அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி அறுபத்தி மூன்று பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் தொடரின் முதல் இரண்டு பகுதிகளுக்கான சுட்டி கீழே….
சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் - பகுதி ஒன்று
சமயத்தில் காப்பாள் சமயபுரத்தாள் - பகுதி இரண்டு
இத்தொடரில் தொடர்ந்து இணைந்திருக்கும் நண்பர்களுக்கும், முதல் இரண்டு பகுதிகளைப் படித்த, கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. தொடர்ந்து வாசிப்போம் வாருங்கள்…
சமயபுரம் மாரியம்மன் குறித்த கதைகள் தான் எத்தனை எத்தனை. ஆதி காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வரும் கதைகளைத் தவிர நிகழ்காலத்திலும் அம்மன் அருள் புரிந்த நிகழ்வுகளை அவ்வப்போது யாரேனும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். தன் பக்தர்கள் மீது மாரியம்மனுக்கு தீராத ப்ரியம் உண்டு என்பதை உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூரிலிருந்து வரும் பக்தர்களும் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இங்கே வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறதே தவிர குறைவதே இல்லை. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது போலவே இங்கே இந்த ஆலயத்தினை வைத்து வயிற்றுப் பிழைப்பை நடத்தும் வியாபாரிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கிறார்கள். பொது தரிசன வழியில் செல்லும்போது அந்த தடுப்புக் கம்பிகளின் வெளிப்புறத்தில் அமர்ந்திருக்கும் வியாபாரிகள், தர்மம் கேட்பவர்கள் ஆகியவர்களின் எண்ணிக்கை பக்தர்களின் கூட்டத்திற்கு தகுந்தமாதிரி விகிதத்தில் இருக்கத்தான் செய்கிறது.
பொது தரிசன வழியில் சில வசதிகளையும் செய்திருக்கிறார்கள் கோவில் நிர்வாகத்தினர் - பலரும் சொல்வது போல அவர்களது நடவடிக்கைகள் அறமில்லாத் துறை என்று சொல்லும்படிதான் இருக்கின்றன - ஆயினும் இந்த வசதிகளைச் - குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதிகள் செய்ததற்கேனும் அவர்களைப் பாராட்டலாம். ஆதிகாலத்தில் கட்டப்பட்ட ஆலயம் அப்படியே இருக்க, சுற்றிலும் இருக்கும் மண்டபங்கள் நன்றாகவே கட்டப்பட்டு இருக்கின்றன. அதிலும் மண்டபத்தின் மேற்கூரை - அதாவது விதானத்தில் வரையப்பட்டு இருக்கும் ஓவியங்கள் பிரமிப்பைத் தரும் விதமாக இருக்கின்றன. சப்தகன்னிகைகள், விநாயர், சக்தி ரூபங்கள், அம்மனின் விஸ்வரூப ஓவியம் என ஒவ்வொன்றும் பார்க்கப் பார்க்க பரவசம் தான். விதான ஓவியங்களை படம் எடுக்கலாம் அன்றால் அதற்கான வசதிகள் இல்லை என்பதால் ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே எடுத்தேன். அம்மனின் விஸ்வரூப ஓவியம் மிகப் பெரியது என்பதால் அதனை எடுக்க முடியவில்லை.
கொஞ்சம் கொஞ்சமாக வரிசையில் நகர்ந்து சென்று - இதோ அன்னையின் கர்ப்பக்கிரகம் அருகே சென்று விட்டோம். பக்தர்கள் கூட்டத்திலும் எங்கள் இருவரின் உயரம் காரணமாக சற்று தொலைவிலிருந்தே அம்மனின் முக தரிசனம் கிடைக்கப் பெற்றோம். வரிசையில் நகர்ந்தபடியே அம்மனின் தரிசனத்தினைக் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தோம். எப்படியும் சன்னதிக்கு அருகே செல்லும்போது பக்தர்களின் கூட்டத்தின் காரணமாக சில நொடிகளுக்கு மேல் அங்கே நிற்க விடமாட்டார்கள் என்பதால் இப்படி தூரத்திலிருந்தே அம்மனை தரிசித்தபடியே, நமது பிரார்த்தனைகளையும் சொல்லிக் கொண்டே செல்வது நல்லது. எனது பிரார்த்தனை பெரிதாக ஒன்றுமில்லை. எல்லோரும் நலமாக இருக்க வழிவகை செய்யம்மா என்பதாகவே இருக்கும் - இருந்தது. நெஞ்சம் நிறைந்த மகிழ்வுடன் அம்மனை தரிசித்து அம்மனின் பிரசாதமாக கொடுக்கப்படும் விபூதியை வாங்கி “எல்லோரையும் நல்லபடியாக வைத்திரு தாயே” என்று வணங்கி நெற்றியில் பூசிக்கொண்டு வெளியே வந்தோம். அம்மன் சிவஸ்வரூபமாகக் கருதப்படுவதால் இங்கே குங்குமத்திற்குப் பதில் விபூதி வழங்குவதுதான் வழக்கமாக இருக்கிறது.
