எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Wednesday, April 17, 2013

பர்மாவிலிருந்து நடையாய் நடந்து.....
சில நாட்களுக்கு முன் என்னுடைய பகிர்வில் காலச்சக்ரம் நரசிம்மா அவர்கள் எழுதிய குபேரவனக் காவல் புத்தகம் பற்றி குபேரவன காவலும் புருஷா மிருகமும் என ஒரு பகிர்வு எழுதியது உங்களுக்கு நினைவிலிருக்கலாம். அப்புத்தகம் பற்றி படித்துவிட்டு திரு ரா.ச. கிருஷ்ணன் என்பவர் எனக்கு ஒரு புத்தகத்தினை அனுப்ப முகவரி கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அந்தப் புத்தகம் பற்றி இங்கே பார்க்கலாமா?

 

இரண்டாம் உலகப் போர் காலத்தில் பர்மாவில் வாழ்ந்த திரு பசுபதி, போரின் போது தான் பட்ட கஷ்டங்கள், பர்மாலிருந்து எப்படி இந்தியா வந்து சேர்ந்தார் என்பதை விரிவாக எழுதி இருக்கிறார். தனது மனைவி பிச்சம்மா மற்றும் நான்கு குழந்தைகளோடு [முதல் மகன் மட்டும் சென்னையில்] பர்மாவில் எப்படி சமாளித்தார், தீயவர்கள் என நினைத்தவர்கள் அவருக்கு உதவி செய்ய, நல்லவர்கள் என நினைத்து பழகியவர்கள் இவருக்கு தீங்களித்தது என விரிவாக எழுதி இருக்கிறார்.

1941-ஆம் வருடம் – டிசம்பர் மாதம் ஜப்பான் பர்மாவின் மீது பெரும் விமானத் தாக்குதலைத் தொடங்கியது. முதலில் ரங்கூன் தாக்கப்பட்டது. புள்ளி வைத்து கோலம் போடுவதைப் போல ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசை வரிசையாக அணி வகுத்த விமானங்கள் வானத்தையே மறைத்துக் கொண்டு சீறி வந்தன. மழையைப் போல எரிகுண்டுகளைப் போடத் துவங்கினர்.

இவர்கள் தங்கியிருந்த டவுஞ்சி நகரம் எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம் என்று தெரிய, விமானத் தாக்குதலை சமாளிக்க ஏற்பாடுகள் நடந்தன. Air Raid Precaution Brigade என்ற ஒரு பாதுகாப்புப் படை நிறுவப்பட்டு திரு பசுபதி அவர்கள் ARP வார்டனாக நியமிக்கப் பட்டார். மக்களைப் பாதுகாப்பது ஒரு பொறுப்பாக, சுடத் தெரியாத இவருக்கும் துப்பாக்கி கொடுக்கப்பட்டது!

ARP வார்டனின் வேலை பொறுப்பு நிறைந்தது. இருட்டடிப்பு நகரத்தில் கடுமையாக அமல்படுத்தப் படுகிறதா என்று ராப்பிசாசு போல இரவு எல்லாம் முறை போட்டுக்கொண்டு ரோந்து வர வேண்டும்.

எப்படியாவது பர்மாவிலிருந்து குடும்பத்தினரை மட்டுமாவது வெளியேற்ற செய்த முயற்சியெல்லாம் தோல்வியில் முடிய, இவரது மனைவி பிச்சம்மாவும் இவரைத் தனியே விட்டு விட்டுப் போக அடியோடு மறுத்துவிட, இவர்களது வாழ்க்கை எப்படி அடியோடு மாறி விட்டது என்பதை அடுத்த பகுதிகளில் விவரித்து இருக்கிறார்.

10.04.42 – வெள்ளிக் கிழமை – டவுஞ்சி நகரம் பெரும் அளவிற்கு விமானத் தாக்குதலுக்கு உண்டாகி அங்கே இருந்த பல வீடுகள் சேதமாகியது. அது மட்டுமல்லாது பலத்த உயிர்ச்சேதம். பிரளயகாலத்தின் கோரதாண்டவம் – சுற்றி எங்கும் நாசம், இடிபாடுகள். வார்டனின் கடமை அழைக்க, டவுஞ்சி நகரத்தில் அவர் கண்ட காட்சிகள்.....

