எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, February 25, 2011

கத்தரிக்காய் சாம்பார்“கத்தரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துதானே ஆகணும்”னு ஒரு பழமொழி நாமெல்லோரும் கேள்விபட்டதுதான். பொதுவாகவே கத்திரிக்காய்னா நிறைய பேருக்குப் பிடிக்காது. சாம்பார்ல நறுக்கிப் போட்ட கத்திரிக்காயைப் பார்த்தா அட்டைப்பூச்சியை கவுத்து போட்ட மாதிரி இருக்குன்னு நானே சின்ன வயசுல சொல்லியிருக்கேன்.

எங்க அம்மா, கத்திரிக்காயை சின்னச் சின்ன துண்டா வெட்டி, கடலைப் பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை சேர்த்து கூட்டு செய்வாங்க பாருங்க, "ஆஹா பேஷ் பேஷ்!"--ன்னு சொல்றமாதிரி ரொம்ப நல்லா இருக்கும். நான் ருசிச்சு சாப்பிடற கத்திரிக்காய் சமையல் அது மட்டும் தான். இப்ப எங்க வீட்டு அம்மணி செய்யற வட இந்திய சப்ஜியான “பேங்கன் கா பர்த்தா”வும் அந்த வகையில சேர்ந்துடுச்சு.

அடடா நெய்வேலி நிகழ்வு பத்தி சொல்ல ஆரம்பிச்சு தில்லிக்கு வந்துட்டேனே!…

ஒரு நாள் நெய்வேலியில் எங்க வீட்டு வாசல் முன்பு குரங்காட்டி ஒருத்தர் ஒரு குரங்கை வைத்துக்கொண்டு “ஆடுறா ராமா, ஆடுறா ராமா”ன்னு வித்தை காட்டிக்கிட்டிருந்தார். குரங்கு அவரோட குச்சிக்கு ஆடிச்சோ இல்லையோ, நானும் சக வாண்டுகளும் ஆடியபடியே அதை பார்த்துக்கிட்டிருந்தோம்.

வித்தை காட்டி முடிந்ததும் குரங்கிடமே ஒரு தட்டைக் கொடுத்து எல்லோரிடமும் காசு வாங்க அதைப் பிடித்தபடியே வந்து கொண்டிருந்தார் குரங்காட்டி. அம்மா கத்திரிக்காய் சாம்பார் போட்டு சாதம் பிசைந்து ஒரு தட்டில் கொண்டு வந்து கொடுக்க, அதை அவர் குரங்குக்கு சாப்பிடக் கொடுத்தார்.

குரங்கும் தன் கையால் சாதத்தினை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தது. நாங்கள் எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த போது சாதத்துடன் வந்த ஒரு கத்திரிக்காய் துண்டினை எடுத்து, அதன் தோலை அழகாய் உரித்து வீசி விட்டு வெறும் சதைப்பாங்கான பகுதியை மட்டும் உண்டது அது . எங்களுக்கெல்லாம் ஆச்சரியம், “பார்ரா இதை, எவ்வளவு விவரம் இதுக்கு!” என்று.

எங்களுடன் கீழே உட்கார்ந்து பார்த்துக் கொண்டு இருந்த ஒரு பாட்டி, சும்மா இல்லாம, “ஐ, என்ன அழகா சாப்பிடுது!” என்று சொன்னபடி, குரங்கின் கன்னத்தில் தடவிக்கொடுத்தார். கொஞ்சம் அழுத்தமாகவே தடவி விட்டார் போல, இரண்டு மூன்று நொடிகளுக்குள் குரங்கும் தன்னுடைய நீண்ட நகங்களுடன் கூடிய ஐந்து விரல்களால் பாட்டியின் காதிலிருந்து ஆரம்பித்து கன்னம் வரை பளீரெனத் தடவி விட்டது.

