வெள்ளி, 29 மே, 2015

ஃப்ரூட் சாலட் – 135 – நகரும் தோட்டம்! – உணவும் பசியும் – பதில் ப்ளீஸ்!




இந்த வார செய்தி:


கொல்கத்தா நகரில் வாடகை கார் ஓட்டுகிறார் திரு [Dh]தனஞ்சய் சக்ரபோர்த்தி. தனது வாகனத்தினை ஒரு சிறிய தோட்டமாகவே மாற்றி இருக்கிறார். வாகனத்தின் மேற்புறத்தில் சில மாற்றங்கள் செய்து, அதில் புற்களை வளர்ப்பது மட்டுமன்றி, வாகனத்தின் உள்ளேயும் தொட்டிகளில் செடிகளை வளர்த்து வருகிறார்.  குளிரூட்டப்பட்ட வாகனம் இல்லை என்றாலும் இவரது வாகனத்தில் பயணம் செய்யும் போது சூடு தெரியவில்லை என்று அதில் பயணித்த பலரும் சொல்கிறார்களாம்.

செடிகள் நட்டால் மட்டும் போதாது அவற்றுக்கு தண்ணீர் விட்டு பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும் என்று சொல்லும் இந்த 40 வயது இளைஞரைப் பற்றிய முழு செய்தியும் இங்கே சென்றால் படிக்கலாம்!

இந்த வார முகப்புத்தக இற்றை:

Always smile back at little children. To ignore them is to destroy their belief that the world is good.

இந்த வார குறுஞ்செய்தி:

மீதம் வைத்த உணவில் யாருடைய பசியோ இருக்கிறது.

பின் குறிப்பு: இந்த செய்தியைப் படித்த பிறகு வந்த இன்னுமொரு செய்தி.  எத்தனை கொடுமையான உண்மை.....  :(

The World’s hunger is getting ridiculous. There is more fruit in a rich man’s shampoo than in a poor man’s plate.    

இந்த வார காணொளி:

தழைக்கட்டும் மனிதம்......


It,s nice True Humanity.Must watch
Posted by Malik Tajamul Hayat Khan on Monday, October 20, 2014




ராஜா காது கழுதை காது:

சென்னையின் மின்சார ரயில் பயணத்தின் போது, நான் இருந்த பெட்டியில் பயணித்த குடும்பத்தில் ஒருவர் கைகளை நீட்டியபடி ஆலாபனை செய்து பாட்டுப் பாட ஆரம்பித்தார்.  அப்போது அந்த மனிதரின் பெண் சொன்னது – “அப்பா பாட்டு பாடாதே.... அதுவும் கையை வேற நீட்டிக்கிட்டு பாடற! யாராவது பிச்சை போட்டுட போறாங்க!

படித்ததில் பிடித்தது:

ஒரு அழகிய குட்டிகுழந்தை தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்.

அவளது அம்மா உள்ளே வந்து ஒரு புன்னகையுடன் குட்டிப் பெண்ணை கேட்டார்: "என் செல்லம், நீங்கள் உங்கள் அம்மாவுக்கு இரண்டு ஆப்பிள்களில் ஒன்றை கொடுக்க முடியுமா ?"

சில விநாடிகள் தனது அம்மாவை பார்த்துவிட்டு திடீரென்று குட்டி பெண் ஒரு கையில் உள்ள ஆப்பிளை ஒரு விரைவான கடி கடித்து, மற்றும், அடுத்த கையில் உள்ள ஆப்பிளையும் ஒரு கடி கடித்து விட்டாள்.

அம்மாவுக்கு சற்றே ஏமாற்றம்.

அப்பொழுது, குழந்தை தனது அம்மாவிடம் கடித்த ஆப்பிள் ஒன்றை நீட்டி சொன்னாள்,  "இந்தா அம்மா... இது தான் மிகவும் சுவையா இருக்கு"

இந்த வார கேள்வி:

பதில் சொல்லுங்க ப்ளீஸ்!



மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி:  இரண்டு மூன்று வாரங்களாக வெள்ளிக் கிழமைகளில் ஃப்ரூட் சாலட் பகுதி வெளியிட முடியவில்லை. இந்த வாரம் முழுவதுமே பதிவுகள் எழுத வில்லை! இடைவிடாத பணிச் சுமை! முடிந்த வரை வாரத்தில் சில பதிவுகளாவது எழுத வேண்டும். ஹிமாச்சலப் பிரதேசம் பயணத் தொடர் வேறு பாக்கி! பார்க்கலாம்! மற்றவர்களின் பதிவுகள் படிக்கவும் முடிவதில்லை! விரைவில் இந்த பணிச் சுமைகளிலிருந்து சற்று ஓய்வு கிடைக்கலாம் – அப்போது தொடர்ந்து சந்திப்போம்!
 

சனி, 23 மே, 2015

பீடி குடிக்கும் பாட்டியும் மூங்கில் ஹூக்காவும்


தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 18

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

தேவி மற்றும் லிங்க ஸ்வரூப சிவனின் தரிசனமும் கண்டு அங்கிருந்து வெளியே வந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டது பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். அப்படி ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு மூதாட்டி மிகவும் ஸ்வாரசியமாக அனுபவித்து பீடியை வாயில் வைத்து புகை விட்டுக் கொண்டிருந்தார்.  அவரது முகத்தில் இருக்கும் சுருக்கங்களும், பற்கள் இல்லாது புகை இழுப்பதில் அவரது கன்னங்களில் ஏற்பட்ட பள்ளங்களும் அவரை புகைப்படம் எடுக்கத் தூண்டியது.



சரி அவரை புகைப்படம் எடுக்கலாம் என்றால் தெரியாத ஒருவரை, அதுவும் வேறொரு ஊரில் சுற்றுலா சென்றிருக்கும் போது அந்த ஊரில் இருப்பவரை புகைப்படம் எடுப்பதில் சில தொந்தரவுகள் வரலாம் என்பதால், ஒன்று அவரைக் கேட்ட பிறகு அவரது புகைப்படம் எடுக்க வேண்டும், அல்லது அவருக்குத் தெரியாமல் அவரது புகைப்படம் எடுக்க வேண்டும். அவரைக் கேட்டு அவரிடமிருந்து அனுமதி பெற்று புகைப்படம் எடுப்பது சாத்தியமல்ல என்று தோன்றியது.



பீடி பிடிக்கும் விதமும், அவர் இருந்த ஒரு மயக்க நிலையும், அவர் அவரது சுய நினைவில் இருப்பது போலத் தோன்றவில்லை. மேலும் தனக்குத் தானே சிரித்துக் கொண்டு, ஏதோ பேசவும் செய்தார்.  நடுநடுவே, பீடியை வாயில் வைத்து, “இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை” என சார்மினார் சிகரெட் விளம்பரம் போல ஒரு நீண்ட இழுப்பு – அதன் பின்னர் புகையை சில வினாடிகள் உள்ளிருத்தி, நன்கு அனுபவித்த பிறகு மேலே பார்த்தபடி அபரீதமான ஒரு திருப்தியோடு புகையை வெளியேற்றிக் கொண்டிருந்தார்.



கேமராவில் பொருத்தியிருந்த 18-55 லென்ஸை மாற்றி 55-250 லென்ஸ் பொருத்தி, சற்று தொலைவிலிருந்து, அவருக்குத் தெரியாமல் அவரைப் புகைப்படம் எடுக்கலாம் என முடிவு செய்தேன். அவரது பக்கத்திலேயே எங்கள் குழுவினர் சிலரும் நின்று ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்க்க, குழுவினரை படம் எடுப்பது போல அந்த மூதாட்டியை படம் எடுக்கலாம் என முயற்சித்தேன்.  சில படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, திடீரென, எங்கள் குழுவினரில் ஒருவர் அவர் அருகே வரும்போது ஒரு புகைப்படம் எடுத்தேன்!

