தில்லி மக்கள் ஜூன் மாசமெல்லாம் ”மழை வராதா மழை வராதா”ன்னு ஏக்கத்தோட பாம்பே மழை பத்தி தொலைகாட்சில பார்த்துட்டு இருந்தாங்க! அப்பப்ப தினசரிகள்ல வானிலை அறிக்கை வேற “மழை தோ இன்னிக்கு வந்துடும், நாளைக்கு வந்துடும்”னு ஜோசியம் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.
தில்லில எப்பவுமே மொத்தமாகவே பத்து-பதினைந்து நாட்கள்தான் மழைக்காலம். அதுவும் சும்மா கொசுத்தூத்தல் போட்டுட்டுப் போயிடும். நம்ம ஊர் மாதிரி அடர்ந்த மழை எல்லாம் பெய்யாது. அரை மணி நேரம் மழை பெய்தாலே தில்லி வாசிகளுக்குப் பெரும் மகிழ்ச்சி. அதுவும் சனி-ஞாயிறுகளில் மழைபெய்தால் குடும்பத்தோட வீட்டை விட்டு வெளியே வந்து மழையில் நனைவது அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று!
வானிலை அறிக்கை வாசிப்பவராக நடிகர் மதன் பாப் வருகிற ஏதோ ஒரு படத்துல விரலை தொடறதை வைத்தே “இன்னிக்கு மழை வரும், வராது”ன்னு ஜோதிடம் மாதிரி சொல்வார். அது மாதிரி தான் இங்கேயும் இருந்தது – என்னிக்கு அவங்க மழை வரும்னு சொல்வாங்களோ அன்னிக்கு நிச்சயமா மழை வராது.
இப்ப ஒரு பதினைஞ்சு இருபது நாளா தில்லில அப்படி ஒரு மழை – எப்பவும் இல்லாத மாதிரி ஒரு மணி நேரம் கூட தொடர்ந்து மழை பெய்யுது. ஆனா ஒரு மணி நேரம் பெய்யற மழையோட விளைவு – பல மணி நேரத்துக்கு தில்லியோட பிரதான சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல்.
இதில் கொடுமை என்னவென்றால் – தில்லி போன்ற பெருநகரங்களில் மனித உயிருக்கு மதிப்பில்லாததுதான். ஆங்காங்கே தோண்டிப் போடப்பட்ட இடங்களில் கிடக்கும் பலவித மின்சாரக் கம்பிகளில் மின்சார கசிவு ஏற்பட்டு இந்த மழை நாட்களில் சில உயிர்களும் போன செய்திகளை நாளிதழ்களில் தினமும் படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது.
போன சனிக்கிழமை அப்படி ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையில் தில்லியின் முக்கிய இடமான குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதம மந்திரி வீடு இருக்கிற சாலை [ரேஸ் கோர்ஸ் சாலை] போன்ற இடங்களிலேயே தண்ணீர் தேங்கி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க!
அதுவும் 30000 கோடி ரூபாய் செலவு பண்ணி “காமன்வெல்த் போட்டி” நடத்தப் போறோம்னு சொல்லி தில்லில பல இடங்கள்ல குழி குழியா தோண்டிப் போட்டு, நீச்சல் போட்டிக்கு பயிற்சி எல்லாம் சுலபமா தில்லி சாலைகளிலேயே எடுத்துக்க வசதி செய்து இருக்காங்க!. அதுனால எந்த போட்டில தங்கம் கிடைக்குதோ இல்லையோ “நீச்சல்" போட்டியில் தங்கப் பதக்கம் இந்தியாவுக்கு நிச்சயம்-னு நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்லுது!