அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
அனு ஓர் ஆச்சரியம் - எங்கள் இருவரின் வாசிப்பனுபவம் இன்றைய பதிவாக… முதலில் வருவது எனது வாசிப்பனுபவம்! இரண்டாவது என்னவரின் வாசிப்பனுபவம்…
புத்தகத் திருவிழாவில் வாங்கிய புத்தகங்களை ஒவ்வொன்றாக வாசிக்கத் துவங்கலாமே என்று எடுத்ததில் அப்போது என் கைக்கு தட்டுப்பட்டது ராஜேஷ்குமார் சார் எழுதியுள்ள ஒரு க்ரைம் நாவல்! க்ரைம் நாவல் மன்னர் என்று அழைக்கப்படும் ராஜேஷ்குமார் சாரின் நாவல்கள் சிலவற்றை கோவையில் இருந்த போது வாசித்த நினைவு!
எங்க ஊர்க்காரர்! சமுதாயத்தில் நல்ல மனிதர்! என்பதோடு முகநூல் வழியே அவரைப் பின் தொடர்வதில் அவர் பதிவுகளிலிருந்து அவர் வாசகர்களை அணுகும் முறையும், அவர்களிடம் அவர் கொண்ட அன்பு என அவர் மீது என் மரியாதையும் கூடியது! 90 வயதைக் கடந்த அவரது வாசகி ஜெயகாந்தி அம்மாள் அவர்கள் வெளிநாட்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து காணொளி அனுப்புவதை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கும்!
சரி! புத்தகத்துக்குள் நுழையலாம் வாங்க! ‘அனு ஓர் ஆச்சர்யம்’ என்ற இந்த க்ரைம் நாவல் அனுலேகா எனும் பிரபல நடிகையை படம் பிடித்துக் காட்டுகிறது! தன்னுடைய இமேஜ் வெளியுலகில் கெட்டு விடக்கூடாது என்று அவள் நினைப்பதும் அதேசமயம் நிழலான வாழ்க்கையில் வரையறை ஏதுமின்றி வாழ்வதுமாக காட்சிபடுத்தப் பட்டிருக்கிறது!
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் முரளி ஒருநாள் அலுவலகம் செல்லும் வழியில் கடத்தப்படுகிறான்! பின்பு அவனுடைய கண்கள் தோண்டி எடுக்கப்பட்டும் கை விரல்கள் துண்டிக்கப்பட்டும் பிணமாக கிடக்கிறான்! முரளியைப் போலவே கடற்கரையில் நரசிம்மன் என்பவரும் பிணமாக கிடக்கிறார்! யார் இதையெல்லாம் செய்கிறார்கள்??
மிகவும் மர்மமாக இருக்கும் இந்த கேஸை விசாரிக்க வரும் காவல்துறைக்கு நிறைய சவால்கள் இருந்தும் குற்றவாளியை எப்படி கண்டுகொண்டனர்! அனுலேகா எனும் பிரபல நடிகைக்கும் இந்த வழக்குக்கும் என்ன சம்பந்தம்! முரளிக்கும் நரசிம்மனுக்கும் எதற்காக இந்த நிலை ஏற்பட்டது! போன்ற உங்கள் அத்தனை கேள்விகளுக்குமான விடை இந்த நாவலில் உள்ளது! வாசித்து முடித்த போது இப்படிக்கூட இருப்பார்களா!!! என்று தான் தோன்றியது!
புஸ்தகா வெளியீடான இந்த நூலின் விலை ரூ 90! வாசிக்க ஆர்வமுள்ளவர்கள் வாங்கி வாசித்துப் பாருங்களேன்! குறைந்த அளவிலான பக்கங்களை கொண்ட புத்தகம் தான்! இம்முறை புத்தகத் திருவிழாவில் இந்த மாதிரியான கையடக்க விலை கொண்ட புத்தகங்களை தேர்வு செய்து வாங்கினோம்!
