அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட விரும்பிச் சொன்ன பொய்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
மாசி மாத திருப்பள்ளி ஓடம் - வெங்கட் நாகராஜ்
சில நாட்கள் முன்னர் திருவரங்கத்தில் மாசி மாதம் நடக்கும் திருப்பள்ளி ஓடம் எனும் தெப்போற்சவம் சமயத்தில் நடக்கும் வெள்ளி கருட வாகனத்தில் நம்பெருமாள் உலா வருவது பற்றிய பதிவொன்றை எழுதியிருந்தோம். இந்தத் திருப்பள்ளி ஓடம் அதாவது தெப்போற்சவத்தின் முக்கிய நிகழ்வாக நடக்கும் தெப்போற்சவம் கடந்த வியாழன் (26-02-2026) அன்று நடைபெற்றது. மாலை அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய பின்னர் இல்லத்தரசி கொடுத்த காஃபியைக் குடித்த பிறகு இன்றைக்கு தெப்பத் திருநாள் - வீட்டின் அருகே இருக்கும் குளத்தில் தான் நடக்கும் - சென்று வரலாமா என்று கேட்க, இல்லாள் ஓகே சொன்னாள். மகளையும் நீயும் வா, ஒரு நடை போய்வரலாம் என்று புறப்பட்டு விட்டோம். வீட்டின் அருகே இருக்கும் குளத்தில் தான் திருப்பள்ளி ஓட நிகழ்வு நடக்கும்.
குளத்தின் நடுவே ஒரு மண்டபம் உண்டு. வெளியே ஒரு மண்டபம். காலையிலேயே நம்பெருமாள் வெளியே இருக்கும் மண்டபத்திற்கு எழுந்தருள்வார். பிறகு மாலை நேரத்தில் அந்த மண்டபத்திலிருந்து புறப்பட்டு குளத்தின் ஓரத்தில் அமைத்திருக்கும் மிதவையில் குதிரை வாகனத்தில் நம்பெருமாளை எழுந்தருளச் செய்து குளத்தில் நான்கு பக்கமும் சுற்றி வந்து கடைசியில் நடுவில் இருக்கும் மண்டபத்திற்கும் எழுந்தருள்வார். குளத்திற்குள் அலங்கரிக்கப்பட்ட மிதவை (ஓடம்) சுற்றிவருவது, குளத்தின் நடுவே இருக்கும் மண்டபம் முழுக்க இருக்கும் விளக்கு அலங்காரங்கள் குளத்தில் பிரதிபலிக்க, இந்தக் காட்சிகளைக் காண குளத்தைச் சுற்றிலும் மக்கள் வெள்ளம் இருக்கும். ஜேஜேவென இருக்கும் மக்கள் வெள்ளத்தில் நாங்களும் ஐக்கியமானோம். குளத்தைச் சுற்றிலும் இருக்கும் பாதையில் நிறைய கடைகள் - விதம் விதமான பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
மாலை 07.15 மணிக்கு தெப்போற்சவம் தொடங்கும் என்று போட்டிருந்தார்கள். ஆனால் என்ன பிரச்சனையோ தொடங்குவது தாமதாகிக் கொண்டேயிருந்தது. நாங்கள் அதற்குள் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் வீதிகளில் அமைத்திருந்த தற்காலிக கடைகளைப் பார்த்தபடி ஒரு உலா வந்தோம். விதம் விதமான விளையாட்டுப் பொம்மைகள், பஜ்ஜி, போண்டா, பஞ்சு மிட்டாய், தேங்கா-மாங்கா-பட்டாணி சுண்டல், பலாச்சுளைகள் என தின்பண்டங்கள் (எங்கள் பிளாக் ஸ்ரீராம் கேட்பாரே என்பதற்காகவே இந்த வரிகளைச் சேர்த்தேன் 🙂) போன்றவை விற்கும் கடைகள், பெண்களுக்கான தோடு, வளையல், பாசிமணி மாலைகள் போன்றவை விற்கும் கடைகள் என பலதும் இருந்தது. அம்மாவையும் பெண்ணையும் அந்தக் கடைகள் பக்கம் விட்டு விட்டு நான் கூட்டத்தினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.