இருந்த பெரிய வளாகத்தில் மூன்று பிள்ளையார்கள் ஒரே சன்னதியில் உண்டு! இச்சா சக்தி கணபதி, ஞான சக்தி கணபதி மற்றும் க்ரியா சக்தி கணபதி…. அதற்கும் ஒரு கதை உண்டு! 1970-களின் காலகட்டம். சமயபுரம் மாரியம்மன் அதிக உக்கிரத்துடன் இருக்க, அம்மனின் உக்கிரத்தை தணிக்க, பக்தர்களும் ஆலய நிர்வாகிகளும் காஞ்சி பெரியவரின் ஆலோசனை வேண்டினார்களாம். காஞ்சி பெரியவரின் ஆலோசனை படி ஆலய வளாகத்தின் வலப்புறத்தில், ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவம் கொண்ட மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். இந்த பிரதிஷ்டை வாயிலாக அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970-ல் கும்பாபிஷேகம் செய்தனர். அதன் பிறகு தான் அம்மன் சாந்த சொரூபியாக மாறி பக்தர்களுக்கு அருள் புரிந்தார் என்பதும் இங்கே சொல்லப்படும் நிகழ்வு. இந்தச் சன்னதியிலும் விபூதி பிரசாதம் வாங்கி நெற்றியில் பூசிக்கொண்டோம். அங்கிருந்து அகன்று மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தோம். தொடர்ந்து நடந்து வந்ததில் பெற்ற களைப்பினை போக்கிக் கொள்ள ஓய்வு தேவைப்பட்டது.
அப்படி அமர்ந்திருந்த போது சில பக்தர்கள் தட்டு நிறைய பூக்களை வைத்துக் கொண்டு அங்கே வந்த பக்தர்களுக்கெல்லாம் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். தற்போது அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்வு நடப்பதால் அவர்கள் எடுத்து வந்த பூவினை அம்மனுக்குப் படைத்து, அதனை அங்கே இருக்கும் மற்ற பக்தர்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள். மகளுக்கும் அப்படி கொஞ்சம் மலர் பிரசாதமாகக் கிடைத்தது. சில நிமிடங்கள் அங்கே அமர்ந்திருந்த போது கண்ட காட்சிகள் கொஞ்சம் முகம் சுளிக்க வைத்தன. ஆலயத்தின் உள்ளே தங்களது கைபேசிகள் மூலம் நிறைய பேர் நிழற்பட நிபுணர்களாக - அதிலும் குறிப்பாக Portrait Photography என்று சொல்லும்படியான படங்களை எடுத்துத் தள்ளினார்கள். படம் எடுக்கும் நபர்களும், படங்களுக்கு Pose கொடுக்கும் நபர்களும் அந்த ஆலயத்தினை ஏதோ பூங்கா போல பயன்படுத்திக் கொண்டது சற்றே எரிச்சலைத் தந்தது. ஆனாலும் இவையெல்லாம் கண்டு நாம் கொதித்துப் போவதில் பலன் இல்லை. நாம் நம் வேலையைக் கவனித்துக் கொண்டு இருத்தலே நலம்!
