திங்கள், 16 ஆகஸ்ட், 2010
ஏட்டா [ETAH] பயணங்கள்
சில வருடங்களுக்கு முன் என் சகோதரி தனது குடும்பத்துடன் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஏட்டா [Etah] என்ற இடத்தில் வசித்தபோது அவ்வப்போது நான் அங்கு செல்வதுண்டு. ஒவ்வொரு பயணமும் ஒரு பயங்கர அனுபவம்.
கிழக்கு தில்லியில் உத்திரபிரதேச எல்லை ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கும் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் இருந்து ஏட்டா நகருக்கு [!] நேர் பேருந்துகள் கிடைக்கும். தில்லியிலிருந்து, காசியாபாத், புலந்த்ஷெகர், குர்ஜா, அலிகர் வழியாக சென்றால் சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஏட்டா நகரை சென்றடையலாம்.
நிலையத்தில் பேருந்து வந்து நின்றவுடன் நம் ஊர் நகர பேருந்துகள் போல கைக்குட்டை, கைப்பை போன்றவைகளை வைத்து இடம் பிடிப்பதெல்லாம் கிடையாது. ஆண்களும் பெண்களும் முண்டியடித்து பேருந்தினுள் செல்ல முயலும்போது சில பெண்கள் வண்டியின் பின் சக்கரத்தின் மேல் ஒரு காலை வைத்து சன்னல் வழியே உள்ளே குதித்து இடம் பிடிப்பார்கள். சன்னல் வழியே குழந்தையை உள்ளே போட்டும் சிலர் இடம் பிடிப்பார்கள். ஒருவழியாக எல்லோரும் அமர்ந்து நமக்கும் வழியை விட்டு ஒரு காலி இடமும் இருந்து விட்டால் நாமும் அமர்ந்து கொள்ளலாம்.
USPSRTC [உத்திர பிரதேச அரசு பேருந்து] அல்லது DTC [தில்லி அரசு பேருந்து] இதில் எந்த பேருந்தில் சென்றாலும், ஏதோ ஒரு குப்பை வண்டியில் குந்திச் செல்வது போன்ற எண்ணமே மனதுக்குள் இருக்கும்.
பேருந்தில் 55-60 பயணிகள் பயணிக்கிறார்கள் என்றால் 5-6 பயணிகளைத்தவிர மற்ற எல்லோரும் புகை பிடித்துக்கொண்டிருப்பார்கள். அதிலும் குளிர் காலம் என்றால் நிலைமை இன்னும் மோசம். எல்லா கண்ணாடி சன்னல்களையும் மூடி வைத்துக்கொண்டு ஆண் பெண் பேதமின்றி பீடி பிடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் விடும் புகை எல்லாம் பேருந்தினுள்ளேயே சுற்றி வந்து நீங்கள் இறங்குவதற்குள் உங்களுக்கு தலை சுற்றல் ஆஸ்த்மா வருவது கியாரண்டி.
புலந்த்ஷெகர் தாண்டியதும் இருக்கும் எதாவது ஒரு தனியார் உணவகத்தில் பேருந்து நின்றதும் அங்கு கிடைக்கும் எல்லா உணவுப்பொருள்களையும் சகட்டு மேனிக்கு வாங்கிச் சாப்பிடுவார்கள். அது நல்லதா கெட்டதா என்ற யோசனையெல்லாம் வரவே வராது பயணிகளுக்கு.
இதெல்லாம் முடித்து பேருந்து கிளம்பியவுடன் அங்கு சாப்பிட்ட பொருட்களெல்லாம் அதன் வேலையைக் காண்பிக்க ஆரம்பிக்கும். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் வாந்தி எடுத்துவிடுவார்கள். நம் மேலும் யாராவது வாந்தி எடுத்துவிடுவார்களோ என்ற பயத்துடனே பயணம் செய்ய வேண்டியிருக்கும்.
பேருந்து உணவகத்தில் நின்று கொண்டு இருக்கும் போது பலவித வியாபாரிகளை நீங்கள் சந்திக்க முடியும். ஒருவர் பல்பொடி விற்பவர். பெரிய பெரிய நிறுவனங்களின் பற்பசையால் சரிசெய்ய முடியாத பிரச்னைகளைக்கூட அவரது பல்பொடி தீர்த்துவைக்கும் எனச் சொல்லி பத்து ரூபாய்க்கு அதை விற்பார். யாராவது மஞ்சள் பல்லை காட்டியபடி இருந்துவிட்டால், அவருக்கு பல் தேய்த்துவிடக் கூடத் தயங்க மாட்டார்.
