வில்வத்தின் இலைகள் மூன்று மூன்றாக இருப்பது போல இதன் இலைகள் ஏழு ஏழாகத் தான் இருக்கும். பூக்கள் சாலையின் ஓரங்களில் விழுந்து ஒரு பச்சைப் பாய் விரித்த மாதிரி இருக்கும். 


இந்த சாலையில்  CNG பம்பின் ஒரு புறம் நான்கு சக்கர வாகனங்கள் வரிசையாக நிற்க, மற்றொரு புறம் மூன்று சக்கர வாகனங்கள் அதாவது ஆட்டோக்கள் நிற்கும். சில சமயங்களில் அதன் வரிசை மிகவும் நீண்டு ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நின்று கொண்டிருக்கும்.

அப்படி நிற்கும் ஆட்டோக்களின் ஓட்டுனர்கள் காத்திருக்கும்போது சும்மா இருக்க முடியுமா? எதையாவது சாப்பிட வேண்டும், அல்லது புகைபிடிக்க வேண்டும், ஆட்டோக்களை அலங்கரிக்கும் வேலையில் ஈடுபட வேண்டும். இதற்கெல்லாம் தோதாக, இங்கே பல நடைபாதைக் கடைகள் [அ] தற்காலிக கடைகள் அவ்வப்போது முளைக்கும்.


படம்: உதவி கூகிள்

ஒருவர் முக்காலி மாதிரி மூங்கிலால் செய்த ஒன்றின் மேல் தட்டினை வைத்து வடை, பக்கோடா போன்றவற்றை மசாலா போட்டு காரமான புதினா சட்னியுடன் விற்க, வேறு சிலர் “சோலே குல்ச்சேவிறபனை செய்ய, ஒரு சிலர் தரையில் அமர்ந்து சப்பாத்தி/பராத்தா விற்பனை செய்வார்கள்.  குளிர் காலம் வந்துவிட்டால், பல நடைபாதைகளில் தில்லி முழுவதுமே முட்டை/ப்ரெட் ஆம்லேட் கடைகளும் முளைத்து விடும்!


படம்: உதவி கூகிள்
வேகவைத்த முட்டை, ஆம்லேட் போட்டு இரண்டு பிரட் துண்டுகளுக்கு இடையே வைத்து மேலே கொஞ்சம் மசாலா தூவி விற்க அதை வாங்கி பலர் சுவைப்பார்கள். சரி சாப்பாடு/தின்பண்டங்கள் மட்டும் சாப்பிட்டால் போதுமா? பெரும்பாலான ஆட்டோ ஓட்டுனர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கோ அல்லது [G]குட்கா உண்ணும் வழக்கத்திற்கோ அடிமை. அதற்கு என்ன செய்வது/எங்கே போவது என்ற கவலையே இவர்களுக்கு இல்லை!


படம்: உதவி கூகிள்

ஒரு பாட்டி – தள்ளாத வயது – இங்கே நடைபாதையில் அமர்ந்திருப்பார். அவர் முன்னே தரையில் ஒரு ஃப்லெக்ஸ் பேனர் – கீழே விழுந்ததை எடுத்து பத்திரப்படுத்தியது – விரித்து அதன் மேல் பீடிக் கட்டுகள், சிகரெட், விதம் விதமாய் [G]குட்கா என அடுக்கி வைத்திருப்பார். சுறுசுறுப்பாக வியாபாரம் செய்து கொண்டிருக்கும் இவர் வயதைக் கண்டுபிடிக்க இவர் முகத்தில் இருக்கும் சுருக்கங்களை எண்ண வேண்டியிருக்கும்.....  முதிர்ச்சி தந்த சுருக்கம் முகத்தில் இருந்தாலும் ஒரு வசீகரம் முகத்தில்.

அவர் அமர்ந்திருக்கும் இடத்தின் அருகிலேயே பால் விற்பனை நிலையம். பால் வாங்கிக் கொண்டு திரும்பும் பல நாட்கள் அவரிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் உதிக்கும். ஏதோ ஒரு தயக்கத்தினால் பேசாமல் நகர்ந்து விடுவேன். ஒரு நாள் தயக்கத்தினை மீறி அவரிடம் பேசினேன். எங்கே இவற்றையெல்லாம் வாங்குகிறார், அதற்கு யார் உதவுகிறார்கள், ஏன் இந்த வியாபாரம் என்று பொதுவாக பேச்சுக் கொடுத்தேன்.

