எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, February 22, 2016

மம்பட்டியான்…
நாங்கள் தங்கி இருக்கும் அரசுக் குடியிருப்பில் தொடர்ந்து ஏதோவொரு பராமரிப்பு வேலை நடந்து கொண்டேதான் இருக்கும். அந்தப் பெயரில் நிறைய பேர் சொத்து சேர்த்து விட்டார்கள் என்றாலும் – வேலை நடந்து கொண்டே இருப்பதில் இன்னுமொரு லாபமும் உண்டு. கூலி வேலை செய்யும் பலருக்கு தொடர்ந்து ஏதோ ஒரு வேலை இருந்து கொண்டே இருக்கிறது. தலைநகரில் கூலி வேலைகள் செய்பவர்கள் பெரும்பாலானோர் பீஹார் மாநிலத்திலிருந்தோ அல்லது மேற்கு உத்திரப் பிரதேசப் பகுதியிலிருந்தோ தான் வருகிறார்கள். 

எந்த பகுதியில் வேலை செய்கிறார்களோ அங்கேயே ஒரு சின்ன குடிசை – தற்காலிகமாய் அமைக்கப்பட்ட குடிசை – இதை ஹிந்தியில் ஜுக்கி ஜோம்ப்ரி என அழைப்பார்கள் – அமைத்துக் கொண்டு வசிப்பார்கள்.  சில வருடங்கள் தொடர்ந்து இருக்கும் ஜுக்கி கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி சிமெண்ட் கட்டிடங்களாகவும் மாறி விடுவதுண்டு!  தங்குவது வீட்டிலென்றாலும், கழிப்பறை வசதிகள் ஏதும் இருக்காது – காலையில் ஒரு தண்ணீர் பாட்டிலோடு வெளியே கிளம்பி விடுவார்கள்!  இன்னமும் தலைநகரில் இப்படி நிலை இருப்பது வருத்தம் தரும் விஷயம்….

அவர்கள் இருக்கும் பகுதியிலே தான் பெரும்பாலானோர் வேலை செய்கிறார்கள் என்றாலும் சில குடும்பங்கள் விதிவிலக்காக தங்குமிடத்திலிருந்து பேருந்தில் பயணித்து மற்ற குடியிருப்புகள் இருக்கும் இடத்திற்குச் சென்று வேலை பார்க்கிறார்கள். ஒருவர் வேலைக்குச் சென்று வர முப்பது ரூபாய் வரை பேருந்து கட்டணம் தர வேண்டியிருக்கும். நான் வழக்கமாக வேலைக்குச் செல்லும் தில்லி நகரப் பேருந்து ஒன்றில் ஒரு கணவன் – மனைவி இருவருமே வேலைக்கு செல்வார்கள் . இருவருமே வேலைக்குச் செல்வதால் அவர்களுடன் ஒரு கைக்குழந்தையும் கூடவே வருகிறது.  பேருந்தில் இருக்கும் ஒருவர் விடாது அனைவரையும் நோக்கிப் புன்னகைத்து மகிழ்ச்சி அடையச் செய்யும் அக்குழந்தை.  நாள் ஒன்றுக்கு அறுபது ரூபாய் பேருந்து செலவு – அதன் பிறகு உணவுச் செலவு – சம்பாதிப்பதில் பெரும்பகுதி பயணத்திற்கும் உணவுக்கும் சென்றுவிட, சேமிப்போ, அல்லது குழந்தைகளின் படிப்போ சாத்தியமில்லை….

படிப்பு என்றதும் இன்னும் ஒரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. அது தான் தலைப்புக்குச் சம்பந்தமானதும் கூட!

