அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பாஷாண லிங்கம் - இந்திரா சௌந்தர்ராஜன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி…. இந்தத் தலைப்பில் இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளை நீங்கள் அனைவரும் படித்து ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதிலும் குறிப்பாக பத்மநாபன் அண்ணாச்சியின் எழுத்தாக்கத்தில் வந்த நான்கு பகுதிகளையும் மிகவும் ரசித்திருப்பீர்கள். இது வரை வந்த இந்தத் தொடரின் பகுதிகளுக்கான சுட்டி கீழே.
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி ஒன்று
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி இரண்டு
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி மூன்று
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி நான்கு
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி ஐந்து
இந்தத் தொடரை எழுத ஆரம்பித்த முதற்பகுதியில் சொன்னது போல பத்மநாபன் அண்ணாச்சி சுசீந்திரத்திலிருந்து மதுரை வந்திருக்க, நான், பத்மநாபன் அண்ணாச்சி, மற்றும் மதியழகன் மூவருமாக ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறிக்கொண்டு மதுரையிலிருந்து புறப்பட்டோம். மதுரையிலிருந்து ராஜபாளையம் செல்ல நிறைய பேருந்துகள் இருக்கின்றன. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு முன்னதாகவே வருகின்ற கிருஷ்ணன்கோயில் எனும் இடத்தில் தான் நாம் இறங்க வேண்டும். மதுரையிலிருந்து கிருஷ்ணன்கோயில் சுமார் 75 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஒரு சிற்றூர். பேருந்தில் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகலாம்.
அங்கே இறங்கிக் கொண்டால் நிறைய ஆட்டோக்கள் உண்டு. இல்லை எனில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து வத்ராப் எனும் வத்திராயிருப்பு வரையோ அல்லது தாணிப்பாறை வரையோ செல்லும் பேருந்துகள் உண்டு. இல்லையெனில் அழகாபுரி எனும் இடத்தில் இறங்கிக் கொண்டு அங்கிருந்தும் ஆட்டோவில் தாணிப்பாறை செல்லலாம். நாங்கள் மதுரையில் விசாரித்தபோது கிருஷ்ணன்கோயில் சென்று செல்வது தான் நல்லது - அழகாபுரியிலிருந்து ஆட்டோ மட்டுமே இருக்கிறது - அதிலும் காலை வேளையில் அதிக கட்டணம் கேட்பார்கள் என்பது பேருந்து நடத்துனரின் பதிலாக இருந்தது. அதனால் கிருஷ்ணன்கோயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டு பேருந்திற்காகக் காத்திருந்தோம். அதற்கு முன்னர் அங்கே நின்ற ஆட்டோ ஓட்டுனர்களிடம் கேட்டபோது தாணிப்பாறை வரை செல்ல 600 ரூபாய் கேட்டார்கள். கடை ஒன்றில் கேட்டபோது “சீவில்லிபுத்தூர்ல இருந்து இப்ப பஸ் வரும்!” என்றார்.
