இந்த வார செய்தி:
கழிவுகளை செல்வமாக பாருங்கள்!
டென்மார்க் துாதரகத்தில்
முக்கிய பொறுப்பில் இருந்து, விருப்ப ஓய்வு பெற்று, வீடு வீடாக சென்று கழிவுகளை சேகரிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்
கொண்டிருக்கும் மங்களம் பாலசுப்ரமணியன்: நம்மை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள
வேண்டும். அப்படி வைத்துக் கொள்ள, மற்றவர்களுக்கு சொல்லிக்
கொடுக்கணும். ஓய்வுக் காலத்தை உருப்படியாக கழிக்க, நல்ல வழி இதுதான் என, தோன்றியது. உடனடியாக நாங்கள் வசிக்கும் சென்னை, பம்மல் பகுதியில் இரண்டு, மூன்று பேருடன் களம் இறங்கினேன். ஒரு பிரபல குளிர்பான நிறுவனமும், எக்ஸ்னோராவும் எங்கள் முயற்சிக்கு ஊக்கம் தந்தன. என்னுடைய தலைமையில் இயங்கும், 'பசுமைத் துாதுவர்கள்' என்று சொல்லப்படும் குழுவினர், பம்மலை சுற்றியுள்ள சில தெருக்களில், வீடு வீடாகப் போய் குப்பைகளை
சேகரிக்கின்றனர். அரசிடம் கடுமையாக முயற்சி செய்து பெற்ற இடத்தில், மக்கும் குப்பைகளை உரமாக்கும் பணி நடக்கிறது. கேரி பேக், ஷாம்பு பாக்கெட் போன்ற பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து, அவற்றை, 'ரீ-சைக்கிளிங்' செய்து, இயந்திரத்தின் மூலம் துணி போல் நெய்கிறோம். அதை மூலப் பொருளாக கொண்டு, 'வால் ஹேங்கிக், பென் ஸ்டாண்ட், ஸ்கிரீன் என, பல்வேறு பொருட்களை செய்து விற்கிறோம்.
மிக சமீபமாகத் தான், குப்பை - துாய்மைன்னு இந்த விஷயத்தில் மக்களிடம் ஒரு விழிப்புணர்வு
வந்துள்ளது. ஆனால், எங்கள் பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன்பே, இதை துவங்கிவிட்டோம். ஆரம்பத்தில், கூட்டங்கள் போட்டு தான்
மக்களுக்கும் புரிய வைக்க வேண்டி இருந்தது.
இப்போது பல வீடுகளில், மக்கும் குப்பை, மக்காத குப்பைன்னு அவர்களே பிரித்து கொடுத்து விடுகின்றனர்.
தங்கள் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள பழகி விட்டனர். நாம் துவங்கிய
பணி, நல்ல முடிவை கொடுத்துள்ளதை நினைக்கும் போது, மனதுக்கு நிறைவாக உள்ளது. கலெக்டர், கவர்னர் என, பல தரப்பிலிருந்தும் எங்க களப் பணியை பார்த்து
பாராட்டுகின்றனர். கழிவுகளை அருவருப்பாக பார்க்காமல், செல்வமாக நினைத்தது தான், இதற்கெல்லாம் காரணம். சுற்றுவட்டார
ஓட்டல்களில் இருந்து, உணவுக் கழிவுகளை சேகரித்து நொதிக்க வைத்து, காஸ் தயாரிக்கிறோம். இதற்காக, பயோ காஸ் உற்பத்தி மையமும்
செயல்படுகிறது. இங்கிருந்து பெறப்படும் காஸ் மூலம், ஜெனரேட்டர் இயக்கி அதிலிருந்து
கிடைக்கும் மின்சாரத்தால், 50க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளை
எரியச் செய்கிறோம். குரோம்பேட்டை ஏரியாவில், ஏராளமான தோல் தொழிற்சாலைகள் உள்ளன.