நண்பரின் வீட்டுக்கு முன்னர் பராமரிப்பு பணி நடந்துகொண்டிருக்கிறது. அங்கேயும் இப்படி ஒரு குடும்பம் வேலை செய்து கொண்டிருக்கிறது.  கணவன் – மனைவி இருவருமே கூலி வேலை செய்கிறார்கள்.  அவர்களுக்கு ஒரு மகன் – இரண்டு வயதுக்கு மேல் மூன்று வயதுக்குள் இருக்கலாம்.  தினமும் காலையில் அம்மா-அப்பாவுடன் அவனும் வேலைக்கு வந்து விடுகிறான்.  பெரியவர்கள் அவர்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்து கொண்டிருக்க, சிறுவனும், சின்னச் சின்ன வேலைகளை கூடவே செய்து கொண்டிருக்கிறான். ஒருவொரு கல்லாய் எடுத்துக் கொண்டு சேர்ப்பது, மணலை கைப் பிடிகளாக கொண்டு கொட்டுவது என ஏதோ வேலை – அதுவே அவனுக்கு விளையாட்டும் கூட….. சின்னக் கைகள் கொண்டு இப்படி வேலை செய்வது அவனது பெற்றோர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சியான விஷயம். பெற்றோர்களின் முகத்தில் இனம்புரியாத ஒரு மகிழ்ச்சி. நண்பரின் வீட்டில் பூத்திருக்கும் பூவொன்றை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தபோது பார்த்த காட்சி எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. இரண்டு அடி உயரம் உள்ள குழந்தையின் கையில் பெரிய மண்வெட்டி ஒன்று – அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் சிறுவன்.  அம்மாவும் அப்பாவும் பதறாது சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்……. அவர்களது தொழிலை தொடர்வதற்கு இப்போதிலிருந்தே குழந்தை தயாராகிவிட்டது என்ற மகிழ்ச்சியோ…..

குழந்தைகளை படிக்க வைப்பது பற்றியெல்லாம் அவர்கள் யோசிப்பதே இல்லை. அவன் வயது குழந்தைகள் Play School-ல் செயற்கை களிமண்ணையும், நெகிழியால் செய்யப்பட்ட கற்களையும் வைத்து விளையாடிக்கொண்டிருக்க இவனோ உண்மையான மண்ணுடனும், கல்லுடனும் விளையாடிக் கொண்டிருக்கிறான். இப்போதிலிருந்தே மண்வெட்டியும் பிடிக்கத் துவங்கியாயிற்று – வெகு விரைவில் இவனும் ஏதோவொரு கூலி வேலைக்குச் செல்ல ஆரம்பித்து விடுவான்  - அவர்களுக்குக் கிடைக்கும் மிகக் குறைவான ஊதியத்தினை இன்னும் கொஞ்சம் உயர்த்த நிறைய கரங்கள் வேலை செய்ய வேண்டும் – அவை பிஞ்சுக் கரங்களாக இருந்தாலும்…..…

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

38 comments:

 1. வேதனையாக இருக்கிறது ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வேதனை தான்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. வெகுளியாக சிரித்துக் கொண்டிருக்கிறானே...
  இவனைப் போல் எத்தனைக் குழந்தைகளோ!! வருத்தமாக இருக்கிறது அண்ணா.

  ReplyDelete
  Replies
  1. வருத்தம் தான் கிரேஸ்... இப்படி எத்தனை எத்தனை குழந்தைகள்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

   Delete
 3. மழலையில் கையில் மண்வெட்டி.. இன்னும் சில காலத்தில் இவனும் பாரம் சுமக்க ஆரம்பித்துவிடுவான்..மனதில் நெருடுகின்றது.. என்னதான் செய்வது?..

  ReplyDelete
  Replies
  1. என்னதான் செய்வது? அதே கேள்வி எனக்குள்ளும்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் துரை செல்வராஜு ஜி!

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 5. கடினமே.
  கேட்பதற்கு உவப்பானதாக இல்லாவிட்டாலும், கல்லாக ஒன்றை கூற விரும்புகிறேன்.

  பெற்றோரையோ வேறு பெரியவர்களையோ பார்த்து வேண்டாத பழக்கங்கள் கற்காமல் இருப்பது நலம்.

  கைத்தொழில் ஒன்றை கற்ற நம்பிக்கை உடன் உலகை எதிர் கொள்வானாக. தன்னம்பிக்கையும் சுயமுனைப்பும் பண்பும் மதிப்பும் கொண்டு வளருவானாக.

