எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Thursday, February 18, 2016

ப்ரெட் ஆம்லேட் – சமோசா


முகப்புத்தகத்தில் நான் – 2

16 February 2016 - என் உணவு என் உரிமை.....சமீபத்தில் சென்னையிலிருந்து INDIGO விமானத்தில் பயணித்து தில்லி திரும்பினேன். சென்னையிலிருந்து புறப்பட்டு மேகக்கூட்டங்களில் புகுந்து உயரே உயரே சென்று கொண்டிருந்தது விமானம். பாதுகாப்பு அறிவிப்புகள் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக பயணிகளும் தங்களது வேலைகளைத் துவங்கினார்கள்.

விமானப் பணிப்பெண் சற்று நேரத்தில் உணவு வழங்கப் போகிறோம், இணையம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு முதலில் உணவு தந்துவிட்டு, அதன் பிறகு மற்றவர்கள் விரும்பினால் உணவு தரப்படும் என்று சொல்லி முடித்தாரோ இல்லையோ, எனக்கு முன் வரிசையில் இருந்த ஒரு பெண்மணி, கையைத் தூக்கி அந்த பணிப்பெண்ணை அழைக்க ஆரம்பித்தார் - அவர் கையில் Boarding Pass-ல் இருந்து கிழித்த சாப்பாடு Coupon.

வரிசையாகக் கொடுத்துக் கொண்டு வருவோம் என அப்பணிப்பெண் சொன்னாலும், முன் இருக்கை பெண்மணி உயர்த்திய கையை இறக்கவே இல்லை. இதற்கு நடுவில், வெளியே அதிவேகமான காற்று அடிக்கத் துவங்கியிருக்க, விமானி எல்லோரையும் சீட் பெல்ட் அணிந்து அவரவர் இருக்கையில் அமர்ந்து கொள்ளச் சொல்ல, பணிப்பெண்கள் உட்பட அனைவரும் இருக்கையில்... அப்போதும் உயர்த்திய கை கீழே இறங்கவே இல்லை......

விமானம் காற்றில் மாட்டிக்கொள்ள, பின் பக்கத்தில் இருந்த [28வது வரிசை] என் போன்றவர்களை பலமாக உலுக்கிக் கொண்டிருந்தது. ஏதோ மேடு பள்ளங்கள் நிறைந்த தார்சாலையில் ஓடும் பேருந்து போல விமானம் பறந்து கொண்டிருந்தது. பம்பர் குலுக்கல் என்பதன் அர்த்தம் என்ன என்பதை எங்களுக்குப் புரிய வைத்துக் கொண்டிருந்தது காற்று.

சற்றே நிலை சீராக, மீண்டும் பணிப்பெண்கள் உணவு ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்தார்கள். கைகளை இறக்காமல் இருந்த பெண்மணி இப்போது இன்னும் அதிகமாக கைகளை ஆட்டி தனக்கு உணவு தரும்படிச் சொல்லிக் கொண்டிருந்தாட். அவர் வரிசைக்கு இரண்டு வரிசை முன்னாடி வரை வந்து விட்டபோது மீண்டும் பம்பர் குலுக்கல்..... மீண்டும் சீட் பெல்ட் - உணவு தர முடியாத சூழல்.....

ஒரு வழியாக முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு நிலை சீரடைந்து கை உயர்த்திய பெண்மணிக்கு உணவு கிடைத்தது - இரண்டு சமோசாவும், தேநீர் என்ற பெயரில் தரப்படும் வென்னீர்! இது மட்டும் தான் அவர் முன்பதிவு செய்திருந்தார் போலும். பாவம் இதற்கு எவ்வளவு நேரம் கைகளைத் தூக்கியபடியே இருக்க வேண்டியிருந்தது....

என் உணவு என் உரிமை..... போராடி பெற்ற உணவு அவ்வளவு சுவைக்கவில்லை போலும் - பாதிக்கு மேல் அப்படியே வைத்துவிட்டார்.......