அந்தப் புகைப்படத்தை பார்த்தபோது பீடியை பாட்டி குடித்துக் கொண்டிருக்க, புகையோ குழுவில் இருந்தவரின் வாயிலிருந்து வருவது போல அமைந்து விட்டது! அந்தப் புகைப்படத்தைப் பார்த்து குழுவில் உள்ள அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தோம்.



இது போன்று பயணங்களில் சிலரை புகைப்படம் எடுக்கத் தோன்றினாலும், அவரது முகவெட்டு புகைப்படத்தில் நன்றாக இருக்கும் என நினைத்தாலும் புகைப்படம் எடுக்க முடிவதில்லை. குழந்தைகளை படம் எடுக்க அவர்களது பெற்றோர்களிடம் அனுமதி கேட்டு எடுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் இது போன்ற மூதாட்டி/பெரியவர்களை படம் எடுத்துக் கொள்ள சற்றே பிரயத்தனப் பட வேண்டியிருக்கிறது. பெரும்பாலும் அவர்கள் அனுமதி பெற்றே படம் எடுக்கிறேன் என்றாலும், இப்படி மறைமுகமாக சில படங்களை எடுக்க வேண்டியிருக்கிறது.



கோவிலிலிருந்து வெளியே வந்து காலணிகளை அணிந்து கொண்டு அங்கே இருந்த கடைகளை நோட்டமிட்டபடி வந்து கொண்டிருந்தோம். தேநீர் அருந்தலாமென ஒரு கடையில் நிற்க, அவர் தேநீர் தயாரிக்கும் வரை பக்கத்துக் கடைகளை பார்த்தபடி நின்று கொண்டிருந்தோம். ஒரு கடைக்காரர் மூங்கில்களைச் சீவி ஏதோ செய்து கொண்டிருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  மூங்கில்களில் ஹூக்கா செய்து வைத்திருந்தார். அதைக் கொண்டு புகை பிடிக்க முடியாது – ஷோவிற்காக வீட்டில் வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார்.



பக்கத்திலேயே ஒரு சிறுமி ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அந்த நாய்க்குட்டியையும் அவரையும் புகைப்படம் எடுத்தபடியே அவருடன் பேசத் தொடங்கினோம். நாய்க்குட்டியின் பெயரைக் கேட்க, அந்தப் பெண் சொன்ன பெயர் யாருக்கும் புரியவில்லை. மீண்டுமொரு முறை கேட்க, அச் சிறுமி சொன்ன பெயர் – [B]பரவ்னி! வித்தியாசமான பெயராக இருக்கிறதே என்று யோசித்தபடியே நாய்க்குட்டியைப் பார்க்க, வெள்ளை நிற நாய்க்குட்டியின் மேல் ஆங்காங்கே Brown திட்டுகள்! அட, இந்த நாய்க்குட்டியின் பெயர் Brownie!



[B]பரவ்னியையும் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்க, அதற்குள் தேநீரும் தயாரானது. தேநீர் அருந்திய பின் எங்கள் வாகனம் நிறுத்தியிருந்த இடம் நோக்கி நடந்தோம். அங்கே எனது காமெராவினைப் பார்த்த இரு இளைஞர்கள் தங்களை புகைப்படம் எடுத்துக் காண்பிக்கச் சொல்ல அவர்களையும் புகைப்படம் எடுத்தேன். எத்தனை தூரம் வரை இக் கேமரா மூலம் படம் எடுக்க முடியும் என்ற கேள்வியும் கூடவே அவர்களிடமிருந்து. 