காதின் பின்புறத்திலிருந்து தாரை தாரையாக ரத்தம் கொட்டியபடி பாட்டி வலியின் மிகுதியால் அலறியபடி குரங்காட்டி மீது பாய, தன் எஜமானன் மீது பாய்கிறாரே என குரங்கு அந்த பாட்டி மீது பாய, மூன்று பேருமாய் கட்டிப் புரண்டு ஒரே ரகளைதான் போங்க. சிறுவர்களான நாங்கள் எல்லோருமே பாட்டி படும் அவஸ்தையையும் வலியும் புரியாமல் கைகொட்டி சிரித்துக் கொண்டிருந்தோம்.

ஒரு வழியாய் மூன்று குரங்குகளையும் (அட குரங்கினையும், குரங்காட்டி மற்றும் பாட்டியையும் தாங்க) பிரித்து ஆசுவாசப்படுத்தினர் மற்ற பெரியவர்கள். அப்புறம் பாட்டியை சைக்கிளில் உட்கார வைத்து நெய்வேலியின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டு சிகிச்சை கொடுத்தது தனிக் கதை.

இன்று வரை கத்திரிக்காய் சாம்பார் சாப்பிடும் போதெல்லாம் அந்த நிகழ்வு என் நினைவுக்கு வராமல் போனதாக சரித்திரமில்லை.

41 comments:

 1. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

  http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_25.html

  ReplyDelete
 2. இனி எங்களுக்கும் அந்த நினைவு வரும் போல..

  கவிதை காதலன்

  ReplyDelete
 3. அருமையான பதிவு.

  நல்ல பளபளப்பான புதிய நெய் மணக்கும் சின்னச் சின்ன பூச்சியில்லாத கத்திரிக்காய்களாகப் பொறுக்கி எடுத்து வாங்கி வரணும்.

  திருச்சி அருகே அய்யம்பாளையம் என்ற கிராமத்திலிருந்து வரும் கத்தரிக்காய்கள் மிகுந்த ருசியுடன் இருக்கும்.

  பாவாடையையும், காம்பையும் (கத்தரிக்காய்களுடைய பாவாடையையும் காம்பையும் தான் சொல்லுகிறேன்) முதல் வேலையாகக் கழட்டி எறியணும்.

  பிறகு பொடிப்பொடியாக நறுக்கணும்.

  தேங்காயைத் துருவிப் போட்டு, லேசாக புளிக்குத்தி, பொரித்தகூட்டு என்று என் அம்மாவும் மனைவியும் அருமையாகச் செய்வார்கள்.

  காரசாரமான வெங்காய வற்றல் குழம்பு சாதத்திற்கு தொட்டுச் சாப்பிட இந்த கூட்டு வெகு அருமையாக இருக்கும்..

  மற்றபடி கத்தரிக்காயை கறியாகவோ, குழம்புத் தானாகவோ போட்டால் எங்க வீட்டில் யாருக்குமே பிடிக்காது.

  குரங்குக்கே பிடிக்கவில்லை என்றால் பாருங்களேன்.

  பாவம் அந்தப் பாட்டி, சும்மா இல்லாமல் குரங்குக் கன்னத்தைப் போய்த் தடவணுமா? போதாத காலம் தான்.

  ReplyDelete
 4. // பாவாடையையும், காம்பையும் (கத்தரிக்காய்களுடைய பாவாடையையும் காம்பையும் தான் சொல்லுகிறேன்) முதல் வேலையாகக் கழட்டி எறியணும். //

  எங்க பக்கமெல்லாம் (பட்டீச்சுரம், கும்பகோணம் ) கத்தரிக்காயின் காம்பினை மட்டும் அகற்றி விடுவார்கள். பாவாடை எனப்படும் அந்த பகுதியை அகற்றுவதில்லை. அதுதான் சிறந்த ருசியை கத்தரிக்காய்க்கு தரும் அதனுடன் தான் உண்ணவேண்டும் என்று அம்மா கூறியது நினை. எனக்கும் அப்படிசாப்பிடவே பிடித்துள்ளது. இன்றும் கூட கத்தரிகாயினை இதே முறையில்தான் சமைக்கிறோம்.

