எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, February 29, 2016

ஏழு சகோதரிகள் – பயணத் தொடர்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 1

உறைந்து கிடக்கும் நீர்நிலை 
இடம்: தவாங் அருகே...

பஞ்ச் த்வாரகா பயணத் தொடர் முடித்து சில வாரங்கள் கடந்து விட்டன. அடுத்த பயணத் தொடர் ஏதும் இல்லையா என்று யாரும் கேட்பதற்கு முன்னர் ஆரம்பித்துவிட எண்ணம் இருந்தது. அதற்குள் நண்பர் முந்திக் கொண்டார் – ”பதினைந்து நாட்கள் ஏழு சகோதரி மாநிலங்களுக்குப் பயணம் சென்று வந்ததைப் பற்றி இன்னும் ஒன்றும் எழுதவில்லையே?  எப்போது அந்தப் பயணம் பற்றிய தகவல்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறாய்?”  கேள்வி வந்தபிறகும் சும்மா இருந்தால் எப்படி! இதோ ஆரம்பித்து விட்டேன். முதலில் ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கப்படும் மாநிலங்கள் எவை என்று பார்க்கலாம்…..

ஏழு சகோதரிகள்.....
படம்: இணையத்திலிருந்து.....

ஏழு சகோதரிகள்:  இந்தியாவின் வடகிழக்கில் இருக்கும் 7 மாநிலங்களை ஏழு சகோதரி மாநிலங்கள் என அழைக்கிறார்கள்.  அந்த மாநிலங்கள், அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம், நாகலாந்து மற்றும் திரிப்புரா ஆகியவை. இந்தியாவின் மற்ற மாநிலங்களிலிருந்து இந்தப் பகுதிகளுக்கு  நிறைய பேர் வருவதில்லை. ஏதோ இந்த மாநிலங்கள் அண்டை நாடான சீனாவில் இருப்பது போல பலருக்கும் ஒரு பயம்.  அப்படி பயம் இல்லாதவர்களும், சரியான போக்குவரத்வது வசதிகள் இல்லாத காரணத்தினாலும் இங்கே பயணிக்க யோசனை செய்கிறார்கள்.   சமீப வருடங்களில் தான் இங்கே இருக்கும் பல சுற்றுலாத் தலங்களைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வந்திருக்கிறது. அரசாங்கமும் இங்கே சுற்றுலாவை அதிகரிக்க பல வசதிகளைத் தந்து வருகிறது.

மீன் பிடிக்கலாம் வாங்க!
இடம்: லோக்டாட் ஏரி, மோய்ராங், மணிப்பூர்....

வடகிழக்கு மாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்து நிறைய பேர் தில்லியில் வசிக்கிறார்கள். தவிர அலுவலகத்திலும் சில வடகிழக்கு மாநில நண்பர்கள் உண்டு. அலுவலகப் பயிற்சி ஒன்றின் போதும் மிசோரம் மாநிலத்திலிருந்து மொத்தமாக ஐந்து பேர் வந்து அவர்கள் மாநிலத்தில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் பற்றிப் பெருமையாய்ச் சொல்ல, எனக்கும் என்னுடன் பயிற்சியில் பங்கெடுத்த கேரள நண்பருக்கும் மிசோரம் மட்டுமல்லாது ஏழு சகோதரிகள் மாநிலங்கள் அனைத்திற்கும் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று.


பாரம்பரிய உடையில் சிறுமிகள்
இடம்: இம்ஃபால் அருகே..

பயிற்சி முடிந்து சில் வருடங்கள் ஆன பிறகே இப்பயணம் எங்களுக்கு வாய்த்தது. சென்ற வருடத்தில் இந்த மாநிலங்களுக்குச் செல்ல ஏற்பாடுகளை ஆரம்பித்தோம். இம்மாநிலங்களுக்குச் செல்ல சில முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டியிருந்தது – குறிப்பாக அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகலாந்து போன்ற மாநிலங்களுக்குப் பயணம் செய்ய வேண்டுமெனில் அந்த மாநிலத்தினுள் நுழைய ILP என அழைக்கப்படும் Inner Line Permit வாங்க வேண்டும். இதற்கு தலைநகர் தில்லியில் உள்ள அந்த மாநிலங்களின் அலுவலகங்களுக்கோ அல்லது  அம்மாநில எல்லையில் இருக்கும் அலுவலகத்திற்கோ செல்ல வேண்டும்.மீன் விற்றுக் கொண்டிருந்த இளம் பெண்...  
நடுவே முதுகில் தூங்கும் குழந்தையைப் பார்த்த போது எடுத்த படம்
இடம்: கொஹிமா, நாகலாந்து


