தொடரின் முந்தைய பகுதிகளுக்கான சுட்டிகள் கீழே.....
சென்ற பகுதியான சர்வேஷ்வர் மகாதேவ் பதிவில் இட்லி-சாம்பார் மணத்துடன்
முடித்திருந்தேன். இந்த பகுதியில் குருக்ஷேத்திராவில் உள்ள நரக்தாரி எனும் சிறிய
கிராமத்தில் அமைந்த பீஷ்ம குண்ட் [அ] பாண்கங்கா எனும் இடத்தினைப் பற்றிப்
பார்க்கலாம்.
பீஷ்ம குண்ட் – ஒரு தோற்றம்
மஹாபாரதப் போர் நடந்தபோது பீஷ்மர் கௌரவர்களின் பக்கம் இருந்தது அனைவரும்
அறிந்ததே. பீஷ்மர் அவர்கள் பக்கம் இருக்கும் வரை பாண்டவர்களுக்கு வெற்றி கிடைப்பது
கடினம் என்பதும், பீஷ்மர் எப்போது நினைக்கிறாரோ அப்போது தான் அவர் மரணிப்பார் என்ற
வரம் பெற்றவர் என்பதாலும் பாண்டவர்களுக்கு போரில் முதல் ஒன்பது நாட்கள் வரை
கடினமான சேதம்.
முதல் ஒன்பது நாட்கள் வரை வில்லாளி அர்ஜுனனுக்கு, கிருஷ்ணனே தேரோட்டியாக
இருக்க, பத்தாவது நாள் அவருக்கு தேரோட்டியாக வந்தது ஷிகண்டி. பெண்களுக்கு எதிராக
போர் புரிய மாட்டேன் என்ற கொள்கை உடைய பீஷ்மர் தனக்கு எதிரே பெண்ணாக மாறிய ஷிகண்டி
அர்ஜுனனுக்கு தேரோட்டியாக வந்து நிற்க, அவர் சற்றே தடுமாறி அம்புகள் எய்வதை
நிறுத்த அர்ஜுனன் பீஷ்மர் மேல் அம்புகள் தொடுத்து அவரை கீழே விழ வைத்தார்.
அம்புகளுடன் பீஷ்மர்
ஆனாலும் உயிர் பிரிவது எப்போது என அவரே முடிவு செய்ய வேண்டியபடியால்
அம்புகளுடன் கீழே விழுந்து கிடந்த இடம் தான் இன்றைய நரக்தாரி கிராமம். வீழ்ந்து
விட்ட பீஷ்மரைப் பார்க்க பாண்டவர்களும், கௌரவர்களும் அங்கே வந்த போது, தனக்கு
தண்ணீர் தாகமாக இருக்கிறது எனச் சொல்லவே, கங்கையை நினைத்து பூமியில் தனது
பாணத்தினைச் செலுத்தி அங்கேயே கங்கையை தோன்றச் செய்தான் அர்ஜுனன். பாணத்தினால்
தோன்றிய கங்கா – பாண் கங்கா. அதிலிருந்து வந்த தண்ணீரைப் பருகி தாகம் அடங்கியது
பீஷ்மருக்கு.
பீஷ்ம
குண்ட் கோவில்
எங்கேயாவது தாவிடுவாரோ என
கூண்டில் அடைத்து விட்டார்கள் போலும்!
இந்த இடத்தில் அம்புகள் தைத்த உடலோடு பீஷ்மர் படுத்திருக்க, அருகிலேயே
பாண்டவர்கள் அனைவரும் நின்று கொண்டிருக்கும்படி ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள்.
கோவில் வாசலிலேயே அனுமனுக்கு 26 அடியில் ஒரு பெரிய சிலையும் கட்டியிருக்கிறார்கள்.
பாணத்தினால் உருவான குளத்தினைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் படிகள் அமைத்து
வைத்திருக்கிறார்கள். கோவிலும் மற்ற கட்டுமானங்களும் அமைக்கப்பட்டது இந்த
நூற்றாண்டிலாகத் தான் இருக்க வேண்டும்.
ஆங்கான்வாடி பள்ளியில் இருந்த ஒரு குழந்தை
கோவில் இருக்கும் கிராமத்தில் பெரியதாக விளம்பரங்களோ சுற்றுலா பயணிகளுக்கான
ஏற்பாடுகளோ கிடையாது. சிறிய சிறிய கடைகள், கோவில் மற்றும் ஆங்கான்வாடி பள்ளி,
வயல்வெளிகள் என ரம்மியமான கிராமம். வரும் பாதையும் அப்படி ஒன்றும் நன்றாக இராது.