அங்கிருந்து டன் கணக்கில் கழிவுகள் வெளியேற்றப்படும். அவற்றை ஒரே இடத்தில்
சேமித்து,
மறு சுழற்சி செய்யும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.
-
தினமலர் சொல்கிறார்கள்
பகுதியிலிருந்து....
பாராட்டுக்குரிய
விஷயம் இது. இவர்கள் போல இன்னும் நிறைய
பேர் நம் நாட்டுக்கு தேவை. அரசாங்கமும் இது போன்றவர்களை ஊக்குவித்தால்
நல்லது! இவர்களுக்கு இந்த வார பூங்கொத்து!
இந்த வார முகப்புத்தக இற்றை:
இந்த வார நகைச்சுவை:
இந்த
வார இசை:
சமீபத்தில்
இசைக்கலைஞர் ரோணு மஜும்தார் அவர்களில் பேட்டி ஒன்று காணும் வாய்ப்பு கிடைத்தது.
புல்லாங்குழலில் மனிதர் கலக்குகிறார்...
அவரது வாசிப்பு ஒன்று இந்த வாரத்தில் ரசித்த இசையாக!
இந்த வார புகைப்படம்:
இந்தப்
படமும் GARDEN OF FIVE SENSES-ல் எடுத்தது தான். இது ஒரு மொட்டு. என்ன பூ, என்ன
தாவரம் என்பதை யாராவது சொல்ல முடியுமா? என்று பார்க்கவே இந்தப் பகிர்வு! ஒரு
சின்னக் குறிப்பு வேணா தரவா? – மருத்துவ குணம் நிறைந்தது இச்செடி!
இப்ப பூ படமும் சேர்த்தாச்சு! :)
இப்ப பூ படமும் சேர்த்தாச்சு! :)
ராஜா காது கழுதைக் காது:
தில்லியிலுள்ள
ஒரு பூங்கா GARDEN OF
FIVE SENSES. வருடா வருடம் இங்கே FLOWER SHOW/FESTIVAL என கொண்டாடுவது வழக்கம். இந்த வருடமும் நடந்தது.
அங்கே நிறைய காதலர்களைப் பார்க்க முடிந்தது. Festival இல்லாத
நாட்களில் அங்கே குழந்தைகளோடு செல்வது அவ்வளவு நல்லதல்ல! இது போன்ற Festival சமயங்களில் காதலர்கள் கூட்டம் குறைவாகத் தான் இருக்கும் என்றாலும் சில
ஜோடிகளின் லீலைகளைப் பார்த்த ஒரு பத்து பன்னிரெண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன்
சொன்னது –
“இங்கே வரணும்னா கல்யாணம்
பண்ணிட்டு தான் வரணும் போல இருக்கு!”
படித்ததில் பிடித்தது:
ஒரு கோப்பைத் தேநீருக்கு
அவளிடம் கெஞ்ச வேண்டும்.
மப்ளர் கட்டாமல் நடக்க
அவள் பார்வைக்குத் தப்பவேண்டும்.
இன்னொரு கரண்டி சாம்பார்
அவள் அறியாமல் எடுக்க வேண்டும்.
மொசைக் தரையில்
தவறி வீழ்ந்த மாத்திரை
அவள் பார்வைக்குத் தப்பாது.
எட்டு மணிக் கடிகாரம்
அவள் சொன்னால் மணியடிக்கும்..
சாப்பிட வரச் சொல்லி.
ராட்சசிதான்..
எமகாதகிதான்..
உயிரை வாங்குபவள்தான்..
மூலையில் ஒரு தீபமாகிப் போனபின்
உற்றார் உறவுகள் நகர்ந்து போனதும்
தனித்திருக்கிற ஹாலில்
எடுத்துப் போட ஆளின்றி..
பிளாஸ்க் டீ குடிக்காமல்..
காலை சாம்பார் ஜில்லிட்டு..
உள்ளே குளிரும் நடுக்கத்திற்கு
சால்வை போர்த்தி..
அம்மு..
வாயேன்.. வந்து திட்டேன். !
( அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது )
- ரிஷபன்.
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.