  அரைகுறை பள்ளி பேருக்கு கல்வி உள்ளீடு அற்ற வலு துணிவு நம்பிக்கை அற்ற வாழ்வு என்பதற்கு பதில் இது எவ்வளவோ மேல்.

  கல்வி என்ற சாக்கில், அவர்களால் முடிந்த பணத்தை கறந்து, அந்த சொற்பத்தில் என்ன நடக்கும்?


  http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/02/blog-post_21.html

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி iK Way.

   Delete
 6. விட்டுவிடலாம் சார் ....படித்த ,,படிக்கும் கல்வி நிலையங்கள் ஒன்றும் அத்தனை சிறப்பாய் இல்லை...ஏதோ கொஞ்சம் படித்துவிட்டு புத்தியோட பிழைத்துக்கொள்ளட்டும்.....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செல்வக்குமார்.

   Delete
 7. உண்மைதான். வட மாநிலங்களிலிருந்து இப்படிக் குடிப் பெயர்ந்த குடும்பங்களை பெங்களூரிலும் நிறையக் காணலாம்:(! குழந்தைகள் கட்டுமான இடங்களிலே விளையாடிக் கொண்டும் பெற்றோருக்கு உதவிக் கொண்டும் இருக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   Delete
 8. தங்குவது வீட்டிலென்றாலும், கழிப்பறை வசதிகள் ஏதும் இருக்காது – காலையில் ஒரு தண்ணீர் பாட்டிலோடு வெளியே கிளம்பி விடுவார்கள்! இன்னமும் தலைநகரில் இப்படி நிலை இருப்பது வருத்தம் தரும் விஷயம்…./ மோதிஜிக்குத் தெரியவேண்டுமே ஸ்வச் பாரத்... சின்னஞ்சிறார்கள் வேலை பழகுவது எங்கும் நடப்பதே அவனுக்கும் பிழைக்க ஒரு தொழில்....1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 9. வேதனையான விடயம் ஜி இந்தியா விஞ்ஞானத்தில் வளர்ந்து விட்டது என்று அரசியல்வாதிகள் பறையடிக்கின்றார்கள் இவனின் இந்த நிலைக்கு அரசும் ஒரு காரணமே....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   Delete
 10. இந்தியாவின் இன்னொரு முகம். வேதனை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
  2. ஐயா ஒரு கணம் மனம் நெகிழ செய்தது இப்பதிவு.நமது இந்திய அரசு இந்நிலையில் இருப்பர்களையும் பற்றி சிறிது எண்ணினால் இவன் எதிர்கால கூலிக்கு பதிலாக எதிகால பொறியியலாளராகலாம் ஐயா.

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வைசாலி செல்வம் ஜி!

   Delete
 11. நானும் இத்தகைய மனிதர்களை பரிதாபமாகத்தான் பார்த்திருக்கிறேன். ஒருமுறை அவர்களைப் பற்றி எழுதுவதற்காக ஒருநாள் முழுதும் அவர்களுடன் இருந்தேன். உண்மையில் நம்மைவிட நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்கிறார்கள். என்னைப் பொருத்தவரை நிம்மதிதான் ஒரு மனிதனின் மிகப் பெரிய சொத்து. அது புரியாமல் நாம் பணத்தையும் பொருட்களையும் சொத்தாக நினைக்கிறோம். அவர்களும் நம்மைப் போல் மாறி பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு நிம்மதியில்லாமல் இருப்பதை வளர்ச்சி என்கிறோம். இப்படிதான் பழங்குடியினரை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் காட்டில் இருந்து கூட்டி வந்து கொடுமைப் படுத்துகிறோம். நமது வாழ்க்கைதான் நாகரிகம் நிறைந்தது. சரியானது என்று நாமே நம்மை உயர்வாக நினைத்துக் கொள்கிறோம். நம்மைவிட அவர்கள் வாழ்க்கை மேம்பட்டதாகவே இருக்கிறது. எதிர்பார்ப்பு இல்லாத நிமதியான வாழ்க்கை. வெள்ளையர்கள் ஆஸ்திரேலிய பழங்குடியினரிடம் செய்த அதே தவறைத்தான் நாம் கொஞ்சம் நாகரிகமாக செய்து கொண்டிருக்கிறோம். அவர்களாவது நிம்மதியாக இருக்கட்டும்.
  த ம விழவில்லை.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி செந்தில்குமார்.

