வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

நீங்கள் இறங்கி வந்த ஏணி - தங்கமா, வெள்ளியா அல்லது மூங்கிலா?


வடகிழக்கு மாநிலங்களில் பல பழங்குடி மக்கள் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சென்ற வருடத்தின் மார்ச் மாதம் அந்த மாநிலங்களுக்குப் பயணித்த போது இப்படி நிறைய பழங்குடி மக்கள் பற்றி தெரிந்து கொண்டேன்.  சென்ற வாரம் மீண்டும் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி மேலும் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பு.  ஓட வைத்த ஆட்டக்காரி பதிவில் சொன்னது போல Destination North East நிகழ்ச்சிக்குச் சென்றபோது சில விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.



வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலுமே மூங்கிலுக்கு மிக முக்கிய இடம் இருக்கிறது. பல இடங்களில் மூங்கில் மரங்களைப் பார்க்க முடியும்.  மூங்கில் அவர்களது அன்றாட வாழ்வில் முக்கியமான இடத்தினைப் பெற்றிருக்கிறது. மூங்கில் அரிசி, மூங்கில் அரும்புகள், என பலவற்றை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.  மூங்கிலைப் பயன்படுத்தி அறைகலன்கள், அலங்காரப் பொருட்கள் என பலவும் செய்கிறார்கள்.  நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிலர் விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களில் மூங்கிலால் செய்யப்பட்ட காதணிகளையும் பார்த்த போது அவற்றில் எத்தனை வேலைப்பாடுகள் என்று பிரமிக்க வைத்தது.



மூங்கிலுக்கு இத்தனை முக்கியத்துவம் எதற்கு? அதற்கும் ஒரு கதை இருக்கிறது!  எல்லாவற்றிலும் ஏதோ ஒரு நம்பிக்கை இருக்கத்தானே செய்கிறது.  திரிப்புரா மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பழங்குடியினரின் நம்பிக்கை தான் இன்றைய பதிவின் தலைப்பில் சொன்ன விஷயம்.



பூமியின் முதல் இரண்டு மனிதர்கள் ஆதாம் – ஏவாள் என்ற கதையைப் போலவே இதற்கும் ஒரு கதை.  உலகத்தில் மனிதர்கள் தோன்றுவது எப்படி என்பது பற்றிய கதை.




திரிப்புராவின் பழங்குடி மக்கள் மனிதர்கள் சொர்க்கத்திலிருந்து படிகள் வழியே இறங்கி வந்ததாய் நம்புகிறார்கள் – சிலர் தங்கத்தில் செய்யப்பட்ட படிகள் வழியே வந்ததாகவும், சிலர் வெள்ளியில் செய்யப்பட்ட படிகள் வழியே வந்ததாகவும் நம்பும் அவர்கள் வந்தது மட்டும் பாவம் மூங்கிலால் ஆன படிகள் என்பதில் உறுதியாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  அதனால் தான் மூங்கில் என்பது அவர்களது வாழ்க்கையில் நீக்க முடியாத இடம் வகிக்கிறதாம்.



மூங்கில் கொண்டு இவர்கள் செய்யாத பொருட்களே இல்லை எனவும் சொல்ல முடியும். பாத்திரங்கள், வீட்டின் கூரை, வீடு கட்ட மரங்கள், பாய், படுக்கை, அறைகலன்கள், அலங்காரப் பொருட்கள், பெரிய பெரிய கலன்கள், என அனைத்தும் செய்கிறார்கள். மூங்கில் மட்டுமல்ல, அவற்றின் வேர்களைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை! அதனையும் பயன்படுத்திவிடுகிறார்கள்.





