செவ்வாய், 10 மார்ச், 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - சதுரகிரி பயணம் - பத்மநாபன்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


சதுரகிரி பயணம் குறித்த அனுபவங்களை எழுத வேண்டும் என்று தொடங்கி இருந்தேன். “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற தலைப்பில் முதலாம் பகுதி எழுதிய போது சொல்லி இருந்தபடியே, இந்தப் பயணத்தில் என்னுடன் பயணித்த நண்பர் பத்மநாபன் அவர்களையும் இந்தப் பயணம் குறித்து எழுதும்படி கேட்டுக் கொண்டிருந்தேன். முன்பு போல எழுத முடிவதில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தவரை இரண்டு மூன்று முறை கேட்டுக்கொண்ட பிறகு இதோ அவரது அனுபவங்களை எழுதி அனுப்பி இருக்கிறார்.  இரண்டு பகுதிகளாக அவரது வார்த்தைகளில் இந்தப் பயணம் தொடர்கிறது.  என் பாணியில், என் அனுபவங்களும் இந்தப் பயணத் தொடரில் தொடர்ந்து வரும் - படங்கள் மற்றும் காணொளிகளுடன்.  இதோ இந்தத் தொடரின் இரண்டாம் பகுதியாக, நண்பர் பத்மநாபன் அவர்களில் வார்த்தைகளில் - ஓவர் டு பத்மநாபன் - வெங்கட் நாகராஜ்.


*******


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பத்மநாபன்:


எங்க ஊருல வருஷந்தோறும் மூணு கொண்டாட்டம் ஊர் கூடி கொண்டாடுவோம். முதல்ல முத்தாரம்மன் கொடை விழா. ரெண்டாவது மாசி மாத காவடி கட்டு. மூணாவது கிருஷ்ண ஜெயந்தி! இந்த கிருஷ்ண ஜெயந்தியைப் பற்றியும், எங்க ஊர் உறியடி திருவிழா பற்றியும் ஒரு தடவை எழுதி இருக்கமுல்லா. 


இந்த காவடி கட்டு பத்தி சொல்லணுமுன்னா மாசி மாசம் நடக்கும். எங்க ஊர் காவடி  எண்ணெய்க்காவடி.  இந்த காவடி ஊரெல்லாம் சுத்தி வீடு வீடாகப் போய் எல்லோருக்கும் தரிசனம் தந்து அடுத்த நாள் அதிகாலையிலே திருச்செந்தூருக்கு நடைப்பயணமா கிளம்பும். நிறைய பேரு கூடவே நடைப்பயணமா திருசெந்தூருக்கு போய் முருகனுக்கு அந்த எண்ணெய அபிஷேகம் பண்ணுவாங்க. இப்போ கொஞ்ச நாள் முன்னாடிதான் அந்த காவடிக் கட்டு சிறப்பா நடந்து முடிஞ்சுது. 




சமீபத்தில என் அத்தை மகன் எழுத்தாளர் ராஜேஷ் சங்கரப்பிள்ளை அவரது மூன்றாவது படைப்பான “தேடல்” னு ஒரு புத்தகம் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் திரு சோ தர்மன் அவர்கள் கையால் வெளியிட்டார். 


அந்த விழாவிலே என்னைப் பார்த்து ‘யத்தான், நானும், அண்ணனும் (75 வயதுக்கும் மேல்) நம்ம சின்னதம்பி பாட்டா பேரன் நாதனும் திருச்செந்தூருக்கு நடக்கப் போறோம், வாரேளா’ அப்படின்னு கேட்டான். ஆசைதான். ஆனா கிட்டத்தட்ட 90 கிலோமீட்டர். மூணு நாளா நடக்கலாம். அதிகாலையிலேயும் வெயில் சாஞ்சு ராத்திரியிலேயும்தான் நடக்க முடியும். ஏன்னா, பகல்ல வெயிலு பின்னிரும். எனக்கு அந்த ரூட்டில காவல்கிணறு, வடக்கன் குளம், திசையன்விளை, சாத்தான்குளம் அப்படின்னு வெயிலில காய்ஞ்சு அனுபவம் உண்டு. ஒண்ணுக்கே போகாது. எல்லாம் வேர்வையா போயிருக்கும். பொறகு எங்க போட்டு ஒண்ணுக்கு போறது. ஒரே மூத்திர கடுப்புதான். நிறைய தண்ணிய குடிச்சும், பெரிய உள்ளிய பச்சையா தின்னும் அப்படி இப்படின்னு ஒண்ணுக்கு போயிருவோம். அப்படி ஒரு வெயிலு. அப்போ வாலிப வயசு. ஏதோ சமாளிச்சோம். இப்போ அப்படியா! அதனால ஆசையிருந்தாலும் கொஞ்சம் நம்பிக்கை குறைவாயிருந்ததால சந்தோஷமா போயிட்டு வாங்க. எனக்கும் சேர்த்து சுப்பிரமணியன்கிட்ட வேண்டிக்கோன்னு ஒதுங்கிகிட்டேன். பின்னே அவன கும்பிட அவன் மனசு வைக்கணுமுல்லா. 