10 February 2016 - ப்ரெட் ஆம்லேட்...

முன்பெல்லாம் தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களில் Pantry Car-ல் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் தமிழர்களாக இருந்தார்கள். பிறகு IRCTC Canteen வந்த பிறகு பெரும்பாலும் வட இந்தியர்கள், குறிப்பாக பீஹார் மாநிலத்தவர்கள் தான் அதில் பணி புரிகிறார்கள். அவர்கள் வந்த பிறகு கிடைக்கும் உணவு வகைகளும் மாறி விட்டன. ஜுரம் வந்தால் மட்டுமே சாப்பிடும் ப்ரெட் உடன் ஆம்லேட் கிடைக்க ஆரம்பித்தது! ஆனால் அதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை நம் ஊரில் பலரும் இன்னும் கற்றுக் கொள்ளவில்லை!

திங்களன்று திருச்சியிலிருந்து சென்னை வரும் போது [பல்லவன்] அருகில் அமர்ந்திருந்த இளைஞர் ப்ரெட்-ஆம்லேட் வாங்கினார். வடக்கில் இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களுக்கு இடையே ஆம்லேட் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக கெட்ச்-அப் அல்லது சாஸ் தொட்டு, கைகளில் எண்ணை படாது சாப்பிடுவார்கள்! அது இன்னும் நம்மவர்களுக்கு தெரியவில்லை போலும்!

அந்த இளைஞர் இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களுக்கு மேல் ஆம்லேட் வைத்து கைகளில் எண்ணை ஒட்டிக்கொள்ள, ஆம்லேட் துண்டுகள் வாயில் கொஞ்சமும் கீழே கொஞ்சமும் விழ சாப்பிட்டார். அதனுடன் கொடுத்த கெட்ச் அப் பாக்கெட் இன்னுமொரு கையில் பிரிக்கப்படாமல் இருந்தது! சரி பிடிக்காது போலும் என நினைத்தேன். என் நினைப்பு தவறு என சற்று நேரத்தில் புரிந்தது!

ப்ரெட் ஆம்லேட் சாப்பிட்டு கை கழுவிக்கொண்டு வந்தவர், அந்த கெட்ச் அப் பாக்கெட்டை வாயில் வைத்து ஓரத்தில் கிழித்து கொஞ்சம் கொஞ்சமாக சப்பிச் சப்பி, ரசித்து ருசித்துசப்புக் கொட்டியபடியேசாப்பிட்டுக் கொண்டிருந்தார். எதிர் புற இருக்கையில் இருந்த சிறு குழந்தை, தன் வாயில் போட்டுக்கொண்டிருந்த விரல்களை வெளியே எடுத்துதா தாஎன்று கைகளால் கேட்டது!

எடுத்த காரியம் முடிப்பேன் என இளைஞரும் மொத்த கெட்ச் அப்-ஐயும் வெறுமனே சாப்பிட்டு முடித்தார்!


ரயில் பயணத்தில் இப்படி எத்தனை விஷயங்கள் பார்க்க முடிகிறது! இன்னும் நிறைய விஷயங்கள் பார்த்தபடியே பயணம் தொடர்ந்தது!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


32 comments:

 1. சுவையான அனுபவங்கள்....
  தம 2

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி ஜி!

   Delete
 2. Replies
  1. தமிழ் மண வாக்கிற்கு மிக்க நன்றி கிரேஸ்...

   Delete
 3. பாவம் அந்த பெண்மணிக்கு சுகர் இருந்திருக்கலாம் அதனால் பசிக்கும் போது அளவோட நேரத்திற்கு சாப்பிட சமோசா ஆர்டர் பண்ணிருக்கலாம் சில சமயங்களில் இந்த மாதிரி சிறு சிறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதுதான் நல்ல கஸ்டமர் சர்வீஸுக்கு அடையாளம்,, ஆனால் அதை அந்த விமானப்பணிப் பெண் செய்யவில்லை...