மூங்கில் வேர்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றை பதப்படுத்தி, மிக அழகான சிற்பங்கள் செய்கிறார்கள்.  பெரும்பாலும் இச்சிற்பங்களில் முகம் மட்டும் செய்வது வழக்கம் என்றாலும், பெரிய வேர்களில் முழு உருவச் சிற்பங்களும் செய்து விடுகிறார்கள். புத்தர், சிவன், கிருஷ்ணன் என பல சிற்பங்களை அங்கே விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  விலை மூங்கிலுக்கு மட்டுமல்ல, அவர்கள் கலைத் திறமைக்கும் தான்!  சிற்பங்கள் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்கிறார்கள்.



நிகழ்ச்சிக்குப் போனபோது எடுத்த சில மூங்கில் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் இந்தப் பதிவில் உங்களுக்காக பகிர்ந்து இருக்கிறேன்.  காதணிகள் பார்க்கவே அழகாய் இருக்கின்றன அல்லவா?  காதணிகள் 100 ரூபாயிலிருந்து கிடைத்தன. 

நாம் சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்தது தங்கம்/வெள்ளி அல்லது மூங்கில் ஏணியோ எதுவாக இருந்தாலும், போகப் போவது மூங்கில் படுக்கையில் என்பது மட்டும் நிச்சயம்!

வேறொரு பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்
புது தில்லி. 

38 கருத்துகள்:

  1. இந்த படங்கள் மற்றும் தகவல்கள் மிக அருமை.... இது போன்ற அருமையான செய்திகளை புகழ் பெற்ற வார இதழ்களில் கூட பார்க்க முடியாது அவைகள் எல்லாம் இப்போது கவர்ச்சி படங்களை தாங்கியே வருகின்றன. நல்லவேளை வலைத்தளங்கள் இருப்பதால் இது போன்ற பல நல்ல பதிவுகளை படிக்க முடிகிறது......பாராட்டுக்கள்.........வெங்கட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  2. புகைப்படங்களும் விளக்கங்களும் ரசிக்க வைத்தன.
    சுதா த்வாரகாநாதன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

      நீக்கு
  3. //நாம் சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்தது தங்கம்/வெள்ளி அல்லது மூங்கில் ஏணியோ எதுவாக இருந்தாலும், போகப் போவது மூங்கில் படுக்கையில் என்பது மட்டும் நிச்சயம்//

    உண்மையான விடயம் ஜி தங்களது எழுத்தின் பான்ட் மாற்றி விட்டீர்களே ஏன் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முந்தைய பதிவிலேயே உங்கள் கேள்விக்கு பதில் சொல்லி இருந்தேன் கில்லர்ஜி! கணினி மருத்துவரிடம் சென்று வந்தது. அவர் OFFICE 2013 போட்டு இருக்கிறார் - அதில் தான் நான் தட்டச்சு செய்வது - பிறகு Blogger-l பேஸ்ட் செய்வேன். லதா ஃபாண்ட் விஜயா ஃபாண்ட் ஆக மாறி இருக்கிறது...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. அருமையான படங்களுடன் கூடிய பதிவு...
    மூங்கிலை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா என வியப்பாய் இருக்கிறது.?

    அருமை...அந்த கதையும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

      நீக்கு
  5. சந்தேகமே இல்லை இறுதி யாத்திரை ,உறுதியாய் அதில்தான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  6. திரிபுரா மக்களின் கை வண்ணம் அழகிய படங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.. அருமை..

    >>> நாம் சொர்க்கத்தில் இருந்து இறங்கி வந்தது தங்கம்/வெள்ளி அல்லது மூங்கில் ஏணியோ எதுவாக இருந்தாலும், போகப் போவது மூங்கில் படுக்கையில் என்பது மட்டும் நிச்சயம்!.. <<<

    அதுவும் பறி போய்விட்டதே.. தற்போது பெரும்பாலான இடங்களில் மருத்துவமனையின் ஸ்ட்ரெச்சர் தான் கடைசி படுக்கை.. மயான ஊர்திகளில் இதுதான் இருக்கின்றது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  7. படங்களும் தகவல்களும் மிகவும் அருமை. கலைநயத்துடன் செய்துள்ள பொருட்கள் ஜோர் ஜோர்.