  மீட்டப்படும் நினைவுகள் !

  ReplyDelete
 5. ஆனாலும் பாட்டியை நீங்கள் குரங்கென்று சொல்லி இருக்க கூடாதுங்க. நல்ல பகிர்வு. எனக்கு கத்தரிக்காய் ரொம்ப பிடிக்கும்.

  ReplyDelete
 6. பாட்டி பாவம். பிஞ்சு கத்திரிக்காய் வதக்கி பொரியல் செஞ்சா எனக்குப் பிடிக்கும்

  ReplyDelete
 7. பாட்டி பாவம். கத்தரிக்காயில் வித்யாசமான ரெசிப்பிகள் செய்தால் அனைவராலும் விரும்பி உண்ணமுடியும்.

  ReplyDelete
 8. சத்தான நூறு வாசகர்களை தன்னகத்தே கொண்ட நல்லவரே,
  நீல நிற நாட்டு பிஞ்சு கத்திரிக்காய்களாக பொறுக்கி நடுவில் இரண்டு கீறல்களைப்போட்டு அதில் க்றி மிளகாய் பொடியை வைத்து எண்ணையை விட்டு வதக்கினால் அதன் ருசியே அலாதிதான்.மற்றபடி பாவாடை , காம்பு போன்றவற்றை எடுத்துவிடுதல் நல்லது. இதுவும் மற்றும் கத்தரிக்காய் சாதமும் என் இல்லத்தாளின் கைப்பக்குவத்தில் மலர்ந்த, என்றும் நிலைத்த பேர் சொல்லிக்கொண்டிருக்கும் இரு சிறப்பு அய்ய்ட்டங்கள் என்று கூறுவதில் பெருமை கொள்கிறேன். திருச்சி குண்டு கத்தரிக்காய் மிகவும் ருசியானது. எதை அதில் செய்தாலும் மிகச் சிறப்பாக இருக்கும்.

  பாட்டிக்கு, எது, எதை எங்கு வைக்க வேண்டுமோ, அதை அங்கு வைக்கவேண்டும் என்று தெரியாது போலும்.அறியாமைக்கு கிடைத்த தண்டனை ஆனாலும், எனக்கு அவர்கள் பேரில் இரக்கம்தான் வருகிறது.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 9. கத்திரிக்காய் சாம்பாருக்கு புது ரெசிபியாக இருக்கிறதே..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா, ......

  ReplyDelete
 10. அருமையான காமெடி..பாவம் தான்..பின்ன இப்ப்டி நடந்தால் கத்திரிக்காய் சாம்பார் மட்டும் இல்ல...உங்களுக்கு கத்திரிக்காய் பார்த்தா கூட அந்த ஞாபகம் தான் வரவேண்டும்...

  ReplyDelete
 11. எங்கள் வீட்டில் என் ஒருத்தியை தவிர கத்திரிக்காய்
  யாருக்குமே பிடிக்காது என்பதால் செய்வதில்லை.
  என் ஒருத்திக்கு மட்டுமாக செய்து கொள்ள கை வருவதில்லை.
  எனவே பிறந்த வீடு செல்லும் பொழுது அம்மா கையாலும்
  மன்னிகள் கையாலும் சாப்பிடுவது எனக்கு கூடுதல் மகிழ்வாக இருக்கும்

  ReplyDelete
 12. என்ன வெங்கட் நாகராஜண்ணா, ஏதோ ரெசிபிதான் ‘அந்த’ வலைப்பக்கம் இருந்து இந்தப்பக்கம் வந்திருச்சோன்னு நினச்சேன்... பாத்தா நல்ல கதையாவுல்ல் இருக்கு. ஹி ஹி, குரங்குக்குட்டி என்ன கன்னுக்குட்டியா, கன்னத்தை தடவி குடுக்க... ஆனாலும் பாட்டி பாவம்.. ஹெ ஹெ...:)

  ReplyDelete
 13. கத்தரிக்காய் போல ஒரு வெர்சடைல் கேரக்டர் வேரெந்தக் காய்கறிக்கும் கிடையாது.

