தலைப்பைப் பார்த்தவுடன் படிக்காம ஓடிடாதீங்க மக்களே… நிச்சயம் நல்ல விஷயம் உங்களுக்குக் கிடைக்கும். முழுதும் படிங்க!
ஒரு மாத காலம் பயிற்சி எனவும் அதில் ஐயா ரொம்ப கவனம் செலுத்துவதாகவும் கொஞ்சம் அதிகமாகவே முன்பு கொட்டியது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தப் பயிற்சியில் என்னுடன் பயின்ற மாணவர் மிகவும் பிரபலமான ஒருவர் –
ஓடியே சாதித்தவர். அவரைப் பற்றிய பகிர்வு தான் இது.
நம்மில் யாரையாவது ஓடச் சொன்னால் ஒரு நாளில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓட முடியும்? அதிகபட்சம் 2
முதல் 5 கி.மீ ஓடுவோமா? திரு அருண் பரத்வாஜ்
- ஒவ்வொரு நாளும் ஒரு நெடுந்தொலை ஓட்டம் [மாரத்தான்] அதாவது
42.195 கி.மீ சர்வ சாதாரணமாக ஓடிவிடுவார். இந்தியாவின் திட்டக் கமிஷனில்
[Planning Commission] வேலை செய்யும் அருண்,
41-வயது இளைஞர்.
மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன். மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு, அதாவது அவரது முப்பதாவது வயதில். தான் மாரத்தான் ஓட்டம் ஓட ஆரம்பித்தது, தனது பெண் குழந்தைக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் என்று சொல்கிறார். அதற்கு முன்னர், சதுரங்கம், பளுதூக்குதல் என்று முயன்று பிறகுதான் ஓட்டத்தில் மனதையும் காலையும் பதித்து இருக்கிறார். அதை சோதித்துப் பார்க்க, ஹரித்வார் நகரிலிருந்து “பா[B]க்பத்” நகருக்கு ஒரே நாளில், அதாவது
24 மணி நேரத்தில், ஓடியே செல்வது என முடிவு செய்திருக்கிறார்.
ஹரித்வார்-பா[B]க்பத் இடையே இருக்கும்
180 கி.மீ தொலைவினை
23 மணி
25 நிமிடங்களில் கடந்து முடித்த அருண் அவர்கள் தனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக மாரத்தான் ஓட்டத்தினை தேர்ந்து எடுத்த பின் திரும்பிப் பார்க்கவே இல்லை. பயிற்சி..பயிற்சி..
மேலும் கடினமான பயிற்சிதான்.
மாரத்தான் ஓட்டம் என்பதே கடினம் என நினைக்கும் பலர் உண்டு. ஆனால் அருண் அப்படி இல்லை. Ultra Marathon என்று சொல்லப்படும் ஓட்டம் அதைவிட அதிக தூரத்தினை தொடர்ந்து ஓடும், அதாவது சில நாட்கள் வரை தொடர்ந்து ஓடி கடக்கும் தூரங்கள் இதில் உண்டு. இந்தியாவின் ஒரே
Ultramarathon ஓடுபவர் அருண் தான். பயிற்சியாக தினம் தினம்
40 கி.மீ தூரத்தினை சர்வசாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.
இவரது விடாமுயற்சியை நிச்சயம் பாராட்டியே தீர இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது. படிக்கும் காலத்தில் அதாவது
8-ஆவது முதல்
10-ஆவது படிக்கும்வரை கழுத்தில் புற்று கட்டி வந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்போது முற்றிலும் குணம் பெற்றுவிட்டவர் தொடர்ந்து ஓடிக்கொண்டு, இந்தியாவிற்கு பல நெடுந்தொலை ஓட்டப்போட்டிகளில் பெருமை சேர்த்துக் கொண்டு வருகிறார்.
இதுவரை பல நாடுகளில் நடந்த
Ultramarathon ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுடிருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வது போல ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன்.
Badwater Ultramarathon உலகத்தின் மிகக் கடினமான ஓட்டம். கடக்க வேண்டிய மொத்த தூரம்
217 கி.மீ. கடல்மட்டத்திலிருந்து
282 அடி கீழே இருக்கும்
Badwater Basin [கலிஃபோர்னியா] என்ற இடத்திலிருந்து கடல் மட்டத்திலிருந்து
8360 அடி மேலிருக்கும்
Whitney Portal [கடினம் தானே… அதுவும் கடினமான வெயில்
49 டிகிரி இருக்கும் இடத்தில் இருந்து
10 டிகிரி குளிர் பிரதேசம் வரை] என்ற இடம் வரை ஓட வேண்டிய இந்த ஓட்டத்தில் சென்ற வருடம்
41 மணி 6
நிமிடத்தில் வெற்றிகரமாக ஓடி முடித்திருக்கிறார். அவரது இந்த ஓட்டம் பற்றிய டைரிக்குறிப்பு இங்கே படிக்கலாம்.
அருண் அவர்களிடம் இந்த ஒரு மாதப் பயிற்சி காலத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் என்னை பிரமிக்கச் செய்தது. அவரது உணவு முறைகளைப் பற்றிக் கேட்ட போது இன்னும் ஒரு விஷயத்தினையும் சொன்னார் –
அது அவர் ஒரு சைவ உணவு உண்பவர் என்பது. வெளி நாடுகளுக்கு செல்லும்போது அங்கு கிடைக்கும் அசைவ உணவுகளை சாப்பிடாமல் அரிசி, பீன்ஸ், காய்கறிகள், பழங்கள் எனத் தேடித் தேடி சாப்பிடுவாராம்.
நிச்சயம் இந்தக் கட்டுரை படித்தபின் நம்மில் சிலருக்காவது, அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குச் செல்வதானால் கூட, வண்டியை நாடுவது குறைந்தால், நிச்சயம் மகிழ்ச்சி தான்.
நான் கூட இனி தினமும் கொஞ்சம் ஓட ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க? அட இருங்க நானும் வர்ரேன் ஓட என்கிறீர்களா?
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
டிஸ்கி: ஒரு மாத பயிற்சி வெற்றிகரமாக முடிந்தது. இப்போது திரும்பவும் அலுவலகம் செல்லப் போவதை நினைத்தால் சற்று வருத்தம் தான். பதிவுகள் பொருத்தவரை இனித் தொடர்ந்து வரும் என்று மகிழ்வுடன் சொல்லிக்கறேன் மக்களே… :)