வெள்ளி, 30 நவம்பர், 2018

பதிவர் அறிமுகம் – உலகம் சுற்றும் வாலிபன் - தில்லி பதிவர் திரு இராமசாமி



சில சந்திப்புகள் நமக்குத் தெரியாமலேயே நடந்து விடுகின்றன. யாரை எங்கே சந்திக்கப் போகிறோம் என்பது நமக்குத் தெரியாமலேயே முடிவு செய்யப் படுகிறது எனத் தோன்றுகிறது. பாருங்களேன் - ஒரு பதிவரை – அதுவும் தில்லி வாழ் தமிழர் – என் அலுவலகக் கட்டிடடத்தின் தொட்டடுத்த கட்டிடத்தில் பணி புரிபவர் – இருந்தாலும், இத்தனை வருட தில்லி வாழ்க்கையில் – எனக்கும் முன்னதாகவே தில்லி வந்திருப்பவர் அவர் – தில்லியில் இது வரை எங்கள் சந்திப்பு நிகழவே இல்லை! சந்திப்பு ஏதோ ஒரு விதத்தில் – அதுவும் முன்னறிவிப்பு இல்லாமல் நிகழ வேண்டும் என்று இருக்கும்போது தில்லியில் சந்திக்க முடியுமா? எங்கள் சந்திப்பு வேறிடத்தில் நடந்தது.

வியாழன், 29 நவம்பர், 2018

திரும்பிப் பார்க்கிறேன் - அவரைக் காணோம்பா - பதில் பதிவு




கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல என்பார்களே. அது போல் தான் நான் தில்லிக்குச் சென்றதும்.

புதன், 28 நவம்பர், 2018

கதம்பம் – கம்பு தோசை – நூறு ரூபாய் நோட்டு – கஜா புயல் – நீயா நானா – குழமா உப்புமா



சாப்பிட வாங்க – கம்பு தோசை - 14 நவம்பர் 2018:


ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பது நம்மில் பலருக்கும் வரும் கேள்வி – என்னவரிடம் கேட்டால், எதோ ஒண்ணு சமையேன்!” என்று சொல்லி விடுவார்! கடந்த வாரத்தில் செய்த ஒரு டிஃபன் - கம்பு தோசை, தேங்காய் சட்னியுடன்!!! முகநூலில் பதிவு செய்த போது கீதாம்மா சொன்ன கமெண்ட் – ”வெங்காயச் சட்னி இன்னும் நல்லா இருக்கும். சிவப்பு மிளகாய் வைத்து! :)”

திங்கள், 26 நவம்பர், 2018

கதை மாந்தர்கள் - கருப்பு இராமசாமி – வெள்ளை இராமசாமி - பத்மநாபன்




அந்த கருப்பு ராமசாமி இன்னும் என் கண்ணில்படவே இல்லை. ஒவ்வொரு தடவையும் எனது அக்காவின் ஊருக்குப் போகும் போதும் எங்கே அந்த கருப்பு ராமசாமி என்று தேடுவதே எனது முதல் வேலை. நான் ஏன் அவரைத் தேடவேண்டும் என்று தானே கேட்கிறீர்கள். அதைத்தான் சொல்ல வருகிறேன்.

ஞாயிறு, 18 நவம்பர், 2018

திருச்சி – ஒரு நிழற்பட உலா


அலைபேசியில் கேமரா வந்தாலும் வந்தது – நிறையவே படங்கள் எடுத்துத் தள்ளுகிறார்கள். நானும் கேமரா வாங்கிய புதிதில் நிறைய படங்கள் எடுத்துத் தள்ளியிருக்கிறேன். என்னிடம் இருக்கும் படங்களின் எண்ணிக்கை எவ்வளவு எனப் பார்க்கப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறது – அனைத்தையும் தொகுத்து வைக்க தலைப்பட்டால் பாதியிலேயே விட்டு விட நேர்ந்து விடுகிறது – இதுவரை எதைப் பகிர்ந்து இருக்கிறேன், பகிர வில்லை என்பதையும் நினைவில் வைக்க முடியவில்லை! சமீபத்தில் படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது பார்த்த சில படங்கள் பகிர்ந்து கொள்ளாதவை போலவே தோன்றின. சரி இந்த ஞாயிறில் ஒரு நிழற்பட உலாவாக வெளியிடலாம் என முடிவு செய்ததன் விளைவு இப்பதிவு….