சிநேகிதர் ஒருவர், சாப்பிட உட்கார்ந்தவர், அதே நிலையில் தலையில்லாத முண்டமாக இருந்தார். அவர் மனைவி இரண்டு துண்டாக வெட்டுப்பட்டுக் கிடந்தாள்.

ஒரு பள்ளத்தில் பதுங்கியிருந்த 12 பேர்கள் மீது குண்டு விழுந்து அந்தக் குடும்பமே மண்ணில் புதைபட்டுப் போயிருந்தார்கள்.

அங்கிருந்து வெளியேறி இந்தியா செல்வது தான் ஒரே வழி என 50 லாரிகளில் ஊரைவிட்டு வெளியேறிய குடும்பங்களில் திரு பசுபதி அவர்களின் குடும்பமும் ஒன்று. லாரிகளில் வெளியேறினாலும், சில கிலோ மீட்டர் தொலைவிற்குப் பிறகு ட்ரையினில் பயணம் செய்து, பல இடங்களில் தடைகள் ஏற்பட்டு பிறகு அதுவும் சரிப்படாது 15-20 பேர் மட்டும் இரண்டு மாட்டுவண்டிகளில் காட்டு வழியாக வந்து மாடுகளும் ஒவ்வொன்றாக இறக்க நடைப்பயணம் தொடர்கிறது!

பர்மாவிலிருந்து நடையாய் நடந்து வரும்போது வழியில் சந்தித்த பலவிதமான மனிதர்கள், புலியால் ஏற்பட்ட தொல்லை, சந்தித்த பயங்கரங்கள், தான் அடுத்த வேளை புசிக்க வைத்துக் கொள்ளாது பசி என வந்தவர்களுக்கு உணவளித்தது, காட்டில் பார்த்த விதவிமான பூச்சிகள், வழியில் ரத்த பேதி கண்டு பலர் இறந்து போனது, சில பிறப்புகள், பல இறப்புகள், வழிப்பறிக்காரர்கள், சிறிது சோளம் வாங்குவதற்கு மனைவியின் பட்டுப் புடவைகளையும், தங்கக் காசுகளையும் கொடுத்தது என பலவிதமான அனுபவங்களையும் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.

காட்டுவழியே வந்து கொண்டிருக்கும்போது ஒவ்வொரு இரவும் தங்குவதற்கு ஆங்காங்கே காலியாக இருந்த குடிசைகளிலும், சமவெளிகளிலும் தங்கி அங்கேயே கையில் இருக்கும் உணவினை உண்டு வந்தது பற்றிச் சொல்லும் போது, ஒரு இரவு சந்தித்தது...

தனக்கு முன்னால் நடந்து சென்ற பல குடும்பத்தினர்கள் அந்த கிராமத்தில் மேலே செல்லமுடியாது தங்கியிருக்க, ஒரே ஒரு குடிசையில் யாரும் இல்லையென அங்கே தங்க நினைத்து உள்ளே சென்றால் அங்கே கண்டது – பல பிணங்கள்.....  உணவில்லாது எப்போது இறந்தனர் என்பது தெரியாது.  பிணங்களை இழுத்து வந்து வெளியேற்றி குடிசைக்குள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். அப்பப்பா.... நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.

கையிருப்பில் இருந்த உணவுப்பொருட்களும் தீர்ந்து, மேலும் வாங்க காசும் இல்லாது கீழே கிடக்கும் கற்களை எடுத்து ஏதாவது தின்பண்டமாக இருக்காதா என வாயில் போட்டு மென்று பார்க்கும் நிலை வந்தது பற்றி படித்தால் நிச்சயம் நாம் உணவினை வீணடிக்க மாட்டோம்!

தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என அனைவருடனும் கிளம்பிய ஆசிரியர் இந்தியா வந்து சேர்ந்தாரா? கடைசி வரை அவருடன் வந்தவர்கள் யார்? என பல கேள்விகள் இப்போது உங்களுக்குள் எழுந்திருக்கும். அவற்றுக்கான விடை புத்தகத்தில்!

நமது தினசரி வாழ்வில் சந்திக்கும் சின்னஞ்சிறு பிரச்சனைகளுக்கே மனதொடிந்து விடும் நம்மில் பலர் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

திரு பசுபதி அவர்கள் எழுதி வைத்திருந்த தனது அனுபவங்களைத் தொகுத்து ஒரு புத்தகமாக கொண்டு வந்தவர் திரு ரா.ச. கிருஷ்ணன் அவர்கள். மணிமேகலை பிரசுரம் வெளியிட்டு இருக்கும் இந்தப் புத்தகத்தின் விலை ரூபாய் 110/-. கிடைக்குமிடம்: மணிமேகலைப் பிரசுரம், 7 [ப. எண்.4], தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை – 600 017.

மீண்டும் வேறொரு புத்தகம் படித்த அனுபவத்தோடு உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


குறிப்பு: நடுவே சிகப்பு வண்ணத்தில் இருக்கும் எழுத்துகள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. புத்தகத்தினை அனுப்பி வைத்த திரு ரா.ச. கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

46 comments:

 1. முன்னர் ஒருமுறை எங்கோ இந்நூல் பற்றிப் படித்திருக்கிறேன்.

  லிஸ்ட்டில் சேர்த்துக் கொண்டேன். நீங்கள் பதிப்பகம், பக்கங்கள், விலை விவரம் கொடுக்கவில்லையே...

  ReplyDelete
  Replies
  1. பதிவின் கடைசியில் கொடுத்திருக்கிறேனே ஸ்ரீராம்.... பாருங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 2. இந்தப் புத்தகம் மின்நூலாக கிடைக்குமா?

  ReplyDelete
  Replies
  1. மின் நூலாகக் கிடைப்பதாகத் தெரியவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 3. எஸ்... ஸாரி... குறித்துக் கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. இரண்டாம் வருகைக்கு நன்றி ஸ்ரீராம்.

   Delete
 4. //கீழே கிடக்கும் கற்களை எடுத்து ஏதாவது தின்பண்டமாக இருக்காதா என வாயில் போட்டு மென்று பார்க்கும் நிலை வந்தது பற்றி படித்தால் நிச்சயம் நாம் உணவினை வீணடிக்க மாட்டோம்!//

  நீங்கள் சொல்வது உண்மை.


  நமது தினசரி வாழ்வில் சந்திக்கும் சின்னஞ்சிறு பிரச்சனைகளுக்கே மனதொடிந்து விடும் நம்மில் பலர் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.//

  நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் தான்.
  ’பராசக்தி’ திரைப்படத்தில் பர்மாவிலிருந்து அகதிகளாக வரும் போது ஏற்படும் கஷ்டங்களை காட்டி இருக்கிறார்கள்.
  இப்போது இலங்கையிலிருந்து மக்கள் அகதிகளாய் வந்து படும் கஷ்டங்கள் எவ்வளவு?
  போர்களால் மக்கள் படும் துயரங்கள் எப்போது தீரும்? உலகசமாதானம் மலரும் நாள் தான் துன்பங்கள் தீரவழி. அந்த நாளும் வரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

   Delete
 5. நீங்கள் பகிர்ந்த விதம் நிச்சயம் இப்புத்தகத்தைப்
  படித்துத்தான் ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை
  விதைத்துப் போகிறது,வாங்கிப் படித்துவிடுவேன்
  பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 6. Replies
  1. தமிழ்மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 7. //சிறிது சோளம் வாங்குவதற்கு மனைவியின் பட்டுப் புடவைகளையும், தங்கக் காசுகளையும் கொடுத்தது//

  //கையிருப்பில் இருந்த உணவுப்பொருட்களும் தீர்ந்து, மேலும் வாங்க காசும் இல்லாது கீழே கிடக்கும் கற்களை எடுத்து ஏதாவது தின்பண்டமாக இருக்காதா என வாயில் போட்டு மென்று பார்க்கும் நிலை வந்தது பற்றி படித்தால் நிச்சயம் நாம் உணவினை வீணடிக்க மாட்டோம்!//

  படிக்கும்போதே மிகவும் வருத்தமாகவும் அழுகையாகவும் வருகிறது.. இதுபோன்ற கொடுமைகள் யாருக்குமே வரக்கூடாது.

