புதன், 27 பிப்ரவரி, 2013

கலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள்





கல்லூரி சமயத்தில் எங்களுக்கு ஆங்கிலத்தில் பாடம் எடுத்தவர்கள் மூன்று பேராசியர்கள் – திரு ஆர். சரவணச்செல்வன் [RSS], திரு கே. ஸ்ரீனிவாசன் மற்றும் திருமதி லக்ஷ்மி. திரு கே. ஸ்ரீனிவாசன் எங்களுக்கு ஆங்கிலக் கவிதைகளை அறிமுகம் செய்து வைத்தவர்! கவிதையை ஒவ்வொரு வரியாக அவரும் அனுபவித்து விவரித்து, எங்களையும் ரசிக்கச் செய்வார். கல்லூரி சமயத்தில் அவர் சொன்ன ஜான் கீட்ஸ் கவிதைகள் இன்னமும் நெஞ்சில்.  Ode to a Nightingale கவிதையில் வரும்

With beaded bubbles winking at the brim,
            And purple-stained mouth;
That I might drink, and leave the world unseen,
            And with thee fade away into the forest dim:”   வரிகள் இன்றைக்கும் நெஞ்சில்.  போலவே கலீல் ஜிப்ரானின் கவிதைகளையும் எங்களுக்கு அறிமுகம் செய்தவர் திரு ஸ்ரீனிவாசன். சமீபத்தில் நர்மதா பதிப்பக வெளியீடான “கலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள் – கவிஞர் நாவேந்தன்படிக்கக் கிடைத்தது. கலீல் ஜிப்ரானின் Sand and Foam, The Wanderer, The Forerunner மற்றும் The Madman ஆகிய நூல்களை மொழிமாற்றம் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
 

 
கலீல் ஜிப்ரான் ஒரு சிறந்த ஓவியரும் கூட. இந்தப் புத்தகத்தில் அவர் வரைந்த ஓவியங்களையும் ஆங்காங்கே சேர்த்திருந்தது கூடுதல் சிறப்பு. புத்தகத்தில் எனக்குப் பிடித்த சில தத்துவங்கள் கீழே தந்திருக்கிறேன் – உங்கள் பார்வைக்கு!

மனிதனுக்கு பெருமை அவன் எதை அடைகிறான் என்பதில் இல்லை....  அவன் எதை அடைய விரும்புகிறான் என்பதில் தான் உள்ளது!

இரண்டு பெண்கள் பேசிக்கொள்ளும்போது அதில் ஒன்றும் இருப்பதில்லை! ஆனால் ஒரு பெண் மட்டும் பேசும்போது அவள் வாழ்க்கை முழுவதும் வெளிப்படுகிறது.

பூமி வானத்தில் எழுதும் கவிதையே மரங்கள்....! நாம், அவற்றை வெட்டி வீழ்த்திக் காகிதமாக்கி, நம் வெறுமையை எழுதி வைக்கிறோம்...!

ஒரு தனி மரம், தன் சுய சரிதையை எழுதினால், அது கூட ஓர் இனத்தின் வரலாறு போலவே தெரியும்!

சொற்கள் காலம் கடந்து நிற்பவை...! அதைப் புரிந்து கொண்டு அவற்றைப் பேச வேண்டும், எழுத வேண்டும்!

உன் வாயில் உணவு நிறைந்திருக்கும்போது உன்னால் எப்படி பாட முடியும்? கையில் நிறையப் பணம் உள்ளபோது மற்றவர்களை வாழ்த்த எப்படிக் கைகளை உயர்த்த முடியும்....?

அநேக பெண்கள் ஆண்களின் இதயத்தைக் கடன் வாங்குகிறார்கள்....! ஒரு சிலரே அதைத் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்....

எந்த ஓர் ஆணும்.... இரு பெண்களை விரும்புகிறான்! ஒருத்தி அவன் கற்பனையின் படைப்பு....  மற்றவள் இன்னும் பிறக்கவில்லை!

பெண்களின் சிறிய தவறுகளை மன்னிக்காத ஆண்கள், அவர்களின் உயர்ந்த நற்பண்புகளை உணர மாட்டார்கள்.

விருந்தாளிகள் வராத வீடு....  சுடுகாடு!

உன் இதயம் எரிமலையாக இருந்தால், மலர்கள் எப்படி கைகளில் மலர முடியும்?

நாம் எல்லோருமே சிறைக் கைதிகள் தான் – சிலர் சிறைக் கம்பிகளோடு.... சிலர் கம்பிகள் இல்லாமலேயே!