ஆலயத்தில் இருக்கும் அம்மனின் உருவம் மூலிகைகளால் உருவானது என்பதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் கிடையாது. வளாகத்தில் இருக்கும் ஒரு உற்சவ மூர்த்திக்குத் தான் அபிஷேகங்கள் செய்வது வழக்கம். அந்த ஆலயத்தில் மீண்டும் ஒரு முறை பிரார்த்தனை செய்து அங்கே தந்த குங்குமப் பிரசாதத்தினைப் பெற்றுக் கொண்டு நெற்றியில் தரித்துக் கொண்டோம். பொதுவாக ஆலயங்களுக்குச் செல்லும்போது கொஞ்சம் பேப்பர் எடுத்துச் செல்வது வழக்கம். இப்படித் தரும் விபூதி, குங்குமத்தினை மடித்து எடுத்துக் கொண்டு வருவதற்காகவே பேப்பர் எடுத்துச் செல்வேன். ஆனால் பெரும்பாலான ஆலயங்களில் பக்தர்கள் தங்களுக்குத் தரும் விபூதி, குங்குமத்தினை சுவர் ஓரமாக, தூண்களின் மீது என எங்கேயும் தூவிச் செல்வது வழக்கம். மஞ்சள் காப்பு, சந்தனம் போன்றவற்றைச் சுவற்றிலும், தூண்களிலும் தடவிச் செல்வதையே பெரும்பாலும் செய்கிறார்கள். என்னதான் ஆலய நிர்வாகத்தினர் அப்படிச் செய்யக்கூடாது என்று எழுதி வைத்தாலும் அதனைக் கடைபிடிப்பதில்லை.
இந்த முறை வருடத்தின் துவக்கத்தில் மொத்தம் நான்கு Daily Sheet Calendar-கள் கிடைத்தன. ஒன்றோ, இரண்டோ எங்களுக்குப் போதுமானது. ஆனால் வேறு யாரும் அவற்றை வாங்கிக் கொள்ள தயாரில்லை! அதனால் அந்த அட்டைகள் தனியாகவும் தேதி குறிப்பிட்ட தாள்களின் தொகுப்பு தனியாகவும் வீட்டில் இருந்தது. ஆலயத்திற்குச் செல்லும்போதே எனது கைப்பையில் அந்த இரண்டு தொகுப்புகளையும் போட்டுக் கொண்டு சென்றேன். உற்சவ மூர்த்தி அருகே இருந்த இடத்தில் நின்று கொண்டு நானும் மகளுமாக குங்குமம் பெற்று வரும் பக்தர்கள் மண்டப ஓரத்தில் போட்டு விடுவதற்கு முன்னராக தாள்களை நீட்டி முடிந்தவரை குங்குமம் கீழே விழுவதைத் தவிர்த்தோம் - ஏதோ நம்மால் ஆன உதவி. பலர் நன்றி சொல்லிச் செல்ல, ஒரு மனிதர், “ரொம்ப மெல்லிசா இருக்கே, இரண்டு இரண்டா குடுங்க!” என்று சொல்லிச் சென்றார். இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்வார்கள், அதனால் கண்டுகொள்ளாமல் வேலையைத் தொடர்ந்தோம்.
சிறிது நேரத்திற்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டு மனதில் மாரியம்மனைத் தொழுது ஆலயத்திற்கு வெளியே வந்தோம். பாதணிகள் வைத்த இடத்திலிருந்து அவற்றைப் பெற்றுக் கொண்டு சில நிழற்படங்கள் எடுத்தோம். இப்போதைய வழக்கப்படி, ஆலயத்திற்கு வெளியே ஒரு Photo Point வைத்திருக்கிறார்கள். பல இடங்களில் அந்த ஊரின் பெயரோடு I Love சேர்த்து, Photo Point வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். திருச்சியில் Main Guard Gate அருகே I Love Trichy என்ற Photo Point இருக்கிறது. அதே போல, சமயபுரம் ஆலயத்தின் அருகே Photo Point - நம்ம சமயபுரத்தாள் என்கிற board உடன்! அந்த இடத்தில் பக்தர்கள் சிலர் படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த இடத்தினை நானும் ஒன்றிரண்டு படங்கள் எடுத்தேன். அதன் பிறகு அங்கேயிருந்து பேருந்து நிலையம் நோக்கி நடந்தோம். வழியில் இருந்த கடை ஒன்றில் Glass 20 ரூபாய் என கரும்பு ஜூஸ் வாங்கி பருகிய பின்னர் பேருந்து வரும் நிறுத்தத்திற்குச் சென்றோம். ஆலயத்திற்கு வரும்போது நடந்தே வந்தாலும், திரும்பிச் செல்லும் போது பேருந்துப் பயணம் தான். நடக்கத் தெம்பு இருந்தாலும், நல்ல வெய்யில் இருந்ததால் பேருந்துப் பயணம் தான்.