அரை மணி நேரத்திற்கும் மேல் காத்திருந்த பிறகு தாணிப்பாறை என்ற பதாகையுடன் அரசுப் பேருந்து - விடியல் பேருந்து என்று சொல்ல வேண்டும் (!) - வந்து சேர்ந்தது. காத்திருந்த பலரும் அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டார்கள். நாங்களும் ஏறிக் கொண்டு கிடைத்த இடத்தில் அமர்ந்து கொண்டோம். நாங்கள் பேருந்தின் பின் புறத்தில் அமர்ந்திருக்க, முன்புறம் விடியல் வசதியைப் பயன்படுத்தும் மகளிர் உற்சாகமாக பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த காலை நேரத்திலும் சத்தம் அதிகமாகவே இருக்கிறது என்று எங்கள் பக்கம் அமர்ந்திருந்த சில ஆண்கள் பேசிக்கொண்டார்கள். அந்த நபர்கள் எல்லாம் மலையின் மீது பொருட்களை “சுமையாக” எடுத்துச் செல்லும் நபர்களாம். தவிர ஒரு சுமை போலவே, நடக்க முடியாத மனிதர்களையும் போர்வையில் கட்டி மலைக்கு அழைத்துச் செல்வார்களாம். அவர்கள் தங்களுக்குள் நிறைய பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்களில் ஒருவருக்கு ஒரு கை வெட்டுப்பட்டு இருக்க, நான் இவர் எப்படி சுமை தூக்குவாரோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் பின்னர் தெரிந்தது அவர் சுமை தூக்குபவர் அல்ல என்பது - அவர் எதற்கு மலைக்குச் செல்கிறார் என்பதை பிறகு எழுதுகிறேன். கிருஷ்ணன்கோயில் பகுதியிலிருந்து தாணிப்பாறை வரை சுமார் 20 கிலோமீட்டர் இருக்கலாம். அதற்கான கட்டணம் ஒருவருக்கு 15 ரூபாய். நான் மூன்று பேருக்கும் 45 ரூபாய் கொடுத்து பயணச் சீட்டு வாங்கி பர்சில் வைத்துக் கொண்டேன். அதனைப் பார்க்காமலேயே வாங்கி வைத்திருக்கிறேன் - பிறகு வீடு திரும்பி பர்சை சுத்தம் செய்யும் போது பார்த்தால் கிருஷ்ணன்கோயில் - தாணிப்பாறை 1 X 15 என்று எழுதி இருந்தது. வாங்கிய பயணச்சீட்டு 3! எனக்குத் தந்தது ஒருவருக்கான பயணச் சீட்டு மட்டுமே! தவறுதலாகக் கொடுத்தாரா? இல்லை காலை வேளையிலேயே முப்பது ரூபாயை ஆட்டை போட்டாரா என்பது இறைவனுக்கே வெளிச்சம். நல்ல வேளை பயணச் சீட்டு பரிசோதகர் எவரும் அந்த காலை வேளையில் வரவில்லை! வந்திருந்தால் எங்கள் தவறு தான் என்று சாதித்து இருப்பார்கள் - என் பேரிலும் தவறு உண்டு என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் - பார்க்காமல் பர்சில் வைத்தது என் தவறும் தானே!
ஒரு வழியாக சில்லென்ற காற்று ஜன்னல்கள் வழி வர, இரு புறமும் இருக்கும் தோப்புகளையும் இயற்கை எழிலையும் கவனித்தபடியே அண்ணாச்சியுடன் பேசிக்கொண்டே பேருந்து பயணத்தில் இருந்தோம். குறைவான நேரமே அந்தப் பயணம் என்றாலும் நிறைவான பயணமாக இருந்தது. தாணிப்பாறை பகுதியை அடைந்ததும் பேருந்து நிற்க, அனைவரும் இறங்கி மலையடிவாரத்தினை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். வழியில் வரிசையாக ஆண்களுக்கும் பெண்களுக்குமான கழிவறைகள் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தக் கட்டிடம் அருகே சென்றதும் பார்த்தால் பெரிய பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. சமீபத்தில் கட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. வண்ணப் பூச்சு பார்த்தால் அப்படித் தெரிந்தது. ஒரு வேளை அதனை திறந்து வைக்க யாராவது அரசியல்வாதி வருவாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சரி பார்க்கலாம் வேறு இடங்கள் இருக்கிறதே என்று நடக்க, “சாப்பிட வாங்க, சாப்பிட வாங்க” என்ற குரல் கேட்டது.
