அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட பௌர்ணமி நிலவு - பூவில் மோதிரம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை : வளர்ப்புப் பிராணி
இந்த வாரம் சொல்வனம் தளத்தில் படித்த ஒரு சிறுகதை தான் வளர்ப்புப் பிராணி. செல்லங்கள் வளர்ப்பது ஒரு ப்ரியம். ஆனால் அந்தச் செல்லங்களை இழக்கும்போது வரும் வலி - அதீதமானது. எனக்கு தனிப்பட்ட முறையில் செல்லங்கள் வளர்த்துப் பழக்கம் இல்லை என்றாலும், நண்பர்கள் வீடுகளில் வளர்த்த செல்லங்கள், அவர்கள் அதனை இழக்கும்போது ஏற்பட்ட வலி போன்றவற்றை கவனித்து இருக்கிறேன். அப்படியான கதைக்களன் கொண்ட ஒரு சிறுகதை தான் வளர்ப்புப் பிராணி. ராஜேஷ் வைரபாண்டியன் என்பவர் எழுதியிருக்கும் அந்தச் சிறுகதையிலிருந்து சில வரிகள் இங்கே…
அந்த வயதான நாய் வீட்டுக்குள் வந்த நாள் யாருக்கும் சரியாக நினைவில்லை. யாரும் அதை அழைத்தும் வரவில்லை. மழைக்கால மாலை ஒன்றில் வாசல் கதவின் ஓரமாக நனைந்த உடலோடு அது நின்றுகொண்டிருந்தது. சேற்றில் புரண்டு கிடந்த கால்கள். ரோமங்களில் ஒட்டிய மண்துகள்கள். கண்களில் ஒரு தயக்கம். உள்ளே வரலாமா என்று கேட்பது போல. அப்பா முதலில் பார்த்தார். “யாரோ விட்டுட்டுப் போயிருக்காங்க,” என்றார்.
….
….
….
அப்பாதான் முதலில் கவனித்தார். அவர் எதுவும் சொல்லவில்லை. தடுக்கவும் இல்லை. அப்படியே பார்த்துக்கொண்டிருந்தார். நாய் கூட ஏதோ எல்லை தாண்டிவிட்ட மாதிரி நின்றது. திடீரென்று திரும்பி வாசலைப் பார்த்தபடி நின்றது. என்ன யோசித்ததோ வாசல் பக்கம் போகவில்லை. அப்பா மெதுவாக சொன்னார்: “இனி நம்ம வீட்டுலதான் கெடப்பான் போல.” அம்மா கனத்த மெளனத்தையே பதிலாக தந்தாள். அவள் சாப்பாடு வைக்கும் போது, இரண்டு முறை பார்த்தாள். நாயும் அவளைப் பார்த்தது. அதில் அன்பும் இல்லை. எதிர்ப்பும் இல்லை.
….
….
….
திரும்பி வரும் வழியில், அப்பா பேசவே இல்லை. முன்பு எப்போதும் ரேடியோ போடுவார். அன்று அமைதி. நாய் மட்டும் மிக மெதுவாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தது. ஒவ்வொரு மூச்சிலும் ஒரு வலி இருப்பதை உணர முடிந்தது. அன்றிரவு நாய் அப்பாவின் காலடியில் படுத்திருந்தது. அப்பா தூங்கவில்லை.
முழுக்கதையையும் இங்கே படிக்கலாம்! வாசித்துப் பாருங்களேன்.
******
ராஜா காது கழுதைக் காது : அந்த பயம் இருக்கட்டும்…
மாதத்தின் முதல் வாரத்திலேயே வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைத்தெருவிற்குச் செல்வது வழக்கம். அப்போது ரமணா ஸ்வீட்ஸ் என்கிற கடையில் சில நொறுக்குத் தீனிகளையும் வாங்குவார் இல்லத்தரசி. இந்த வாரம் அப்படிச் சென்ற போது கடையில் அவர் வாங்கிக் கொண்டிருக்க, நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே எங்களைப் போல வேறு ஒரு கணவன் - மனைவியும் இருந்தார்கள். கணவர் அவருக்குத் தேவை என ஒரு பாக்கெட் ரிப்பன் நாடா எடுத்து, கூடையில் போட்டு, “இதையும் சேர்த்துக்கோங்கம்மா” என்றார். பக்கத்தில் நின்ற அவரது மனைவி, “என்ன?” என்ற ஒரு கேள்வி தான் கேட்டார்… அதற்கு அந்த கணவன் சொன்ன பதில் - “இல்லை இது வாங்கவா?” என்று கேட்டேன் என்று சொல்ல, தலையசைத்து மறுக்க, கூடையில் போட்ட ரிப்பன் நாடா மீண்டும் கடையின் Rack-க்கு பார்வைக்குச் சென்றது! “அந்த பயம் இருக்கட்டும்!” என்று நான் நினைத்துக் கொண்டேன்…. ஹாஹா….