  நூல் அறிமுகத்திற்கு நன்றிகள், வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 8. என்னவொரு கொடுமையானதொரு வரலாற்றுப் பதிவு! அனுபவித்தவர்களின் வாயிலாகவே கேட்கப்படும் விஷயங்கள் நல்லதொரு பாடமாக மனசில் பதிந்து விடுகிறது. நல்லதொரு நூலை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி சகோ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   Delete
 9. நமது தினசரி வாழ்வில் சந்திக்கும் சின்னஞ்சிறு பிரச்சனைகளுக்கே மனதொடிந்து விடும் நம்மில் பலர் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது.

  வட கொரியாவுக்கும் தெகொரியாவுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்
  உலக்ப்போராக மாறாமல் இறைவந்தான் காப்பாற்றவேண்டும் ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. இந்த புத்தகத்தை படிக்க ஆவலாய் உள்ளது

  ReplyDelete
  Replies
  1. முடியும்போது படித்திடுங்கள்.....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.

   Delete
 11. நல்லதொரு புத்தக அறிமுகம்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 12. ‘வியாதி வர்றதுக்குக் கூட மனுஷனுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்யா’ என்று ஒரு காமெடியில் நாகேஷ் புலம்புவார். அதான் நினைவுக்கு வந்தது. ஹும்...! ‘சயாம் மரண ரயில்’ என்ற நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஜப்பானியர்கள் சயாமில் ரயில்பாதை அமைக்க எத்தனை இந்திய உயிர்களையும், மலாய் உயிர்களையும் காவு வாங்கினர் என்பதை மனம் உருகும் வகையில் விவரித்திருந்தது அந்த நாவல! நீங்கள் சொல்லியிருக்கும் பர்மாவிலிருந்து துன்பப்பட்டு வந்த இந்த மனிதரின் கதையும் அப்படி மனசை அசைக்கும் என்றே தோன்றுகிறது. இந்த ரயில் பாதை மரண துயரத்திலிருந்து மனம் சற்று மீண்டு வந்ததும் அவசியம் நீங்கள் சொன்னதையும் படிக்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. சயாம் மரண ரயில்.... யார் எழுதிய புத்தகம் கணேஷ். சொல்லுங்களேன்.

   தங்களது வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி.

   Delete
 13. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete
 14. சிறந்த ஓர் நூலைப் பற்றிய சிறப்பான அறிமுகம்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 15. நல்லதொரு நூல் அறிமுகம்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஷைலஜா.

   Delete
 16. நீங்கள் இந்த புத்தகதிற்கு கொடுத்த குறிப்பே பயங்கரத்தை காட்டுகிறது என்றால் புத்தகம் முழவதும் படித்தால் ..................அதுவும் கல்லை தின்பண்டமாக நினைத்தால் நிலைகள் அப்ப என்ன ஒரு கொடுமை பிணங்கள் தூக்கி போட்டு தங்குவதாம் ஐயோ என்னால் புத்தம் கிடைத்தாலும் படிக்க முடியுமா என்று தெரியவில்லையே ????
  வரலற்றை சொல்லும் புத்தகத்தை அறிமுக படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. படித்துப் பாருங்களேன்....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பூவிழி.

