அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
மார்கழி, தை என சில மாதங்களாக காலையில் இங்கே நல்ல குளிர். அதனால் காலை நேர நடைக்குத் தடா! தடை ஏற்பட்ட பிறகு மீண்டும் நடை தொடங்கலாம் என்றால் சோம்பேறித்தனம் சேர்ந்து கொண்டது. சில நாட்களாகவே மீண்டும் நடையைத் தொடங்க வேண்டும் என்று நான் நினைத்ததோடு, இல்லத்தரசியும் நடை தொடங்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இந்த வாரம் ஒரு வழியாக திங்களன்று மீண்டும் காலை நேர நடையைத் தொடங்கி விட்டோம் ஒரு வழியாக. ஐந்தரை மணிக்கு புறப்பட்டால் சுமார் ஒரு மணி நேர நடை முடிந்து வீடு திரும்பிவிடுவது வழக்கம். முதல் நாள் ஒரு பாதையில் சென்றால், வழியில் பல விளக்குகள் பழுதாகிக் கிடக்க, இருட்டு மயம். நல்ல குளிரும் இருந்தது. இருட்டில் நடக்க வந்து தவறு செய்து விட்டோமோ என்று தோன்றியது - அத்தனை இருட்டு - அதிலும் நடமாட்டமே இல்லாமல் இருக்க, நாளை இந்த பாதையில் வரக்கூடாது என்று பேசிக்கொண்டே அடுத்த கிராமம் வரை நடந்து வீடு திரும்பினோம்.
காலை நேரத்தில், இருட்டும் சேர்ந்து கொள்ள எந்த நிழற்படமும் எடுக்க முடியாமல் போனது. ஆனால் சில்லென்ற அந்த காலையில் நடந்து சென்றது மனதுக்கு ரம்மியமாக இருந்தது. முதல் நாள் நடை இப்படியென்றால், இரண்டாம் நாள் காலை புறப்படும் போதே, “இன்றைக்கு கிராமம் நோக்கி நடக்க வேண்டாம், அரங்கனின் ஆலயத்தினைச் சுற்றி இருக்கும் வீதியில் நடக்கலாம்” என்று மாற்றுப் பாதையில் சென்றோம். காலை நேரத்தில் நடக்கும் போது பெரும்பாலும் வீதியில் குறைவான மனித நடமாட்டமே இருக்கும். அப்படி இருக்கும் மனிதர்களும் நடைக்காக வந்தவர்களாக இருக்கிறார்கள். பல வீடுகளில் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருக்கும் வேளைகளில் நாம் நடந்தால், சிலர் நம்மை முறைக்கிறார்கள் - தண்ணீர் தெளிக்கும் போது குறுக்கே வந்ததால் அவர்கள் வேலை தடைபட்டது என்று எண்ணமாக இருக்கலாம்! தண்ணீர் தெளிப்பது குறித்து இருவரும் பேசிக்கொண்டே நடந்தோம்.
தண்ணீர் தட்டுப்பாடு எங்கேயும் இருக்க, இங்கே பலரும் தண்ணீர் இருக்கிறதே என்று நிறையவே வீணடிக்கிறார்கள். தண்ணீர் தெளிக்கிறேன் பேர்வழி என சாலை முழுவதும் பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் கொட்டி வீணாக்குவதைப் பார்க்கும்போது, “யாரங்கே, இவர்களை தண்ணியில்லா காட்டிற்குள் விட்டுவா!” என்று சொல்லலாம் போல தோன்றுகிறது. எத்தனை தண்ணீர் விரயம்! அதுவும் கார்ப்பரேஷன் குடிநீர் தான் - சுத்திகரிக்கப்பட்ட நீரை இப்படி வீணடிப்பது எத்தனை தவறு என்பதை உணர்வதே இல்லை நம் மக்கள். தண்ணீர் தெளிக்க வேண்டாம் என்று சொல்ல வரவில்லை - ஆனால் எதற்கும் ஒரு அளவு இருக்கிறது என்பதையாவது இவர்கள் உணர்ந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை. அந்த இடத்தில் நம்மால் ஒன்றும் சொல்ல இயலாது என்பதால் இங்கே இப்படிச் சொல்லி எனது ஆதங்கத்தினைப் போக்கிக் கொள்கிறேன் - வேறென்ன செய்ய?