சாலையின் எதிர் புறத்தில் ஹிமாச்சலப் பிரதேச அரசுப் பேருந்து ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து ஓட்டுனரும் நடத்துனரும் வந்து நிற்க, ”அவர்களை இங்கிருந்தே புகைப்படம் எடுக்க முடியுமா?” என்று கேட்க, அவர்களையும் ஒரு புகைப்படம் எடுத்துக் காண்பித்தேன். இப்படி சில புகைப்படங்களை எடுத்தும், கூடவே பயணத்தினைத் தொடர்வதும் தொடர்ந்தது. கோவிலின் வெளியே உள்ள தகவல் பலகையில் அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலேயே ஒரு சுற்றுலாத் தலம் இருப்பதாக எழுதி வைத்திருக்க, அவ்விடத்திற்கு எப்படிப் போக வேண்டும் என்று போக்குவரத்துக் காவலரிடம் விசாரித்துக் கொண்டு பயணித்தோம்.

அப்படி பயணித்த இடம் என்ன, அங்கே என்ன பார்த்தோம் என்பது பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன். ஓகே!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து

புதன், 20 மே, 2015

குகைக்குள் சிவனும் இயற்கை ஐஸ்க்ரீமும்


தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 17

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16

ஐஸ்க்ரீம் சாப்பிடலாமே!

சாமுண்டா தேவியின் தரிசனத்திற்குப் பிறகு வெளியே வர அங்கே இருந்த பக்தர்கள் பலரும் வேறொரு சன்னதியை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அங்கே என்ன சன்னதி இருக்கிறது என்று தெரியாமலே நாங்களும் சென்றோம். அங்கு சென்ற பிறகு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது. ஒரு சிறிய குகைவாயில் மூன்று அல்லது மூன்றரை அடி தான் இருக்கும். சிறுவர்கள் உள்ளே நுழைவதென்றால் கூட சற்றே குனிந்து தான் செல்ல வேண்டியிருக்கும்.

மலைப்பாதையில் இருந்து கோவில் அருகே உள்ள பாலம்

இப்படி இருக்கையில் ஆறு அடிக்கு மேல் இருக்கும் என்னைப் போன்றவர்கள் உள்ளே செல்ல வேண்டுமானால்உள்ளே சில படிகள் இருக்க, அதில் ஒவ்வொரு படிகளாக உட்கார்ந்து தான் செல்ல வேண்டும். உள்ளே ஒருவர் செல்ல வெளியே ஒருவர் இருக்கும் இடைவெளியில் வெளியே வர வேண்டும். ஒவ்வொருவராகத் தான் உள்ளே செல்ல முடியும். படிகளில் உட்கார்ந்து உட்கார்ந்து உள்ளே நுழைந்தால், கோவிலில் இரண்டு பூஜாரி அங்கே தரையில், பக்கத்துக்கு ஒருவராக அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


 குகைக்குள் படம் எடுக்க அனுமதி இல்லாததால் சென்ற வருடம் அமர்நாத்-ல் உருவான பனி லிங்கம் படம் இங்கே!

கடைசிப் படிக்கட்டின் அருகில் நானும் அமர்ந்து கொண்டு, லிங்க ஸ்வரூபமாக இருக்கும் சிவபெருமானிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். பெரும்பாலான வட இந்திய கோவில்களில் கடவுள் சிலைகளை தொட்டு வணங்கும் வழக்கம் இருக்கிறது. நாமே கடவுள் சிலைக்கும் பூக்களைப் போட்டு தொட்டு வணங்கலாம். இங்கேயும் அப்படியே. சில நிமிடங்கள் இன்னும் அங்கே இருக்கலாம் என்றால் படியில் அமர்ந்திருக்கும் அடுத்தவருக்கு தரிசனம் கிடைப்பது அரிது. அதனால் வெளியே வர ஆயத்தமானேன்.