வயசாச்சுன்னு சும்மா இருந்தா வீட்டுல பையனும் மருமகளும் மதிப்பதில்லை. ஏதோ என்னால் முடிந்த அளவு உழைத்து கொஞ்சம் சம்பாதிப்பேன். மாதம் இரண்டாயிரம் முதல் மூன்றாயிரம் வரை சம்பாதிக்கிறேன். பொருட்களை வாங்க எங்கும் செல்வதில்லை. நான் அமர்ந்திருக்கும் இடத்திற்கே ஒருவர் சைக்கிளில் கொண்டு வந்து தருகிறார். இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை அவரிடம் பொருட்களை வாங்கிக் கொண்டு அப்போதே பணத்தினைக் கொடுத்துவிடுவேன் – கடன் வாங்குவதும் கொடுப்பதும் எனக்குப் பிடிப்பதில்லை!

கையில் கேமரா கொண்டு செல்லாததால் புகைப்படம் எடுக்கவில்லை. இருந்தும் அவரிடம் கேட்டேன் ‘அப்புறமா உங்களை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கவா?சட்டென பதில் வந்தது – வேண்டாம்....  ஆயுசு குறைந்துடும்!சரி பரவாயில்லை என விட்டேன்.

இப்போதைக்கு மனதில் ஒரு பெரிய கவலை – அந்த மூதாட்டியிடம் பேசி சில மாதங்கள் ஆகிவிட்டன. கடந்த ஒரு மாதமாக அந்த நடைபாதையில் மூதாட்டி அமர்ந்திருக்கும் இடம் வெற்றிடமாக இருக்கிறது.  ஒவ்வொரு நாளும் அந்த இடம் நோக்கி தானாக தலை திரும்புகிறது – மூதாட்டியைக் காணும் ஆவலில். ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே. இருக்கிறார்களா? இல்லையா ஒன்றும் தெரியவில்லை. பால் விற்பனை நிலையத்தில் கேட்டேன் – கொஞ்ச நாளா வரதில்லை என்ற பதில் மட்டுமே கிடைக்க, அங்கேயும் ஏமாற்றம்.

[G]குட்கா பாட்டி மீண்டும் வருவாரா? கடை நடத்துவாரா? கேள்விகள் என்னுள்.......
    
மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


50 கருத்துகள்:

 1. வணக்கம்
  ஐயா
  பாட்டியின் மீது உள்ள பாசம் மிகவும் கவர்ந்துள்ளது. இதில் இருந்து தங்களின் மனக்கீற்றை மிகவும் இலகுவாக அறியலாம.இரக்கமான நெஞ்சம்மென்று பதிவு அருமை வாழ்த்துக்கள் ஐயா
  இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமானதிற்கு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 2. நிச்சயம் அதிகம் முடியாமல் போயிருக்கும்
  இல்லையெனில் உழைப்பின் மீது அத்தனை அக்கறைக் கொண்டவர்
  நிச்சயம் சும்மா இருக்க வாய்ப்பே இல்லை
  அவர் நலம் பெற பிரார்த்திப்போம்
  மனம் தொட்ட பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   நீக்கு
 3. சப்தபர்ணி மரங்கள் பெயரும் அழகு ..மலர்ந்து மணம் பரப்பும் பூக்களும் அழகு ..

  ஏழிலைப்பாலை என்று சொல்வார்கள்..

  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   நீக்கு
 4. பாட்டி எங்கிருந்தாலும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 5. CNG பம்ப் & “சோலே குல்ச்சே” - அப்டின்னா என்ன ஜி .?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Compressed Natural Gas Filling Station
   சோலே - வெள்ளை கொண்டக்கடலை.
   குல்ச்சே என்பது ரொட்டி போன்ற ஒரு வகை உணவு வகை.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜீவன் சுப்பு.

   நீக்கு
 6. இந்தச்செடியைப் பார்த்திருக்கேன். பூவின் பெயரை இப்பத்தான் கேள்விப்படறேன்.