அதனாலென்ன. சுப்பனக் கும்பிடப் போகாட்டி என்ன, அவன் அப்பனக் கும்பிட போகலாம்னு அருள் இருந்தா யாரு தடுக்க முடியும்னேன்! ஆமா. போன வாரம் நம்ம வெங்கட்கிட்ட இந்த திருச்செந்தூர் போக இயலாமையை பத்தி பேசிகிட்டு இருந்தேன். அப்போ அவரு சதுரகிரி போவோமான்னாரு. சுப்பன மிஸ் பண்ணிட்டோம், அப்பன விட்டுடக் கூடாது அப்படின்னு உடனே சரின்னு சொல்லிட்டேன். அதுவும் வெங்கட் மாதிரி ஒரு நல்ல நண்பர் கூட போறதுன்னா ஒரு சந்தோசம்தானே! ஏற்கனவே அவரு போன முறை சதுரகிரி போய் ராத்திரி அங்கேயே தங்கி அடுத்த நாள் அதிகாலை பூஜையில் கிடைத்த அற்புதமான அனுபவத்தயும், அந்த சிவகண வாத்தியங்களின் அதிர்வையும் சொல்லி மனுசன கொதி ஏற்படுத்தி வச்சிருந்தாரு. அதனால அடுத்த தடவ என்னையும் ஆட்டத்தில சேர்க்க சொல்லியிருந்தேன்.


அவரு என்னைப் போல வள வளா கொழ கொழா கிடையாது. டப்பு டிப்பு டப்புதான். உடனே சுடச் சுட ஒரு பிளானப் போட்டார். சனிக்கிழமை சுந்தர மகாலிங்கத்தையும் சந்தன மகாலிங்கத்தையும் பாத்துருவோம்னு தீர்மானம் போட்டாச்சு. 


வெள்ளிக்கிழமை ராத்திரி திருச்சியில் இருந்து கிளம்பி அவரும் அவருடன் பணிபுரியும் ஒரு இளம் நண்பர் மதியழகனும் மருதை மாட்டுத்தாவணிக்கு வந்துட்டாங்க. ஆமா, எதுக்கு மாட்டுக்கு தாவணி போடணும்? நான் அப்படியே நாரோல்லே இருந்து கிளம்பி அதே மாட்டுத்தாவணிக்கு வந்துட்டேன். நான் போகும்போது மணி மூணேகால் தாண்டிடுச்சு. அப்படியே குசலம் விசாரிச்சுகிட்டே ரெடியா நின்ன ராஜபாளையம் பஸ்ல ஏறி ஒரு அஞ்சரை மணி வாக்குல கிருஷ்ணன்கோவில் என்கிற ஊருக்கு வந்து சேர்ந்தோம். (நாகர்கோயில்லேயும் ஒரு கிருஷ்ணன்கோவில் இருக்கு. அந்த கிருஷ்ணன்கோயில்ல உள்ள கிருஷ்ணன் கோயிலில ஒரு குஞ்சுகிருஷ்ணன் இருக்காரு. சரி, அவரை நாம இப்போ தொந்தரவு பண்ணாண்டாம்.)


சதுரகிரிக்கு அந்த கிருஷ்ணன்கோயிலில் இருந்து வத்திராயிருப்பு வழியா தாணிப்பாறைங்கிற இடம் போயி அங்கேயிருந்துதான் மலையேற ஆரம்பிக்கணும். ஆமா, இந்த வத்திராயிருப்ப எதுக்கு ‘வாத்ராப்’  ‘வாத்ராப்’ புன்னு சொல்லுறாங்களோ. மனுசனுக்கு ஊர் பேர முழுசா சொல்லக்கூட சோம்பேறித்தனம் வந்துடுச்சு. என்னத்தச் சொல்ல!