  சாம்பார்-பொரிச்ச கூட்டு-பிட்ளை-தயிர் பச்சடி-துவையல்-வற்றல் குழம்பு-காரக் கறி-பொடி திரித்துப் போட்ட கறி-பொடிக்கத்திரிக்காயில் நான்காகப் பிளந்த முழுக் கத்திரிக்காய் மசாலாக் கறி-கத்தரிக்காய் சாதம்.

  இது தவிர அவியலுக்குக் கத்தரிக்காய் இல்லாவிட்டால் அது ஊழல் இல்லாத அரசியல்வாதி மாதிரி.

  அதெல்லாம் போகட்டும்.எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.அந்தப் பாட்டி ஏன் குரங்கோட கன்னத்தைத் தடவினாங்க?

  ReplyDelete
 14. பாட்டி பழைய நினைப்பு பேராண்டின்னு குரங்கு கன்னத்தைத் தடவி, குடும்பத்தோடு கட்டிப்புரண்டு.....

  கத்தரிக்காய்க்கு காம்பிலே ருசி,
  வாழைக்காய்க்கு தோலிலேருசி...

  ReplyDelete
 15. கொஞ்சம் அதிகமான ஆணிகாரணமாக வருவதில் தாமதம் ஐயா! :-)

  ReplyDelete
 16. //இப்ப எங்க வீட்டு அம்மணி செய்யற வட இந்திய சப்ஜியான “பேங்கன் கா பர்த்தா”வும் அந்த வகையில சேர்ந்துடுச்சு.//

  ஹம் ஸே பனே நா பேங்கன் கா பர்த்தா..
  மிர்ச் மசாலே சே பையா பஹூத் டர்த்தா...!

  இப்படியொரு பாட்டு கேட்டிருக்கிறேன். :-))

  ReplyDelete
 17. //சாம்பார்ல நறுக்கிப் போட்ட கத்திரிக்காயைப் பார்த்தா அட்டைப்பூச்சியை கவுத்து போட்ட மாதிரி இருக்குன்னு நானே சின்ன வயசுல சொல்லியிருக்கேன். //

  கத்திரிக்காய் கொத்சு பிடிக்குமா பிடிக்காதா? கேரளாப் பக்கத்தில் கத்திரிக்காய் மசியல் என்று செய்வார்கள். அட்டகாசமா இருக்குமே? :-)))

  ReplyDelete
 18. இனி கத்தரிக்காயை பார்த்தால் பாட்டி ஞாபகமும் வரும்.. குரங்கும்!

  ReplyDelete
 19. இதை மனச்சுரங்கத்தில் சேர்த்திருக்கலாமோ....

  மூன்று குரங்கும் கண், வாய், காது போத்தியிருந்தால் பிரச்சனையை வந்திருக்காதோ...

  நல்லா இருக்கு.. யாரை க்ஷேமேம் விசாரிக்கணும் இருக்கோன்னோ... என்ன சொல்றேள்! ;-)

  ReplyDelete
 20. எண்ணைக் கத்திரிக்காய் என்னை கொள்ளை கொண்டு போய்விடும்.. ;-)

  ReplyDelete
 21. ஓ... லேபிள் இப்பத்தான் பார்த்தேன்.. மனச்சுரங்கம் தான்...

  ReplyDelete
 22. நித்தம், நித்தம் நெல்லு சோறு, நெய் மணக்கும் கத்திரிக்காய் பாட்டு நினைவுக்கு வருகிறது.

