புதன், 23 மார்ச், 2016

பூ மழை பொழியும் ஹோலி!



நாளை வட இந்தியா முழுவதும் ஹோலி கொண்டாடப் போகிறார்கள்.  வட இந்தியாவில் குளிர் காலம் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்க இருக்கும் தினங்களில் தான் ஹோலி கொண்டாடுவார்கள்.  தில்லி வந்த புதிதில், குளிர் பற்றி சொல்லும் போது, தீபாவளிக்கு அடுத்த நாள் குளிர் ஆரம்பிக்கும், ஹோலி அன்று குளிர் முடிந்து வெயில் காலம் ஆரம்பிக்கும் என்று சொல்வார்கள் – தீபாவளிக்கு அடுத்த நாள் குளிர்கால உடையைப் போட்டால் ஹோலி அன்று தான் கழற்றுவார்கள் என கிண்டல் செய்வதும் உண்டு! சாதாரணமாக ஹோலி என்றால் வண்ண வண்ணப் பொடிகளை தூவியும், தண்ணீரில் கலந்தும் விளையாடுவது என்ற எண்ணம் தான் வட இந்தியர்கள் அல்லாதவர்களுக்கு இருக்கும். 



ஆனால் இந்த ஹோலியில் நிறைய பண்டிகைகள் உண்டு. ஹோலி வருவதற்கு சில நாட்கள் முன்னதாகவே இந்த ஹோலி பண்டிகைகள் ஆரம்பித்து விடும் – குறிப்பாக ப்ரஜ் பூமி என அழைக்கப்படும் மதுரா, பிருந்தாவன், பர்சானா போன்ற இடங்களில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்த ஹோலி திருவிழாவாகவே கொண்டாடப்படுவது வழக்கம். சில வருடங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் ஹோலி சமயத்தில் அவரது ஊருக்கு அழைத்துச் சென்று இந்த கொண்டாட்டங்களில் என்னையும் பங்கு பெறச் செய்தார்.  அந்த சமயத்தில் சில வித்தியாசமான நிகழ்வுகளை நானும் பார்த்ததோடு, அவற்றில் பங்கும் பெற்றேன்.  வித்தியாசமான அனுபவம் அது!



பர்சானா கிராமம் – மதுரா, விருந்தாவன் அருகே இருக்கும் அழகிய கிராமம் – ராதையின் பிறந்த ஊர் அது! இங்கே ஹோலி சமயத்தில் “லட் மார் ஹோலி” என்பது மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள்.  லட் மார் ஹோலி பற்றி 2012-ல் எனது பக்கத்தில் ”அடி வாங்கும் கணவர்கள்[மஞ்சள் வண்ண எழுத்தில் சுட்டினால் பர்சானாவில் அடி வாங்கும் கணவர்கள் பற்றிய பதிவினை படிக்கலாம்!]எனும் தலைப்பில் எழுதி இருக்கிறேன். அதிலிருந்து சில வரிகள் இங்கேயும்!

ஹோலிப் பண்டிகை. ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா நகரின் அருகில் இருக்கும் “பர்சானா என்ற இடத்தில் இதற்கான தயாரிப்புகள் ஆரம்பித்து விடும்.  எதுக்குன்னா “லட் மார் ஹோலி விளையாடத்தான்.  ஹிந்தியில் “லட் என்றால் பெரிய குச்சி. “மார்” என்றால் அடிப்பது. பெரிய குச்சிகளால் அடித்து, கலர் பொடி தூவி விளையாடுவது தான் இந்த ”லட் மார் ஹோலி.
 கிருஷ்ண பகவான் அவருடைய காதலி ராதாவின் கிராமமான பர்சானாவிற்கு வந்து அவரை கிண்டல் செய்ய, பர்சானாவில் உள்ள பெண்கள், அவரைத் துரத்தியடித்தார்களாம்.  அன்றிலிருந்து இன்று வரை கிருஷ்ண பகவானின் ஊரான ”நந்த்காவ்ன் கிராமத்திலிருந்து ஆண்கள் எல்லாம் பர்சானாவிற்கு வர, அந்த ஊர் பெண்கள் அவர்கள் மீது கலர் பொடி தூவி அடித்து அனுப்புவார்கள்.