சமயபுரத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டு திருவானைக்கோவில் நிறுத்தத்தில் இறங்கி எதிர்புறம் வந்து திருவரங்கம் பேருந்தில் ஏறிக் கொண்டோம். திருவரங்கம் பேருந்து நிலையத்திலிருந்து வீடு நோக்கி மீண்டும் நடை. காலை ஆறு மணி எட்டு நிமிடத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்ட எங்கள் பயணம் மதியம் 11.50 க்கு முடிந்தது! வீட்டில் வந்து அலைபேசியில் இருக்கும் Google Fit செயலியைப் பார்த்தபோது எங்கள் மொத்த நடையை இப்படிக் காண்பித்தது!
மொத்தத்தில் சனிக்கிழமை காலை நடை, நீண்டதொரு நடையாக, அன்னையின் அருள் பெற, அவளது தரிசனம் பெற உற்ற நடையாக அமைந்தது. சமயத்தில் அருள்வாள் சமயபுரத்தாள் என்ற வாக்கின் படி நாட்டினர் அனைவருக்கும் உகந்த சமயத்தில் நல்லதையே அருளட்டும் என்ற வேண்டுதலோடு இந்தத் தொடரினை நிறைவு செய்கிறேன். மீண்டும் வேறு ஒரு பயணம் குறித்த பதிவுகளுடன் உங்களைச் சந்திக்கும் வரை….
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
30 மார்ச் 2026










// கொஞ்சம் கொஞ்சமாக வரிசையில் நகர்ந்து சென்று - இதோ அன்னையின் கர்ப்பக்கிரகம் அருகே சென்று விட்டோம். //
பதிலளிநீக்குஇரண்டு வருடங்கள் முன்பு நாங்கள் சென்ற அனுபவம் நினைவுக்கு வருகிறது.
அந்த கர்ப்பக்கிரகமும் அம்மனின் முகமும்... அப்படியே மனக் கண்ணில் வந்துபோனது.
// எங்கள் இருவரின் உயரம் காரணமாக சற்று தொலைவிலிருந்தே அம்மனின் முக தரிசனம் கிடைக்கப் பெற்றோம். //
பதிலளிநீக்குஹா.. ஹா.. நான் முன்னாலிருப்பவர் பக்கவாட்டில்தான் பார்க்க முயல்வேன். அதுவரை அவர் முதுகுதான் தெரியும் எனக்கு!
// அதிலும் குறிப்பாக Portrait Photography என்று சொல்லும்படியான படங்களை எடுத்துத் தள்ளினார்கள்.//
பதிலளிநீக்குPortrait Photography என்று சொல்லும்படியான?? அதனால் என்ன? புரியவில்லை.
நடையிலும் நடை ஆக்கபூர்வமான ஆன்மீக நடை!
பதிலளிநீக்குகோவில் வெளியே வந்தால் சில மூன்றாம்பாலினத்தாரின் தொல்லைகள் இருந்ததே.. இப்போது இல்லையா? ஒவ்வொருவரையும் தப்பிக்க விடாதபடி மடக்கினர். அதற்கு தலைமை போல ஆஜானுபாகுவாக ஆகிருதியுடன் ஒரு திருநங்கை இருந்தார்.
அஞ்சு பத்து கொடுத்தால் ஆட்சேபித்து போக விடாமல் தொல்லை செய்தார். ஓரளவுக்கு கணிசமாகக் கொடுத்ததும் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து அனுப்பினார்(கள்). நான் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டை முன்னதாகவே எடுத்து தயாராக வைத்து விட்டேன்.
நான் குறுக்கு வழியில் ஐநூறு ரூபாய் பேசி உள்ளே சென்றேன். நான் தொடர்பு கொண்டவர் அல்லது என்னைத் தொடர்பு கொண்டவர் உள்ளேயிருந்து வந்த ஒருவரிடம் பேசி என்னை அவரிடம் வெளியே வரும் வாசலுக்கு அருகே ஒபபடைத்து அகன்றார்.
பதிலளிநீக்குஅவர் எங்களிடம் 'எவ்வளவு பேசி இருக்கிறார்' என்று விசாரித்துக் கொண்டார்/ அவருக்கான கமிஷன் கொடுக்கும்போது குறைத்துச் சொல்லி விடுவாராம். நாங்கள் தரிசனம் முடிந்து வெளியே வந்தால் அந்த ஏஜென்ட்டைக் காணோம். அப்படியே வந்திருக்கலாம். ஆனால் திருட்டுதனத்திலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும் அல்லவா..!!!! அதனால் அவரைத் தேடிச்சென்று ரூபாயைக் கொடுத்து விட்டு வந்தேன்!