வெள்ளி, 16 நவம்பர், 2018

சார் லட்டு… தலைநகரின் விதம் விதமான லட்டு!


”’திங்க’க் கிழமை” பதிவாக இந்தத் திங்களில் நெல்லைத் தமிழன் அவர்களின் லட்டு செய்முறை எங்கள் பிளாகில் வந்தது. லட்டு எனக்கும் பிடித்தமானது தான். அந்தப் பதிவினை படித்த பின்னர், ”தில்லியில் கிடைக்கும் விதம் விதமான லட்டுகளைப் பற்றி ஒரு பதிவே எழுதலாம், விரைவில் எழுதுகிறேன்” என்று சொல்லி இருந்தேன். இதோ எழுதி வெளியிட்டு விட்டேன். அரங்கேற்ற வேளை படத்தில் “சார் லட்டு… சார் லட்டு” என்று தட்டு நிறைய லட்டுடன் வருவாரே ஒருத்தர், அது மாதிரி விதம் விதமாய் லட்டுகளுடன் இதோ வந்து விட்டேன்!

வியாழன், 15 நவம்பர், 2018

கதை மாந்தர்கள் – சாந்த்னி – மறக்க முடியாத இரவு



”ஹலோ… நான் சுரேந்தர் சிங், ஹெட் கான்ஸ்டபிள், எம்.பி. ரோடு தாணாவிலிருந்து பேசுகிறேன் – உங்க பேரு ….. தானே…. கொஞ்சம் தாணாவுக்கு வர முடியுமா?”

இந்த அழைப்பு வந்த அந்த இரவினை மறக்கவே முடியாது. என்ன ஆச்சு, எதுக்கு நம்மை காவல் நிலையம் அழைக்கிறார்கள்? என்ன ஏது என்று கேட்கக் கேட்க, கிடைத்த ஒரே பதில் தாணாவுக்கு வாங்க, என்பது தான்.

சில நாட்களுக்கு முன்னர் எழுதிய கதைமாந்தர்கள் - சாந்த்னி – எனக்கு தமிழ் கத்துக் கொடுங்களேன்… பதிவினை கீழ்க்கண்ட மாதிரி தான் முடித்திருந்தேன்.

”ஹாய், நான் சந்த்ரு…  சாந்த்னி உங்கள பத்தி நிறைய என்னிடம் சொல்லி இருக்கா, நானும் சாந்த்னியும் அடுத்த மாசம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம். வீட்டுல பேசிட்டு இருக்கோம். அவங்க ஒத்துக்கலன்னா, கோர்ட் மேரேஜ் தான்.  நீங்க தான் சாட்சி கையெழுத்து போடணும் – சாந்த்னிக்காக!” என்றார். அவளின் Trade Mark குறும்புப் புன்னகையோடே, என்னிடம் கேட்டாள் சாந்த்னி – “எனக்காக நீங்க சாட்சி கையெழுத்து போடுவீங்க தானே!”

சந்த்ரு வீட்டில் பிரச்சனை இல்லை என்றாலும் சாந்த்னி வீட்டில் அத்தனை சுலபமாக ஒத்துக் கொள்ள வில்லை. “நம்மளோ பஞ்சாபி, அவங்களோ மதராஸி…, நம்ம பழக்க வழக்கத்துக்கும், அவங்க பழக்க வழக்கத்துக்கும் நிறைய வித்தியாசம், ஒத்து வராது. உனக்காக நல்ல பஞ்சாபி முண்டா [இளைஞர்களை முண்டா எனவும், பெண்களை குடி என்றும் அழைப்பார்கள் பஞ்சாபியில்”] பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என சாந்த்னியை ரொம்பவே வற்புறுத்தினார்கள். “மணந்தால் சந்த்ரு மட்டுமே” என்பதில் உறுதியாக இருந்தாள் சாந்த்னி.  சில நாட்கள் வேலைக்குக் கூட அனுப்ப வில்லை அவர்கள் வீட்டில். சாந்த்னியின் பிடிவாதத்தினால் வேலைக்கு அனுப்பினார்கள்.