 முன்பெல்லாம் சாதாரணமாக ஒரு விழாவாக இருந்தது இப்போது நிறைய மாறிவிட்டதுஉத்திரப் பிரதேசம் மட்டுமல்லாது பக்கத்து மாநிலமான ஹரியானாவில் கூட இந்தலட் மார் ஹோலிநடக்கிறதுகிராமங்களில் கல்யாணமான பெண்கள் தனது கணவரைத் துரத்தித் துரத்தி அடிக்கிறார்கள்முறைப்பெண்களும் அவரது முறைமாமன்களை துரத்தி அடிக்கிறார்கள்அவருடன் கல்யாணம் ஆகாவிட்டாலும்! பெண்கள் அடிக்க, ஆண்கள் கேடயம் போன்ற ஒன்றால் தடுப்பார்கள்ஆனாலும் அடி விழுந்து விடும்!
 
என் அலுவலகத்தில் இருந்த நண்பர்ஆசாத் சிங்ஒவ்வொரு லட் மார் ஹோலி முடிந்தபின்னும் அலுவலகம் வரும்போது கை-கால்கள் வீங்கியபடி வருவதைப் பார்த்துஎன்ன இப்படி வீங்கியிருக்கே?”ன்னு கேட்டால் சந்தோஷமாய் பதில் சொல்வார் – “என் மனைவியும் மற்ற முறைப்பெண்களும் துரத்தித் துரத்தி அடித்தனர்எவ்வளவு நேரம் தான் தடுக்க முடியும்சில அடிகள் விழத்தானே செய்யும்!”.  சில கிராமங்களில் முறைப் பெண்கள் மட்டுமல்லாது எல்லாப் பெண்களும் ஊரில் உள்ள ஆண்களை துரத்தி அடிக்கிறார்கள்!



லட் மார் ஹோலி சரி, தலைப்பில் சொன்ன விஷயம் பற்றி ஒன்றுமே சொல்லவே இல்லையே என்று நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்.  இந்த சமயத்தில் பூக்களால் ஹோலி விளையாடுவதும் ஒரு வழக்கம். ஹோலிக்கு முன் வரும் ஏகாதசி அன்று விருந்தாவன் பாங்கே பீஹாரி மந்திர் [மஞ்சள் வண்ண எழுத்தில் சுட்டினால் அக்கோவில் சென்று வந்த அனுபவம் பற்றிய பதிவினை படிக்கலாம்!] என அழைக்கப்படும் கோவிலில் பல நூறு கிலோ பூக்களைத் தூவி ஹோலி கொண்டாடுவார்கள். காலை நான்கரை மணிக்கு கோவில் திறந்தவுடன் இந்த பூ மழை பொழியும் ஹோலி ஆரம்பித்து சுமார் அரை மணி நேரம் நடக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரது மேலும் கோவிலின் உள்ளே இருந்து பூக்களை மேலிருந்து தூவியபடியே இருப்பார்கள்.  பார்க்கவே அத்தனை அழகாய் இருக்கும்.  அத்தனை பூவும் வீணாகப் போகிறதே என்ற எண்ணம் மனதுக்குள் வந்தாலும், இதுவும் ஒரு வித வித்தியாசமான அனுபவம் தான்! 



தில்லி வந்த புதிதில் இப்படி ஒரு பூ மழை பொழியும் ஹோலியில் நானும் கலந்து கொண்டதுண்டு. அந்த நாட்களில் என்னிடத்தில் கேமிராவும் இல்லை – புகைப்படம் எடுக்கவும் தெரியாத நாட்கள் அவை! இன்றைக்கு காமிராவும் இருக்கிறது.  ஏதோ சுமாராக புகைப்படம் எடுக்கவும் தெரிந்திருப்பதாக எனக்குள் ஒரு நினைவும் உண்டு…. ஆனாலும் இருக்கும் பணிச் சூழலில் அலுவலக நாட்களில் வெளியே செல்வது கடினமாக இருக்கிறது.  விடுமுறை என்றால் வெள்ளி இரவு புறப்பட்டு திங்கள் காலைக்குள் வருவது போலத் தான் செல்ல வேண்டும்! அடுத்த ஹோலி சமயத்தில் செல்ல முடியுமா என்று பார்க்கலாம்!