தலைநகரில் நான் இருப்பதால் எனக்கும் கேரள நண்பர்கள் ஐந்து பேருக்கும் சேர்த்து தலைநகரிலேயே அனுமதிச் சீட்டுகளை வாங்கச் சென்றேன். அனைவருமே அரசுத் துறையில் இருப்பதால், நாகலாந்து செல்ல அனுமதி வாங்கத் தேவையில்லை என்று தெரிந்தது.  அருணாச்சலப் பிரதேசம் செல்ல அனுமதி வாங்கினேன் – அதற்கு ஒரு படிவம் நிரப்பி, அனைவருடைய அடையாள அட்டையின் நகல் கொடுப்பதோடு, புகைப்படமும் கொடுக்க வேண்டும். கூடவே ஒருவருக்கு நூறு ரூபாய் கட்டணமும் உண்டு! நமது நாட்டிற்குள்ளே இருக்கும் ஒரு மாநிலத்திற்குச் செல்ல இத்தனை கெடுபிடிகள்! காரணம் சீன எல்லையில் இருக்கும் மாநிலம்!

பிள்ளையும் சுமந்து கொண்டு 
பள்ளிப் புத்தகத்தினையும் சுமக்கும் தாய்....
இடம்: கொஹிமா....

இந்தியத் தலைநகரிலிருந்து நான் மட்டும் புறப்பட, மற்ற நான்கு நண்பர்களும் கேரளத் தலைநகரிலிருந்து புறப்பட வேண்டும்.  நண்பர்கள் பெங்களூரு வழியாக மணிப்பூர் மாநிலத் தலைநகரான இம்ஃபால் வந்து சேர, எனக்கு நேரடியாக இம்ஃபாலுக்கு விமானம்.  தில்லியிலிருந்து இம்ஃபால் செல்லவும், பயணத்தின் முடிவில் கொல்கத்தாவிலிருந்து தில்லி திரும்பவும் மட்டும் நான் விமானச் சீட்டுகளை முன்பதிவு செய்திருந்தேன். மற்ற இடங்களுக்கு எங்கள் ஐவருக்குமாகச் சேர்த்து பயண ஏற்பாடுகளை நண்பரே கவனித்துக் கொண்டதால் எனக்கு அதிகம் வேலை இருக்கவில்லை!

தண்ணீர் சுமக்கும் நேபாளி முதியவர்....
இடம்: கொஹிமா...

என்னதான் ஏழு மாநிலங்களையும் பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும், அனைவருக்கும் ஒரு சேர பதினைந்து நாட்கள் அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பது கடினமான விஷயம்.  அலுவலகத்தில் விடுமுறை கிடைத்தாலும், வீட்டிலும் அனுமதி கிடைக்க வேண்டுமே!  கேரள நண்பருடன் வந்த ஒருவர் அவருக்கு அலுவலகத்திலிருந்து பயிற்சிக்கு அனுப்புகிறார்கள் என்று பொய் சொல்லிவிட்டு வர அவரை பயணம் முழுவதும் ஓட்டிக் கொண்டிருந்தோம் – “வீட்டுக்குப் போனதும் இருக்கு உனக்கு!, இதோ போட்டுக் கொடுக்கிறோம்” என பயமுறுத்தியபடியே இருந்தோம்.

சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் உழைப்பாளிகள்...
இடம்: அருணாச்சலப் பிரதேசம்

எனக்கும் அலுவலகத்தில் விடுமுறை கிடைப்பதில் சில சிக்கல்கள் இருந்தன . கடைசி நாள் வரை ஏதேதோ வேலைகள் – அனைத்தையும் முடித்துவிட்டு தான் செல்ல அனுமதி கிடைக்கும் என்ற நிலை.  அனைத்து வேலைகளையும் விடுமுறை நாட்களில் கூட அலுலவலகம் சென்று முடித்துக் கொடுத்த பிறகு தான் அனுமதி கிடைத்தது.  ஒரு வழியாக நான் தில்லியிலிருந்து புறப்பட்டேன். 

கரும்புச் சாறு குடிக்கலாம் வாங்க....
இடம்: இம்ஃபால் பேருந்து நிலையம்....
உழைப்பாளி இருப்பது இம்ஃபால் ஆக இருந்தாலும் பீஹார் மாநிலத்திலிருந்து வந்தவர்.