வீட்டிலிருந்து அழைத்து வந்து அலுவலகத்தில் விட்டு, மீண்டும் மாலை அழைத்துச் செல்வார்கள். வேலைக்கு வந்த பின்னர் சந்த்ருவை தொடர்பு கொண்டு எங்கேயும் சந்திப்பார்களோ என்ற சந்தேகத்தில் அலுவலகம் முன்னர் சாந்த்னி வீட்டினர் எப்போதும் சுற்றிக் கொண்டிருந்தார்கள். வெளி கேட் இரண்டிலும் ஆட்கள் இருக்க, சந்த்ருவை சாந்த்னி சந்திக்க செய்த முயற்சி எல்லாம் தோல்வி. ஆனாலும் எப்படியாவது இந்த திருமணம் நடந்தே தீரும், நடக்க வேண்டும் என்பதில் இரண்டு பேருமே உறுதியாக இருந்தார்கள்.  நண்பர்கள் சந்த்ருவை தொடர்பு கொண்டு அலுவலகத்திற்குள் அவரை காருக்குள் அமர வைத்து, அழைத்து வந்தார்கள். திருமணத்திற்கான நாள் முடிவு செய்யப்பட்டது.

சாந்த்னி வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்த்து முடிவு செய்யவே விரும்பினார்கள். குருத்வாரா அழைத்துச் சென்று அங்கேயே நிச்சயம் செய்ய முடிவு செய்திருந்தார்கள் – சாந்த்னியிடம் சொல்லாமலே. குருத்வாரா போகும் வழியில் தான் விஷயம் தெரிந்திருக்கிறது சாந்த்னிக்கு. அங்கேயே கார் கதவைத் திறந்து குதிக்கப் போவதாகச் சொல்லி போராட்டம் துவங்க, அன்றைய நிகழ்வினை கைவிட்டார்கள். சில நாட்களுக்குள் வீட்டினரின் எதிர்ப்பு மறையும் என்ற நினைவில் இருந்த சாந்த்னிக்கு அதிர்ச்சி. திருமண நாளை உடனே முடிவு செய்து, அடுத்த நாள் அலுவலகத்திற்கு வந்த பின் சந்த்ருவுடன் தொடர்பு கொண்டு முடிவு செய்த நாளுக்கு முன்னதாகவே திருமணத்தினை வைத்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் பதிவு அலுவலகத்திற்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது. அதற்கு முதல் நாள் தான் அந்த தொலைபேசி அழைப்பு வந்தது தாணாவிலிருந்து [காவல் நிலையத்திலிருந்து!] தாணாவிற்குச் சென்று சுரேந்தர் சிங்-ஐத் தேடி பேச, வாருங்கள் போகலாம் என அவரது வாகனத்தில் அழைத்துச் சென்றார் – சென்ற இடம் – சஃப்தர்ஜங்க் மருத்துவமனை. மருத்துவமனையில் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. மார்ச்சுவரியில் இருந்த இரண்டு சடலங்களைக் காண்பித்து இவர்கள் இருவரும் வாகனத்தில் சென்றபோது விபத்து நடந்திருக்கிறது. விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் இறந்து விட்டார்கள். அவர்களிடம் இருந்த ஒரே பேப்பரில் உங்கள் எண் இருந்ததால் யார் என அடையாளம் காட்ட உங்களை அழைத்தேன் என்றார் சுரேந்தர் சிங்.

என்னதான் பல சடலங்களைப் பார்த்து, ஈமச் சடங்குகளில் கலந்து கொண்டாலும் இப்படி விபத்தில் இறந்தவரின் உடல்களை பார்ப்பது இரண்டாம் முறை. முதலாம் சடலத்தின் துணியை விலக்க, அங்கே இருந்தது சந்த்ருவின் உடல்.  சஃப்தர்ஜங் மார்ச்சுவரியில் இரண்டாவதாக இருந்த சடலத்தினை பார்க்க மூடியிருந்த துணியை விலக்கியபோது…..