    பகிர்வுக்கு நன்றிகள், வெங்கட்ஜி.

    ’போகப் போவது மூங்கில் படுக்கையில் என்பது மட்டும் நிச்சயம்!’ ... மறுக்கவே முடியாமல் அப்படியே ஒப்புக்கொள்ளக்கூடிய மாபெரும் உண்மையாக உள்ளது இந்தக்கடைசி வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  8. படங்களைப் பார்த்தால் மூங்கிலா என மூக்கில் விரலை வைக்கத் தோன்றுகிறது. அத்தனை அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

      நீக்கு
  9. புகைப்படங்களும் செய்திகளும் வியப்பைத் தருகின்றனஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  10. மூங்கில் சிற்பங்கள் அழகோ அழகு! படங்கள் பேசுகின்றன. நாம் பூமிக்கு வந்த பாதை கதை சுவராஸ்யமாக இருக்கிறது. மொத்தத்தில் அருமையான பதிவு!
    த ம 5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  11. சிற்பங்களும் அழகு! அவற்றை நீங்கள் எடுத்த படங்களும் அழகு! கடைசி வரி நறுக்கென இருந்தது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இ.பு. ஞானப்பிரகாசன் ஜி!

      நீக்கு
  12. அருமை ஐயா.மூங்கிலின் மாற்றத்தை கண்டு வியந்தேன் ஐயா.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செ. வைசாலி ஜி!

      நீக்கு
  13. புகைப்படங்களும் தகவல்களும் அருமை!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  14. ஆஹா... மூங்கிலில் அழகான பொருட்கள்...
    மூங்கில் குறித்த செய்திகளும் அருமை...
    படங்கள் அழகு அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை. சே. குமார்.

      நீக்கு
  15. நல்ல படங்கள் அழகு! அனத்தும் கலைப் பொருள்கள்!வாழட்டும் அக்கலை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  16. மிக அருமையான செய்திகள். மூங்கிலால் அவர்களால் ஆடும் நடனமும்
    நினைவுக்கு வருகிறது. எத்தனை அழகாக இருக்கிறது.மூங்கிலில் ஆரம்பித்து மூங்கிலில் முடியும் வாழ்க்கை. உண்மை தான். நன்றி வெங்கட்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  17. நல்ல தகவல்கள்... அழகிய படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  18. அருமையான தகவல்கள்! வெங்கட்ஜி! படங்களும் மிக அழகு. காதணிகள், கலைப்பொருட்கள் கவர்கின்றன, பிரமிக்க வைக்கின்றன.

    கீதா: வடகிழக்கு மாநிலத்தவர்களின் வாழ்க்கையில் மூங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சொல்ல நினைத்து வந்ததை நீங்களே சொல்லியிருக்கின்றீர்கள்....மூங்கில் அரிசி....முதல் மூங்கில் நடனம் வரை அவர்களது வாழ்வில் உண்டு.

    அவர்கள் செய்த சில பொருட்கள் கூட பரிசாக அளித்ததுண்டு சில வருடங்களுக்கு முன். மூங்கில் க்வில்லிங்க் காதணிகள் அழகாக இருக்கின்றன. செய்திருக்கிறேன்..கொலுவிற்காகக் கைவேலைகள் செய்த வருடங்களில்.

    அழகான படங்கள். மூங்கிலின் மகத்துவக் கதை புதிதாக அறிகின்றோம்..பகிர்வுக்கு மிக்க நன்றி வெங்கட்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  19. மூங்கில் அரிசி இங்கே கிலோ 300 ருபாய் விற்கிறது!:) அவங்க கொடுத்து வைச்சவங்க. பிரம்பிலும் இப்படிக் கலைப்பொருட்கள் செய்வார்கள்! படங்கள் அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....