சரி, நாம கிருஷ்ணன்கோயிலுக்கு வருவோம். அங்கேயிருந்து தாணிப்பாறைக்கு பஸ் உண்டாம். ஏற்கனவே ஒரு பத்து பதினஞ்சு பேரு அந்த பஸ்ஸுக்கு நின்னுக்கிட்டு இருந்தாங்க. அஞ்சாறு ஆட்டோக்களும் நின்னுக்கிட்டு இருந்துச்சு. தாணிப்பாறை பஸ் வரக் காணோம். சரி, ஆட்டோ எவ்வளவுன்னு கேட்போம்னு கேட்டா தாணிப்பாறைக்கு 500 ரூவா சொன்னாரு. போலாமா வேண்டாமான்னு யோசிச்சுகிட்டே இருந்தப்போ தாணிப்பாறை பஸ் வந்துச்சு. அடிச்சு புடிச்சு ஏறி சீட்டை பிடிச்சாச்சு. ஒரு ஆறு ஆறேகால் மணிபோல தாணிப்பாறை போய் சேர்ந்தோம். ஏற்கனவே வெங்கட்டுக்கு முன் அனுபவம் இருந்தததால சரியான இடம் பாத்து கைகால் கழுவி குளிச்சு முடிச்சு ஒரு கடையில செருப்ப பாதுகாப்பா வச்சுக்கிட்டு மலையேற ரெடியாயுட்டோம். அப்படியே வனத்துறைக்கு ஆளுக்கு ஒரு பத்து ரூபா மொய் எழுதிக்கிட்டு, ஓம் நமசிவாய ன்னு சொல்லிக்கிட்டே மலையேற தொடங்கினோம். 



ஆரம்பத்திலேயே வரிசையா ஏழு எட்டு சாமியார்கள், ஆளுக்கு ஒரு ரூபாய் போடுங்கன்னு கேட்க எங்க அணித் தலைவர் பர்ஸ தொறந்து ரூபா நோட்டை முதல்ல இருந்த அவங்க அணித் தலைவர் வச்சிருந்த திருவொட்டுல போட்டு எல்லாரும் பிரிச்சு எடுத்துக்கோங்கன்னாரு. யாரும் மறுப்பு சொல்லல. எனக்கு ஆச்சிரியம். எங்க ஊர் கோயிலில இப்படி போட்டா, ஐயா, அவர் வேற, நான் வேறன்னு பொறத்தாலேயே வந்துருவாங்க. ஆனா இங்க அவங்களுக்குள்ள ஒரு அக்ரிமெண்டு போட்டுருப்பாங்க போல.


முதல்ல இந்த பூச்சாண்டிகள் (தப்பா நினைக்காண்டம். திருநீற்றை உடம்பெல்லாம் பூசிய ஆண்டிகள்) எப்படி சாமியாராயிருப்பாங்க. குடும்பம் குட்டிகளை நட்டாத்துல வுட்டுகிட்டு வந்தவரு, பொண்டாட்டிய சமாளிக்க முடியாம ஓடி வந்தவரு, குடும்பம் குட்டின்னு யாருமே இல்லாதவரு, கொழுப்பு புடிச்சு சோம்பேறியா இருப்பதில் சுகம் கண்டவரு, இப்படி பலதரப் பட்டவங்க இருப்பாங்க போல. சரி, யாராவது ஒருத்தராவது உண்மையா சிவனடியாராக வேணும்னு இருக்க மாட்டாங்களா என்ன. 


சுசீந்தரத்துல ஒரு சாமியார் இருந்தாரு. கோயில்ல பிச்சையெடுத்துகிட்டு கோயில் குளத்துலேயே குளிச்சுகிட்டு பக்கத்துல பேரம்பலம் மண்டபத்துல இல்லேன்னா கலையரங்கத்தில படுத்து தூங்கிக்கிட்டு காலத்த தள்ளுவாரு. நாமக்கல் பக்கம் ஏதோ ஒரு ஊரு. மாசத்துல ஒரு தடவை ஒரு வாரத்துக்கு ஆளு காணாமப் போயிடுவாரு. என்னான்னு கேட்டா பிச்சையெடுத்து சேத்து வச்ச காச ஊருக்குப் போய் பொண்டாட்டிகிட்ட குடுத்து சம்சார சாகரத்துல நீந்திக்கிட்டு வந்துடுவாரு.  


தொடர்ந்து அடுத்த பகுதியில சொல்றேனே….  


நட்புடன்


பத்மநாபன்


*******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

10 மார்ச் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....