கன்னக்குழியுடன் அங்கே சலனமின்றி மீளாத்துயிலில் இருந்தாள் சாந்த்னி.

மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

பின் குறிப்பு: ஏன் இருவரும் முன் நாளில் சந்தித்தார்கள், விபத்து எப்படி ஏற்பட்டது, அது உண்மையிலேயே விபத்தா இல்லை இங்கே நிறைய இடங்களில் நடக்கும் Honour Killing – ஆ? இது வரை பதில் கிடைக்காத கேள்விகள்.

புதன், 14 நவம்பர், 2018

கதம்பம் – நார்த்தங்காய் – பதிவர் சந்திப்பு – தொடரும் நட்பு – க்வில்லிங் – கேரட் பராட்டா


சாப்பிட வாங்க – நார்த்தங்காய் - 8 நவம்பர் 2018:



தோழி நார்த்தங்காய் வேண்டுமா எனக் கேட்டு மூன்றைக் கொடுத்தார். ஏற்கனவே மாவடு, கிடாரங்காய் உப்பில் போட்டது, எலுமிச்சங்காய் உப்பில் போட்டது, வட இந்திய ஊறுகாயான chundaa எல்லாம் இருக்கு. சரியென்று இதையும் அந்த ஜோதியில் ஐக்கியம் செய்து விட்டேன்.

செவ்வாய், 13 நவம்பர், 2018

தீபாவளி – அன்றும் இன்றும் – ஆதி வெங்கட்





அன்றைய பண்டிகைகளுக்கும் இன்றைய பண்டிகைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நம் அம்மா, அப்பா கொண்டாடியதில் பாதி நாம் கொண்டாடினோம் என்றால் நம் பிள்ளைகள் அதற்கும் குறைவு.

திங்கள், 12 நவம்பர், 2018

என்ன சமையலோ…. – ஆதி வெங்கட்



வாழைக்காய் மொளகூட்டல்!!



ரெசிபி பார்க்காமல் சற்றே மாறுதலுக்கு செய்து பார்த்தது. தேங்காய் எண்ணெய் மணத்தில் நன்றாகவே இருந்தது. கேரள சமையல் எனக்கு எப்போதுமே பிடிக்கும். சிகப்பரிசி சாதத்தை தவிர!

சனி, 10 நவம்பர், 2018

அவரைக் காணோம்பா…. – இரவு முழுவதும் பூத உடலுடன்…





”அவரைக் காணோம்பா….. காலைல போனது, ராத்திரி ஒன்பதாச்சு இன்னும் வீட்டுக்கு வரல!”

வியாழன், 8 நவம்பர், 2018

கதம்பம் – மரவள்ளி புட்டு – ஆஸ்திக்கும் ஆசைக்கும் – பள்ளிப் பருவம் – வெள்ளை கோபுரம்



சாப்பிட வாங்க – மரவள்ளி புட்டு - 13 அக்டோபர் 2018:



சமீபத்தில் சூப்பர் மார்க்கெட்டில் கிழங்கு மாவைப் பார்த்ததும், அங்கே பணிபுரியும் பெண்மணி, அக்கா!! இதில் அடைதோசை செய்யலாம்!! என்றார். கால் கிலோ வாங்கி விட்டேன்.

செவ்வாய், 6 நவம்பர், 2018

தீப ஒளி திருநாள் - தலைநகரின் ஐந்து நாள் கொண்டாட்டம்



வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.