நேற்று விருந்தாவன் நண்பர் ஒருவர் பூமழை பொழிந்த ஹோலி பண்டிகையில் கலந்து கொண்ட அனுபவத்தினை விவரித்த போது எனக்கு மீண்டும் எப்போது அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று ஏக்கம் வந்தது உண்மை! 

நீங்கள் செல்ல முடிகிறதோ இல்லையோ, இந்தப் பதிவின் மூலம், இதில் கொடுத்திருக்கும் படம் மூலம் உங்களுக்கும் பூமழை பொழியும் ஹோலியில் கலந்து கொண்ட அனுபவம் கிடைக்கட்டுமே என்பதற்காகவே இப்பதிவு. 

இங்கே பூக்களால் ஹோலி விளையாடுகிறார்கள் என்றால் வாரணாசியில் இருக்கும் மணிகர்ணிகா [g]காட்- மயானபூமி - அங்கே கொண்டாடப்படும் ஹோலி மிகவும் வித்தியாசமானது.  பொதுவாக காசியில் [வாரணாசி] இருக்கும் சாதுக்கள் மயானபூமியில் இருக்கும் சாம்பலை தூவி ஹோலி கொண்டாடுவார்கள். பொதுவாக ஹோலி கிருஷ்ணர் - ராதா விளையாடியதாக சொல்லப்பட்டாலும் இந்த ஹோலி ஷங்கர் மகாதேவ் விளையாடுவதாக சொல்கிறார்கள்.  இந்த ஹோலி மயானபூமியில் என்பதால் பெண்களுக்கு அனுமதி இல்லை!


படம்: இணையத்திலிருந்து...

“மசானே மே ஹோலி” என்று பெயரும் ஒரு பிரபலமான பாடலும் உண்டு.  பல பாடகர்கள் இதைப் பாடுகிறார்கள்.  அதில் பிரபலமான ஒரு பாடகர் - பண்டிட் சன்னுலால் மிஷ்ரா - அவரது பாடல் கேட்க விருப்பமிருந்தால் கேளுங்கள்! ஹிந்தி புரிந்தால் புரியும்..... சற்றே நீண்ட காணொளி என்பதையும் சொல்லி விடுகிறேன். பாடலிலேயே எப்படி விளையாடுவார்கள், யார் விளையாடுவார்கள் என்பதையும் சொல்வார் கேளுங்கள்!





பதிவினை ரசித்தீர்களா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

Photo Credit: Divyakshi Gupta.  Photos taken from the website: www.photogiri.com. Thanks Divyakshi. 

செவ்வாய், 22 மார்ச், 2016

சாப்பிட வாங்க: பட்டாடா நு ஷாக்…..




என்னம்மா கண்ணு! பேருலயே ஷாக் இருக்கே, சாப்பிட்டா ஷாக் அடிக்குமோ? என்ற பயம் தேவையில்லை.  குஜராத் மக்கள் சப்ஜி என்பதைத் தான் ஷாக் என்று சொல்கிறார்கள் அவர்கள் மொழியில்! பட்டாடா என்பது நம்ம உருளைக் கிழங்கன்றி வேறில்லை!  வட இந்தியர்களுக்கு உருளைக் கிழங்கில்லையேல் உயிரில்லை! அதை மற்ற எல்லா காய்கறிகள், பருப்பு வகைகள் என அனைத்துடனும் சேர்த்து சமையல் செய்வார்கள்.  வெண்டைக்காய் உடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைப்பதை நீங்கள் பார்த்ததுண்டா?  இங்கே நான் பார்த்ததுண்டு! சாப்பிட்டதும் உண்டு!