  குரங்கு கத்திரிக்காய் சாப்பிட்ட அழகை ரசித்ததுடன் விட்டு இருக்கலாம் பாட்டி. கன்னத்தை தடவி விட்டு இருக்க வேண்டாம். பாவம் பாட்டி.

  மனசுரங்கத்திலிருந்து வரும் விஷயங்கள் தொடரட்டும் வெங்கட்.

  ReplyDelete
 23. @@ வேடந்தாங்கல் கருண்: முதல் கருத்திட்டு மகிழ்வித்தமைக்கு நன்றி.

  ## முத்துலெட்சுமி: பாவம் தான் பாட்டி! வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  @@ கவிதை காதலன்: என்னுடனேயே உங்களுக்கும் அந்த நினைவு வருமா! நல்லது தான். வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே…

  ## அமுதா கிருஷ்ணா: அட ராமா…. ஆடுறா ராமா :) வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  @@ வை. கோபாலகிருஷ்ணன்: கத்திரிக்காயின் பாவாடை – புதிய சிந்தனை :) நீண்ட கருத்துரைக்கு மிக்க நன்றி. உங்கள் போன்ற எழுத்தாளர்களின் நல்ல கருத்துக்கள் என்னை மேலும் எழுதத் தூண்டும் விதமாய் இருக்கிறது….

  ## கக்கு மாணிக்கம்: ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு விதமான பழக்கங்கள். இங்கே தில்லியில் கிடைக்கும் பெரிய கத்திரிக்காய்களில் பாவாடையாக இல்லாமல் அது குட்டைப் பாவாடையாகத் தான் இருக்கும்…. :) தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  @@ உயிரோடை: பாட்டியை குரங்கு என்று சொல்லி இருக்க வேண்டாம்தான்! ஏதோ ஒரு ஃப்லோவில் வந்து விட்டது. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ## அமைதிச்சாரல்: பாவம்தான்… தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  @@ எல்.கே.: கத்திரிக்காயில் பலவிதமான ஐட்டங்கள் செய்தாலும், ஒவ்வொருவரின் ரசனையும் பிடித்த ஐட்டமும் மாறி மாறிதான் இருக்கின்றன. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கார்த்திக்.

  ## லக்ஷ்மி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா.

  @@ கனாக்காதலன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.

  ## மந்தவெளி நடராஜன்: ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய அம்மா/மனைவி செய்யும் சமையல் பற்றி பெருமையாகத் தான் சொல்லிக் கொள்ள வேண்டியிருக்கிறது! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ சித்ரா: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ## கீதா ஆச்சல்: புதுவகையான ரெசிப்பி என்று என்பக்கத்திற்கு வந்து விட்டீர்களா? அதுவும் நல்லதற்குத் தான்… கத்திரிக்காய் பார்க்கும்போதெல்லாம் அந்த பாட்டி வந்து போவாள் பாவம்!
  தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி :)

  @@ ராஜி: பிறந்த வீட்டில் அம்மா கை சமையல் சாப்பிடுவது என்பது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பிடித்த ஒன்று தான்! தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  ## அன்னு: ரெசிப்பி என்றால் “அந்த” பக்கத்தில் தான் போடணுமா என்ன சகோ. சில சமயம் என்னோட பதிவில் கூட சமையல் குறிப்பு போட்டு இருக்கிறேனே…. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ.

  @@ சுந்தர்ஜி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  /இது தவிர அவியலுக்குக் கத்தரிக்காய் இல்லாவிட்டால் அது ஊழல் இல்லாத அரசியல்வாதி மாதிரி./ நல்ல உவமை..

  /அதெல்லாம் போகட்டும்.எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.அந்தப் பாட்டி ஏன் குரங்கோட கன்னத்தைத் தடவினாங்க?/ - அவ்வளவு அழகா இந்த குரங்கு சாப்பிடுதேன்னு கொஞ்சுவதற்காக கன்னத்தைத் தடவப் போய் அது வேறு விதமாய் போய் விட்டது.

