புதன், 11 மார்ச், 2026

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - சதுரகிரி பயணம் - பகுதி மூன்று - பத்மநாபன்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அவன் அருளாலே அவன் தாள் வணங்கி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வருடத்தின் சதுரகிரி பயணம் குறித்த அனுபவங்களை இரண்டு பகுதிகளாக இது வரை வெளியிட்டு இருக்கிறேன் - அதற்கான சுட்டி கீழே…   


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி ஒன்று


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பகுதி இரண்டு


தொடரின் அடுத்த பகுதியும், நண்பர் பத்மநாபன் அவர்களில் வார்த்தைகளில் - ஓவர் டு பத்மநாபன் - வெங்கட் நாகராஜ்.


*******


அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - பத்மநாபன்:





சாமியார்களையெல்லாம் தாண்டி மேல ஏற ஆரம்பிச்சோம். நல்ல அழகா சிமெண்ட் தளமும் படிகளும் போட்டுருந்தது. சந்தோஷமா கொஞ்சம் நடந்து போய் அங்க இருந்த புள்ளையாருகிட்ட ஒரு ஆசீர்வாதத்த வாங்கிகிட்டு ஓம் நமசிவாயன்னு சொல்லிகிட்டே நடையை தொடர்ந்தோம். 



கரையெல்லாம் செண்பகப்பூன்னு சொல்லுக மாதிரி இங்க வழியெல்லாம் இறை சன்னதிகள். காளி ஒருபுறம், கொஞ்சம் தள்ளி வனப்பேச்சி, அப்புறம் கருப்பசாமி அப்படின்னு. எல்லாருக்கும் கும்பிடப் போட்டு கூடவே திருநீறு எடுத்து பட்டையை போட்டுக்கிட்டு சிவ சிவன்னு நடையை தொடர்ந்தோம். 




சிவனப்பாக்கனுமுன்னா கொஞ்சம் கஷ்டமும் படணுமில்லை. சிமெண்ட் பாதை முடிஞ்சு ஏத்தமும் இறக்கமும் உள்ள பாறைக்கல் பாதை ஆரம்பிச்சாச்சு. ஒரு இடத்துல சூரியன் மலைக்கு மேல உதிச்சு வாராரு. அந்த அழகான இயற்கையான இடங்களை பார்த்ததும் எல்லோரும் பாலு மகேந்திரா ஆயிட்டோம்.   ஆளுக்காளு போட்டோ எடுத்து தள்ளுனோம். நிறைய போட்டோ ரொம்ப நல்ல வந்துருக்கும். ஏன்னா, ஒரு நடமாடும் ரிப்ளெக்டர் கூட இருந்ததாலத்தான். 


அப்படியே கொஞ்ச தூரம் மேல ஏறுனதும் வழுக்குப்பாறை வந்தது. உண்மையிலேயே கொஞ்சம் கவனக்குறைவா இருந்தா சிக்கல்தான். கொஞ்சம் மழை பெய்தாலும் வனத்துறை மலையேற விடமாட்டாங்கன்னு சொல்வது சரிதான்.




அப்படியே முன்னாடி பார்த்தா ஒரு இருபது இருபத்தி அஞ்சு பொம்பிள்ளைங்க, எல்லாரும் சிவப்பு மஞ்சள் னு ஒரே யூனிபார்ம்லா ஆளுக்கொரு கைத்தடியை வச்சுக்கிட்டு வழுக்கு பாறையெல்லாம் எங்களுக்கு பஞ்சுப் பாறைன்னு சர சரன்னுமேல ஏறுகா. எனக்கு ஒரே வெக்கமா போச்சு. இந்த வழுக்கு பாறையப் பாத்து பதுங்கி நின்ன எங்களுக்கும் வீரம் வந்துட்டுல்லா. நாங்களும் அந்தக் கூட்டத்துக்கு கூடவே போயிடலாம்னு பாத்த அந்த பெண்கள் கூட்டம் மேகக் கூட்டம் மாதிரி கண்ணுலேயிருந்து மறைஞ்சு போயிட்டாங்க. அவ்வளவு ஸ்பீடு. 



அவங்கதான் கூட்டமா போறதால வேகமா போறாங்கன்னு பாத்தா ஒரு தம்பி, ஒரு கால் சரியா இல்ல. ஒரு கம்பை துணயாய் வச்சுகிட்டு ஒத்தக் காலாலேயே அழகா சிவனைப் பாக்க போறாரு. கொஞ்சம் பின்னாலேயே ஒரு இருவது இருவத்தஞ்சு கிலோ சாக்கு மூட்டைய தலையில தூக்கிட்டு ஒரு 45 வயசு உழைப்பாளி அனாயாசமா எங்கள கிராஸ் பண்ணி போய்க்கிட்டே இருக்காரு. கொஞ்சம் அரசாங்க பானம் வாசனையும் கூடவே கிராஸ் ஆச்சுது. 