நாம் படித்தாலும் சரி! வாசிப்பில் ஈடுபாடு கொண்ட நண்பர்களைப் பார்க்கும் போது பரிசளிக்கலாமே! என்று தான் நினைத்து வாங்கினோம்! யார் வீட்டுக்காவது நாம் சென்றாலும் நாம் வாங்கிச் செல்லும் பழங்களோ, தின்பண்டமோ அதை விட புத்தக அன்பளிப்பு என்பது உயர்ந்தது அல்லவா! - ஆதி வெங்கட்
*******
அனு ஓர் ஆச்சர்யம் - வெங்கட் நாகராஜ்:
நம் மக்கள் - எல்லா காலங்களிலும் நடிகர்கள் மீதான மோகம் உள்ளவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். சென்ற வாரத்தில் பார்த்த இரண்டு விஷயங்கள் குறித்து முதலில் சொல்லி விடுகிறேன். திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் நம்பர் ஒன் டோல்கேட் தாண்டிச் செல்லும்போது இடப்பக்கம் ஒரு கடை இருக்கிறது. தேநீர் கடை தான். அதன் பெயர் என்ன தெரியுமா? எம்.ஜி.ஆர். டீ கடை! இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் அவருக்கு இப்படியான ரசிகர்கள் இருக்கிறார்கள். தான் நடத்தும் கடைக்கு அவரின் பெயரை வைத்திருக்கிறார். இப்படி பல கடைகள், நிறுவனங்கள், தங்களின் மகன், மகள் பெயர்களை நடிகர், நடிகைகளின் பெயரில் அழைப்பவர்கள் அதிகம் தானே… நடிக, நடிகையர் மீதான மோகம் அப்படி! அதே தினத்தில் பார்த்த ஒரு ஆட்டோவின் பின்னால் இருந்த வாசகமும் படமும் - சமீபத்திய சர்ச்சைக்குள்ளான விஜய் - த்ரிஷா சம்பந்தப்பட்டதாக இருந்தது. “உனக்காக நான்… எனக்காக நீ” என்ற வாசகத்துடன் விஜய் - த்ரிஷா படம்!
சரி இதற்கும் இன்றைய வாசிப்பனுபவத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்! ஆம்…. சம்பந்தம் உண்டு. கதையிலும் ஒரு நடிகை - அவர் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் அந்தத் துறையில் இருக்கும் பல விஷயங்களைச் சொல்கிறது. கூடவே நடக்கும் சில கொலைகளும் - அதிலும் கொடூரமாக சிலர் கொல்லப்படுகிறார்கள் - கண்களை நோண்டி, கைவிரல்களை வெட்டி வீசி கொலை செய்யப்படுகிறார்கள். அப்படிச் செய்வதற்கு என்ன காரணம்? வரிசையாக இரண்டு கொலைகள் ஒரே விதத்தில் நடக்க - அடுத்தது யார் என்ற துடிப்புடன் தொடர்ந்து வாசிக்க வேண்டியிருக்கிறது. நடிகையின் வாழ்க்கையில் நடக்கும் விவகாரங்கள், அவரின் அந்தரங்கத்தில் இருக்கும் சிக்கல்கள், இளவரசி டயனாவினைத் துரத்திய பேப்பராசி போன்ற நிருபர்கள் நடிப்புத் தொழிலில் இருப்பவர்களை தொந்தரவு செய்வதும், கிசு கிசு எழுதுவதும் கூட இந்தக் கதையில் வருகிறது. தனது இமேஜ் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக, எதையெல்லாம் ஒரு நடிகை செய்கிறாள் என்பதைக் கூட சொல்லிச் செல்கிறார் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள்.
முன்பு பாக்கெட் நாவல்களில் படித்த பிறகு ராஜேஷ் குமார் நாவல்கள் படிக்கும் வாய்ப்பு பெரிதாக இல்லை - அதிலும் தில்லி சென்ற பிறகு வார இதழ்கள், மாத இதழ்கள், பாக்கெட் நாவல்களை வாங்குவதற்கென்று நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருந்ததால் பெரும்பாலும் வாங்குவதே இல்லை. தமிழகம் வரும்போது படிக்க வாய்ப்பு அதிகம் அமையாமல் இருந்தது. பல வருடங்களுக்குப் பிறகு நான் வாசித்த ராஜேஷ் குமார் நாவல் இது. வழமைபோலவே அவரது எழுத்துக்களில் இருக்கும் ஈர்ப்பு இந்தக் கதையிலும் இருக்கிறது. கொலையாளி யார் என பல விதங்களில் யோசித்தாலும், கொலைக்கான காரணம் என்ன, யார், எதனால் கொலை செய்கிறார்கள் என்பதை எல்லாம் கடைசி வரை சஸ்பென்ஸ்-ஆகக் கொண்டு சென்றிருக்கிறார். புஸ்தகா வெளியீடு அச்சுப் புத்தகமாக இருப்பதோடு, அமேசான் கிண்டில் தளத்திலும் இருக்கிறது. வாசிக்க நினைப்பவர்கள் அங்கேயும் வாசிக்கலாம். முடிந்தால் வாசித்துப் பாருங்களேன். - வெங்கட் நாகராஜ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
திருவரங்கம்
23 மார்ச் 2026



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....