குஜராத் மாநில பயணம் செய்தபோது இப்படித்தான் எந்த உணவகத்திற்குச் சென்றாலும் மெனு கார்டைப் பார்த்த போது எல்லா சப்ஜிகளிலும் ஷாக்! அப்போது தான் எனக்குத் தெரிந்தது ஷாக் என்றாலும் ஷாக் அடித்தமாதிரி நாம் பயப்படத் தேவையில்லை என்பதை!  சரி வாங்க, இன்னிக்கு இந்த பட்டாடா நு ஷாக் செய்வது எப்படி என்பதைப் பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு [தோல் எடுத்தது – சற்றே பெரிய துண்டுகளாய்] - 2 ½ கப், தக்காளி – 1 [சற்றே பெரிய துண்டுகளாய்], கடுகு, ஜீரகம், பச்சை மிளகாய்-இஞ்சி விழுது, பெருங்காயம், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், ஜீரகப் பொடி, சர்க்கரை [1 ஸ்பூன்], எண்ணை, கொத்தமல்லி தழை – கொஞ்சம், தண்ணீர், உப்பு – தேவைக்கேற்ப!

எப்படி செய்யணும் மாமு:

வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். பட், படார் என வெடித்ததும், ஜீரகத்தினைச் சேர்க்கவும்.  அதுவும் வெடிக்கும் வரை காத்திருக்கவும்! அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை! இஞ்சி-பச்சை மிளகாய் விழுது மற்றும் பெருங்காயப் பொடியைச் சேர்க்கவும்.  வதக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் உருளைக் கிழங்குகளைச் சேர்த்து 3-4 நிமிடங்கள் வதக்கவும்.

நறுக்கி வைத்திருக்கும் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.  ஒரு ஸ்பூன் அளவு சர்க்கரை சேர்க்கவும்.  நான் பொதுவாக சர்க்கரை சேர்ப்பதில்லை – ஒரு அசட்டு தித்திப்பு இருக்கும் என்பதால்! மூன்று நிமிடங்கள் வரை வதக்கவும் – அதுக்குன்னு கடிகாரத்தைப் பார்த்தபடியே இருக்கத் தேவையில்லை! எல்லாம் ஒரு தோராயமான கணக்கு தான்!

மிளகாய்ப் பொடி மற்றும் மஞ்சள் பொடி சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கவும்.

1 ¼ கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.  கொஞ்சம் கொதிக்க ஆரம்பித்ததும் மூடி வைக்கவும்.  இரண்டு மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை மூடியை எடுத்து விட்டு கலக்கி விடவும்.  சுமார் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களுக்குள் உருளைக் கிழங்கு நன்கு வெந்து இருக்கும். தேவையெனில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்!

மூடியை எடுத்து விட்டு, ஜீரகப் பொடி, மற்றும் மல்லிப் பொடியைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். அடுப்பை அணைத்து விடலாம்!

வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொண்டு கொத்தமல்லித் தழைகளை தூவி அழகு படுத்துங்கள்…..  சப்பாத்தி மற்றும் பூரியோடு இதைச் சாப்பிட நீங்கள் நிச்சயம் ஷாக் ஆக மாட்டீங்க!  குஜராத்தி பாணி உருளைக் கிழங்கு சப்ஜி செய்து பார்த்து உங்களுக்குப் பிடித்ததா எனச் சொல்லுங்கள்!

மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்


வெங்கட்.

புது தில்லி. 

திங்கள், 21 மார்ச், 2016

மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில்

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 6

சென்ற பகுதியில் மணிப்பூர் நகரில் இருக்கும் வைஷ்ணவர்களின் மிக முக்கிய வழிபாட்டுத் தலம் ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தாஜி கோவில் மற்றும் ISKCON நிர்வகித்து வரும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில் ஆகிய இரண்டு வழிபாட்டுத் தலங்கள் பற்றி பார்த்தோம்.  அதன் பிறகு தேநீர் அருந்தி விட்டு நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது நகரில் அமைந்திருக்கும் ஒரு விளையாட்டு அரங்கம் நோக்கி தான்.