கோவில் வாசலிலிருந்து சிகரங்களின் ஒரு புகைப்படம்

உள்ளே நுழையும்போது படிக்கட்டுகளில் உட்கார்ந்து உட்கார்ந்து செல்ல முடிந்தாலும் வெளியேறும் போது கிட்டத்தட்ட தவழ்ந்து தான் வர வேண்டியிருந்தது. பொதுவாக அடங்காத உடம்பு கூட இங்கே வேறு வழியின்றி கூனிக் குறுகி தான் வெளியேற வேண்டியிருக்கிறது! வெளியே வந்து நேராக நின்றபிறகு தான் உயரமாக இருப்பது எவ்வளவு கடினம் என்று உணர்ந்தேன்! குகைக்குள் அமர்ந்து கொண்டே இருக்கும் அந்த பூஜாரிகளுக்கு எப்படி இருக்கும்! தினம் தினம் அப்படி அமர்ந்து சென்று தவழ்ந்து வருவது பழகி இருக்கும் என்பதால் சுலபமாக இருக்கும் போல!

குழாய்க்குள் இருக்கும் ஐஸ்க்ரீம் - கத்தியால் வெட்டி கொடுக்க வேண்டியது தான்!

இப்படி சாமுண்டா தேவி மற்றும் குகைக்குள் இருந்த சிவன் ஆகிய இருவரையும் தரிசித்து, குழுவில் உள்ள அனைவரும் மெதுவாக கோவில் வளாகத்தில் இருக்கும் சிலைகளையும் காட்சிகளையும் பார்த்தபடியே வெளியே வந்தோம். பானேர் [பான் கங்கா என்றும் சொல்வதுண்டு!] ஆற்றில் அத்தனை தண்ணீர் இல்லை. குளிர் காலம் என்பதால் மலைகளில் பனியாக இருக்கிறது போலும்! பனி உருகி தான் இங்கே தண்ணீர் வர வேண்டும் போல.

இந்த கோவில் அருகிலேயே ஒரு மயானமும் இருக்கிறது என்பதை ஹிமாச்சலப் பிரதேச நண்பர் ஒருவர் சொன்னார். சுற்று வட்டாரத்தில் இருக்கும் 22 கிராமங்களுக்கும் இங்கே தான் மயானம் என்றும் சிவபெருமான் தான் இங்கே முக்கியமான கடவுள் என்றும் சொன்னார். சிவ பெருமானை இங்கே வழிபடுவது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. சுற்றி இருக்கும் கிராமத்து மக்கள் அனைவரும் இங்கே சிவராத்திரி சமயத்தில் சிறப்புப் பிரார்த்தனைகள் செய்வார்கள் என்றும் மேளாக்கள் நடைபெறும் என்றும் கூடுதல் தகவல்கள் தந்தார்.

கோவில் சற்றே பெரிய கோவில் என்பதாலும், நவராத்திரி சமயங்களிலும், விழாக் காலங்களிலும் நிறைய பக்தர்கள் வருவார்கள் என்பதால் தடுப்புக் கம்பிகள் வைத்து நிறைய தூரத்திற்கு பாதை அமைத்திருக்கிறார்கள். அவற்றின் வழியே வெளியே வந்தோம். கோவில் வளாகத்திற்குள்ளாகவே ஒருவர் ஒரு நீண்ட குழாய் போன்ற அமைப்பில் ஏதோ வைத்து விற்றுக் கொண்டிருக்க என்னவென்று கேட்டேன்.

இயற்கை முறையில் தயாரிக்கும் ஐஸ்க்ரீம் என்று சொல்ல, சரி சாப்பிட்டுப் பார்க்கலாம் என தரச் சொன்னேன். ஒரு சிறிய இலையில் கொஞ்சம் எடுத்து வைத்து அதைத் துண்டுகளாகப் போட்டு எடுத்து சாப்பிட இன்னுமொரு இலையையே ஸ்பூனாகச் செய்து கொடுத்தார். பத்து ரூபாய்க்கு சில துண்டுகள்இரண்டு மூன்று இலைகளில் வாங்கி அனைவரும் சுவைத்துப் பார்த்தோம்நன்றாகவே இருந்தது.

ஐஸ்க்ரீம் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கோங்க!