கொஞ்ச தூரம் போனா காராம் பசுத்தடம் வந்துரும்னு வெங்கட் சொன்னாரு. கூடவே சுந்தர மகாலிங்கம் கதையையும் சொல்ல தொடங்குனாரு. சதுரகிரிக்கு அடிவாரத்துல இருக்க ஒரு கிராமத்துல உள்ள ஒரு சம்சாரி நிறைய பசுக்களை வைத்து பிழைப்பு நடத்தி வந்தான். இந்த சதுரகிரி மலைக்கு மேல பசுக்கள் போய் மேய்ஞ்சுகிட்டு வரும். அந்த பசு மந்தைக்கு மத்தியிலே ஒரு காராம் பசு இருந்தது. காராம் பசுன்னா உடம்பு பூரா கருப்பாதான் இருக்கும். நல்ல சுவையான பாலும் தரும். ஒரு நாளைக்கு ஒரு சிவனடியாரு அந்த காரம் பசுவோட மடியிலே டைரக்டா வாய வச்சு பால் குடிச்சுகிட்டு இருந்தாரு. இதைப் பார்த்த அந்த சம்சாரிக்கு ஒரே கோவம். ஓடிப் போய் அந்த சிவனடியாரப் பாத்து ‘என்ன ஓய், சாமியாரே! சின்னப்புள்ளத்தனமா மாட்டு மடியிலேயே வாய் வச்சு பால் குடிக்கீரே’ ன்னு கையில வச்சிருந்த கம்ப வச்சு சாமியார் தலையிலே சுளீர்ன்னு ஒரு அடி வச்சாராம். உடனே அந்த சாமியார் சிவபெருமானா அவருக்கு தோற்றமளிச்சு முக்தி அளிச்சாராம். அதனாலதான் மேல சுந்தர மகாலிங்கம் கொஞ்சம் சாஞ்சுக்கிட்டே அருள் பாலிக்காரு. அதோட இப்பவும் அவரோட தலையில அடிபட்ட தழும்பு இருக்காம். அப்படியே கதை கேட்ட மும்முரத்தில காரம்பசு கால்தடம் கண்ணிலயிருந்து மிஸ் ஆயிடுச்சு. ஆனா திரும்பி வரும் போது பாத்துட்டோமுல்லா. என்னா பெரிய கால்தடம்! சுத்தி சந்தனம் குங்குமம் எல்லாம் வச்சிருந்தது. தொட்டு கும்பிடு வச்சுக்கிட்டோம். இந்த கதைக்கு வலு சேர்க்கிற மாதிரி மேல சின்ன பசுக்கிடை, பெரிய பசுக்கிடைன்னு ரெண்டு ஸ்பாட் இருக்குது. 



எங்க கூடவே ஒரு தாத்தாவும் பெயரனும். தாத்தாவுக்கு ஒரு அறுவது அருவத்தஞ்சு வயசு இருக்கும். பெயரனுக்கு ஒரு ஒன்பது பத்து வயசு இருக்கும். தாத்தா பெயரனுக்கு ஒவ்வொரு இடத்தப் பத்தியும் எடுத்து சொல்லிக்கிட்டும் மலையேறுக டெக்னிக்கையும் சொல்லிக் குடுத்துக்கிட்டே வராரு. எனக்கு எங்க பாட்டாவும் அவரு கூட லீவ் நாளில மாடு மேச்சுகிட்டே ஆத்துல நீச்சல் கத்துகிட்டது, தென்ன ஓலையில காத்தாடி செய்தது எல்லாம் ஞாபகம் வந்தது. அவரும் இப்படித்தான் எனக்கு எதையாவது சொல்லிக் குடுத்துக்கிட்டே இருப்பாரு. அந்தப் பையனைப் பாத்தா சந்தோஷமாவும் கொஞ்சம் பொறாமையாவும் இருந்துச்சு. 



அப்படியே காரம் பசுத்தடம் தாண்டி வருக பாதையிலயிருந்து கொஞ்சம் கீழ பாத்தா அழகான சின்ன சின்ன அருவிகளும் சிற்றாறும் சல சலன்னு ஓடுது. உடனே என் காதுல நித்யஸ்ரீ வந்து சல சலவென ரெட்டைக்கிளவி, பொல பொலவென பொலம்பும் மனைவி உண்டல்லோ நாட்டில் உண்டல்லோ ன்னு பாட ஆரம்பிக்க, ஒரு கை அப்படியே என்ன கொஞ்சம் ஒதுக்கி ‘தம்பி! அப்படி ஓரமா போய் வேடிக்கை பாரு’ன்னு சொல்லி விட்டு எங்களை ஓவர்டேக் பண்ணி சர சரன்னு மேல போறாங்க. யார்னு பாத்தா ரெட்டை கிழவிகள் ஆளுக்கொரு கம்பை பிடித்துக் கொண்டு அநாயாசமாக எங்களை கிராஸ் பண்ணி போறாங்க. எப்படியும் அவங்களுக்கு வயசு எழுபதுக்கு மேல இருக்கும். ரெண்டு பேரும் அடிக்கடி மகாலிங்கத்தை பாக்க போறவங்க போல இருக்கு. கடைசி வரைக்கும் எங்களால அவங்கள பிடிக்க முடியலேங்கறது வேற விஷயம்.


தொடர்ந்து அடுத்த பகுதியில சொல்றேனே….  


நட்புடன்


பத்மநாபன்


*******



இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

11 மார்ச் 2026


1 கருத்து:

  1. நல்ல அனுபவங்களை பெற்று வந்திருக்கிறீர்கள்.  எல்லோருமே பாலு மகேந்திரா ஆகும் அளவு அவர் இன்னமும் நம் நினைவில் நிற்கிறார் பாருங்கள்..  கோவிலுக்கான வழக்கமான கதை.  மாற்றிக் கூட சொல்ல மாட்டார்களா?!  அங்கேயே சிலகாலம் பணிபுரிந்தும் இங்கு ஏறி சுந்தரரை தரிசிக்கும் எண்ணம் வரவில்லையே என்று வெட்கமாகத்தான் இருக்கிறது!

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....