படம்: இணையத்திலிருந்து.....

மேரி கோம் – இவரை அறியாதவர் யார்? குத்துச் சண்டை விளையாட்டு வீரரான இவர்   மணிப்பூரைச் சேர்ந்தவர் தான். மணிப்பூர் நகரில் கால்பந்து தான் முக்கியமான இக்கால விளையாட்டாக இருந்து வந்திருக்கிறது. மேரி கோம் ஒலிம்பிக் போட்டிகளிலும் மற்ற பன்னாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்ற பிறகு எங்கே பார்த்தாலும் மேரி கோம் படங்களையும் அவரின் புகழையும் பார்க்க முடிந்தது. 

மேரி கோம் – மணிப்பூரின் ஒரு சாதாரண கிராமத்தில் “கோம்” எனும் பழங்குடியில் பிறந்தவர்.  மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் – பத்தாவது வகுப்பினைக் கூட முடிக்காதவர் – குத்துச் சண்டை விளையாட்டில் பயிற்சி பெற்று முன்னேற வேண்டும் என்ற வெறியில் படிப்பை விட்டவர் – பெண்களுக்கான விளையாட்டே இல்லை என்று அவர் பெற்றோர்களும் மற்றவர்களும் தடுத்தாலும் விடாது குத்துச் சண்டையில் பயிற்சி பெற்றவர்.  மணிப்பூரில் நடைபெற்ற ஒரு குத்துச் சண்டையில் பங்குகொண்டு முதன் முறையாக பரிசு பெற்று அந்த செய்தி நாளிதழில் வந்தபோது அவரது தந்தை மிகக் கடுமையாக கடிந்து கொண்டாராம். 


படம்: இணையத்திலிருந்து.....


என்றாலும் விடாது பயிற்சி பெற்று பல பதங்கங்களையும், கோப்பைகளையும் வென்றவர் – பத்தாவது படிப்பை நிறுத்திய பின்னர் போட்டிகளில் பங்கு கொண்ட பிறகு மீண்டும் தனிப்பட்ட முறையில் படிக்க ஆரம்பித்து பட்டம் பெற்றார்.  இந்திய அரசு அளிக்கும் அர்ஜுனா விருது, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ போன்ற பல பட்டங்களையும் வென்றார்.  மணிப்பூர் முழுவதும் எங்கே சென்றாலும் மேரி கோம் படங்களையோ, அவர் பற்றிய பதாகைகளையோ பார்க்க முடிந்தது.


படம்: இணையத்திலிருந்து.....


Magnificient Mary என்று மணிப்பூர் மக்களால் அழைக்கப்படும் மேரி கோம் தனது மாநிலத்தில் குத்துச் சண்டை பயிற்சி தருவதற்காகவே ஒரு பயிற்சி நிலையம் அமைத்து பலருக்கும் குத்துச் சண்டை பயிற்சி அளித்து வருகிறார்.  அவரது முழுப் பெயர் மாங்தே சுங்நேய்ஜங் மேரி கோம் என்பதாகும். எங்களது வாகன ஓட்டி ஷரத் அவர்களுக்கு தங்கள் மாநிலத்தின் பெருமையான மேரி கோம் பற்றி சொல்லும்போதே அத்தனை மகிழ்ச்சியும் குதூகலமும் அவருக்கு. ஷரத் தனது மகளையும் குத்துச் சண்டை பயிற்சி நிலையத்திற்கு பயிற்சிக்கு அனுப்புவதாகவும் சொல்லி அவருடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

எங்களது குழுவில் இருந்த சில நண்பர்களுக்கும் குத்துச் சண்டை மிகவும் பிடித்தமான விளையாட்டு என்று சொல்ல உடனேயே மேரி கோம் பிறந்த ஊரைச் சென்று பார்க்கலாமா என்று கேட்டார் ஷரத்.  இன்றைக்கு நேரம் இருக்காது, நாளை செல்லலாம் என்று அவரே சொல்லி விட்டு, அதற்கு பதிலாக இம்ஃபால் நகரில் இருக்கும் முக்கிய விளையாட்டு அரங்கமான குமான் லம்பக் விளையாட்டு அரங்கத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்.