  வயசாச்சுல்லா பாட்டிக்கு. வீட்ல ஓய்வெடுக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.

   நீக்கு
 7. முதிர்ச்சி தந்த சுருக்கம் முகத்தில் இருந்தாலும் ஒரு வசீகரம் முகத்தில்.//
  முதிர்ச்சியிலும் கவர்ச்சியா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   நீக்கு
 8. அருமையான செய்திகள். பாராட்டுக்கள் + நன்றிகள் ஜி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 9. சுவாரஸ்யத் தகவல்கள். பூ அழகாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 10. பாவம் அந்தப் பாட்டி, என்ன ஆச்சோ தெரியலை! :( குட்காவுக்கு அடிமையாகாத நபர்களே வட மாநிலத்தில் இருக்கமாட்டாங்க போல! அதுவும் ரெயிலில் இது ரொம்ப மோசம். :( குட்காவைப் போட்டுக் கொண்டு சீட்டிற்குக் கீழேயே துப்பிக் கொண்டு.....சொன்னாலும் சண்டைக்கு வராங்க! :( பொது இடத்தை நாசமாக்குவதில் நமக்கு நிகர் யாரும் இலை. :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   நீக்கு
 11. வயதானாலும் உழைத்துப் பிழைக்கும் எண்ணமும், கடன் வைக்க விரும்பாத குணமும் வியக்கவைக்கின்றன. அவரைக் காணாமல் தவிக்கும் தங்கள் மனம் புரிகிறது.

  சப்தபர்ணி மரங்கள் - முதன்முறையாக கேள்விப்படுகிறேன். பகிர்வுக்கு நன்றி வெங்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீத மஞ்சரி.

   நீக்கு
 12. தினசரி காணும் ஒருவர் கண்ணில் படாவிட்டால் ஆயிரம் கேள்விகள் நியாயம்தான். இதைவிட சிறந்த இடத்துக்குப் போயிருப்பார். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 13. மீண்டும் குட்கா பாட்டி வருவார் /உறவினர் வீட்டிற்கு போயிருப்பார். வந்து விடுவார் பாருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   நீக்கு
 14. சிறப்பான பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.....

   நீக்கு
 15. கொள்கையை விட்டுக் கொடுக்காமல் வாழும் மனிதர்கள். நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 16. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 18. மோட்சம் அடைந்திருப்பார்களோ என்னமோ? எதற்கும் சித்திரகுப்தனுக்கு ஒரு போன் போட்டுப் பாருங்களேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 19. பாட்டி நலமாக இருக்க வேண்டும் என்று உங்களை போல நானும் விரும்புகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சத்யா நம்மாழ்வார்.

   நீக்கு
 20. உண்மையில் ஒரு சிறுகதை போல் இருந்தது. நம் ஊரிலும் பள்ளிக்கூட வாசலில் மிட்டாய், கிழங்குகள் விற்கும் மூதாட்டிகளை இன்றும் காண முடிகிறது. எந்த ஊரானாலும் என்ன மூதாட்டிகளின் நிலை இதுதான் போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   நீக்கு
 21. நலமா இருப்பார்கள்.. டோன்ட் ஒர்ரி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 22. ஏழிலைகள் சூழ்மரமும் உண்பொருள்கள் வாணிபமும் முச்சக்கர ஊர்திகளும் அன்னவற்றின் ஓட்டுநரும் குட்கா மூதாட்டி இவைசேர்ந்த சாலை நன்குஈர்த்த பாங்கதனை நேர் வைத்தீர்! நற்சுவைதான்! கண்டோம் கொண்டோம் மாமகிழ்வே! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கணக்காயன் ஐயா.

   நீக்கு
 23. பாட்டி விரைவில் திரும்புவார் என நம்புவோம்! வந்தவுடன் மறவாமல் பதிவிடுங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 24. உழைக்காமல் சுற்றித் திரிந்துக்கொண்டு அடுத்தவர் பணத்தில் வாழும் மனிதர்களுக்கு, இந்த பாட்டி ஒரு எடுத்துக்காட்டு. அவர் எங்கிருந்தாலும் நலமுடனே இருக்கிறார் என்று நம்புவோமாக.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....