இதுவரை சென்றிராத இடங்கள்…  வித்தியாசமான உணவுப் பழக்கம் கொண்டவர்கள் இருக்குமிடம் – அவற்றுக்குச் செல்லப் போகும் எங்களுக்கு “அங்கே என்ன வரவேற்பு கிடைக்கும், என்னைத் தவிர மற்ற அனைவரும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என்பதால் அவர்களுக்குப் பிரச்சனையில்லை – நான் மட்டுமே சைவம் சாப்பிடுபவன் – வடகிழக்கு மாநிலங்களில் சைவ உணவு கிடைப்பது அரிது என்பதால் எப்படிச் சமாளிக்கப் போகிறாய் என அலுவலக நண்பர்கள் மிரட்டிக் கொண்டிருந்தார்கள்.  பதினைந்து நாள் தானே – சமாளித்து விடுவேன் என்று தைரியமாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். 


எதையும் தாங்கும் முதுகு....  பைக்கு பதில் இக்கூடையில் போட்டு தான் பொருட்களை எடுத்துச் செல்கிறார்கள்
இடம்: கொஹிமா, நாகலாந்து


அப்போது நண்பர் ஒருவர் வடகிழக்கு மாநிலத்திற்குச் சென்று,  உணவு கிடைக்காமல் அவர் பட்ட அவஸ்தையைச் சொன்னது நினைவுக்கு வந்தது - அச் சம்பவம்……

உணவகத்திற்கு அவரும் அசைவம் சாப்பிடும் நண்பர்களும் சென்று அமர, அவர் ரொம்பவும் முன் ஜாக்கிரதையோடு ”வெஜ்” என்று சொல்ல, உணவகச் சிப்பந்தி, “பேஜ்” எனச் சொல்ல, பெங்காலிகள் போலவே இங்கேயும் “வ” எனும் எழுத்தை “ப” என உச்சரிப்பார்கள் போல என, மீண்டும் “வெஜ்” என்று அழுத்திச் சொல்ல, சிப்பந்தி மீண்டும் “பேஜ்” எனச் சொல்லி உள்ளே சென்றார்.  மற்றவர்கள் அனைவருக்கும் உணவு வர இவருக்கும் ஒரு தட்டில் வைத்து வந்தது உணவு – அதன் மேலே ஒரு ஃபோர்க் மற்றும் கத்தி – இது எதற்கு எனக் கலக்கமாக பார்த்தால் – சிப்பந்தி கொண்டு வந்து வைத்தது ஏதோ ஒரு மிருகத்தின் மூளை! மூளைக்கு ஹிந்தியில் ”பேஜ்” எனப் பெயர்! பிறகு எங்கே சாப்பிடுவது!  பழங்கள், பால் என சாப்பிட்டு வந்த அனுபவத்தினை சொல்லி இருக்கிறார்!


இலந்தைப் பழம் விற்றுக் கொண்டிருந்த பாட்டி..
இடம்: ஷஹீத் மினார், இம்ஃபால்


இப்படி பல அனுபவங்கள் கேட்டிருந்தாலும், நிறைய ஊர்களுக்குப் பயணப்பட்டு கிடைக்கும் சைவ உணவுகளையும், கிடைக்காத பட்சத்தில் பழங்கள், பால், ப்ரெட் என சாப்பிட்டு ஓட்டிய எனக்கு பிரச்சனை இருக்காது என தைரியமாக புறப்பட்டேன்.

இந்த ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களுக்குப் பயணம் செய்து வந்த அனுபவங்களை இன்றிலிருந்து எழுதப் போகிறேன்.  வாரத்திற்கு இரண்டு கட்டுரைகளாக எழுத என்ணம் – நேரமும் இணையமும் ஒத்துழைக்க வேண்டும்.

உங்கள் அனைவருடன் இந்த அனுபவங்களைப் பகிரும் நோக்கத்தில் மட்டுமே எழுதுகிறேன் – உங்கள் ஆதரவு உண்டா?

அடுத்த பதிவில் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

32 comments:

 1. அருமையான ஆர்வமூட்டும் முன்னுரை
  படங்களுடன் உங்கள் பதிவு எப்போதுமே
  உடன் பயணிக்கிற உணர்வினை
  படிப்பவர்களுக்கு ஏற்படுத்தும்
  நாங்கள் தயாராகிவிட்டோம்
  கரும்புதின்னக் கசக்குமா ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

   Delete
 2. அடுத்தடுத்த பதிவுகளுக்காக நாங்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறோம்.
  சுதா த்வாரகாநாதன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகாநாதன் ஜி!