ஞாயிறு, 4 நவம்பர், 2018

அரங்கனின் கோவிலில் நவராத்திரி கொலு



இந்த வருடத்தின் திருவரங்கம் அரங்கனின் கோவிலில் நவராத்திரி கொலு. சென்ற வருடம் ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்ததை விட இவ்வருடம் சிறிய அளவிலான கொலு தான். இருந்தாலும், கொலு அழகாகவே இருந்தது. இம்முறை சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சன்னதி அருகே இருக்கும் மண்டபத்தில் வைத்திருந்தார்கள்.  நவராத்திரி கடைசி நாள் அன்று தான் கோவிலுக்குச் சென்று கொலுவினைக் காண முடிந்தது. கோவிலுக்குச் செல்லும்போது செல்லப்பெட்டியைக் கொண்டு செல்ல வில்லை – அதாங்க கேமராவினைக் கொண்டு செல்ல வில்லை. இங்கே பகிர்ந்து கொள்ளப்போகும் படங்கள் அனைத்துமே இல்லத்தரசி எடுத்த படங்கள்!

அரங்கனின் கோவில் நவராத்திரி கொலு நேரில் பார்க்க முடியாத, இல்லத்தரசியின் முகநூல் பக்கத்தில் பார்க்காத நண்பர்களுக்காக, இங்கேயும் ஒரு உலாவாக…. 






























பகிர்ந்து கொண்ட படங்களை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பகிர்வுடன் சந்திப்போம்…. சிந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

வியாழன், 1 நவம்பர், 2018

ஷிம்லா ஸ்பெஷல் – ஷிம்லா இரயில் நிலையம் – மால் ரோட் – பயணத்தின் முடிவு…



ஷிம்லா ஸ்பெஷல் – பகுதி – 15

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ஷிம்லா ஸ்பெஷல்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


ஷிம்லா இரயில் நிலையம்...

குஃப்ரியிலிருந்து புறப்பட்ட எங்கள் பயணம், அடுத்ததாக நின்றது ஷிம்லா நகரில் தான். இந்தப் பயணத்தொடர் ஆரம்பிக்கும் போதே, ஷிம்லாவிற்குச் செல்ல சாலை வழி, ஆகாய வழி மற்றும் இரயில் பாதை உண்டு என்று சொல்லி இருந்தது நினைவில் இருக்கலாம். கால்காவிலிருந்து ஷிம்லா வரை குறுகிய பாதை இரயில் இருக்கிறது – நமது தமிழகத்தின் ஊட்டி இரயில் போலவே இங்கேயும் உண்டு. மிகவும் புராதனமான இரயில் பாதை. ஆங்கிலேயர்கள் காலத்திலேயே அமைக்கப்பட்ட பாதை – அதில் பயணம் செய்ய இயலவில்லை – நாங்கள் சாலை வழிப் பயணம் – பேருந்தில் தான் சென்றோம் என்பதால், இரயில் நிலையத்திற்கோ, அல்லது இரயில் பாதையையோ சென்று பார்க்க வேண்டும் என நினைத்திருந்தோம்.


ஷிம்லா இரயில் நிலையம்...

ஓட்டுனர் ரஞ்சித் சிங்-இடம் எங்கள் எண்ணத்தைச் சொன்னபோது, கவலை வேண்டாம் – உங்களுக்கு ஒரு அருமையான இடத்திற்கு அருகே அழைத்துச் செல்கிறேன் – அங்கிருந்து உங்களுக்கு இரயில் நிலையத்தின் நல்ல View கிடைக்கும் என்று சொன்னார் – அட, பரவாயில்லையே, இதுவும் தெரிந்திருக்கிறதே இவருக்கு என, அங்கே அழைத்துச் செல்லச் சொன்னோம். அவர் எங்களை அழைத்துச் சென்றது, இரயில் நிலையம் அருகில் இருந்த ஒரு Foot Over Bridge பகுதிக்கு. எங்களை அங்கே இறக்கி விட்டு அடுத்த பக்கத்தில் வாகனத்தினை எடுத்துக் கொண்டு வருவதாகச் சொல்லிச் சென்றார். நாங்கள் சாலையைக் கடக்க அமைந்திருந்த இரும்பு Foot Over Bridge மீது ஏறிச் சென்றோம்.


மால் ரோடு, ஷிம்லா...

