மார்ச் 8 அன்று உலக மகளிர் தினம். இந்த தினத்தினை உலக மகளிர் தினமாகக் கொண்டாட ஆரம்பித்து 100 வருடம் ஆகிவிட்டதாம்! அன்று தான் என் வாழ்விலும் ஒரு பெண் நுழைந்தாள். நான் சிவனே என்று தில்லியில் இருக்க, ”பெண் பார்க்க போக வேண்டும் வா!” என்று அம்மா-அப்பாவின் ஆணை. அவர்கள் திருச்சியிலிருந்து கோவை வந்து விட நான் தில்லியிலிருந்து கோவை வந்தேன்.
பெண் பார்க்கும் படலம் என்பதெல்லாம் பிடிக்காது என்றாலும், அப்பா-அம்மா சொல்லைத் தட்டாமல், எட்டுவித கட்டளைகள் போட்ட கிட்டுமணி போல இல்லாமல் நான் போட்ட ஒரே கட்டளை – ”எந்த பெண்ணை முதன் முதலில் பார்க்கச் செல்கிறேனோ அந்த பெண்ணையே மணப்பேன்” என்பதுதான்! இதில் இன்னொரு விசேஷமும் உண்டு. அவரின் புகைப்படத்தைக் கூட நான் அதுவரை பார்க்கவில்லை!
பெண்பார்க்கச் செல்லும் எல்லா இளைஞர்களைப் போலவே நானும் அன்றே பல்பு வாங்கினேன்! 12-13 வருடங்களாக ஸ்வயம்பாகமாக சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்த காரணத்தால் “உனக்குச் சமைக்கத் தெரியுமா? என நான் கேட்க, ”யாராவது சமைச்சா, நான் நல்லா சாப்பிடுவேன் - உங்களுக்குத் தான் நல்லா சமைக்கத் தெரியுமாமே!” என்ற பதில் கிடைத்து மொத்தமாய் ஆஃப் ஆனேன்.
போட்ட கட்டளைப்படியே அன்றே முடிவு செய்து மார்ச் 10-ஆம் தேதியே நிச்சயதார்த்தம் – திருச்சியில் எங்கள் வீட்டில். அதுவரை காதலிக்காதது தப்பு என்பதே அப்போது தான் தெரிந்தது! நிச்சயதார்த்தம் முடிந்து நான் தில்லி வந்து விட அவர்களோ கோவையில்! அதனால் தொலைபேசியில்தான் கட்டிக்கொள்ளப்போகும் மனைவியை காதலிக்க முடிந்தது! தொலைபேசித் துறைக்கு எங்களால் நல்ல வருமானம்! வெறும் குரல் மட்டுமே கேட்க முடிந்தது என்பதால் 3ஜி வசதிகள் அப்போதே வரவில்லையே என்ற வருத்தம் இப்போது வருகிறது!
இப்படியாக 73 நாட்கள் தொலைபேசியிலேயே காதல் தொடர்ந்தது! மே 23 அன்று தான், 2611 கிமீ தொலைவில் இருந்த என் தொலைபேசிக் காதலியை தான் திரும்பவும் சந்தித்தேன்! மே 24-ல் கல்யாணம்! இப்படியாக கெட்டிமேளத்துடன் என் காதலியை நான் மணந்து கொண்டேன்! கெட்டிமேளம் என்றவுடன் தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.
தில்லியின் ஒரு அரங்கத்தில் பாக்யராஜ் தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில் பேசிய ஒரு பேச்சாளர் இப்படி பேசினார் – “கெட்டி மேளம், கெட்டி மேளம்” என்ற ஆணை கிடைத்தவுடனே தவில் வாசிப்பவர் கெட்டி மேளம் கொட்ட அதன் சத்தம் எப்படிக் கேட்கும் தெரியுமா? கல்யாணம் பண்ணிக்கொள்ளும் அந்த ஆணைப் பார்த்து “மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்!” என்று சொல்வது போல இருக்கும்” என்று.
அந்த நிகழ்ச்சியினை மனைவியுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த ஒரு 65 வயது பெரியவர் மிகவும் ரசித்து கை கொட்டி வாய்விட்டுச் சிரித்தார் – பக்கத்தில் மனைவி இருப்பதை மறந்து – விளைவு? அவர் தொடையில் ஒரு அடி, ஒரு நிமிட்டாம்பழம்! அதாங்க ஒரு கிள்ளு! இந்த நிகழ்வினை பார்த்து, ரசித்து, என்னிடமும் பகிர்ந்து கொண்ட பத்மநாபன் அண்ணாச்சிக்கும் நன்றி!
ஆக,என்னுடைய திருமண நாளான இன்று பெண் பார்க்கும் படலத்திலிருந்து கல்யாணம் வரை சொல்லியிருக்கிறேன். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு கல்யாணத்திற்காக பெண் பார்த்த அனுபவங்கள் உண்டு. இதையே ஒரு தொடர் பதிவாக ஆக்கினால் என்ன என்ற ஒரு யோசனை! ஆகவே இதைத் தொடர விரும்புவர்கள் தொடரலாமே….
”கல்யாண நாள்னு சொல்றீங்க, விருந்தெல்லாம் கிடையாதா?” என்று கேட்பவர்களுக்கு – என்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவில் இன்று “போஜனம் செய்ய வாருங்கள்” என்ற பாடலை பதிந்திருக்கிறேன். மீனாட்சி சுந்தரேசர் கல்யாணத்தில் என்னென்ன பகிர்ந்தனர் என்ற விவரங்கள் அடங்கிய பாடல்… அங்கு சென்று ருசித்து மகிழுங்களேன்…
மீண்டும் இன்னுமொரு பகிர்வில் சந்திப்போம்…
வெங்கட்.