கையிலுள்ள அலைபேசியில் T20 World Cup Cricket Match (India - Zimbabwe) பார்த்தபடியே வந்த ஒருவர், “தெப்பத்திலே பெருமாள ஏளப்பண்ணியாச்சா?” என்று கேட்டபடியே Match பார்ப்பதைத் தொடர்ந்தார். “ஒண்ணு தெப்பத்துல பெருமாளப் பாக்கணும், இல்லைன்னா வீட்டுல உட்கார்ந்துண்டு Match பார்க்கணும்” இப்படி ரோடுல Match பார்த்துண்டே, இந்த கும்பல்ல நடந்தா யார் மீதாவது மோதிக்கொண்டு தர்ம அடி தான் வாங்கப் போறார் இவர் என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண்மணி நகர்ந்தார் - எனக்கென்னமோ ஏற்கனவே அந்தப் பெண்மணி மீது மோதிக்கொண்டு இருப்பாரோ என ஒரு சம்சயம். திருவரங்கம் முழுவதுமே இந்த மாசி தெப்போற்சவத்திற்காக குளத்தின் கரையில் தான் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்குக் கூட்டம் இருந்தது. பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்தபடி மிதவை அருகே வந்தால் இன்னும் பெருமாள் மிதவைக்கு எழுந்தருளவில்லை.
என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. அதிகம் நேரம் எடுக்கும் போலத் தெரிய, என்ன செய்யலாம் என்று யோசித்து சரி முகநூலில் ஸ்ரீரங்க விலாசம் பக்கத்தில் படங்களும் காணொளிகளும் போடுவார்கள் - பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து பேசியபடியே வீடு திரும்பினோம். வழியெல்லாம் பலரும் பெருமாள ஏளப்பண்ணியாச்சா? என்று கேட்க, அனைவருக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டே வந்தோம். கடந்த வருடமும் ஏதோ பிரச்சனை இருந்தது - இந்த வருடமும் அதே பிரச்சனை தான் போல என்று சொல்லிக் கொண்டிருந்தார் அந்தப் பகுதியில் இருந்த ஒரு நண்பர். இரண்டு குழுவினர்களில் யார் ஓடம் தள்ளுவது என்பதில் பிரச்சனை என்றார் ஒருவர். கடவுளுக்கு முன்னர் “நான் பெரியவன் நீ பெரியவன்” என்கிற சண்டை சச்சரவு எதற்கு என்பது புரியாத புதிர்! அவனுக்கு முன் நாமெல்லாம் எம்மாத்திரம் என்பதை புரிந்து கொள்ளப் போவதில்லை மனிதர்கள்.
அதீத கூட்டத்தில் உள்ளே சென்று நம்பெருமாளை தரிசிக்க முடியவில்லை என்று நினைத்து வீடு திரும்பினால் ஸ்ரீரங்க விலாசம் முகநூல் பக்கத்தில் எட்டாம் திருநாள் “தெப்பத்தில் கிளி மாலையுடன் திருப்பள்ளியோடம் 2026” என்று எழுதி அழகிய படங்களை வெளியிட்டு இருந்தார்கள். அவர்களுக்கு உங்கள் சார்பிலும் நன்றி. மேலே உள்ள இரண்டு படங்கள் மட்டும் அவர்களது முகநூல் பக்கத்திலிருந்து எடுத்து இங்கே சேர்த்திருக்கிறேன். பதிவில் சேர்த்திருக்கும் மற்ற படங்கள்/காணொளிகள் நானும் மகளும் எடுத்தவை. என் பார்வையில் இந்த அனுபவம் எழுதி இருக்கிறேன். இல்லத்தரசியின் பார்வையில் இந்த உலா கீழே தொடர்கிறது!