அதுனால தான் நான் இந்த விளையாட்டுக்கே போறதுல்ல! கடைக்குக் கூட்டிட்டு போனோமா, வீட்டுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்தோமா என்று இருந்து விடுகிறேன்! As someone once said, the boss is always right - it goes for one’s wife too!
******
பழைய நினைப்புடா பேராண்டி : பேரைச் சொல்லவா!
2011-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - பேரைச் சொல்லவா! - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே. பதிவுலகம் பரபரப்பாக இருந்த காலகட்டங்கள்… தொடர்பதிவு, விருதுகள் என நிறைய விஷயங்கள் - ஒவ்வொரு பதிவரும் மற்ற பதிவரை பதிவெழுத அழைப்பார்கள்… அப்படி பெயர்க் காரணம் குறித்த ஒரு தொடர்பதிவு 2011-ஆம் ஆண்டில் எழுதியது. அந்தப் பதிவு இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக!
பெயர் வைப்பதில் நிறைய பழக்கங்கள். என் அக்கா கணவரின் வீட்டில் மாற்றி மாற்றி இரண்டு பெயர்கள் தான் வரும். ஆண்களுக்கு – கணபதி சுப்ரமணியன் – கைலாஸ்! ஆண் குழந்தைக்குத் தாத்தாவின் பெயர்தான். அதனால் மாற்றமின்றி பல தலைமுறைகளாக இதே பெயர்தான் எனக் கேட்டிருக்கிறேன். தில்லி சக பதிவர் கலாநேசன் கூட ஒரு பகிர்வில் ஒரு ஊரில் உள்ள வித்தியாசமான பெயர் வைக்கும் முறை பற்றி எழுதியிருந்தார். எத்தனை குழப்பங்கள் நேர்ந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.
என்னுடைய அப்பா-அம்மா எனக்கு வைத்த பெயர் வெங்கட்ராமன். அதன் முன் அப்பா பெயரும் சொந்த ஊரின் பெயரும் சேர்த்து வி.நா. வெங்கட்ராமன் – அதாவது விழுப்புரம் நாகராஜன் வெங்கட்ராமன் – அப்பாடா! அடிச்சு முடிக்கறதுக்குள்ள கை வலிக்குது – படிச்சு முடிக்கறதுக்குள்ளே உங்க கண் அசதியாகப் போகுது – அதனால வெங்கட்ராமன் அப்படின்னே தொடரலாம்.
பொதுவா ஒரு குழந்தை பிறந்தால் நம்ம ஊர்ல மூணு பேரு வைப்பாங்களாம். ஒரு பெயர் தான் எனக்கு வைச்சாங்க! ம்… எதற்காக எனக்கு இந்த பெயர் வைச்சாங்கன்னு எங்க அப்பாகிட்ட நேத்திக்கு கேட்டேன். உடனே அவர் கேட்டது – “ நீ பிறந்து 39 வருஷம் கழிச்சு ஏண்டா இப்படி ஒரு சந்தேகக் கேள்வி?” ["அய் வயசு தெரிஞ்சு போசச்சே"ன்னு யாரும் சந்தோஷப் படவேண்டாம்! நாங்க எப்பவுமே ரொம்ப வெளிப்படையான ஆளு!]
சரி காரணத்துக்கு வருவோம்! எங்க அக்கா முதல் குழந்தையா பிறந்ததுக்கப்புறம் திருப்பதி வெங்கடாஜலபதிகிட்ட எங்க அப்பா ஒரு டீல் போட்டுட்டாரு! ”இரண்டாவதை பையனா பொறக்க வையுங்க ஏழுமலையானே, அப்படி பொறந்தா அந்த பையனுக்கு உங்க பேரையே வைக்கறேன்” என்பது தான் அந்த டீல்! சொன்ன சொல்லைக் காப்பாத்தணுமில்லையா, இது தான் நான் “வெங்கட்ராமன்” ஆன கதை!!!
