வெள்ளி, 27 மார்ச், 2026

சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் - சமயபுரத்திற்கு ஒரு நடைப்பயணம்…. - பகுதி இரண்டு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் - பகுதி ஒன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் தொடரின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம்!  தொடர்ந்து நடப்போம் வாருங்கள் நண்பர்களே…




சாலையோரத்தில் செவ்விளனி....

ஒரு கிலோமீட்டர், இரண்டு கிலோமீட்டர் என தொடர்ந்து நடந்து கூத்தூர் தாண்டியபிறகு, சாலையோரத்தில் ஒரு தள்ளுவண்டி. அதன் மீது கொத்துக் கொத்தாக செவ்விளனி! அதை வைத்திருந்த நபரிடம் இரண்டு இளநீர் வெட்டித் தரச் சொன்னேன். ஒரு இளநீர் 60 ரூபாய்! சற்றே அதிகம் என்று தோன்றினாலும் நிறைய இளநீர் இருந்தது.  கூடவே கொஞ்சம் தேங்காய் வழுக்கையும்! இரண்டு பேரும் அதனை அருந்தி, சாப்பிட்டு முடித்தபின்னர் அவர் வண்டியில் வைத்திருந்த QR Code Scan செய்து பணத்தினைச் செலுத்தியபிறகு தொடர்ந்து நடந்தோம். சில கிலோமீட்டர்கள் நடந்த பிறகு சாலையோரத்தில் ஒரு சிறு மாரியம்மன் ஆலயம்.  அதன் வாசலில் நிறைய நாற்காலிகள் போட்டு வைத்திருந்தார்கள். ஆலயத்தில் ஒருவரும் இல்லை.  நானும் மகளும் அந்த மாரியம்மனை வணங்கி ஐந்து நிமிடங்கள் அந்த நாற்காலிகளில் அமர்ந்து ஓய்வெடுத்தோம்.  அதன் பிறகு தொடர்ந்து நடந்தோம். 


ஆங்காங்கே சமயபுரம் காவல் நிலையம் சார்பாக நடந்து செல்லும் பாதசாரிகளை கவனமாகச் செல்லும்படிச் சொல்லும் பதாகைகளும், வாகனங்களுக்கு பாதசாரிகள் நடந்து செல்வதால் கவனமாகச் செல்லும்படி அறிவுறுத்தும் பதாகைகளும் வைத்திருந்தது நல்ல விஷயம்.  நெடுஞ்சாலைக்கு குறுக்கே நடந்து செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாலும் சில பாதசாரிகள் நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் வேகமாகச் செல்லும்போது பாதையைக் கடப்பது சற்றே பாதுகாப்பற்ற செயலாகவே இருக்கிறது. தம் திறமை மீது அதீத நம்பிக்கை கொண்டவர்களாக அல்லது அவர்கள் வழிபடும் மாரியம்மன் அவர்களைக் காப்பாள் என்ற நம்பிக்கை காரணமாக நெடுஞ்சாலைக்குக் குறுக்கே சென்று நிழல் வரும் பக்கமாக நடப்பவர்களைப் பார்க்க முடிந்தது.  கவனமாகக் கடக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டால் நல்லதே.  நானும் மகளும் கூட ஒரு இடத்தில் இப்படிக் கடக்க வேண்டியிருந்தது. 



நல்ல மனம் வாழ்க....

நடக்கும் பாதையில் ஒன்றிரண்டு இடங்களில் பாதயாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான கூடங்கள் இருந்தாலும் அவற்றில் மனிதர்கள் யாருமே இல்லை. ஒரு வேளை நாங்கள் சென்ற சமயத்தில் இல்லை போலும்.  ஆனாலும் அப்படியான இடங்கள் எங்கேயும் ஓய்வெடுக்காமல் நடந்து சென்று கொண்டிருந்தோம். அப்போது வழியில் பார்த்த ஒரு பதாகை கவனத்தினை ஈர்க்கும் விதத்தில் இருந்தது.  சொல்ல வந்த விஷயம் அப்படி!  என்ன சொன்னது அந்தப் பதாகை! “நீரும் சோறும் விற்பனைக்கல்ல! பசித்த மனிதர்கள் எல்லோரும் உண்ணப் பிறந்தவர்கள். சமைக்கப்பட்ட உணவு எல்லோருக்கும் பொதுவானது. அனைவருக்கும் சமம் உணவகம்.  உணவின் விலை உங்கள் விருப்பம். பணம் இல்லை என்றாலும் பசி ஆறலாம்!”  சொல்ல வரும் விஷயமும் அவர்களது செயலும் எத்தனை புனிதமானது என்று தோன்றியது. பதாகையை மட்டுமே அங்கே பார்த்தோம் - அந்த உணவகம் சற்றே உள்ளே இருக்கக் கூடும். சென்று பார்க்கவில்லை.



சாப்பிட வாங்க செல்லங்களா....
அழைக்கும் மூதாட்டி...

வழியில் ஹோட்டல் தாய் என்று உணவகம்.  அங்கே வயதான தாய் ஒருவர் கைகளில் மஞ்சள் வண்ண கொடியை கையில் வைத்து ஆட்டிக் கொண்டே இருந்தார்.  உணவகத்திற்கு உள்ளே வந்து சாப்பிட சாலையில் செல்லும் வாகனங்களை அழைக்கும் விதமாக இருப்பது அவருக்கான வேலை!  நாள் முழுவதும் இப்படி கையை ஆட்டிக் கொண்டே இருந்தால் எப்படி இருக்கும்? நிச்சயம் கை வலிக்கும்! நின்று கொண்டே இருப்பதால் கால்களும் வலிக்கும்! ஆனாலும் இந்த வயதிலும் உழைத்தால் தான் சோறு என்பதான நிலையில் அவரை வைத்திருக்கும் இறைவனை என்ன சொல்ல! அவரவருக்கான நிலமை அவரவர் செய்த, செய்து கொண்டிருக்கும் செயல்களால் உண்டாவது என்று சமாதானம் சொன்னாலும், சில சமயங்களில் ஏன் இவர்களுக்கு இந்த நிலை என்று தோன்றத்தான் செய்கிறது.  வழியில் இது போன்ற முதியவர்கள் இரண்டு பேரைப் பார்க்க முடிந்தது.  ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் வேதனை தான் மிஞ்சியது! அவர்களின் வாரிசுகள் ஏன் இப்படி கைவிட்டு விட்டார்கள்? என்ற கேள்வியும் மனதிற்குள்!