  ## இராஜராஜேஸ்வரி: தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. வாழைக்காய்க்கு தோலிலே ருசி? புதிய தகவலாய் இருக்கிறதே!

  @@ சேட்டைக்காரன்: ஒரே பதிவில் நான்கு கருத்துரைகள் இட்டதற்கு மிக்க நன்றி. ஹிந்தி பாடல் நானும் கேட்டு இருக்கிறேன். கத்திர்க்காய் கொத்சு எனக்கும் பிடிக்கும். சிலர் கொத்சு என்பதை ‘கொச்சு’ என்று கூட சொல்கிறார்கள். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை ஐயா.

  ## ரிஷபன்: உண்மைதான். கத்திரிக்காய் பாட்டியையும் குரங்கினையும் நினைவுக்குக் கொண்டு வரும். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  @@ ஆர்.வி.எஸ்: ஆஹா மூன்று வித்தியாசமான கருத்துக்கள். மனச் சுரங்கத்திலிருந்து தான். ”என் மனதைக் கொள்ளை அடித்தவளே” என்று எண்ணைக் கத்திரிக்காய் பார்த்து பாடி விட வேண்டியதுதானே….

  ## கோமதி அரசு: நித்தநித்தம் நெல்லுச் சோறு எனக்கு மிகவும் பிடித்த பாடல். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா!!!

  @@ DrPKandaswamyPhD: ஹை… இந்த வாட்டி “ஆஜர்” இல்லையா? :)
  ஒன்றிலிருந்து இரண்டு வார்த்தைகள் ஆகி விட்டது. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா…

  இண்ட்லி மற்றும் தமிழ்மணத்தில் வாக்கு அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. இனி கத்தரிக்காய் சாப்பிடும் போது எங்களுக்கும் குரங்கு நினைவுதான் வரும்.

  ReplyDelete
 25. //எங்க அம்மா, கத்திரிக்காயை சின்னச் சின்ன துண்டா வெட்டி, கடலைப் பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை சேர்த்து கூட்டு செய்வாங்க பாருங்க, "ஆஹா பேஷ் பேஷ்!"--ன்னு சொல்றமாதிரி ரொம்ப நல்லா இருக்கும். நான் ருசிச்சு சாப்பிடற கத்திரிக்காய் சமையல் அது மட்டும் தான். இப்ப எங்க வீட்டு அம்மணி செய்யற வட இந்திய சப்ஜியான “பேங்கன் கா பர்த்தா”வும் அந்த வகையில சேர்ந்துடுச்சு.//

  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்? பிழைக்கத் தெரிந்த பிள்ளை.

  (பேங்கன் கா பர்த்தா = கத்தரிக்காயின் கணவர் என்று மொழி பெயர்க்கலாமா?)

  ReplyDelete
 26. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை
  என்பதுபோல
  குரங்குக்குத் தெரியுமா பாட்டியின் ரசனை
  என்ற புதுமொழியை சேர்க்கலாம்போல் உள்ளது
  இந்த நிகழ்வு.நல்ல பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. வெ.நா! பாவங்க பாட்டி! கத்திரிக்காயின் ரெசிபி லிஸ்ட் போட்ட சுந்தர்ஜீக்கு ஜே! கடலூர் பக்கத்தில் நானமேடு எனும் கிராமத்தில் இருந்து அந்நாளில் ஒரு கத்திரிக்காய் வரும் பாருங்க.. நீளமாயும் இல்லாமல்.உருண்டயாயும் இல்லாமல்.. அதில் அம்மா செய்யும் கடப்பா.. எண்ணைக் கத்தரிக்காய்.. போங்க... மனசை ஏங்க வச்சுட்டீங்க.கல்கத்தா கத்தரிக்காயும் சுவையானது.அளவில் பெரியது.. மூணு பதிவு போடலாம் கத்திரிக்கா பத்தி..