மாசி தெப்போற்சவம் - ஆதி வெங்கட்:
திருவரங்கத்தில் தற்சமயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திருப்பள்ளியோட நிகழ்வில், சென்ற வார இறுதியில் மாசி கருட சேவையை இயற்கையான சூழலில் கண்டுகளித்தைப் பற்றி எழுதியிருந்தது நினைவிருக்கலாம்! நேற்றைய பொழுதில் இங்கு மாசி தெப்போற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாசி தெப்பம் நடைபெற்ற தெப்பக்குளம் எங்கள் வீட்டின் அருகே தான் இருக்கிறது என்பதால் நாங்கள் மூவரும் ஒரு நடையாகவே சென்று வந்தோம்! மாலை என்னவர் அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பியதும் அவருக்கு காபியை போட்டு கொடுத்ததும் தயாரானேன்! சென்ற வருட தெப்பத்திற்கு மகளும் நானும் சென்று வந்ததைப் பற்றி என்னவரிடம் பேசிக் கொண்டே நடக்கத் துவங்கினேன்!
தெப்பம் நடைபெறும் பகுதி முழுவதும் வண்ண வண்ண அலங்கார விளக்குகளாலும், அலை கடலென அங்கு நிறைந்திருந்த மக்களாலும் நிறைந்து காணப்பட்டது! தெப்பத்தை ஒட்டி புதிதாக உருவாக்கப்பட்ட கடைகளில் விதவிதமான காதணிகள், வளையல்கள், பொம்மைகள், நிறமிழந்த பஞ்சுமிட்டாய், பலாச்சுளைகள், அவித்த வேர்க்கடலை தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் என்று ஒரு திருவிழாவுக்கே சாட்சி சொல்லும் விதமாக பறைசாற்றிக் கொண்டிருந்தன கடைகள்!
தெப்பக்குளத்தை ஒட்டியிருக்கும் ஆஸ்தான மண்டபத்தில் வீற்றிருந்த அரங்கன் தெப்பத்திற்கு வருவதற்குள் நாம் ஒரு உலா வரலாம் என்று கடைகளை பார்வையிட்டுக் கொண்டே சென்றோம்! அம்மா! நான் பஞ்சுமிட்டாய் சாப்பிடட்டுமா? என்று ஆர்வமுடன் கேட்ட மகளுக்கு அதை வாங்கித் தந்ததும் ஒரு இடத்தில் நின்று கொண்டு அதை ரசித்து சுவைத்தாள்…:)
அங்கு வரிசையாக தென்பட்ட கடைகளில் அவளுக்கு வேண்டிய காதணிகள் சிலவற்றையும் கண்ணாடி வளையல்களையும் கூட வாங்கிக் கொண்டாள்! இந்த Raindrop வளையல் இப்போ ட்ரெண்ட்ல இருக்கும்மா! என்றாள்! ஃபேஷனும் ட்ரெண்டும் சுழற்சியில் உருவாவது தானே! இதை நான் சிறுவயதில் பார்த்த நினைவாக தான் இருந்தது!
தெப்பக்குளத்தை ஒட்டியே வலம் வந்து கொண்டிருந்த போது ஓரிடத்தில் நிறைந்திருந்த தெப்பக்குளத்திலிருந்து வந்த சிலுசிலுவென்ற காற்றும், அங்கிருந்த வேப்பமரக் காற்றுமாக அந்தப் பகுதியே மிகவும் ரம்மியமாக இருந்தது! அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில் தன் குழந்தையை அமர வைத்து சாதம் ஊட்டிக் கொண்டிருந்தார் ஒரு அம்மா! அப்போது மணி எட்டு இருக்கும்! குழந்தைக்கு பசிக்குமே!