பல மணிப்பூர் இளைஞர்களும் இளைஞிகளும் அங்கே கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்.  ஓட்டமும் பயிற்சிகளும் எங்களையும் அப்பக்கம் கொஞ்சம் இழுத்தது. மாலை நேரம் என்பதால் நாங்களும் அரங்கத்தினை ஒரு சுற்றாவது ஓடி வரலாம் என முடிவு செய்தோம். ஓடியும் வந்தோம்! இரண்டு சுற்று ஓடி வர, எங்களில் நால்வருக்கு மூச்சு வாங்கியது! உடற்பயிற்சி செய்யாமல் அலுவலகம் வீடு என இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்!

அங்கே இருந்த சில இளைஞர்களிடம் பேசி அவர்களது பிடித்தமான விளையாட்டு பற்றியும் கேட்டு அவர்களோடு சில மகிழ்வான நிமிடங்களைக் கழித்தோம். எங்களுடன் வந்திருந்த ஓட்டுனர் ஷரத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. அங்கே இருந்து புறப்பட்டு நாங்கள் தங்கியிருந்த Hotel Bheigo விற்கு வந்து சேர்ந்தோம்.  காலையில் எங்களது இருப்பிடங்களிலிருந்து புறப்பட்டது. தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதால் சற்றே ஓய்வெடுத்து விட்டு இரவு உணவு தேட வேண்டும்.  ஓட்டுனர் ஷரத்   நாங்கள் தங்குமிடத்திலேயே வட இந்திய உணவும் கிடைக்கும் எனச் சொல்லி புறப்பட்டார்.

நாளை காலை விரைவில் வரச் சொல்லி அவருக்கு விடை கொடுத்தோம்!  சற்று நேரம் ஓய்வெடுத்து அதன் பிறகு உணவகத்திற்குச் சென்றோம். நானும் நண்பர் பிரமோத்-உம் ஒரு அறையில் தங்க, சுரேஷ், சசி மற்றும்  நாசர் ஆகிய மூவரும் மற்ற அறையில் தங்கினார்கள்.  இங்கே இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும் – முதல் விஷயம் முதல் பகுதியில் சொன்னது போல என்னைத் தவிர மற்ற நான்கு நண்பர்களும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். நான் சாப்பிடுவதில்லை என்றாலும் மற்றவர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு பிரச்சனை இல்லை!

இரண்டாம் விஷயம் – என்னையும் நண்பர் பிரமோத்-ஐயும் தவிர்த்த மற்ற மூவரும் இப்படி பயணிக்கும் போது ஒன்றிரண்டு கோப்பை மதுபானம் அருந்துவது வழக்கம் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்தப் பழக்கம் எப்படி எல்லாம் தொடரப் போகிறது என்பதை போகப் போகச் சொல்கிறேன்!  இப்போதைக்கு இரவு உணவு பற்றிய விஷயத்திற்கு வருவோம்.

உணவகத்திற்கு சென்று என்ன இருக்கிறது எனக் கேட்க, வரிசையாக அசைவ உணவுகளாகவே சொல்லிக் கொண்டிருந்தார் அங்கே இருந்த சிப்பந்தி. கடைசியாக போனால் போகிறது என ஆலு மட்டர் [உருளைக்கிழங்கும் பட்டாணியும்], ஆலு கோபி [உருளைக்கிழங்கும் காலிஃப்ளவரும்] இருக்கிறது எனச் சொன்னார்.  நாங்கள் சப்பாத்தி, ஆலு கோபி, ஆலு மட்டர், சிக்கன் ஜிஞ்சர், எக் ஃப்ரைட் ரைஸ், ப்ளைன் ரைஸ், சப்பாத்தி என எங்கள் தேவையைச் சொல்லி காத்திருந்தோம்….

”காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!” என்று பாடாத குறை தான். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு தான் நாங்கள் சொன்ன உணவு வந்தது! அதற்குள் பசி எங்களைத் தின்றிருந்தது! எதிர் புறத்தில் அமர்ந்திருந்த மூன்று நண்பர்கள் அருந்தியிருந்த சுரா பானம் அதன் வேலையைக் காட்டத் துவங்கி இருந்தது! சிரிப்பும் பேச்சுமாக அவர்கள் தங்கள் பராக்கிரமங்களைச் சொல்லியபடியே உணவு உண்ண நானும் என்னுடைய பங்குக்கு சைவ உணவைச் சாப்பிட்டு முடித்தேன்!

பொதுவாக இரவு நேரம் உணவு சாப்பிட்ட பிறகு அப்படியே கொஞ்சம் நடப்பது வழக்கம்.  என்றாலும் அன்றைக்கு ஏனோ நடக்கத் தோன்றவில்லை.  அனைவரும் தங்குமிடத்திற்குத் திரும்பி உறக்கத்தைத் தழுவினோம் - நாளைய நாள் எங்களுக்குத் தரப் போகும் அனுபவங்களை மனதில் நினைத்தபடியே…..

இந்த பயணத்தில் முதல் நாள் நாங்கள் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் இப்பகுதியோடு முடிந்தன! அடுத்த பகுதியிலிருந்து இரண்டாம் நாள் அனுபவங்கள்! படிக்கத் தயாராக இருங்கள்…. நான் சற்றே உறங்கி விட்டு வருகிறேன்!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



ஞாயிறு, 20 மார்ச், 2016

சிலம்பு நடனம் – உத்திரப் பிரதேசத்திலிருந்து…..


தமிழர்களின் தற்காப்புக் கலைகளில் ஒன்று சிலம்பம்.  நமது கிராமங்களில் இன்று சிலம்பம் சொல்லித் தருபவர்களும், சிலம்பம்  பயன்படுத்துபவர்களும் அருகி வருகிறார்கள்.  சில மாதங்களுக்கு முன்னர் தில்லியில் ஒரு நிகழ்ச்சியில் கைகளில் குச்சி வைத்துக் கொண்டு நடனம் ஆடினார்கள் – உத்திரப் பிரதேசத்தின் “அவத்[dh]” பகுதி நடனம் அது. நடனத்தின் பெயரை அங்கே சொன்னாலும் என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. 

நமது சிலம்பாட்டத்தினை ஒத்திருந்தாலும் ஏதோ நடனம் போல ஆடுகிறார்கள்.  நமது சிலம்பம் பற்றி இணையத்தில் தேடிய போது சிலம்பம் கற்றுத் தரும் பள்ளி பற்றிய இணையதளம் ஒன்றினைப் பார்க்க முடிந்தது.  அதில் சிலம்பம் பற்றி எழுதி இருந்ததில் ஒரு பகுதி கீழே…  [நன்றி – சிலம்பம் ஆறுமுகம் தளம்]