குரல் வந்த இடத்தினை நோக்கி நகர்ந்தோம். அது ஒரு அன்னதானக் கூடம். அந்தக் காலை வேளையிலேயே வரும் பக்தர்களுக்கு உணவு வழங்குவதைத் துவங்கி இருந்தார்கள். சதுரகிரியைப் பொறுத்தவரை இது போன்ற அன்னதானக் கூடங்கள் தான் வரும் பக்தர்களுக்கு வயிராற உணவு தரும் பெரும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறார்கள். தாணிப்பாறை பகுதியில் உணவு உண்ண சரியான வசதிகள் என்று பார்த்தால் இது போன்ற அன்னதானக் கூடங்கள் மட்டுமே. ஆனால் எங்களுக்கு அந்த நேரத்தில் உணவு தேவையாக இருக்கவில்லை. முதல் வேலையாக காலைக் கடன்களை முடிக்க வேண்டும். பிறகு குளிக்க வேண்டும். அதன் பிறகு தான் மற்ற விஷயங்கள் பற்றி யோசிக்க வேண்டும் என்பதால் எங்களை அழைத்த நபரிடம் “இப்போது உணவு வேண்டாம், எங்களுக்குத் தேவை இது மட்டுமே” என்று சொல்ல, காலணிகளை ஒரு ஓரமாகக் கழற்றி வைத்து விட்டு உள்ளே வாருங்கள்” என்று அழைத்தார்.
வேலைகளை முடித்துக் கொண்டு, குளிப்பதற்காக மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு பகுதிக்குச் சென்றோம். அங்கே ஒரு தொட்டி கட்டி வைத்திருப்பார்கள். ஆண்கள் அங்கே நின்று கொண்டு குளிக்க வசதிகள் உண்டு. தற்போது சில தனியார் நபர்கள் சின்னச் சின்னதாக அறைகளும் குளியலறை வசதிகளும் செய்திருக்கிறார்கள். அங்கே சென்று குளிப்பதற்கு கட்டணம் தந்து குளிக்கலாம் என்று தெரிந்தது. நாங்கள் தொட்டியிலிருந்த தண்ணீர் எடுத்து நிம்மதியாக ஒரு திறந்த வெளிக் குளியலை முடித்து, உடை மாற்றிக் கொண்டோம். சென்ற முறை சென்ற போது கிடைத்த ஒரு தொடர்பினை நினைவு கூர்ந்து மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு கடையில் எங்கள் காலணிகளை வைத்துவிட்டு, வெறும் காலுடன், முதுகுச் சுமையுடன் மலையேற்றத்தினைத் துவங்க தயாரானோம். மலையடிவாரத்தில் அந்த நேரத்திலேயே வனத்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர் நுழைவுக்கட்டணம் - பராமரிப்புக் கட்டணம் என்ற பெயரில் ஆளுக்கு பத்து ரூபாய் என்ற கணக்கில் வசூலித்துக் கொண்டிருந்தார்.
அதே இடத்தில் பிளாஸ்டிக் பரிசோதனை செய்யும் நபருக்கான இடம் இருந்ததே தவிர ஆள் இல்லை. அவர் வேலை ஒவ்வொரு மலையேறும் நபரிடமும் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று தடுத்து வாங்கி வைப்பது! ஆனால் அவர் அங்கே இல்லை! அப்படியே இருந்தாலும் என்ன தடுத்து விடுவார் என்று தெரியவில்லை. மலையில் எங்கே பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் நிறையவே இருந்தது - சென்ற பயணத்திலும் - இந்தப் பயணத்திலும் பார்த்து நொந்த விஷயம் இது. தடுப்பதற்கு ஒருவர் இல்லை என்றாலும், இறைவனை தரிசிக்க வரும் நபர்களுக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டினைத் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை என்பதை இங்கே சொல்லத்தான் வேண்டும். மெதுவாக எங்களது மலையேற்றத்தினை நுழைவாயிலிலிருந்து துவங்கினோம். பயணம் அதற்குப் பின்னர் எப்படி இருந்தது என்பதை வரும் பகுதிகளில் சொல்கிறேன். அது வரை…. தொடர்ந்து பயணிப்போம் நண்பர்களே!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
17 மார்ச் 2026


.jpeg)
.jpeg)

இன்றைய வாசகம் படித்ததும் மனதில் அலுப்புடன் எழுந்த வார்தஜைகள் "அது.. சரி!