கிராமத்திற்குள் வரும் வழியில் ஒரு மிகச்சிறிய தகவல் பலகை. குருக்ஷேத்திரத்திற்கு
வரும் மக்கள் எல்லோரும் இங்கு வரும் வகையில் ஹரியானா சுற்றுலாத்துறை வசதிகளும்,
விளம்பரங்களும் செய்தால் இந்த இடத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகமாகலாம்.
பொதுவாக கிரகண சமயங்களில் மட்டும் பெருந்திரளாக மக்கள் வருகிறார்கள் என கோவிலின்
பிரதான பூஜாரி சொன்னார்.
கோவிலின் ஒரு பகுதியாக “[G]கோ சாலையும் இருக்கிறது. நிறைய பசுக்களும்
கன்றுகளோடு அங்கே இருக்க, பசுஞ்சாணத்தின் வாசம் இடம் முழுவதும் பரவி இருக்கிறது.
அவற்றின் பரமாரிப்பு, மற்றும் கோவில் பராமரிப்பு ஆகியவற்றிற்கு அங்கு வரும்
மக்களும், வெளிநாட்டிலுருந்தும் பணம் கொடுப்பதாக எழுதி வைத்திருந்தார்கள்.
சாதாரணமாக நிலத்தடி நீரின் மட்டம் எல்லா இடங்களிலும் குறைந்து இருக்க, பீஷ்ம
குண்ட் குளத்திலும் நீர் இல்லாது போய்விட்டது. சமீபத்தில் ஒரு பெரிய ஆழ்துளை
குழாய் அமைத்து மோட்டார் மூலம் குளத்தினை நிரப்புகிறார்கள். மாதத்திற்கு ஒரு முறை
தண்ணீரை வெளியேற்றி குளத்தினை சுத்தம் செய்து மீண்டும் தண்ணீர் நிரப்புகிறார்கள்.
நாங்கள் சென்றபோது அந்த குளத்தினைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.
குளத்தினுள் பல நாணயங்கள் பாசியோடு பாசியாக சிதறிக் கிடக்கின்றன போலும்.
சிறுவர்கள் கால்களால் தேய்த்துக் கொண்டே நடக்க, என்ன செய்கிறார்கள் என்று
பார்த்தால், நாணயங்களை காலாலே தேடித்தேடி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் அந்த
சிறுவர்கள்!
அழகான
ஆமைக்குட்டி!
உணவு உண்ணும் அணில்!
அப்படி கால்களால் தேடிக்கொண்டிருக்கும்போது அகப்பட்டது ஒரு உயிரினம்! அட
சிறுவன் கையில் ஒரு சிறிய ஆமை. ஒரு கையளவு தான் இருக்கும் குட்டி ஆமை. அதைக்கையில்
பிடித்துக் கொண்டு வந்தார்கள் சிறுவர்கள். கோவிலின் வெளியே மாடுகள் தண்ணீர்
குடிக்க வைத்திருந்த ஒரு பெரிய தொட்டியில் அதைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து
விளையாடிக் கொண்டிருந்தார்கள். கையில் பிடித்துக் கொண்டிருந்த ஆமைக்குட்டி
மேலே! அங்கே எடுத்த அணில் படம் பகுதி 1
இல் வெளியிட்டு இருந்தேன். மீண்டும் இங்கேயும்!
ஆங்கான்வாடி பள்ளியில் இருந்த ஒரு குழந்தை
பக்கத்திலேயே ஆங்கான்வாடி பள்ளி. அங்கே சில குழந்தைகள் விளையாடிக்கொண்டு பாடம்
படித்தபடி இருந்தனர். அவர்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு பீஷ்மகுண்ட்
எனும் இந்த புராதனமான இடத்திலிருந்து ரத்தபூமியான குருக்ஷேத்திரத்தில் ரத்தம்
சிந்திய அத்தனை பேரின் நினைவுகளோடே அடுத்த இடத்திற்குக் கிளம்பினோம். அடுத்த இடம்
என்ன என்பதை அடுத்த பகுதியில் சொல்லட்டா!
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.