[பட உதவி: கூகிள்]
ஒரு பிரபல அமெரிக்க வங்கியின் மேலதிகாரி. அவருக்குத் தேவையான எல்லாப் பொருளையும், வசதிகளையும் காசு கொடுத்து வாங்காது அட்டையைத் தேய்த்து வாங்கும் பணக்காரர். வசதி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணம் கொண்டவர்.
ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் எண்பதாவது மாடியில் குடியிருக்கும் அவர் ஒரு நாள் தனது குடியிருப்பிலிருந்து வெளியே வர சாவி போட்டுத் திறக்க முயற்சிக்கும்போது சாவி உள்ளே மாட்டி உடைந்து விட, உடனே அலைபேசியில் உதவியாளரை அழைத்து பூட்டைத் திறக்க ஆள் அனுப்புமாறு சொன்னார். பூட்டினை மாற்றுச் சாவி செய்து திறக்க வந்த ஆள் சொன்னார், “பூட்டினை திறக்க பத்து டாலர் கதவின் கீழ் வழியே தள்ளுங்கள்”.
அந்த அதிகாரிதான் காசே வைத்துக்கொள்ளாத ஆளாயிற்றே… ”நீ கதவைத் திற நான் அட்டையைத் தேய்த்து உனது பணிக்கான கூலியைத் தருகிறேன்” என்றாராம்! இல்லை ஐயா, வேலை முடிந்த பின் பலர் கூலி தராததால், வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னரே கூலி வாங்குவது என எங்கள் சங்கத்தில் முடிவு செய்துவிட்டோம் – என்று அந்த நபர் சொல்ல, வந்ததே அதிகாரிக்குக் கோபம், "நீ இல்லையென்றால் என்ன, நான் வேறு யாரையாவது வைத்து கதவினைத் திறந்து கொள்கிறேன்!" என்று கூறி அவரை திட்டி அனுப்பினார். அந்த நபர், "நான் சங்கத்தில் உங்களைப் பற்றி ஒரு புகார் எழுதி விடுகிறேன். எங்கள் சங்கத்து ஆட்கள் யாரும் உங்கள் பூட்டினைத் திறக்க மாட்டார்கள்" என சொல்லிச் சென்றார்.
அதிகாரி உடனே தனது கீழே வேலை செய்யும் நபரை அழைத்து, நீ வந்து மாற்று சாவி போட்டு எனது வீட்டைத் திற எனச் சொல்ல, “சார் நீங்க இரண்டு நாளுக்கு முன்னாடி நான் அலுவலக நேரத்தில் வெளியே செல்ல அனுமதி கேட்டபோது, அலுவலகம் முடிந்த பின் செல்லச் சொன்னீர்கள், அது போல, இதுவும் அலுவலகம் சாரா விஷயம் அதனால் அலுவலகம் முடிந்தபின் வந்து கதவினைத் திறக்கிறேன்” எனச் சொல்ல, அவரையும் திட்டினார். உடனே அவரது உதவியாளர், எனக்கு இது நல்ல வாய்ப்பு, என்னைத் திட்டியது பற்றி மேலதிகாரிகளுக்குப் புகார் அளிக்கிறேன் என சொன்னார்.
அடுத்து அந்த வங்கி அதிகாரி, தனது அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியை அழைத்து, தான் வீட்டினுள் மாட்டிக்கொண்டதாகவும், மாற்றுச் சாவி வைத்து திறக்கும்படி சொல்ல, காவலாளி சொன்னாராம் – “எத்தனை முறை என்னை சட்ட திட்டங்கள் சொல்லி மிரட்டுவீர்கள், இப்போது நீங்களே “வீட்டின் உரிமையாளர் வீட்டிலிருக்கும்போது, காவலாளி மாற்று சாவி போட்டுத் திறக்கக்கூடாது” என்ற சட்டத்தினை மீறச்சொல்கிறீர்களே… என்னால் முடியாது என்று அவரும் மறுத்து விட்டார்.
அடுத்தது அவர் அழைத்தது யாரை என நினைக்கிறீர்கள்…. இவர்கள் எல்லோரும் வெளி ஆட்கள். என் காதலி என்னை நிச்சயம் கைவிட மாட்டாள் என அவளை தொலைபேசியில் அழைக்க, அவளோ , “என்னை எத்தனை முறை வரச்சொல்லிவிட்டு, அலுவல் வேலையில் மூழ்கி நீங்கள் வாராது என்னைக் காத்திருக்க வைத்திருக்கிறீர்கள்!, அதனால் இரவு வரை காத்திருங்கள்” என்று சொல்லி அலைபேசியை அணைத்தாளாம்.
இத்தனை பேரும் உதவ மறுக்க, வங்கி அதிகாரி இத்தனை நேரம் தனக்கு நடந்த அனைத்தையும் உட்கார்ந்து யோசிக்க ஆரம்பித்தாராம். இத்தனை நாட்களாக, பணம், வசதி இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடலாம் என நினைத்தோமே, சக மனிதர்களை மதிக்காது, அவமதித்து விட்டோமே, அனைவரோடும் பாரபட்சமின்றி பழகி நட்போடு இருந்திருந்தால் இன்று இப்படி ஆகியிருக்காதே” என்று வருந்தினாராம்.
[பட உதவி: கூகிள்]
திறந்து வீட்டினுள் வந்த அனைவரையும் பார்த்து அந்த அதிகாரி சொன்னார் – “இத்தனை நாட்களாக மூடனாக இருந்த என்னைத் திருந்த வாய்ப்பளித்த இந்த உடைந்த சாவிக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும். உங்கள் அனைவருக்கும் இதில் ஒரு பங்கு இருக்கிறது. உங்களுக்கும் எனது நன்றிகள் எனச் சொன்னாராம்.
உடைந்த சாவியே உனக்கு எனது நன்றிகள்….
நாமும் சாவி உடையும் வரை காத்திருக்காது கதையின் கருத்தினைப் புரிந்து கொள்வோம்.
மீண்டும் சந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்.