பதிலளிநீக்கு80 களின் பிற்பகுதியில் அழகாபுரி மகாலிங்க மலை மகாராஜபுரம், வத்ராப் வழியாக பிளவக்கல் அணை செல்லும் இரண்டு பஸ்கள் மதுரையிலிருந்து உண்டு. ஒன்று அரசு. இன்னொன்று தனியார். குறுகிய பாதை வழியே பஸ் செல்லும்! சென்றிருக்கிறேன்!
பதிலளிநீக்கு45 ரூபாயை வாங்கி பையில் போட்டுக்கொண்ட நடத்துனர் அறியாமல் ஒருவருக்கு என்று சீட்டு கொடுத்திருக்க வாய்ப்பில்லை! "எல்லோருமே திருடங்கதான்.. சொல்லப்போனா.." எனும் இளையராஜா குரல் மனதில் ஒலிக்கிறது!
பதிலளிநீக்குவத்ராப் தாண்டியதும் வரும் ஊர் பெயர் நினைவில்லை. மகாராஜபுரம்தானோ என்னவோ.. நல்லதங்காள் கதை நடந்த இடம் அதுதான் என்பார்கள்.
பதிலளிநீக்குபிளாஸ்டிக் பொருள்களை வாங்குபவர் இல்லையென்றால் புகார் தெரிவிக்கலாமே.. இல்லா விட்டால் (வழிக்கு) வரமாட்டார்கள். வழியில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் கண்ணில் பட்டது என்றும் சொல்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅந்த 10 ரூபாய் வசூலிப்பாளர் ரசீது தரவில்லை என்றால் பச்சையாக லஞ்சக் கொள்ளைதான்.
அடுத்தமுறை அங்கு செல்லும்போது பிளவக்கல் அணையையையும் பார்ப்பது போல அமைத்துக்கொள்ளுங்கள்! வத்ராப் தாண்டும்போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள்! அலுவலகம் முடிந்து மதுரைக்கு வீடு திரும்ப அந்த கிருஷ்ணன் கோவில் பஸ்ஸ்டாப்பில் எத்தனை நாள் தவிப்புடன் காத்திருக்கிறேன் தெரியுமா?!!
பதிலளிநீக்குநீங்க எழுதும் பகுதி நிறைய தகவல்களுடன் இருக்கிறது.
பதிலளிநீக்குஎன்ன என்ன கஷ்டங்கள், நேரம் அயர்வு எல்லாம் எழுதுங்கள்.
என்ன அநியாயமான வசனம் இன்று?
பதிலளிநீக்குமலைப் பாதையில் செருப்புடன் நடக்க அனுமதி இல்லையா? ஐயையோ.
பதிலளிநீக்குஅட! பப்பு அண்ணாச்சி இப்ப சுசீந்திரத்துல இருக்காரா! எங்கூருக்கு கிட்டத்துல. எங்கூரு நெடுஞ்சாலைல இருந்து பார்த்தா சுசீந்திரம் கோயில் தெரியும்லா!!! தூரத்துல!
பதிலளிநீக்குசுசீந்திரம் அழகான ஊர். பச்சையும் தண்ணியுமா தோட்டமுமா சுத்தி அழகா இருக்கும். நான் சுசீந்திரம் வழியா மருங்கூர் போய், அங்கிருந்து எங்க ஊருக்குப் போனேன் படங்கள், காணொளிகள் எடுத்து எல்லாம் அப்படியே இருக்கு. போட வேண்டும். போட்டா எங்க ஊரைப் பார்த்து எல்லாருக்கும் ஏக்கம் வந்துருமேன்னும் ஹாஹாஹாஹாஹா
கீதா
அண்ணாச்சிகிட்ட கேளுங்க, ஜி ஏக்கம் வருமா வராதான்னுட்டு....
பதிலளிநீக்குஅண்ணாச்சி நாரோயில்ல இருக்கப்ப நீங்க போய் வரலாம் அங்க. அவ்வளவு அருமையான இடங்கள் இருக்கு சுத்திப் பார்க்க.
