இந்த வார செய்தி:
இன்று PIXELS எனும் ஆங்கிலத்
திரைப்படம் இந்தியாவில் வெளியிடப் படுகிறது. Science
Fiction திரைப்படமான இதில் Adam Sandler நடித்திருக்கிறார்.
அன்னிய கிரக வாசிகள் சிலர் பூமி மீது போர் தொடுத்து பல சேதங்களை ஏற்படுத்துவதாக
இதில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதில் ஒரு காட்சியின் Teaser நேற்று வெளியிட்டு இருக்கிறார்கள் இப்படத்தின் இயக்குனர் Chris Columbus மற்றும் Adam Sandler. இதில் வரும் ஒரு காட்சி தான் இன்று நாம்
பார்க்கப் போகும் முதல் செய்தி.
காதல்
சின்னம் தாஜ்மஹால் – அதன் முன்னர் ஒரு இளைஞன் ஒரு பெண்ணிடம் தன் காதலைச் சொல்லி
அவளுக்கு ஒரு பரிசு தருகிறான். அந்தப் பெண்ணும் மகிழ்ச்சியுடன் அதை வாங்க
நெருங்கும்போது அவள் காணும் காட்சி அவளுக்கு அதிர்ச்சியை உண்டாக்குகிறது. என்ன
காட்சி? வானத்தில் இருந்து வந்த சில விண்கலங்களிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றைகள்
மூலம் காதல் சின்னமான தாஜ்மஹால் இடிக்கப்படுகிறது!
அந்த Teaser நீங்களும்
பாருங்களேன்!
எப்படியாவது
இந்தியாவின் காதல் சின்னத்தை அழித்து விடவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு ஏன்!
இந்த வார முகப்புத்தக இற்றை:
மூழ்கினால் தண்ணீரை குற்றம் சொல்கிறான்..... தடுக்கி விழுந்தால்
கீழே கிடந்த கல்லைக் குற்றம் சொல்கிறான்..... மனிதன் எத்தனை விசித்திரமானவன்..... தன்னால் எதையாவது செய்ய முடியாவிட்டால்
விதியைக் காரணமாகச் சொல்கிறான்!
இந்த வார புகைப்படம்:
[bh]புட்டா.... தற்போது
தில்லியில் பல இடங்களில் இப்படி மக்காச்சோளம் சுட்டு விற்பது பார்க்க முடியும்.
சீசன் வந்துவிட்டால் அனைத்து இடங்களிலும் இப்படி திடீர் வியாபாரிகளை பார்க்க
முடியும்! ஐந்து ரூபாய், பத்து ரூபாய்க்கு மக்காச்சோளம் சுட்டு, அதன் மேல் மசாலா
தடவி தருவார்கள் – எலுமிச்சை பாதியாக நறுக்கி அதனால் மசாலாவை தொட்டு சோளம்
முழுவதும் தடவித் தருவார்கள்..... கேட்கும்போதே சாப்பிடணும்னு தோணுது இல்ல! படம் எடுத்தது தில்லியில் அல்ல!
மேகாலயா மாநிலத்தில்!
தலைநகரிலிருந்து:
சென்ற வாரத்தின் ஓர் நாள்... கீழ்வீட்டிலே யாருக்கோ திருமணம். அன்று
முகப்புத்தகத்தில் எழுதியது கீழே... ரொம்ப
கஷ்டம் சாமி!
கீழ் வீட்டில் கல்யாணம்.... இரவு 09.30க்கு மேல் தான்
மாப்பிள்ளை ஊர்வலம் [bharaat] புறப்பாடு..... வாத்யக்
கோஷ்டி நான்கரை மணிக்கே வந்து சேர்ந்தாயிற்று.... ஒரே மெட்டில் போட்டுத் தாக்கிக்
கொண்டு இருக்கிறார்கள்....... காது “எப்படியாவது இந்த சத்தத்திலிருந்து எனக்கு விடுதலை கொடேன்” என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறது.... இந்த மாதிரி நேரங்களில்
மட்டுமாவது காது கேட்காமல் இருந்தால் பரவாயில்லை! கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக
தலைக்கு மேல் உட்கார்ந்து வேகவேகமாய் கொட்டுவது போல உணர்வு எனக்கு..... ஏதோ
படத்தில் வடிவேலுவை நிற்க வைத்து வரிசையாக பலர் வந்து கொட்டுவார்களே அப்படி
இருக்கிறது எனக்கு! ம்ம்ம்..... என்ன செய்யலாம்!
அடாது மழை பெய்தாலும் விடாது மேள தாளம், நடனம் என
தொடர்ந்து கொண்டே இருந்தது!
இந்த வார காணொளி:
ஆசிரியர்கள்.... ஒவ்வொரு மாணவனின்
வெற்றிக்குப் பின்னாலும் இவர்களின் பங்கு மகத்தானது. அப்படி ஒரு ஆசிரியர் பற்றி
சொல்லும் காணொளி. பாருங்களேன்!
படித்ததில் பிடித்தது:
இராமேஸ்வரத்தின் கரையில்
எல்லோரும் மீன் பிடிக்க
கடலோடியபோது
நீ மட்டும்
தூண்டிலோடு
விண்மீன்களைப் பிடித்துக்கொண்டிருந்தாய்
நெருப்பாற்றில் நீந்தியதால்
உன் முதுகில் முளைத்தன
அக்னிச் சிறகுகள்.....
உறக்கங்களைத் துறந்துவிட்டு
கனவுகளின் இமைத் திறக்க
ஒவ்வொரு நொடியிலும் கரைந்தாய் – இன்று
ஒவ்வொரு இந்தியனின்
கலையாத கனவாகி மறைந்தாய்
கலாம் என்பதை
காலம் என்றும் உச்சரிக்கலாம்
எல்லா காலத்துக்குமான
இணையற்ற ஆளுமை என்பதால்...
இனி-
பகுத்தறிவாளனும் சொல்லக் கூடும்
இராமேஸ்வரம் புனிதத் தலமென்று.....
மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..
நட்புடன்