அப்பாவின் சட்டையைப் பிடித்தபடி நடக்கும் சிறுவன்...
அந்தப் பிடிப்பில் தெரிகிறது நம்பிக்கை....

தொடர்ந்து நடந்தபோது எங்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது ஒரு அப்பாவும் அவரது மகனும்.  மகன் தந்தையின் சட்டையை பிடித்தபடி நடக்க, அப்பா, வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே நடந்து கொண்டிருந்தார்.  அப்பா மகனைக் கவனிக்காத மாதிரி இருந்தாலும், மகன் கைப்பிடியிலிருந்த சட்டை சற்றே விடுபட்டாலும் உடனே திரும்பிவிடுவார் என்ற நம்பிக்கை அந்த மகனுக்கு மட்டுமல்ல எனக்கும் இருந்தது.  அப்பா மீது எத்தனை நம்பிக்கை அந்த மகனுக்கு! இந்த வயதில் இப்படி இருக்கும் சிறுவன் ஆனால் வளர்ந்து ஆளான பிறகு அப்படி யோசிப்பானா என்ற சிந்தனையும் மனதுக்குள் வந்து போனது.  வளர்ந்த பிறகு அப்பா, அம்மா குறித்த எண்ணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிடுகிறது! அப்பாவிடம் அதிகம் பேசாத மகன்களே இங்கே அதிகமாக இருக்கிறார்கள் என்ற சிந்தனைகளுடன் எனக்கு முன்னால் நடந்து செல்லும் மகளைக் கவனித்தபடியே நானும் என் நடையைத் தொடர்ந்தேன்.

 



கோவில் செல்லும் வழியில் கடைகள்...

தொடர்ந்து நடந்த நாங்கள் ஆலயம் இருக்கும் சாலையில் நடந்த போது இருபுறமும் கடைகள் - பட்டாணி, அவல், பொட்டுக்கடலை விற்கும் கடைகள், பக்தர்களை ஈர்க்கும் விதமாக பல பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பொரி உருண்டைகள் விற்பனை செய்யும் கடைகள் என அனைத்தையும் கவனித்தபடியே நடந்தோம்.  ஆலயத்தில் 100 ரூபாய் கட்டண தரிசனம், பொது தரிசனம் என இரண்டு வழிகள்! இதைத் தவிர செல்வாக்குள்ளவர்கள் பின்புறத்தில் இருக்கும் வடக்கு வாசல் வழியாகச் செல்வதும் நடக்கிறது.  வளாகத்திற்கு அருகே இருக்கும் Bathroom வசதிகளைப் பயன்படுத்திய பிறகு காலணிகளை அதற்கான இடத்தில் வைத்து விட்டு நுழைவாயிலை நோக்கி நடந்தோம்.  ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் நிறைய ஏற்பாடுகள் - நேரடியாக ஆலயத்திற்குள் சென்று விட முடியாத அளவிற்குச் சுற்றிச் சுற்றிச் செல்லும் விதமாக நிறைய கம்பித் தடுப்புகள் இருக்கின்றன.  


சமயபுரம் ஆலயம் என்றதும் நினைவுக்கு வருவது அங்கே இருக்கும் சில வழிபாட்டு வழிமுறைகள். உடல் உறுப்புகளின் தகடுகள் அங்கே நிறைய கிடைக்கும் - குறிப்பாக கண் மலர் என்று சொல்லப்படும் தகடுகள். அவற்றை வாங்கிச் சென்று ஆலயத்தின் உண்டியலில் போட்டு விடுவார்கள்.  அதைப் போல இங்கே உப்பும் மிளகும் அதிகம் விற்பனை செய்வார்கள். சின்னச் சின்ன கூம்பு வடிவ பொட்டலங்களில் விற்பனை செய்யப்படும் உப்பை பக்தர்கள் வாங்கிச் சென்று ஆலயத்திற்குள் இருக்கும் அதற்கான இடத்தில் சேர்த்து விடுவதும் வழக்கமாக இருக்கிறது.  பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு ‘கரும்புத்தூளி எடுத்தல்’ என்ற விசேஷப் பிரார்த்தனை செய்து கொள்வது இங்கே பிரசித்தம்.  அன்னையின் அருளால் அப்பெண் கருவுற்று, அவரது சீமந்தம் முடிந்த பின்னர் சீமந்தப் புடவை வேஷ்டியை பத்திரமாக வைத்திருந்து, குழந்தை பிறந்து 6வது மாதத்தில் பிரார்த்தனை நிறைவேற்றுகின்றனர். தாங்கள் பத்திரப்படுத்திய சீமந்தத் துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். நாங்கள் இப்படியான நேர்த்திக் கடன் செய்த ஒரு தம்பதியினரைக் கண்டோம். 


சமயபுரம் மாரியம்மன் குறித்த வேறு சில தகவல்களுடன் அடுத்த பகுதியில் எழுதுகிறேன்.  அதுவரை தொடர்ந்து இணைந்திருங்கள் நண்பர்களே….


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

27 மார்ச் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....