  ReplyDelete
  Replies
  1. இருக்கலாம். விமானங்களில் இப்போதெல்லாம் நல்ல சர்விஸ் கிடைப்பதில்லை - ஒரு முறை ஒரு பயணியை திட்டியது கூட பார்த்ததுண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

   Delete
 4. பம்பர் குலுக்கல்...???
  என் உணவு என் உரிமை.....
  சரியான குறும்பரய்யா தாங்கள்! மிகவும் ரசித்தேன் (அந்தப் படத்தைப் போட்டு வயிற்று தாகத்தைக் கிளப்பிவிட்டீர்களே இது நியாயமாரே?)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முத்துநிலவன் ஐயா.

   Delete
 5. இங்கும் படித்தேன், ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. சுவையான பதிவு ...

  இப்பொழுதுல்லாம் பசங்களுக்கு IRCTU கான்டீன் இல் கிடைக்கும் மசாலா தோசையைவிட...பிரட் ஆம்லெட் பிடித்த உணவு ஆகி விட்டது ...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 7. சமயத்தில் மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்க்கும்போது, கொஞ்சம் அலர்ஜி வந்துவிடும். நான் நிறைய கேரளத்தவர்கள், சாப்பாட்டில், சாம்பார், காய், கூட்டு, ரசம் எல்லாவற்றையும் கலந்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். சிலர், டேபிளில் சாப்பிடும்போதே, வாயில் அகப்படுகிறவற்றைக் குனிந்து துப்பிக்கொண்டே சாப்பிடுவதையும் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் கொடுமைதான். வட'நாட்டவர்கள், இட்லி ஒரு ஸ்பூன், அப்புறம் தனியா 1 ஸ்பூன் சாம்பார் என்று சாப்பிடுவார்கள். நம்மவர்களைப்போல், குழைத்தோ, தொட்டுக்கொண்டோ சாப்பிடமாட்டார்கள்.

  இப்போவெல்லாம், உங்கள் பதிவில் உணவுப் படங்களைப் பார்க்க முடிகிறது. நல்ல சாப்பாடெல்லாம், பழைய ஜெட் ஏர்வேஸ், கிங்க்ஃபிஷர் காலத்தோடு போயிற்று.

  ReplyDelete
  Replies
  1. வட நாட்டவர்கள், தென்னிந்திய உணவு சாப்பிடும்போது அதிகமாய் சாம்பாரை மட்டுமே குடிப்பது வழக்கம் - 2 இட்லிக்கு 1 பக்கெட் சாம்பார்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 8. விமானத்தில் கொடுக்கப்படும் உணவுப்பதார்த்தங்கள் எல்லாமே அபர தண்டம் என்பது என் கணிப்பு. வெட்டி அலம்பலும் வீணான பேக்கிங்கும் தான் பிரமாதமாக இருக்கும். உள்ளே ஒரு எழவும் சுவையாகவோ போதுமான அளவாகவோ இருக்கவே இருக்காது. எதையும் என்னால் வாயிலேயே வைக்கப்பிடிக்காது.

  அப்படியே வாங்கி அப்படியே அருகில் உள்ள வேறு யாருக்காவது அளித்து விடுவேன்.

  எனக்குப்பிடித்தமான ஆகாரங்கள் அனைத்தையும் வீட்டிலிருந்தே செய்து எடுத்துக்கொண்டு போய்விடுவேன். நம் இட்லி, தோசை, எண்ணெய் குழைத்த மிளகாய்ப்பொடி, புளியஞ்சாதம், அப்பளம் + வடாம், தயிர்சாதம் + ஊறுகாய் போல வருமா என்ன?

  ReplyDelete
  Replies
  1. வீட்டிலிருந்து எடுத்து வரும் உணவு - பல சமயங்களில் இது சாத்தியப் படுவதில்லை. அச்சமயங்களில் வேறு வழியில்லாது சாப்பிட வேண்டியிருக்கிறதே..