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் ரசித்த பாடல் : ஐயய்யோ - வசுந்தராதேவி
சமீபத்தில் முகநூலில் உலா வரும்போது 1941-ஆம் ஆண்டு வெளிவந்த, வசுந்தராதேவி நடித்த “மங்கம்மா சபதம்” படத்தில் இருந்து ஒரு பாடல் கேட்கக் கிடைத்தது. வசுந்தராதேவி - இவர் வைஜையந்தி மாலாவின் அம்மா என்கிறது இந்த யூ-ட்யூப் பக்கம்! இன்றைக்கு 85 வருடங்கள் முன்னர் வந்த திரைப்படம்! வித்தியாசமான பாடல், நடனம், என பார்க்கும்போதே சிரிப்பும் வந்தது - அந்தக் கால நடனம், பெரிதாக Movements எதுவும் இல்லை - குத்தாட்டம் இல்லை! கருப்பு வெள்ளையில் படம் பிடிக்கப்பட்ட அழகான காட்சிகள். பார்க்க, கேட்க பிடித்தது இந்தப் பாடல். நீங்களும் கேட்டுப் பாருங்களேன்.
******
இந்த வாரத்தின் அறிமுகம் : Kasiva Mutua
Nairobi, Kenya வைச் சேர்ந்த ஒரு Percussionist/Drummer தான் Kasiva Mutua. இவரது இசை ஒன்றை சமீபத்தில் கேட்க நேரிட்டது. நன்றாகவே இருக்கிறது. கேட்டுப் பாருங்களேன்.
******
இந்த வாரத்தின் தகவல் - பயணங்கள் முடிவதில்லை :
பயணங்கள் முடிவதில்லை…. தில்லியில் இருந்த வரை உறவினர் வீட்டு நிகழ்வுகள் பலவற்றிற்கும் என்னால் செல்ல முடிந்ததில்லை. ஆனால் திருச்சி வந்த பிறகு அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ள வழியில்லை. இதோ இன்றைக்கு இந்தப் பதிவு வெளிவந்திருக்கும் நாளில் ஒரு நிகழ்வுக்காக காலையிலேயே புறப்பட்டுவிட்டேன். எங்கே, என்ன நிகழ்வு என்பதெல்லாம் இங்கே முக்கியமில்லை. ஆனால் பயணம் நிகழ்வது முக்கியம். “இன்று போய் நாளை வா!” என்று சொல்வதுண்டு… அது போல, இன்று சென்று நாளை திரும்ப வேண்டும். இரயில் பயணத்தில் கிடைக்கும் அனுபவங்கள் - அவ்வப்போது முகநூலில் எழுத வாய்ப்புண்டு. அப்படி எழுதினால் பிறகு இங்கே வலைப்பூவிலும் வெளியிடுகிறேன். இப்போதைக்கு இந்தத் தகவல் மட்டும்!
******
இந்த வாரத்தின் இரண்டாம் தகவல் - பேனா கண்காட்சி :
சென்னை அடையாறில் பேனா கண்காட்சி - மார்ச் ஆறாம் தேதி தொடங்கி எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது என்று தெரிந்தது. சென்னை நண்பர்கள் முடிந்தால் சென்று வாருங்களேன். முழு தகவலும் கீழேயுள்ள சுட்டி வழி அறிந்து கொள்ளலாம்!
Chennai Pen Show to showcase handmade pens, inks and fine accessories - The Hindu
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
7 மார்ச் 2026

ரமணா ஐயர் ஸவீட்ஸ் என்ற்குப் பிடிக்கும். இந்தத் தடவை மிக்சர் வாங்கினேன். நல்லா இருந்தது.
பதிலளிநீக்குகதையின் சில வரிகளை படித்ததுமே முதல்வேலையாக என்று தோன்றி விட்டது.
பதிலளிநீக்குஇந்த ஸ்நாக்ஸ் சமாச்சாரமெல்லாம் எங்கள் வீட்டில் ஆரம்பத்திலிருந்தே நான்தான் வாங்குவேன்!
"முதல் வேலையாக படிக்க வேண்டும் என்று தோன்றி விட்டது" என்று இருக்கவே வேண்டும் அந்த முதல் வரி. டைப்பும்போது போர்ட் ஸ்லோவாக ஃபாலோ செய்கிறது. விட்டுப்போகிறது, அதனால் வார்த்தை கெட்டுப்போகிறது!!!
நீக்குகதையைப் படித்து கண்சிவந்தேன். மனம் நின்று போனது. அழகான உரையாடல்கள்.
நீக்குஅதில் வரும் உரையாடல்கள், வசனங்கள்...
அது நாய்க்கு மட்டுமல்ல வேறு சிலவற்றுக்கு பொருந்தும்.
வசுந்தராதேவி பாடல் கேட்டேன். எப்படி பிடித்தீர்கள் இந்தப் பாடலை? வேடிக்கையாக இருந்தது பாடல். வசுந்தரா தேவி நல்ல யாரும் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குபழைய பதிவு பார்த்தேன். பட்டப்பெயர்கள் சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குபேனா கண்காட்சி செய்தி எனக்கும் வந்ததது. .பார்க்க ஆவல்தான்!