வாவ்…. உண்மை – இரயில் நிலையத்தின் நல்ல View அங்கிருந்து கிடைத்தது. நானும் நண்பர் பிரமோத்-உம் அந்த பாலத்திலிருந்து இரயில் நிலையத்தினை நிறைய படங்கள் எடுத்துக் கொண்டோம். நாங்கள் படம் எடுத்துக் கொண்டிருந்ததை உங்களுக்குச் சொல்லும் போது அந்த இரயில் நிலையம் பற்றிய சில தகவல்களையும் பார்க்கலாம். Lord Curzon அவர்களால் 1901-ஆம் ஆண்டு திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த இரயில் பாதையும் இரயில் நிலையமும். கால்காவிலிருந்து சுமார் 96 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஷிம்லாவிற்கான இருப்புப் பாதை – கடல் மட்டத்திலிருந்து 2150 அடி உயரத்திலிருந்து [கால்கா] – 6811 அடி உயரத்திற்கு [ஷிம்லா] செல்லும் இரயில் பாதை. 100 வருடங்களுக்கும் மேலே ஆன இந்த இருப்புப் பாதை UNESCO WORLD HERITAGE SITE!


என்ன ஊர்வலம் தெரியுமா? மாப்பிள்ளை அழைப்பு இல்லை!..

1901-ஆண்டு ஆரம்பித்து 1903-இல் பணி நிறைவு பெற்றது. 9, நவம்பர் 1903-ஆம் ஆண்டு இந்தப் பாதையில் இரயில் போக்குவரத்து துவங்கியது! இரண்டு ஆண்டுகளில் இத்தனை சிறப்பான பணி நடந்திருக்கிறது. பாதையில் இரண்டில் மூன்று பகுதிக்கும் மேல் வளைவுகள் தான் – மொத்தம் 900 இடங்களில் வளைவுகள்! நேர் பாதை இல்லை! வளைந்து வளைந்து செல்லும் இந்தப் பாதையில் 103 குகைகளும், எண்ணூற்றிற்கும் மேற்பட்ட பாலங்களும் இருக்கின்றன. ஏழு பெட்டிகள் கொண்ட இந்த இரயில், மணிக்கு 22 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. கால்காவிலிருந்து ஷிம்லா வரையான 96 கிலோமீட்டர் தூரம் பயணிக்க சுமார் ஐந்து மணி நேரம் எடுக்கும். ஆனால் மிகவும் இரசிக்க முடியும் இந்தப் பயணத்தினை – ஏனெனில் போகும் பாதை அப்படி.


காரின் முன்னும் பின்னும் இறைவியின் படமும் சிலையும்....

ஹிமாலயன் க்வீன், ஷிவாலிக் டீலக்ஸ் போன்ற ஐந்து இரயில்கள் கால்காவிலிருந்து ஷிம்லாவிற்கும், ஷிம்லாவிலிருந்து கால்காவிற்கும் பயணிக்கின்றன. குழந்தைகளுடன் பயணிப்பது என்றால் இந்த இரயில் பயணம் மிகவும் இரசிக்கக் கூடிய விஷயம். இயற்கையை ரசித்தபடியே இந்தப் பாதையில் பயணிப்பது நன்றாக இருக்கும். இந்த இரயில்களில் பயணிக்க முன்பதிவு செய்யும் வசதி உண்டு. மற்ற இரயில் பயணங்கள் போல அல்லாமல் ஒரு மாதம் முன்னர் தான் முன்பதிவு செய்ய முடியும் – WWW.IRCTC.COM தளத்தில் Kalka – Simla தேர்வு செய்தால் இந்த இரயில்களுக்கான முன்பதிவு செய்யும் வசதிகள் இருக்கின்றன. கட்டணம் – 65 ரூபாய் முதல் 565 ரூபாய் வரை – பயணிக்கும் வகுப்பினைப் பொறுத்து! சரியாக ஒரு மாதம் இருக்கும் போது முன்பதிவு செய்து கொள்வது நல்லது!


ஷிம்லா இரயில் நிலையம்...


மலைப்பகுதியில் கிடைக்கும் இலந்தைப் பழம்....