இந்தியா வளமிக்க நாடு பலவகையான கலைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள தன்நிகரற்ற நாடு. தமிழ்நாடு மனித இனத்தோன்றலின் முன்னோடியாகவும் பல கலைகளின் பிறப்பிடமாகவும் விளங்குகிறது. சிலம்பக்கலை ஓர் தற்காப்புக்கலையாகும். தமிழகத்தின் பாரம்பரிய கலை மற்றும் அனைத்து தற்காப்பு கலைகளுக்கும் முன்னோடியாகும். சங்ககாலத்திற்கு முன்பிருந்தே சிலம்பக்கலையானது நடைமுறையில் இருந்து வருகிறது. சங்ககால பலமையான தமிழ்ச்சொற்கள் சிலம்பக்கலையில் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவது ஓர் சான்றாகும்.
 ஓடையில் ஓடுகின்ற தண்ணீரால் ஏற்படுகின்ற ஓசைக்கு சிலம்பல் என்று பொருள் காற்றில் மர இலைகள் ஆடும்பொழுது ஏற்படுகின்ற ஓசைக்கு சிலம்பல் என்று பொருள். அதுபோல சிலம்பக் கம்பை சுழற்றும்பொழுதும் ஓசை ஏற்படுவதால் சிலம்பல் என்ற வார்த்தை மறுவி சிலம்பம் என்றானது. சிலம்பத்தில் பல தற்காப்பு முறைகளும் சிறப்பான நுணுக்கங்களும் உள்ளதால் கலைவடிவம் பெற்று சிலம்பக்கலை என்றானது. சிலம்பக்கலை ஓர் போர்கலையாகும் இக்கலையில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் முக்கால தமிழர்களின் வீரத்தினை தெளிவுபடுத்துகிறது. எனவே இதனை போர்சிலம்பம் என்று அழைத்தனர். பன்னிரண்டு ஆயுதங்களான தோமரம், கொடி, வாள், குலிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு, வேல், இவற்றை அரசர்கள் போர்காலங்களில் பயன்படுத்தினர். வாளோடு சிலம்பத்தையும் ஏந்தி போர்காலங்களில் வீரர்கள் போரிட்டனர். மாவீரன் ஊமைத்துரை சுருள்பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர். சிலம்பக்கலையில் வீரம் பற்றியும், குருபக்தி பற்றியும், ஒழுக்கநெறி பற்றியும் இன்றும் பழமை மாராமல் போதிக்கப்பட்டு வருகிறது.

நம் சிலம்பம் பற்றி நான் இங்கே அதிகம் சொல்லப் போவதில்லை.  உத்திரப் பிரதேசத்தின் சிலம்பு நடனம் பற்றிய பதிவு இது!  சுமார்  பத்து ஆண்கள் – அவர்களை விட உயரமான கழிகளை கைகளில் வைத்துக் கொண்டு குட்டைப் பாவாடை போன்ற உடையில் மேடையில் தோன்ற பார்த்துக் கொண்டிருந்த என் போன்ற பார்வையாளர்களுக்கு ஒரு வித எதிர்பார்ப்பு – “இவர்கள் கழிகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?”  மேடையில் வட்டமாகச் சுற்றி வந்தபடியே தங்களது கையில் இருக்கும் கழிகளை தரையில் குத்தி ஒலி எழுப்புகிறார்கள்.  பத்துப் பதினைந்து சுற்றுகள் வந்தபிறகும் தொடர, அடுத்தது என்ன என்று தோன்ற ஆரம்பித்தது. 

டாண்டியா ஆட்டத்தில் இருக்கும் இரு சிறு குச்சிகளை வைத்துக் கொண்டு ஆடுவது போல இவர்கள் பெரிய குச்சிகளை வைத்துக் கொண்டு டாண்டியா ஆடவும் செய்தார்கள்.  சில மணித்துளிகள் இப்படி தொடர்ந்து ஆட, நம் சிலம்பாட்டம் எவ்வளவு வேகமாகவும் வீரத்தினை பிரதிபலிப்பதாகவும் இருக்கும் என்ற நினைப்பு வராமல் இல்லை! சிறிது நிமிடங்களுக்குப் பிறகு கொஞ்சம் சூடு பிடித்தது! வேகவேகமாக கழிகளைச் சுற்றி இரண்டு இரண்டு பேராக நடனம் ஆடத் துவங்கினார்கள்.  கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருந்தது.

வித்தியாசமாக ஒரு நடனம் பார்த்து வந்த உணர்வு இருந்தாலும், மனதில் தோன்றிய ஒரு விஷயத்தினை இங்கேயும் சொல்லி விடுகிறேன் – அவர்கள் அணிந்திருந்த உடை ஏதோ கவர்ச்சி நடனம் ஆடுபவரின் உடை போல இருந்தது!  சிகப்பு வண்ணத்தில் ஒரு மேல் சட்டை, தொடை தெரிய ஒரு கீழாடை – அதன் மேலே சில குஞ்சலங்கள்! முட்டி வரையாவது அணிந்திருக்கலாம் J என்று பக்கத்தில் இருந்தவரும் சொல்லியது கேட்டது!

நடனத்தின் போது எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு!













புகைப்படங்கள் மற்றும் பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.