   Delete
 3. உங்க படம் வழியாக காண்பது ....கண்களுக்கு விருந்து ....காத்திருக்கிறோம் ....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 4. ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களுக்குப் பயணம் செய்து வந்த அனுபவங்களை பகிர இருப்பதற்கு நன்றி!
  எங்களின் ஆதரவு உண்டா? எனக்கேட்டு இருக்கிறீர்கள். நிச்சயம் உண்டு. ஆரம்பமே அருமை. காத்திருக்கிறோம் உங்களோடு பயணிக்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 5. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மீரா செல்வக்குமார் ஜி!

   Delete
 6. இந்த பெயர்களை எல்லாம் லாட்டரி விற்கும் காலத்தில் அதிகம் கேள்வி பட்டிருக்கிறேன் :)

  ReplyDelete
  Replies
  1. இப்போதும் அங்கே லாட்டரி உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
 7. அருமையான படத்தோடு ஒரு பயணத்தை நானும் தொடர்ந்தேன் ஐயா.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி!

   Delete
 8. ஆர்வத்துடன் தொடர்கிறேன். அருணாச்சலப் பிரதேசத்துக்குள் நுழைய அனுமதி வாங்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய கொடுமை!

  ReplyDelete
  Replies
  1. நம் நாட்டின் ஒரு பகுதிக்கு நாம் செல்ல அனுமதி தேவை - கொடுமை தான்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 9. இந்தியாவில் பார்வை படாத, அதிகம் பேசப்படாத, ஆனால் தேவையுள்ள இடங்களைப் பற்றிய பதிவு. நல்ல ஆரம்பம். அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 10. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 11. ஆரம்பம் அட்டகாசம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   Delete
 12. நானும் சமீபத்தில்தான் இந்த ஏழு சகோதரிகளை தரிசித்து வந்தேன். அதனால் அதிக ஆவலோடு தொடர்கிறேன்.
  த ம 8

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் எழுதுங்கள்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில்குமார்.

   Delete
 13. ஆஹா! உங்கள் அனுபவக் கட்டுரைகளை வாசிக்க ஆவலுடன் வெயிட்டிங்க்...எங்களுடன் வேலை செய்யும் ஓரிரு ஆசிரியர்கள் அங்கு சென்று வந்திருக்கின்றார்கள். குறிப்பாக அஸ்ஸாம். அப்புறம் அங்கு முடியவில்லை என்று இங்கு வந்துவிட்டார்கள்.

  கீதா: ஆம்! அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ம்ம் நாங்களும் பயணிக்க வைத்திருந்தத் திட்டம் ஒரு சில வீட்டுக் காரணங்களால் பயணிக்க முடியாமல் போனது. அப்போது அறிந்தது இது. உங்கள் பயணக் குறிப்புகளை மிகவும் ஆர்வத்துடன் எதிர்கொள்ள காத்திருக்கின்றோம். கணவர் நாகாலாந்து ரீஜனல் பொறியியல் கல்லூரியில் 15 நாட்கள் தங்கிப் பாடம் நடத்தியிருக்கிறார். மகனின் வகுப்பில் வடகிழக்கு மாநிலத்துப் பையன்கள் படித்தார்கள். அவர்களும் பல கதைகள் சொல்லியிருக்கிறார்கள். உங்கள் அனுபவம் அறிய தொடர்கின்றோம்...ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. பெரும்பாலோனோர் போகாத இடத்துக்குப் போய் வந்திருக்கிறீர்கள் கட்டுரையின் துவக்கமே களை கட்டுகிறது வெஜ் என்று சொல்லாமல் வெஜிடேரியன் என்று முழுமையாகச் சொல்லி இருந்தால் என்ன வந்திருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வெஜிடேரியன் என முழுமையாகச் சொல்லி இருந்தால்... அரிசியும் Dhal-உம் வந்திருக்கலாம்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete

 15. 7 சகோதரிகள் மாநிலங்கள் பற்றிய உங்கள் பதிவுகள் அத்தனையையும் படிக்க வேண்டும்.எனக்கு அந்த மாநிலங்களில் மேகாலாய மீது ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அண்ணா அங்கே பழங்குடி மக்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் , காட்சியில் சிக்கினார்களா :)

  ReplyDelete
  Replies
  1. மேகாலயா - பற்றிய தகவல்கள் இத்தொடரில் உண்டு. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கலாமகன்.

   Delete
 16. 7 sisters என்ற ஒரு இடம் இங்கிலாந்தில் இருப்பதாக விக்கியில் படித்த நியாபகம்,

  https://en.wikipedia.org/wiki/Seven_Sisters,_Sussex

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி கலாமகன்.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....