வேடிக்கை என்னவென்றால், நாம் சரியானவற்றைச் செய்வதில் காட்டும் சுறுசுறுப்பை விட, நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில் தான் அதிகம் சுறுசுறுப்பைக் காட்டுகிறோம்.

மற்றவன் செய்த குற்றங்களைப் பெரிதுபடுத்துவதை விட பெரிய குற்றம் ஏதுமில்லை!

பொறாமைப்படுபவனின் மௌனமே மிகவும் சப்தமானது.....!

இன்றைய துக்கங்களில் மிகவும் கசப்பானது நேற்றைய மகிழ்ச்சியின் ஞாபகம்!

உப்பில் ஏதோ ஒரு புனிதம் இருக்கிறது....! எனவே தான் அது நம் கண்ணீர்லும் இருக்கிறது.... கடலிலும் இருக்கிறது....!

மேலே கண்டவை அனைத்தும் ‘மணலும் நுரையும்என்ற தலைப்பில் உள்ளவை. மேலும் சில நல்ல கதைகளும் இப்புத்தகத்தில் உண்டு. நான் ரசித்த சில கதைகளை ஃப்ரூட் சாலட் பதிவுகளில் அவ்வப்போது வெளியிடுகிறேன்.  இருந்தாலும் முழுதும் படித்து ரசிக்க, நீங்கள் நர்மதா பதிப்பகத்தின் இப்புத்தகத்தினை வாங்கலாமே!

                கலீல் ஜிப்ரானின் தத்துவக் க[வி]தைகள்
                ஆசிரியர்: கவிஞர் நாவேந்தன்.
                நர்மதா பதிப்பகம்
                10, நானா தெரு, பாண்டி பஜார்,
                தி. நகர், சென்னை – 600017.

மீண்டும் வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 25 பிப்ரவரி, 2013

வைக்கம் விஜயலக்ஷ்மி



சமீபத்தில் வலை நண்பர் பந்து அவர்கள் தனது வலைப்பூவில், CELLULOID எனும் மலையாள படத்திலிருந்து காற்றே காற்றே நீ பூக்காமரத்தில்எனும் பாடலை பகிர்ந்திருந்தார். பாடலைக் கேட்டதிலிருந்தே அவர் பற்றி இணையத்தில் தேடினேன். நிறைய பாடல்களைக் கேட்டு, அவரது ஒரு நேர்காணலையும் பார்த்தேன். இந்தப் பாடலைப் பாடிய வைக்கம் விஜயலக்ஷ்மி பற்றி தான் இன்று நாம் பார்க்கப் போகிறோம். அதற்கு முன்னர் அந்தப் பாடலைக் கேளுங்களேன்.

Kaatte Kattee Nee Pookkaa Marathil | Muziboo



என்ன நண்பர்களே, வைக்கம் விஜயலக்ஷ்மி அவர்களின் குரலில் நீங்கள் மயங்கி இருப்பது நிச்சயம். இந்தப் பாட்டை பாடிய வைக்கம் விஜயலக்ஷ்மி பிறந்தது 1981-ஆம் வருடத்தின் விஜயதசமி தினமான அக்டோபர் 7 ஆம் நாள்.  முரளிதரன் விமலா தம்பதியினரின் ஒரே மகள் விஜயலக்ஷ்மி. வைக்கத்தில் பிறந்தாலும், விஜயலக்ஷ்மியின் நிலையால் சில வருடங்களில் சென்னை வந்து ஐந்து வருடங்கள் அங்கே தங்கி பிறகு வைக்கம் திரும்பிவிட்டார்கள்.

சிறு வயதிலேயே இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரின் பாடல்களைக் கேட்டு வளர்ந்த இவர், ஒரு பாடலைக் கேட்டுவிட்டால் உடனே அதன் நெளிவு சுளிவுகளோடு உடனே பாடி விடும் திறமையைப் பெற்றிருந்தார். ஜேசுதாஸ் பாடிய கர்நாடக சங்கீத ஒலி நாடாக்களைக் கேட்டுக் கேட்டு ஒரு வருடத்திற்குள்ளாகவே நூற்றுக்கும் மேற்பட்ட ராகங்களைக் கற்றுக் கொண்டதோடு, இதுவரை ஐந்து பாடல்களை இயற்றவும் செய்திருக்கிறார். இத்தனைக்கும் அதுவரை அவருக்கு முறையான சங்கீதப் பயிற்சி கிடையாது.   



