திங்கள், 2 மார்ச், 2026

விரும்பிச் சொன்ன பொய்கள் - சுஜாதா - வாசிப்பனுபவம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




வாசிப்பனுபவம் வரிசையில் நான் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளப் போவது சுஜாதா அவர்களின் “விரும்பிச் சொன்ன பொய்கள்” என்கிற நூல் வாசிப்பனுபவம் குறித்து தான்.  சுஜாதா - அவரது எத்தனை நூல்களை படித்திருந்தாலும் புதிதாக கேள்விப்படும் நூல் ஒன்றினை பார்த்தால் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இன்னமும் குறையாமல் இருப்பது அவரின் எழுத்துக்கு இருக்கும் பலம்.  முன்பு பாலகுமாரன் நூல்கள் மீதும் இப்படி ஒரு ஆர்வம் இருந்தது.  ஆனால் தற்போது அந்த அளவு ஆர்வம் இல்லை என்றாலும் பாலகுமாரன் நூல்களையும் படித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.  தற்போது கூட அவரது நூல் ஒன்றினை - என்ன நூல் என்று தானே கேட்கப் போகிறீர்கள்? - வரும் ஏதோ ஒரு திங்களில் அந்த நூலின் வாசிப்பனுபவம் எழுதும் போது உங்களுக்குத் தெரியத்தானே போகிறது….  சரி இந்த வாரத்தின் சுஜாதா நூல் வாசிப்பனுபவத்திற்கு வருவோம்.  


அவரது முன்னுரையில் சுஜாதா சொன்னது போல, 1987-ஆம் ஆண்டு ”குங்குமச் சிமிழு”க்காக எழுதப்பட்ட கதை! 2004-இல் விசா பதிப்பகத்தின் புதிய பதிப்பாக வெளியிட்டு இருக்கிறார்கள்.  நான் படித்தது கிழக்கு வெளியீடு - அமேசான் கிண்டில் தளத்தில் Kindle Unlimited Subscription மூலமாக! “17 ஆண்டுகள் கழித்தும் சுவாரஸ்யமான கதைகளுக்கு செலாவணி இருப்பது என் போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருகிறது” என்று விசா பதிப்பக வெளியீடுக்கான முன்னுரையில் சொல்லி இருக்கிறார் சுஜாதா!  எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவரது எழுத்திற்கு வரவேற்பு இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  அவருக்காகவே சில வாசகர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.  இத்தனை வருடங்கள் கழிந்த பிறகும் அவரது நூல்களுக்கான வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது என்பதை சமீபத்திய புத்தகத் திருவிழா சமயத்திலும் பார்த்தேன் - பெரும்பாலான கடைகளில் சுஜாதா புத்தகங்கள் நிறையவே இருந்தன.


வித்தியாசமான கதைக்களன் - ஒரு சர்க்கஸ் கம்பெனியில், கண்களைக் கட்டிக்கொண்டு சற்றே தொலைவில் ஒரு பெண் தன் தலையில் வைத்திருக்கும் ஆப்பிளை தன் வில்லிலிருந்து புறப்படும் அம்பு கொண்டு நிலைகுத்தச் செய்யும் பெர்ஃபார்மர்.  அதே சர்க்கஸில் தான் பிறந்தவர் - அப்பா ட்ரபீஸ் பெர்ஃபார்மர்.  அம்மா புலி, சிங்கம் இவற்றை எல்லாம் தழுவிக் கொடுத்து தன் தலையை, அவற்றின் வாய்க்குள் நுழைத்து எடுத்துச் சிரிக்கும் பெர்ஃபார்மர்.  இருவருமே தனித்தனி விபத்துகளில் - வலையிலிருந்து விலகி விழுந்து ஒரே ஒரு நிமிஷத்தில் அப்பா….  புலிக்கு அன்றைக்கு மூடு சரியில்லையோ என்ன எழவோ, அம்மாவை ஒரே சவட்டு சவட்டி விட, கோமாவில் கிடந்து  மாண்டு போனாள்.  ராதா என்கிற ராதாகிருஷ்ணன் தான் இந்தக் கதையின் நாயகன்.  


அம்பை எய்யும் நாயகன் ராதா என்றால் தன் தலையில் ஆப்பிளை வைத்துக் கொண்டிருக்கும் கிரிஜா என்கிற மலையாளப் பெண் இந்த நூலில் வரும் கதாபாத்திரங்களில் ஒருவர்.  ஒரு சந்தர்ப்பத்தில் கிரிஜாவின் மீது ராதாவிற்கு ஈர்ப்பு ஏற்பட, இருவரும் இணைகிறார்கள் - திருமணத்திற்கு முன்னதாகவே! ஆனால் ஏதோ பிரச்சனையில் ராதா மீதான ஈர்ப்பு வேறு ஒருவருடன் உண்டாக கிரிஜா விலகுகிறாள்.  ஒரு முறை கிரிஜா தலையில் ஆப்பிளுடன் தயாராக நின்று கொண்டிருக்க, கோபம் கொண்ட ராதா அம்பினை ஆப்பிள் மீது செலுத்தாமல் கிரிஜாவின் மார்பில் செலுத்திவிடுகிறான்.  கிரிஜாவுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்றாலும் கேஸ் நடந்து சிறைக்குச் செல்கிறான் ராதா.  சில வருடங்கள் ஜெயில் வாழ்க்கை.  


