வலைப்பூவில்
எழுத ஆரம்பித்த நாட்களிலிருந்தே என்னுடைய நண்பர்கள் பலரும் கேட்கும் கேள்வி – “உங்கள்
எழுத்துகளை புத்தகமாக வெளியிடலாமே?” என்பது தான்!
எனது பயணக் கட்டுரைகளை தொடர்ந்து படித்து உற்சாகமூட்டும் பின்னூட்டங்களை
தரும் வலையுலக நண்பர்களும் அவ்வப்போது பயணக் கட்டுரைகளை நூலாக வெளியிடலாமே என
யோசனைகள் தருவது வழக்கம். நண்பர்களை
மட்டும் இங்கே சொல்லி அத்துடன் நிறுத்துவது சரியல்ல! எனது மனைவியும் அவ்வப்போது
புத்தகம் வெளியிடுவது பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்!
என்னுடைய பயணக் கட்டுரைகளை வலைப்பூவில் தொடர்ந்து
வாசித்து வரும் பல நண்பர்களும் புத்தகமாக அல்லது மின்புத்தகமாக வெளியிட வேண்டும்
என்பதை நிறைய முறை சொல்லி இருக்கிறார்கள்.
குறிப்பாக மதுரைத் தமிழன்,
ரஞ்சனி நாராயணன், மது [கஸ்தூரி ரங்கன்], முரளிதரன் என ஒவ்வொருவரும் சொல்லியபடியே
இருந்தார்கள்.
சில வருடங்களாகவே இப்படி கேள்விகள்/யோசனைகள்
வரும்போதெல்லாம் அதைப் பற்றி சிந்தனை செய்வதே இல்லை. புத்தகமாக அச்சில் வெளியிடுவதில் எனக்கு சில
சிக்கல்கள் உண்டு என்று சொல்லி இந்த கேள்விகளை, யோசனைகளை தட்டிக் கழித்து விடுவது எனக்கு
வழக்கமாகி விட்டது!
இப்படியே இதிலிருந்து விலகியே இருந்த நான், சில
நாட்களுக்கு முன்னர் அனைவரது யோசனைகளை கருத்தில் கொண்டு என்னுடைய சில பயணக்
கட்டுரைகளை மின் புத்தகமாக வெளியிட முடிவு செய்தேன். அப்படி முதலாக எடுத்துக் கொண்டது உத்திராகண்ட்
மாநிலத்திலுள்ள நைனிதால் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகள் சிலவற்றிற்கு நான்
மேற்கொண்ட பயணம் பற்றி எனது எனது வலைப்பூவில் எழுதிய பயணக் கட்டுரைகளை.
WWW.FREETAMILEBOOKS.COM எனும் வலைத்தளத்தில் தொடர்ந்து பல மின்
புத்தகங்களை வெளியிட்டு வரும் குழுவினரில் ஒருவரனான திரு ஸ்ரீனிவாசன் அவர்களது மின்னஞ்சல்
முகவரியை எனக்கு அனுப்பி அவரைத் தொடர்பு கொள்ளச் சொன்னது ரஞ்சனிம்மா தான். நானும் திரு
ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி, அவர் உடனேயே பதில் அனுப்பினாலும், மின்புத்தக
வெளியீட்டுக்கான ஆயத்த வேலைகளை நான் செய்து அனுப்ப சில மாதங்கள் ஆனது! ஒரு வழியாக
சில நாட்களுக்கு முன்னர் அதைச் செய்து நண்பர் திரு ஸ்ரீனிவாசனுக்கு அனுப்ப, அவரும்
அவரது குழுவினருமாக எனது “ஏரிகள் நகரம்-நைனிதால்” பயணக் கட்டுரைகளை WWW.FREETAMILBOOKS.COM தளத்தில் 212-ஆவது மின் புத்தகமாக வெளியிட்டு
இருக்கிறார்கள். நண்பர் திரு ஸ்ரீனிவாசன்
அவர்களுக்கும் குழுவில் உள்ள மற்ற நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.
”ஏரிகள்
நகரம்-நைனிதால்” மின் புத்தக வெளியீடு பற்றிய தகவலை http://freetamilebooks.com/ebooks/lake-city-nainital/ எனும் சுட்டியின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்ய விரும்புபவர்கள் கீழ்க்கண்ட
சுட்டியின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில்
படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க:
நம்முடைய எழுத்து அச்சில் புத்தகமாக வந்து, அதை கைகளில்
வைத்துப் படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி இந்த மின்புத்தகம் மூலம் கிடைக்காது
என்று சொன்னாலும், இதிலும் மகிழ்ச்சி கிடைக்காமல் இருக்காது. எனது முதல் மின்புத்தகம் வெளி வந்திருப்பதை
என்னுடைய வலைப்பூவினை தொடர்ந்து படித்து பின்னூட்டங்கள் மூலம் உற்சாகப்படுத்தும்
உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
முதல் முயற்சி என்பதால் சில தவறுகள் இருந்தால் அது
என்னுடையது மட்டுமே அன்றி மின்புத்தகத்தினை வெளியிட்டு இருக்கும் நண்பர்களுடையது
அல்ல.
என்னுடைய மேலும் சில பயணக்கட்டுரைகளை தொடர்ந்து மின்புத்தகமாக
வெளியிடும் எண்ணமும் உண்டு என்பதையும் இங்கே உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்!
புத்தகம் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில்
சொல்லலாமே!
என்றென்றும் அன்புடன்....