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 9. உங்க அனுபவம் போல் ,அந்த சமோஸா அவ்வளவு சுவையாய் இருப்பதில்லை :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 10. சிலருக்கு எதிலும் முதன்மையாக எண்ணப்பட வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும் இன்ன பொருளை இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்னும்முறை இருக்கிறதாபிறருக்கு அருவருப்பு வராமல் உண்பதே போதும்உங்களை என்பதிவில் காணாது ஏமாற்றம்

  ReplyDelete
  Replies
  1. பலருடைய பதிவுகளை படிக்க முடியாத சூழல்..... இதோ வருகிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 11. ருசிகரமான பயணங்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   Delete
 12. சமூசாவுக்கே கை தூக்கினால் வேறு ஏதாவது பிரியாணி ஆர்டர் செய்திருந்தால் ?
  சென்னை ட்டூ டெல்லி பயண நேரம் எவ்வளவு ஜி ?

  ReplyDelete
  Replies
  1. சென்னையிலிருந்து தில்லி - விமானத்தில் 2.30 மணி நேரம். ரயிலில் எனில் குறைந்தது 29 மணி நேரம் [ராஜ்தானி!].

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 13. அனுபவங்களில் ரயில் அனுபவங்கள் தனிதான்...ஏறியதும் இருக்கைக்கு சண்டைபோடுபவர்கள் இறங்கும் போது ஓடி ஓடி உதவும் காட்சி..எப்படியேனும் நிகழ்ந்துவிடுகிறது ஒரு சண்டை..பிரிக்கப்படுகிறது உணவுப்போட்டலங்கள்.அழும் ஒரு குழந்தை...இப்போதெல்லாம் நான் பல்லவனை நம்பியிருக்கிறேன்.என் பயணத்திற்கு...அலுப்பதே இல்லை...நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பல்லவன் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவம்..... நீங்கள் சொல்வது போல் அலுப்பதே இல்லை - என்னுடைய பெரும்பாலான பயணங்கள்!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

   Delete
 14. ப்ளைட்டில் உணவு சாப்பிடவே பிடிக்காது எனக்கு ..அந்த ப்ரெட் ஆம்லெட் ப்ரெட் உள்ளேயும் ஆம்லெட் வெளியேயும் இருக்கும்னு நினைக்கிறேன் fb யில் ஒருமுறை சரவணன் படம் போட்டிருந்தார் ..பயணம் செய்யும்போது இப்படி பல காட்சிகள் ..வெறுப்பை தரும் எனக்கு உணவு விஷயத்தில் மட்டும் குறிப்பா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஏஞ்சலின்.

   Delete
 15. பம்பர் குலுக்கலும் சாப்பாட்டுக்கு கை உயர்த்திய பெண்ணும் ரசிக்க வைத்தது.
  பிரட் ஆம்லெட் முன்னர் படித்த ஞாபகம்... இங்கா... முகநூலிலா...? இருந்தும் மீண்டும் வாசித்தேன்.

  ReplyDelete
 16. முகப்புத்தகத்தில் எழுதியவற்றை சேமிக்கும் விதமாக இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன் குமார்.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை செ. குமார்.

  ReplyDelete
 17. நல்ல "சுவை"யான அனுபவங்கள்தான். ஒவ்வொரு ரயில் பயணமும் ஒவ்வொரு அனுபவம்தான். உண்மைதான் பலரும் ப்ரெட் ஆம்லட் விருப்பப்பட்டு வாங்கிவிட்டுச் சாப்பிடுவதில் திண்டாடுவதைப் பார்த்திருக்கின்றோம்.

  கீதா: ஃப்ளைட் பம்பர் குலுக்கல்...ஐயோ முதன் முதலில் பயணித்த போது ஏற்பட்டது கொஞ்சம் பயமாக இருந்தது. அதே ஃப்ளைட்டில் இரண்டாவதாக ஏற்பட்ட போது பழகிவிட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....