வெளியே வந்தாலும், சிறை சென்றவன் என்பதால் பெரிதாக வேலை எதுவும் கிடைக்கவில்லை.  சர்க்கஸ் கம்பெனிக்குச் சென்று மீண்டும் வேலை பார்க்க இஷ்டமில்லை.  எப்படியோ வாழ்க்கை சென்று கொண்டிருக்க பழைய சர்க்கஸ் கம்பெனி முதலாளி தனது நண்பரின் நிறுவனத்தில் மேனேஜர் வேலை செய்கிறாயா என்று கேட்டு அனுப்புகிறார். அந்த மேனேஜர் எதற்காக இவரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார் - அதிலும் ராதாவின் ஜெயில் தண்டனை, அது எதற்காகக் கிடைத்தது என்கிற விவரங்கள் தெரிந்தும் ஏன் வேலைக்கு வைத்துக் கொண்டார் என்பதில் மர்மம் இருக்கிறதோ என்கிற சந்தேகத்துடன் மேலே படித்துக் கொண்டு போகிறோம்.  ஒரு சமயம், தனது மனைவி மந்தாகினி மதுரைக்கு வருகிறார்.  அவரை நன்கு கவனித்துக் கொண்டு, அவர் சொல்லும் வேலைகளைச் செய்து, பத்திரமாக அவரை சென்னைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என்று ராதாவிற்கு நிறுவனத்தின் முதலாளி கட்டளை இடுகிறார்.  தனியாக எங்கேயும் விட்டுவிடாதே, கவனமாக இருக்க வேண்டும் - என்கிற கட்டளையுடன்.


மதுரைக்கு வந்த முதலாளியின் மனைவி வித்தியாசமானவராக இருக்கிறார்.  எதைஎதையோ செய்கிறார்.  ஒரு இரவு நேரத்தில் 100 கிலோமீட்டர் தொலைவில் ஏதோ ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று ராதாவையும் அழைத்துக் கொண்டுச் சென்று அங்கே கடற்கரையில் கூத்து பார்க்கிறார்.  அங்கே தனது உடைகளைக் களைந்து கடலில் நீராடுகிறார்.  அங்கே சந்தர்ப்பவசமாக ராதாவுடன் கலக்கிறார்.  ஒன்றுமே நடக்காத மாதிரி சென்னைக்கு அந்த மந்தாகினி திரும்பினாலும், ராதாவினால் மந்தாகினியை மறக்க முடியவில்லை.  நடந்தது நடந்துவிட்டது - என்னைச் சந்திக்க முயலாதே! என்று மந்தாகினி சொல்லிச் சென்றாலும் எப்படியாவது சந்தித்து பேச வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது ராதாவிற்கு.  போவதற்கு முன்னர் மந்தாகினி ராதாவிடம் இருக்கும் அம்பு ஒன்றை நினைவிற்காக வேண்டும் என்று எடுத்துச் செல்கிறார்.  


மந்தாகினியை மறக்க முடியாத ராதா ஒரு முறை சென்னைக்குச் சென்று பார்க்க முயல்கிறார்.  பார்க்க முடியாததால், கம்பெனியின் அலுவலகத்திற்குச் சென்று முதலாளியைப் பார்க்க அவர், மந்தாகினியை நீ பார்க்கவில்லையா?  மதுரைக்கு வந்தபிறகு அவளிடம் நல்ல மாற்றம் - தற்கொலை முயற்சிகளை கைவிட்டு விட்டாள் என்று புதிய கதை ஒன்றைச் சொல்கிறார். என்னது மந்தாகினி தற்கொலைக்கு முயற்சிக்கிறாரா? மந்தாகினியைச் சென்று பார்க்கும்போது, அவள் ராதாவிடம் “இறப்பு” குறித்து என்ன நினைக்கிறாய் என்றெல்லாம் பேசுவதுடன், மதுரை வந்த போது கிடைத்த அனுபவங்கள் மிகவும் பிடித்திருந்தது என்றதோடு, மீண்டும் ஒரு முறை அங்கே அந்த இரவில் இருவரும் சேர்கிறார்கள்.  ராதாவிடமிருந்து கொண்டு வந்த அம்பு அந்த வீட்டின் சுவற்றில் அழகாக வைக்கப்பட்டு இருக்கிறது.  முதலாளி வந்து விட, ராதா வீடு திரும்புகிறான். 


நள்ளிரவில் ராதா தங்கியிருக்கும் விடுதியின் கதவு தட்டப்பட, வெளியே பார்த்தால் காவல்துறை நண்பர்கள்.  மந்தாகினி தனது நெஞ்சில் அம்பை வைத்துக் குத்திக் கொண்டு இறந்து விட்டாள் என்பது தான் செய்தி!  காவல்துறையின் சந்தேகம் ராதாவின் மீது!  மந்தாகினி இறந்ததற்குக் காரணம் தற்கொலையா? அல்லது கொலையா? காரணங்கள் என்ன இருக்கமுடியும் ? காவல்துறை தனது விசாரணையை எந்தப் பக்கம் கொண்டு செல்கிறது, கடைசியில் என்ன நடக்கிறது?  என்பதெல்லாம் விறுவிறுப்பாகவே கொண்டு செல்கிறார் சுஜாதா.  தனது முன்னுரையில் சொன்னபடி “நாவல் இறுதியில் ஒரு ‘ஆம்’, ‘இல்லை’ வார்த்தையின் தேர்வில் வந்துமுடிகிறது. வாசகர்களிடம் அம்முடிவை விட்டுவிடுவது எனக்குப் பிடித்த உத்திகளில் ஒன்று.  படித்துப் பார்த்தால் இப்படிப்பட்ட முடிவு தவிர்க்க முடியாதது என்பது வாசகர்களுக்குப் புரியும்” என்கிறார்.  ஆம், கதையின் முடிவில் ஒரு பதில் தேவை - ஆம் அல்லது இல்லை!  என்பதில் ஒரு வார்த்தை தான் தேவை - எது முடிவாக இருக்க முடியும்!  கதையை வாசித்துப் பாருங்களேன்!


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு வாசிப்பனுபவம் குறித்த பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

2 மார்ச் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....