பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 25
படம்: இணையத்திலிருந்து.....
ஷாம்லாஜியிலிருந்து புறப்பட்ட நாங்கள்
அடுத்ததாக நிறுத்திய இடம் நெடுஞ்சாலையில் இருந்த [G]கிரிராஜ் உணவகத்தில்
தான். நல்ல பசி என்பதால் உள்ளே நுழைந்து கேட்ட முதல் கேள்வியே உடனடியாக சாப்பிட
என்ன கிடைக்கும் என்பது தான். அதற்கு கிடைத்த பதில் – எல்லாமே கிடைக்கும் – ஆனால்
பதினைந்து இருபது நிமிடம் ஆகும்! நல்ல பதில்! வேறு வழியில்லை காத்திருக்கத் தான்
வேண்டும்.....
உணவகத்தினை நிர்வகிப்பது ஒரு கணவன் – மனைவி.
இருவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது உணவகத்தினை அழகு படுத்தியிருக்கிறார்கள்.
சுவர் எங்கும் துவாரகாநாதனின் படங்கள், இயற்கைக் காட்சிகள் என பல ஓவியங்கள்
அழகழகாய் மாட்டி வைத்திருந்தார்கள். அவர்களிடம் அனுமதி கேட்டு படம் எடுத்துக்
கொள்ள வேண்டும் என நினைத்தபடியே ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களைப் போலவே வேறு ஒரு குடும்பத்தினரும்
அங்கே காத்துக்கொண்டிருந்தார்கள்.
ஒரு இளைஞர், அவர் மனைவி, சிறு குழந்தை மற்றும்
இளைஞரின் அப்பா-அம்மா ஆகியோர் தான். அவர்கள்
எங்களுக்கு முன்னரே வந்துவிட்ட படியால் அவர்கள் கேட்டிருந்த உணவு சுடச்சுட வந்து
சேர்ந்தது. பெரியவர் ஒவ்வொன்றையும் ரசித்து ருசித்து சாப்பிட்டு அதற்கான
கருத்துகளையும் சொல்லிக் கொண்டிருந்தார். பிடிக்காத சிலவற்றை ஒதுக்கி,
பிடித்தவற்றை சாப்பிட்டு அதுவும் மீதமாக, உணவகம் வைத்திருந்த பெண்மணியை அழைத்து
அதை வீட்டுக்கு எடுத்துப் போக தனியாக கட்டிக் கொடுக்கவும் சொன்னார். பெரியவரின்
மனைவி, “அதெல்லாம் வேண்டாங்க!” என்று சொல்ல, பெரியவரோ விடாப்பிடியாக “அவ கிடக்கா! நீ
கட்டிக் கொண்டாம்மா!” என்று அடுத்த உணவை ருசிக்க ஆரம்பித்தார்.
அதற்குள் எங்களுக்கான உணவும் வந்து சேர்ந்தது.
நாங்கள் கேட்டிருந்த சப்பாத்தி, பராந்தா, ஆலு-சிம்லா மிர்ச் சப்ஜி, சற்றே இனிப்பான
[dh]தால், ராய்த்தா, குஜராத்தி பாப்பட்[d] [அப்பளம்], ஊறுகாய் என அனைத்தும் மிகவும் ருசியாக இருந்தது. வீட்டு உணவு சாப்பிடும் உணர்வு தான் எங்களுக்கு!
ஓட்டல் நடத்தும் தம்பதியே முன்னின்று சமையல் வேலைகளைப் பார்வையிட்டு
தயாரிக்கிறார்கள் என்பதால் தரத்திலும் குறைவில்லை. இருந்த பசிக்கு, ருசியும்
கைகொடுக்கவே கிடுகிடுவென சப்பாத்திகள், பராந்தாக்களும் உள்ளே விரைவாக இறங்கிக்
கொண்டிருந்தன. நாங்கள் இங்கே வாய்க்கும் கைக்கும் சண்டை
போட்டுக் கொண்டிருக்க, பெரியவர் அங்கே தனது விளையாட்டுகளை தொடர்ந்து
கொண்டிருந்தார்.
சாப்பிட்டு முடித்ததும் ஐஸ்க்ரீம் சாப்பிட்டே
ஆக வேண்டும் என குழந்தை போல அவர் அடம் பிடிக்க, ”பயணத்தின் போது
வேண்டாம், ஒத்துக்காது” என அவரது மனைவி, மகன், மருமகள் என அனைவரும் எடுத்துச்
சொல்ல, ”வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் – உடம்புக்கு ஒத்துக்காது
என எல்லாத்தையும் தள்ளிக் கொண்டே இருந்து என்ன செய்யப் போகிறேன்! – நீங்க என்ன சொல்றீங்க?” என உணவகத்தின்
உரிமையாளரையும் தனது கட்சிக்கு இழுத்துக் கொண்டிருந்தார். ஜெயித்தது பெரியவர் தான்!
உணவினை ரசித்து ருசித்து நாங்கள் சாப்பிட்ட
பிறகு, எங்களுக்கான உணவிற்கு ரசீது கொண்டு வந்தார் அந்தப் பெண்மணி. “சாப்பாடு
பிடித்திருந்ததா? ஏதேனும் குறை உண்டா?” என்று அன்பான விசாரிப்பு அவரிடமிருந்து.
வீட்டில் சாப்பிட்ட உணர்வு எங்களுக்கு என்று அவரைப் பாராட்டினோம். கணவன் – மனைவி இருவருமே தங்கள் வேலைகளை விட்டு,
இப்படி உணவகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். அவர்கள் மேலும் சிறந்த நிலைக்கு வர
வாழ்த்தினோம். அப்படியே ஓவியங்களையும்
படம் எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டேன் [பதிவுக்கு புகைப்படம் தேவையாயிற்றே! வலைப்பதிவர்
காரியத்தில் கண்ணா இருக்கணும்!]
நானகு பேர் சாப்பிட்டதற்கான செலவும்
அதிகமில்லை. ஆளுக்கு நூறு ரூபாய்க்குள்
தான்! பல சமயங்களில் உணவுக்காகவே செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அத்தனை
செலவு செய்தும் நன்கு சாப்பிட்ட திருப்தி இருக்காது. ஏதோ தானோ எனச் சமைத்து பரிமாறிய உணவும் ஏனோ
தானோ என்று தானே இருக்கும்! இந்த உணவகத்தில் வீட்டில் சாப்பிட்ட உணர்வு – கூடவே அவ்வப்போது
நம்மிடம் வந்து இன்னும் ஏதேனும் வேண்டுமா என்று பாசத்தோடு கேட்கக் கூடியவரும்
இருந்துவிட்டால் நன்றாகத் தானே இருக்கும்!
நண்பர் வீட்டில் இருந்த கார்வண்ணன்....
நாங்களும் சாப்பிட்டு ஓட்டுனர் [ch]சிராக்-உம் சாப்பிட்டு முடித்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. சாலைகள்
நன்றாக இருந்தால் பயணம் இனிக்கும் என்றாலும், பயணம் இலக்கை அடையத்தானே வேண்டும்.
அஹமதாபாத் நகருக்கு வந்து சேர்ந்து நேராக நண்பரின் வீட்டுக்கு போய்ச்
சேர்ந்தோம். நண்பர் அலுவகத்திலிருந்து
வந்து சேர்ந்த பிறகு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதன் பிறகு அவருடன் நகர்
வலம் செல்ல வேண்டும். நகரில் என்ன
பார்த்தோம், வேறு என்ன செய்தோம் என்ற விவரங்களை அடுத்த பகுதியில் சொல்லட்டா!
நாளை வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்
புது
தில்லி.