அந்தக் காட்சி ஏனோ என் மனதில் அழுத்தமாக பதிந்து போனது! மனதை மயிலிறகால் வருடிய உணர்வு! இப்படி ஒரு குழந்தையாக நான் இருக்கக்கூடாதா! என்று தோன்றிவிட்டது! என்னவரும், மகளும் வண்ண விளக்குகளையும் தெப்பக்குளத்தையும் படம் பிடித்துக் கொண்டிருக்க, என் மனம் அந்த அம்மாவையும் குழந்தையையும் நினைத்துக் கொண்டிருந்தது…:)
இப்படி எங்களைச் சுற்றியுள்ள காட்சிகளில் லயித்து போய் நேரத்தை செலவிட்ட நாங்கள் நெடுநேரமாகியும் ரங்கன் தெப்பத்திற்கு வராததால் பேசிக் கொண்டே வீட்டிற்கு திரும்பிவிட்டோம்! அதன் பின்பு இரவு உணவு தயார் செய்யும் வேலை இருக்கிறதே! இட்லி மாவில் செய்த குழிப்பணியாரமும், பீர்க்கங்காய் தோல் சட்னியும் செய்து நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது கேட்ட வேட்டு சத்தம் ரங்கனும் நல்லபடியாக தெப்பத்தில் ஏறிவிட்டார் என்று உணர முடிந்தது!
நல்லதே நடக்கணும்! ரங்கா ரங்கா!
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
3 மார்ச் 2026















இன்றைய வாசகம் யதார்த்தம்.
பதிலளிநீக்குகீதா
படங்கள் எல்லாம் சூப்பர்.
பதிலளிநீக்குஅதுவும் தெப்பக் குளப் படங்கள் வெகு அருமை
கீதா
“ஒண்ணு தெப்பத்துல பெருமாளப் பாக்கணும், இல்லைன்னா வீட்டுல உட்கார்ந்துண்டு Match பார்க்கணும்” இப்படி ரோடுல Match பார்த்துண்டே, இந்த கும்பல்ல நடந்தா யார் மீதாவது மோதிக்கொண்டு தர்ம அடி தான் வாங்கப் போறார் இவர் என்று சொல்லிக்கொண்டு ஒரு பெண்மணி நகர்ந்தார் - எனக்கென்னமோ ஏற்கனவே அந்தப் பெண்மணி மீது மோதிக்கொண்டு இருப்பாரோ என ஒரு சம்சயம். //
பதிலளிநீக்குஹாஹாஹா அதானே அப்பெண்மணி சொல்வது சரிதான்ல?
கீதா
என்னக இது? இரு குழுக்களில் யார் ஓடம் தள்ளுவது போன்ற பிரச்சனைகள். இன்னும் மக்கள் evolve ஆகவே இல்லை என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஎன் புத்தி வேறு கேள்விகளைக் கேட்கிறது ஆனால் வேண்டாம் இங்கு. எல்லாரும் என்னை அடிக்க வந்துவிடுவார்கள்.
காணொளிகளும் சூப்பர்.
சாதம் ஊட்டிக் கொண்டிருந்தார் ஒரு அம்மா! அப்போது மணி எட்டு இருக்கும்! குழந்தைக்கு பசிக்குமே!
ஆதியின் பகுதியும் ரசித்தேன்
அந்தக் காட்சி ஏனோ என் மனதில் அழுத்தமாக பதிந்து போனது! மனதை மயிலிறகால் வருடிய உணர்வு!//
தாய்மையும் குழந்தை மனதும்!!! வெளிப்படும் தருணம்.
மனிதர்கள் "கடஉள்" என்பதைப் புரிந்து கொள்ளாததால் கடவுள் படும் பாடு!
கீதா
இன்னும் தாமதம் என்று நாம் நினைக்க, நாம் வந்த உடனே அங்கு நிகழ்ந்து விடுவதுபோல சில சமயம் நடக்கும்தான்! படங்கள் யாவும் அருமை.
பதிலளிநீக்கு