இப்படி ஐஸ்க்ரீம் சுவைத்துக் கொண்டிருந்தபோதே அங்கு இன்னுமொரு அனுபவமும், சில புகைப்படங்கள் எடுக்க ஒரு வாய்ப்பும் கிடைத்தது! அப்படி என்ன அனுபவம்? அதைப் புகைப்படம் எடுக்க என்ன கஷ்டப் பட வேண்டியிருந்தது என்பதையும் அடுத்த பதிவில் பார்க்கலாமா!  

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து

திங்கள், 18 மே, 2015

சாமுண்டா தேவி – கதையும் சில காட்சிகளும்

தேவ் பூமி ஹிமாச்சல் பகுதி 16

தேவ் பூமி ஹிமாச்சல்  பகுதி 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15


சென்ற பதிவில் சொன்னது போல, காலை உணவினை முடித்துக் கொண்டு வண்டியை எடுத்துக் கொண்டு அனைவரும் புறப்பட்டோம். எதிரே தௌலாதர் மலைத்தொடர் இருக்க, பனியில் கதிரவனின் ஒளிக்கற்றைகள் பட்டுப் பளபளக்க, இயற்கைக் காட்சிகளை ரசித்தபடியே பயணித்தோம். நாங்கள் பயணித்துச் சென்ற இடம் என்ன தெரியுமா, காங்க்ரா நகரிலிருந்து ஒரு மணி நேரத்தில் இருக்கும் சாமுண்டாஜி என அழைக்கப்படும் சாமுண்டா தேவி கோவில் தான். இக்கோவிலும் சக்தி பீடங்களில் ஒன்று.


சாலையின் ஒரு பக்கத்தில் தொடர்ந்து பனிச்சிகரங்கள் இருக்க, அவற்றை ரசித்தபடியே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சாமுண்டா தேவியின் கோவில். சில நிமிடங்கள் பயணித்து கோவிலை வந்தடைந்தோம். கோவிலின் உள்ளே நுழைவதற்குள் கோவில் பற்றிய சில கதைகளைப் பார்க்கலாம்.


சாமுண்டா தேவி, பராசக்தியின் பல அவதாரங்களில் ஒன்றாக கருதப்படும் சக்திகளில் ஒன்று. சண்டா, முண்டா என இரண்டு அரக்கர்கள் அனைவருக்கும் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்க அவர்களை அழிக்க உருவமெடுத்தவர் தான் சாமுண்டா தேவி. சண்டா, முண்டா ஆகிய அரக்கர்களை அழித்தமையால் இவர் சாமுண்டா தேவி என அழைக்கப்பட்டார் என்று ஒரு கதை. இன்னொரு கதையும் உண்டு.



அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் பலத்த யுத்தம் நடக்க, அப்போது கௌஷிகி தேவி எனும் தேவியின் புருவத்தில் இருந்து உருவான சண்டிகா சண்டா, முண்டா ஆகிய இருவருடனும் பலத்த யுத்தம் நடத்திய பிறகு யுத்தத்தில் வெற்றி பெற்றாராம். பிறகு அந்த இரண்டு அரக்கர்களின் தலையைக் கொய்து கௌஷிகி தேவியின் காலடியில் சமர்ப்பிக்க, மனம் மகிழ்ந்த கௌஷிகி தேவி சண்டிகாவிற்கு சாமுண்டா தேவி என்ற பட்டம் சூட்டியதாகவும் ஒரு கதை.



காங்க்ரா மாவட்டத்தின்  பாலம்பூர் நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இக்கோவில் [B] பானேர் நதிக்கரையில் அமைந்திருக்கிறது. தற்போதைய கோவில் அமைந்ததற்கும் ஒரு கதை இருக்கிறது. சுமார் 400 வருடங்களுக்கு முன்னர் இருந்த ராஜா ஒருவர் தேவியின் கோவிலை பக்தர்கள் சுலபமாகச் சென்று வழிபடும் இடத்தில் அமைக்க முடிவு செய்து சாமுண்டா தேவியை பிரார்த்திக்க, அவரும் கோவிலில் பூஜை செய்பவரின் கனவில் தோன்றி அதற்கு அனுமதி அளித்து, இந்த இடத்தில் பூமியில் புதைந்து இருக்கிறேன். என்னை எடுத்து அங்கே கோவில் கட்டலாம் என்று சொல்லிவிட்டார்.