   Delete
 17. //தனக்கு முன்னால் நடந்து சென்ற பல குடும்பத்தினர்கள் அந்த கிராமத்தில் மேலே செல்லமுடியாது தங்கியிருக்க, ஒரே ஒரு குடிசையில் யாரும் இல்லையென அங்கே தங்க நினைத்து உள்ளே சென்றால் அங்கே கண்டது – பல பிணங்கள்..... உணவில்லாது எப்போது இறந்தனர் என்பது தெரியாது. பிணங்களை இழுத்து வந்து வெளியேற்றி குடிசைக்குள் படுத்து உறங்கியிருக்கிறார்கள். அப்பப்பா.... நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது.//
  மனதை உலுக்கிய வரிகள்.சின்னச்சிறு பிரச்சினைகளுக்கே எவ்வளவு உடைந்து போகிறோம்.
  இரண்டாம் உலகப் போர் எப்படி எத்தனை குடும்பங்களை கிழித்தெரிந்திருக்கிறது. இது ஒருவருடுய கதை. இது போல் எவ்வளவோ .......

  நன்றி பகிர்விற்கு.


  ReplyDelete
  Replies
  1. போர் பல குடும்பங்களை கிழித்தெரிந்திருக்கிறது.... உண்மை....

   தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

   Delete
 18. படிக்கும்போதே மனம் மிகவும் கனத்துப் போகிறது.நல்ல பகிர்வு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.

   Delete
 19. சுவாரசியமான விறுவிறுப்பான திரைப்படத்துக்கான கதை.
  புத்தகம் படிக்கத் தூண்டுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அப்பாதுரை.

   Delete
 20. பர்மாவிலிருந்து நடந்து வந்த கதைகளை பலர் சொல்லக் கேட்டிருக்கின்றேன். புத்தகம் மனத்தை கனக்க செய்கின்றது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.

   Delete
 21. பதிவு மனதைக் கனக்கச் செய்து விட்டது.. நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி திரு.வெங்கட்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தியானா.

   Delete
 22. அருமையான படிக்கத் தூண்டும் புத்தக அறிமுகத்திற்கு நன்றி. உங்கள் பணி தொடரட்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பால ஹனுமான் ஜி!.

   Delete
 23. அன்பின் நண்பர்களுக்கு, புத்தகத்தினை எனக்கு அனுப்பி வைத்த புத்தகத்தின் தொகுப்பாசிரியர் திரு ரா. ச. கிருஷ்ணன் அவர்கள் இன்று ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார். புத்தக ஆசிரியர் திரு பசுபதி அவர்களின் பேரன் திரு பாலாஜி அவர்கள் மூலமாகவும் புத்தகம் கிடைக்கும் என எழுதி இருக்கிறார். அந்த மின்னஞ்சல் தகவலை கீழே கொடுத்திருக்கிறேன்.

  //அன்புடையீர் ,வணக்கம்.

  "பர்மாவிலிருந்து நடையாய் நடந்து...."' தலைப்பிட்ட நூல் காலஞ்சென்ற திரு பசுபதி அய்யரின் பேரன் திரு வி. பாலாஜி பாலசுப்ரமணியனிடமும் கிடைக்கும்.
  அவரது முகவரி- 11/4 LIC colony,Third street, R.K.NAGAR ,Thiruvanmiyur, Chennai 600 041.
  தங்களது blog ல் .இந்த நூலுக்கு அளித்த அறிமுகத்திற்கு நான் பெரிதும் கடமை பட்டிருக்கிறேன்,. நன்றி
  ராதேகிருஷ்ணா
  அன்புடன் தங்கள்,
  ரா.ச.கிருஷ்ணன்//

  இந்த மேலதிக தகவல் புத்தகம் வாங்க விரும்புவர்களுக்கு உதவும் என இங்கே பின்னூட்டத்தில் அளித்திருக்கிறேன்.

  நட்புடன்

  வெங்கட்.
  புது தில்லி.