எங்களைத் தாண்டி ஒரு ரிக்ஷா கடந்தது - ஒரு முதியவர் மிக மிக மெதுவாக ரிக்ஷாவை இயக்கிக் கடந்து சென்றார். என்ன தான் ஆட்டோ, கார் என வந்து விட்டாலும், திருவரங்கத்தில் இன்னமும் சில ரிக்ஷாக்கள் இருக்கின்றன. உள்ளூரில் இருக்கும் சில முதியவர்கள் இன்றைக்கும் இந்த ரிக்ஷாக்களையே பயன்படுத்துகிறார்கள். பல வருடங்களாக இந்த ரிக்ஷா ஓட்டுனர்கள் தான் அவர்களை அரங்கனின் ஆலயத்திற்கு தினம் தினம் அழைத்துச் செல்பவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட மனம் இருப்பதில்லை இந்த முதியவர்களுக்கு என்று தோன்றுகிறது. இவர்களுக்குள் எத்தனையோ சம்பாஷணைகள் நடக்கக் கூடும். ஒவ்வொருவரிடமும் ஒரு கதை இருக்கக் கூடும். “ஏண்டாப்பா, உன் பொண்ணு இப்ப எப்படி இருக்கா? அவ ஆம்படையான் ஒழுங்கா இருக்கானா, பொண்ண ஒழுங்கா பாத்துக்கறானா?” என்று கேட்டபடியே அரங்கனை தரிசித்து வருவார்கள் என்று தோன்றியது எனக்கு. ஒவ்வொரு மனிதர்களினுள்ளேயும் ஒரு கதை மாந்தர் இருக்கத்தானே செய்கிறார்.
எந்த வேளையாக இருந்தாலும் அரங்கனின் ஆலயத்திற்கு அருகே - அதுவும் கோபுர வாயில்களின் அருகே எப்படியிருந்தாலும் சில பக்தர்களை பார்த்துவிட முடியும் - அதுவும் பிரதான நுழைவாயிலான “ரங்கா ரங்கா” கோபுரம் அருகே - எப்போதும் பரபரவென இருக்கும். அங்கே சில நிமிடங்கள் நின்றிருந்தால் போதும் - பல வித சம்பாஷணைகள் நம் காதில் வந்து தானாகவே விழும். பொழுது போகவில்லை என்று புலம்பாமல் அங்கே சென்று நின்று கொண்டு - போனால் போகிறது என பக்கத்துக் கடை ஒன்றில் காப்பி அருந்தியபடியே நின்று கொண்டால் போதும் - எத்தனை எத்தனை விதமான கதை மாந்தர்கள் நம் கண் முன் நடமாடுகிறார்கள் என்பதை நாம் உணர முடியும். விதம் விதமாக, மனிதர்களைப் பார்த்ததும் அவர்களது மொழியில் பேசும் கடைக்காரர்கள் ஒவ்வொரும் ஒரு கதை மாந்தர் தானே! இன்றைக்கு ஒரு மூதாட்டியைப் பார்த்ததும் அவர் வாழ்க்கையில் என்னென்ன அனுபவங்கள் கிடைத்திருக்கும் என்ற எண்ணத்துடன் நான் நடந்து கொண்டிருந்தேன்.
கோபுரங்களில் பார்த்த சில சிற்பங்கள் வித்தியாசமாக இருக்க, அவை குறித்து சிந்தனை ஓடியது. எதனால் இந்த கோபுரத்தில் இந்தச் சிலை இருக்கிறது - பார்ப்பதற்கு வேற்றூர் ஆள் போல இருக்கிறார் - ஆனால் நாமம் போட்டிருக்கிறது - இவர் கதை என்ன? எதனால் இப்படி வடிவமைத்திருக்கிறார் அந்தச் சிற்பி? சிந்தனைகள் பலவும் மனதிலும், எங்கள் சம்பாஷணைகளிலும்…. ஆனாலும் காரணத்தினை யார் சொல்வார்? கோபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு சிற்பத்திற்குப் பின்னும் ஒரு காரணம், ஒரு கதை இருக்கும். என்ன கதை என்பதை நமக்குச் சொல்லத்தான் யாருமில்லை என்றெல்லாம் பேசிக்கொண்டே வீடு திரும்பினோம். முதல் இரண்டு நாள் நடையில் சிந்தித்த விஷயங்கள், எடுத்த படங்கள் இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். நடை தொடர்ந்தால் நடை நல்லது பதிவுகளும் தொடரும் என்கிற எச்சரிக்கையுடன்….
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
5 மார்ச் 2026






கோவில் .கோபுரங்களின் படங்கள் மிக அருமை. அதிகாலை நேரங்கள் அற்புதமானவை.
பதிலளிநீக்குநான் நடையை நிறுத்தி ஆறேழு மாதங்கள் ஆகின்றன. தொடரவேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. இரு முழங்கால் வலி முயற்சியை தடை செய்கிறது!!
ரிக் ஷாக்கள் இன்னும் இருப்பது வியப்பு. தனியாக ஒரு படம் போட்டிருக்கலாம்.