   Delete
 12. நாணயத்தின் இரு பக்கம் போல் ....கருத்துரைகள் ....

  ஆனாலும் தொடக்க கல்வியை யாவது இந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டும் ....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம் ஜி!

   Delete
 13. இது நமது தேசத்தின் மற்றொரு புறம். நமக்குத்தான் அந்தக் குழந்தைகளை எண்ணும் போது ஐயோ படிக்காமல் குழந்தைத் தொழிலாளி உருவாகி வருகின்றதே என்று மனம் வேதனை அடைகின்றது. ஆனால் அவர்கள் அதைப்பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் மிகவும் சந்தோஷமாக, அடுத்த நிமிடக் கவலை இல்லாமல் இருப்பதாகத்தான் தெரிகின்றது. கேரளத்திலும் நிறைய வட இந்தியர்கள், தமிழ்நாட்டிலும் நிறைய வட இந்தியர்கள் கூலி வேலை செய்ய வருகின்றனர்தான். நீங்கள் சொல்லுவது போல் அங்கேயே சிலர் குடிசை போட்டுத் தங்கி வேலை செய்கின்றனர். குடும்பம் இல்லாமல் வேலை செய்யும் இளைஞர்கள் வெளியில் தங்கி அவர்களை அழைத்துச் சென்று மீண்டும் விடுவதற்கு வண்டிகள் தினமும் வந்து செல்கின்றன. ஆனால் இவர்களில் எவருமே தாங்கள் படிக்க வில்லையே என்றோ இப்படிக் கூலி வேலை செய்கின்றோமே, சேமிப்பு இல்லையே என்றோ கவலை கொள்வதாகத்தெரியவில்லை. அன்றைய பொழுதை மிகவும் மகிழ்வுடன் கழிக்கின்றார்கள். அந்த நிமிடத்தை வாழ்வதாகத்தான் தெரிகின்றது. சுத்தம் பற்றியோ, சுகாதாரம் பற்றியோ கூடக் கவலை இல்லை. அவர்களும் வாழ்கின்றார்கள்தான். மகிழ்வுடன்
  நாம்தான் அடுத்த நிமிடத்தைப் பற்றி நினைத்துக் கவலை கொள்கின்றோம் என்பது போன்றும் தோன்றுவதுண்டு. நாமும் வாழ்கின்றோம்தான் ..பெரும் சுமைகளுடன்??!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 14. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   Delete

 15. கேட்க வேதனையாய் இருக்கிறது. என்று தீரும் இந்த அவலம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 16. வணக்கம்
  ஐயா
  பதிவை படித்த போது வேதனையாக இருந்தது. என்னசெய்வது..ஐயா... இந்தியா வல்லரசு வல்லரசு என்று சொல்லும் போது அடித்தட்டு மக்கள் இன்னும் அவல வாழ்க்கைதான்... என்னதான் செய்யமுடியும்??????

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 17. வணக்கம்
  ஐயா

  இப்படியான சிறுவர்களுக்கு வேலை கொடுக்கும் அமைப்பையும் அம்மா அப்பா அவர்களை பிடித்து போலிசில் கொடுக்கவேண்டும்.. பிள்ளையின் படிப்பு இல்லாமல் போய் விட்டது... அழகான பையன் .
  நீங்கள் பார்த்தனிங்கள் பிள்ளையிடம் வினாவி நல்ல சட்டையும் சலுனுக்கு அழைத்துச் சென்று முடி வெட்டியும் விட்டிருக்கலாம்... ஐயா.. பார்க்கும் போது கண்ணீர்வந்து விட்டது.....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 18. ஐகேவேயின் கருத்தை ஆமோதித்தாலும் கொஞ்சம் படிப்பும் தேவையே!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....