ராஜா தனது பரிவாரங்களில் சில வீரர்களை அவ்விடத்திற்கு அனுப்பி வைக்க, தேவியின் சிலையைக் கண்டெடுத்த அவர்களால் அச்சிலையை ஒரு அங்குலம் கூட நகர்த்த முடியவில்லை. எத்தனை முயன்றும் முடியாமல் போக, ராஜாவும் என்ன செய்வது என்று கவலையில் ஆழ்ந்து விட, சாமுண்டா தேவி மீண்டும் கோவில் பூஜை செய்பவரின் கனவில் தோன்றி, “அவ்வீரர்கள் என்னை சாதாரணக் கல்லாக நினைத்துக் கொண்டு அப்புறப்படுத்த நினைத்தார்கள். அதனால் தான் அவர்களால் என்னை தூக்க முடியவில்லை” என்று கூறி, காலையில் நதியில் நீராடி தகுந்த மரியாதையோடு என்னை அணுகு!” என்று சொல்லி விட்டார்.



அன்னை சொன்னபடியே அனைவரும் செல்ல, ஒரு மனிதராகவே தேவியின் சிலையை எடுத்து வந்து பானேர் நதிக்கரையில் கோவில் அமைத்தார்கள் என்று ஒரு கதை! எத்தனை எத்தனை கதைகள். ஒவ்வொரு கோவிலுக்கும் இப்படி கதைகளும், உப கதைகளும் நிறையவே இருக்கின்றன.  என்ன நண்பர்களே கதைகளைப் படித்து ரசித்தீர்களா? வாருங்கள் கோவிலின் உள்ளே பயணிப்போம்.



கோவிலின் வாயிலில் இருக்கும் கடைகளில் ஒன்றில் அர்ச்சனைக்கான பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கேயே காலணிகளையும் கழற்றி வைத்தோம். சென்ற பதிவில் சொன்னது போலவே அங்கும் கைகளை சுத்தம் செய்து கொள்ள தண்ணீர் கொடுக்க, கைகளை சுத்தம் செய்து கொண்டு கோவிலின் நுழைவாயில் வழியே உள்ளே சென்றோம். சாமுண்டா தேவி பல அரக்கர்களை வென்று அவர்களின் தலைகளைக் கொய்து மாலையாக அணிந்து கொண்டிருந்த மாதிரி இருந்த சிற்பம் பயங்கரமாக இருந்தது!



கோவிலின் வாசலில் இருந்த சிற்பங்களைப் புகைப்படம் எடுத்தபடியே உள்ளே நுழைந்தால் தேவியின் கோவிலுக்குள் வந்த பிறகு புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.  சாமுண்டா தேவி பொதுவாக சிகப்பு வண்ண வஸ்திரத்தில் அலங்கரிக்கப் பட்டு இருப்பது வழக்கம்.  சாமுண்டா தேவியை மனதார தரிசித்து அனைவருக்கும் நல்லதையே தரட்டும் என வேண்டிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தோம். பிரகாரத்தில் வலம் வரும்போது அங்கும் வானரங்கள் நிறையவே அமர்ந்திருக்க, அவற்றிடமிருந்து தேவியின் கோவிலில் தந்த பிரசாதங்களைக் காப்பது பெரும் கலையாக இருந்தது! சற்றே மறைவிடத்தில் அமர்ந்து அங்கே தந்த சர்க்கரை உருண்டைகளை சாப்பிட்டு விட்டு, அடுத்த சன்னதியை நோக்கி நகர்ந்தோம்.

அது என்ன சன்னதி, அங்கே கிடைத்த அனுபவம் என்ன என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாமே!

தொடர்ந்து பயணிப்போம்….

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து