சங்கீதத்தில் முறையான பயிற்சி இல்லா விட்டாலும், அவரது திறமை பல வித்வான்களையே பிரமிக்கச் செய்ததாம். 1987-ஆம் வருடம் தனது மானசீக குருவான ஜேசுதாஸை சந்தித்தபோது, இத்தனை சிறிய வயதில் விஜயலக்ஷ்மியின் விஷய ஞானம் கண்டு அவருக்கு ஆச்சரியம் உண்டாயிற்றாம். அதன் பிறகு சில குருகளிடம் பயிற்சி பெற்று பல கச்சேரிகளில் பாடத் துவங்கினார் இவர்.
மும்பையின் ஷன்முகாநந்தா அரங்கம் தொடங்கி, தமிழகத்தின் பல ஊர்களிலும் இதுவரை பல கச்சேரிகள் நடத்தி இருக்கும் விஜயலக்ஷ்மி ஒரே ஒரு கம்பி கொண்ட காயத்ரி வீணையை வாசிப்பதிலும் திறமை பெற்றவர். இந்த வீணை கொண்டும் பல கச்சேரிகளை நடத்தி இருக்கிறார். இந்த ஒரு கம்பி கொண்ட வீணைக்கு “காயத்ரி வீணைஎன பெயர் வைத்தது நமது குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள்.
சபைகளிலும், கோவில்களிலும் பாடுவதில் அவ்வளவாக வருமானம் இல்லாத காரணத்தினால் சினிமா பக்கமும் தனது பார்வையை திருப்ப, அவருக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு மேலே சொன்ன படத்தில்.  இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தான் வெளியாகி இருக்கிறது. இருப்பினும் முன்பே பாடல்கள் வெளிவந்து விட்டதால், இந்தப் பாடல் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. இப்போது மலையாள சினிமாவில் நிறைய வாய்ப்புகள் இவரைத் தேடி வர ஆரம்பித்திருக்கிறது.
சரி நன்றாகத் தான் பாடுகிறார், எதற்கு இவருக்காக தனியாக ஒரு பதிவு எனக் கேட்பவர்களுக்கு, இவர் பிறவியிலேயே கண் பார்வையில்லாதவர். ஒரு குறையோடு பிறந்திருந்தாலும், தன்னம்பிக்கையோடு தனது வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டிருக்கும் அவரை மேலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துவோம்.

வாருங்கள் அவரது காயத்ரி வீணையின் நாதத்தினைக் கேட்போம்.

இந்த அற்புதமான ஒரு இசைக் கலைஞரை எனக்கு அறிமுகம் செய்து வைத்த நண்பர் பந்து அவர்களுக்கு நன்றி. 

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

திருவனந்தபுரம் ZOO நண்பர்கள் - கோவை - கேரளம் பயணம் – புகைப்படங்கள் பகுதி 3





சென்ற பகுதியில் கோவையில் எடுத்த சில படங்களைப் பார்த்தோம். இந்தப் பகுதி முதல் கேரளம். கேரள நாட்டிளம் பெண்களுடனே என்று பாரதி பாடியிருந்தாலும், நமது பயணம் ஆரம்பிக்கப் போவது கேரள நாட்டின் மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்களோடு! என்ன ஒரு கொலை வெறி!





மரம் ஏறுவது எனக்கு ரஸ்க் சாப்பிடறது மாதிரி!


இந்த மரத்தில் எந்த விலங்கும் இல்லை!


என் பூவெல்லாம் இப்படிக் கொட்டிக் கிடக்குதே!


ஓடு மீன் ஓட உறுமீன் வரும் அளவும்
காத்திருக்குமாம் கொக்கு!


என் பெயர் சாம்பல் கானாங்கோழி!


ஐயோ என்னை ஃபோட்டோ எடுக்காதீங்க!
எனக்கு வெக்கமா இருக்கு!


என்னை வெளியில விடுங்கப்பா!


என் பேர் பார்த்துதான் சாம்பார் வந்துதா?


மான் கொம்பு சண்டை போட
என் கொம்பை உடைக்காதீங்க ப்ளீஸ்...


வெள்ளை பெயிண்ட் அடிச்சப்புறம் கருப்பு கோடு போட்டாங்களா? கருப்பு பெயிண்ட் அடிச்சப்புறம் வெள்ளை கோடு போட்டாங்களா?


கிட்ட வந்தா ஒரே போடு!


பாம்பு பார்த்தா எனக்கு பயமே கிடையாது!


நுழைவாயில் – புல் அலங்காரங்களுக்கு முன்
மின்னு, ரோஷ்ணி, கேஷவ்!

என்ன நண்பர்களே படங்களைப் பார்த்து ரசித்தீர்களா? அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு சந்திக்கும் வரை.....


நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.