கீதா
ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கு முன்னதாகவே வருகின்ற கிருஷ்ணன்கோயில் எனும் இடத்தில் தான் நாம் இறங்க வேண்டும்.//
பதிலளிநீக்குஆமாம்....ஸ்ரீவில்லிபுத்தூர்லருந்து போணும்னா வத்திராய்ருப்புலருந்து அல்லது தாணிப்பறை.... ...நான் போனதெல்லாம் ரொம்ப பழைய கதை. அப்பலாம் பேருந்துகள் ரொம்பக் குறைவு. இப்ப போனா வாய்ப்பு கிடைச்சா நல்லாருக்கும்.
அடுத்த பத்தில நீங்க சொல்லிட்டீங்க.
டிக்கெட் கொடுக்கும் போது - இங்கும் நாம் இறங்கும் ஸ்டாப் பெயர் வேறாக இருக்கும் சில சமயங்களில். நானும் முதலில் எல்லாம் கவனிக்காமல் வைத்துக் கொண்டுவிடுவேன். இடையில் இப்படி, டிக்கெட் பரிசோதகர் வந்து ஸ்டாப் கேட்டு நான் சொல்ல, இப்படித்தான் கொடுத்தாங்க என்று நான் சொல்ல, நல்ல காலம் கண்டக்டர் டிக்கெட் அப்படித்தான் இருக்கிறது. வேறு இல்லை என்று சொல்லி என்னைக் காப்பாற்றினார்!
கீதா
ப்ளாஸ்டிக் பொருட்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். எல்லா இடங்களிலும். தண்ணீர் எடுத்துச் சென்றாலும் அதைத் தூக்கி எறியாமல் குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம் வேண்டும். அது போல வாங்கிச் சாப்பிடும் பொருட்கள் சுற்றி வரும் கவர்கள் உட்பட...சொல்லிப் பயனில்லை.
பதிலளிநீக்குகட்டுப்பாடுகள் வேண்டும்தான்... மக்களும் இதை உணர்வதில்லை என்பதுதான் வேதனை.
பிளாஸ்டிக் செக் செய்பவர் - கடமை தவறாம லீவு போடுவிட்டாரோ என்னவோ!! இல்லை தன் வேலையைக் கவனிக்கப் போயிட்டாரோ?!!
கீதா
பிளாஸ்டிக் பாட்டில்னு எழுதியிருந்ததைப் பார்த்து திருப்பதியில் செயல்படும் நடைமுறை நினைவுக்கு வருது. ஜல பிரசாத கவன்டர்கள் தவிர, நீங்க கடைகளுக்குப் போனால் பாட்டிலில் குடிநீர். ஐம்பது ரூபாயா அறுபதான்னு நினைவில்லை. பாட்டிலை கடைல கொடுத்தா முப்பது ரூபாய் தந்துடுவாங்க, எந்தக் கடைல கொடுத்தாலும். ஆனால் இப்படிப்பட்ட இடங்களில் யாரு முப்பது ரூபாயை பாட்டிலைத் திருப்பிக் கொடுத்து ஐஆங்கறதுன்னு கோபத்துல நம் மக்கள் பாதையிலேயே பாட்டிலை உடைத்தாலும் உடைப்பார்கள்.
பதிலளிநீக்குஅப்போ, கண்டக்டர் எனக்கு மட்டும்தான் டிக்கெட் தந்தாரா!
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஹா
நீக்குவாசகம் சொல்வது உண்மை. கவனம் வேண்டும்.
பதிலளிநீக்கு//நல்ல வேளை பயணச் சீட்டு பரிசோதகர் எவரும் அந்த காலை வேளையில் வரவில்லை! //
நானும் அப்படித்தான் நினைத்தேன், நல்லவேளை பரிசோதகர் வரவில்லை என்று.
பயண அனுபவங்களும், படங்களும் நன்றாக இருக்கிறது.