  ReplyDelete
 28. கத்திரிக்காய் பிடிக்காதவர்க்கும் கத்தரி சாம்பார் பிடிக்கும் ...மணம் கமழவைக்கும் கருவி... மோகன்ஜி எண்ணைக்கத்திரிக்கு ஈடு இணையில்லை.. ஹைபிரிட் கத்திரி வந்த பிறகு நாட்டு கத்திரி வரவும் குறைந்துவிட்டது சுவையும் குறைந்துவிட்டது....

  ReplyDelete
 29. @@ சி. கருணாகரசு: தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி
  நண்பரே.

  ## ஈஸ்வரன்: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்! அட இப்படி கூட யோசிப்பீங்களா நீங்க! போட்டுக் கொடுத்தற்கு நன்றி அண்ணாச்சி!

  @@ ரமணி: குரங்குக்குத் தெரியுமா பாட்டியின் ரசனை! அதானே! தங்கள் வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி.

  ## மோகன்ஜி! அம்மா கை பக்குவம் என்றாலே அது தனி ருசிதான் இல்லையா மோகன்ஜி! கத்திரிக்காய் பற்றிய பகிர்வா? நீங்களும் எழுதுங்களேன். உங்கள் எழுத்து இன்னும் ரசனையாய் இருக்கும்.

  @@ பத்மநாபன்: ஹைபிரிட் கத்திரி! எல்லாவற்றிலும் புதுமை என்று எதையோ புகுத்தி விடுகிறார்கள். சுவை மாறி விடுகிறது. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. அடப் பாவமே, நிஜம்மாவே நடந்ததா? பாவம் பாட்டி! இங்கே எல்லோருக்கும் கத்திரிக்காய் பிடிக்கும். கத்திரிக்காய் ரசவாங்கி சின்னச் சின்னதாய் முழுக் கத்திரிக்காய் போட்டு என்னோட அம்மா பண்ணுவாங்க. அதற்கு ஈடு, இணை கிடையாது. கத்திரிக்காயில் என்ன செய்தாலும் பிடிக்கும். :)))) ரசவாங்கிக்குப் போடும்போது காம்பில் கொஞ்சம் போல் நுனியில் நறுக்கிட்டுப் பாவாடையோடு தான் போடுவாங்க. முழுக்கத்திரிக்காய் எண்ணெய்க் கறிக்கும் அப்படித்தான். காம்போடு முழுக்கத்திரிக்காயை ரசவாங்கியில் இருந்தும், எண்ணெய்க் கறியிலிருந்தும் எடுத்துச் சாப்பிடும் ருசியே தனி தான்! :)

  ReplyDelete
  Replies
  1. இத்தனை முந்தைய பதிவில் உங்கள் கருத்துரை.... திடீர்னு எங்கே பிடிச்சீங்க?

   நிஜமாக நடந்த நிகழ்வு தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 31. பொதுவாகக் கூட்டைத் தான் ரசவாங்கினு எல்லோரும் சொல்றாங்க. எங்க வீடுகளில் குறிப்பா மதுரைப்பக்கம் ரசவாங்கினா அது கத்திரிக்காயில் மட்டும் தான். அதோடு அது கூட்டாகவும் இருக்காது. சாதத்தோடு பிசைந்து சாப்பிடறாப்போல் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. கத்திரிக்காய் ரசவாங்கி வேற கூட்டு வேற தான்.....

   கத்திரிக்காய் கள்ளப்பருப்பு கூட்டுன்னு அம்மா செய்வாங்க. எப்படி செய்யணும்னு அம்மா கிட்ட கேட்கணும்.... மறந்து போச்சு :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
 32. நல்லவேளையா இங்கே நாட்டுக்கத்திரிக்காயாகக் கிடைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. திருவரங்கத்தில் பக்கத்து கிராமங்களிலிருந்து Fresh ஆ கிடைக்கும்..... சென்னை, தில்லி போன்ற நகரங்களில் கிடைப்பது கடினம் தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....