  ReplyDelete
 24. நாடோடிகள் கலைக்குழு பெயரில் “சயாம் பர்மா மரணரயில் பாதை” என்ற ஆவணப்படம் தயாரித்துள்ளோம். கடந்த பத்தாண்டுகளாக மேற்கொண்ட ஆய்வின் ஒரு சோகம் தோய்ந்த கலை வடிவம் தான் “சயாம் பர்மா மரணரயில் பாதை (PG)” ஆவணப்படம்.
  Facebook : https://www.facebook.com/Nadodigalcreations
  IMDB : http://www.imdb.com/title/tt3883834/
  ஆவணப்படம் பற்றிய சில தகவல்கள் :
  தமிழுலகம் அதிகம் அறிந்திடாத ஒரு துயரம் சயாம்(தாய்லாந்து) – பர்மா மரணரயில் பாதை. சிங்கப்பூர் – மலாயாவை இரண்டாம் உலகப்போர் நேரத்தில் கைப்பற்றிய ஜப்பானிய இராணுவம், அங்கிருந்து இந்தியாவுக்குள் நுழைவதற்காக மிக நீண்ட ரயில்பாதை ஒன்றை அமைத்தது. அதை அமைக்கும் பணியில் 30,000 பிரிட்டீஷ் – ஆஸ்திரேலியப் போர்க்கைதிகளோடு, ஒன்றரை இலட்சம் (மலாயாவின் ரப்பர்த்தோட்டத் தொழிலாளர்கள்) தமிழர்களையும், 50,000 பர்மியர்கள், சீனர்கள், இந்தொனேசியர்கள் மற்றும் மலாய் இனத்தவர்களையும் கொண்டு சென்றது.
  ஒரே நாளில் சயாம் மற்றும் பர்மா ஆகிய இருமுனைகளில் தொடங்கப்பட்ட இந்த இரயில்பாதை என்னும் துயரக்கதையின் பக்கங்கள் கனமானவை. ஏறத்தாழ 72 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இக்கொடியச்சம்பவத்தில் 80,000 தமிழர்கள் உள்ளிட்ட 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் தம் இன்னுயிரைத் தியாகம் செய்துள்ளனர். கண்ணீரைப் பெருக வைக்கும் இச்சம்பவம் குறித்து 64 நிமிடங்கள் கொண்ட ஒரு ஆவணப்படம் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
  மரணரயில்பாதையில் பணியாற்றி உயிருடன் மீண்டு, இன்று தங்களது வாழ்நாளின் இறுதிக்கணங்களை எண்ணிக் கொண்டிருக்கும் முதியவர்கள் பலர் அந்த நினைவலைகளை இப்படத்தில் பகிர்ந்துள்ளனர். மனித உரிமைகள் பற்றிக் கவலைப்படும் எவரின் உள்ளத்திலும் ஆழமான காயங்களை உருவாக்கும் பல சம்பவங்களை அவர்கள் பகிர்ந்துள்ளனர். மேலும் பல்வேறு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர்கள், ஆய்வாளர்களும் பங்கேற்க உரிய ஆவணங்கள்/ஆதாரங்களோடு இப்படம் நிறைவடந்துள்ளது.
  பர்மா, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தியா ஆகிய 5 நாடுகளில் படப்பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் இந்த இரயில்பாதையில் தம் அரிய பிறவியைத் தியாகம் செய்த இலட்சக்கணக்கான ஆசியத்தொழிலாளர்களுக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே அமைந்துள்ளது. இப்படத்திற்கான ஆதாரங்கள்/தகவல்கள் ஆகியவை கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஆவணக்காப்பகங்கள் மற்றும் நூலகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.
  இப்பணியில் இறந்த (இழப்பீடு உள்ளிட்டச் சலுகைகளைப் பெற்ற) பிரிட்டீஷ்-டச்சு-அமெரிக்காவைச் சேர்ந்த 16000 வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் நாள் ANZAC DAY என்ற பெயரில் நினைவுத்தினங்கள் உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகின்றன. 1,50,000 ஆசியத்தொழிலாளர்கள் பற்றி எவரும் கவலை கொண்டதில்லை.
  SIAM BURMA DEATH RAILWAY (Buried tears of asian labourers) என்னும் தலைப்பில் ஆங்கிலத்திலும் சயாம்-பர்மா மரணரயில் பாதை (எழுதப்படாத ஆசியத் தமிழர்களின் கண்ணீர்க் கதை) என்ற தலைப்பிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
  நன்றி.
  இப்படிக்கு,
  ராஜ்சங்கர்

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....