இரயில் நிலையத்தின் படங்களை எடுத்துக் கொண்டு பாலத்தின் வழி மறுபக்கத்தில் இறங்க, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். வாகனத்தில் ஏறிக் கொண்டு எங்கள் தங்குமிடம் அருகே இறக்கி விட்டார். எங்கள் உடைமைகளை தங்குமிடத்தின் வரவேற்பு அறையில் இருக்கும் உடைமைகள் காப்பகத்தில் வைத்து விட்டு மால் ரோடு நோக்கி நடந்தோம். முதல் நாளும் மால் ரோடு பகுதியில் மாலை நேரத்தில் நிறைய நேரம் நடந்தோம். இரண்டாவது நாளும் மால் ரோடு பகுதியில் இருக்கும் வேறு சில இடங்களுக்கு சென்று வந்தோம். பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யும், இடம், கீழே இருந்த கிராமங்கள் என நீண்ட தூரம் நடந்து வந்தோம். உள்ளூர் மக்களையும், அவர்கள் பழக்க வழக்கங்களையும் பார்த்து ரசித்த பிறகு தங்குமிடம் திரும்பினோம்.


படத்திலிருந்தே புரிந்திருக்கும் - தண்ணீர் ஏ.டி.எம்....


ஊர்வலத்தில் டோல் வாத்யம்...

அறையில் எங்கள் உடைமைகளை சரிபார்த்துக் கொண்டு சற்றே ஓய்வு. இரவு 10 மணிக்கு ஷிம்லாவிலிருந்து தில்லி நோக்கிய பயணம் – ஹிம்சுதா – ஹிமாச்சலப் பிரதேச அரசு வோல்வோ பேருந்தில் முன்பதிவு செய்திருந்தோம். இரவு உணவினை தங்குமிடத்திலிருந்த ஹல்திராமில் முடித்துக் கொண்டோம். தங்குமறையைக் காலி செய்து, ஓட்டுனர் ரஞ்சித் சிங் அவர்களை அழைக்க, அவர் வாகனத்திலேயே பேருந்து நிலையம் வந்து சேர்ந்தோம். சிறிது நேர காத்திருப்பிற்குப் பிறகு பேருந்து வந்து சேர்ந்தது.  பேருந்தி அமர்ந்து சில நிமிடங்களில் நல்ல உறக்கம். வழி முழுவதும் உறக்கத்திலேயே கழிந்தது. விடிகாலை தில்லி வந்த பிறகு விழித்து ஒரு ஆட்டோ பிடித்து, வழியில் கேரள நண்பர்களை கேரளா இல்லத்தில் விட்டுவிட்டு நான் வீடு வந்து சேர்ந்தேன்.


மால் ரோடில் நண்பர்களுடன்...

சிம்லா, குஃப்ரி, நார்கண்டா பயணம் இனிதே நிறைவுற்றது! பயணம் நல்லது. ஆதலினால் பயணம் செய்வீர்! சமீபத்தில் சென்ற அனைத்து பயணங்கள் பற்றியும் உங்களுடன் பகிர்ந்து கொண்டுவிட்டேன். கடந்த மே மாதம் தமிழகம் வந்திருந்த போது இரண்டு நாட்கள் புதுச்சேரி சென்று வந்தேன் – கல்லூரி தோழர்களின் சந்திப்பு – ஆனால் அப்பயணம் பற்றிய கட்டுரைகள் தொடராக எழுதப் போவதில்லை! முடிந்தால் ஒன்றிரண்டு பதிவுகளில் எழுதுகிறேன். வேறு பயணம் செல்ல வாய்ப்பு இதுவரை அமைய வில்லை. கடைசியாக சென்ற பயணம் சென்ற நவம்பர் மாதம் [2017]. அடுத்த நவம்பரே வந்து விட்டது! பயணம் வாய்க்கவில்லை! அதனால் நீங்களும் என் தொடர் பயணக்கட்டுரைகளிலிருந்து தப்பினீர்கள்! வேறு பயணம் செய்தால், அந்த அனுபவங்களை, முடியும் போது பகிர்ந்து கொள்வேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.