இத்துடன் போச்சா? பல்பொடி விற்றவர் பேருந்திலிருந்து கீழே இறங்கியவுடன் தலைவலி தைலம் விற்பவர் வந்து, நீண்ட பயணத்தில் வரும் தலைவலி, கழுத்துவலி போன்ற எல்லா வலிகளுக்கும் அவரிடம் மருந்து இருப்பதாகச் சொல்லி ஒரு சிறு குப்பி எண்ணையை பத்து ரூபாய்க்கு விற்பார். நீங்கள் கொஞ்சம் அசந்து விட்டால் போதும், நேராக உங்களிடம் வந்து அவர் தைலத்தினை உங்கள் நெற்றியில் தடவி நீவி விட ஆரம்பித்து விடுவார்.
பிரதான சாலைகள் எல்லாம் தார் சாலைகளாக இருந்தாலும் ஒவ்வொரு நகரத்தினுள்ளும் இருக்கிற பேருந்து நிலையங்களில் செங்கல்களை குறுக்கு-நெடுக்காக வைத்திருக்கும் சாலைகளே பெரும்பாலும் இருக்கும். அப்படிப்பட்ட சாலைகளில் குலுங்கிக் குலுங்கிச் செல்லும் பேருந்தில் பயணம் செல்லும் உங்களுக்கு உடல் வலி என்ன எல்லா வலிகளும் வராமல் இருக்காது.
தில்லியில் இருந்து நேரடியாக ரயில்களும் கிடையாது. ஆக்ரா சென்றோ அல்லது ”டுண்ட்லா” என்ற இடம் வரை சென்றோ அங்கிருந்து மேலே சொன்னது போன்ற பேருந்துகளிலோ தான் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு முறையும் இது போன்ற அவஸ்தைகளுடன் செல்ல வேண்டுமா என்ற யோசனை எனக்கு வரும்போது சகோதரியுடன் இரண்டு நாட்களாவது இருந்து விட்டு வரலாமே என்ற எண்ணமும் கூடவே வந்து இந்த அவஸ்தைகளை எல்லாம் மறக்கச் செய்து விடுவதென்னவோ உண்மை.
Labels:
அனுபவம்
படிக்கவே கஷ்டமா இருக்கே! அனுபவிக்கும் போது? யப்பா பொறுமை சாலி தான் நீங்க !!
பதிலளிநீக்குஉங்கள் சகோதிரியின் மீது உங்களுக்கு எவ்வளவு பாசம். ரொம்ப பொறுமைசாலி சார் நீங்க.
பதிலளிநீக்குநன்றாக அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். உங்கள் பதிவைப் படித்ததும் எனக்கும் உடல் வலி வந்து விட்டது. இன்னைக்கு வீட்டிற்குச் சென்றதும் சுடச் சுடச் வெந்நீர் வைத்துக் குளிக்க வேண்டும்.
பதிலளிநீக்குபடிக்கும்போதே அந்த பஸ்ஸில் பயணிச்ச மாதிரி இருக்கு.அப்றம், குழந்தையை ஜன்னல்வழியா போட்டு இடம்பிடிக்கிற கொடுமையை நம்மூர்லயும் பார்த்தோம்...
பதிலளிநீக்குநல்ல அனுபவம் வெங்கட். நன்றி
பதிலளிநீக்குகோவை2தில்லி said...
பதிலளிநீக்குஉங்கள் சகோதிரியின் மீது உங்களுக்கு எவ்வளவு பாசம்//
:))ஆமா ஆமா
இப்போ பஸ் எல்லாம் பக்கா நல்லா இல்ல இருக்கு. அதுக்குள்ள பயணம் இவ்வளவு கடினமா
பதிலளிநீக்குஉங்கள் அனுபவக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் தனி ரகம்.. தனிச் சுவை..
பதிலளிநீக்கு//USPSRTC [உத்திர பிரதேச அரசு பேருந்து] அல்லது DTC [தில்லி அரசு பேருந்து] இதில் எந்த பேருந்தில் சென்றாலும், ஏதோ ஒரு குப்பை வண்டியில் குந்திச் செல்வது போன்ற எண்ணமே மனதுக்குள் இருக்கும்.//
பதிலளிநீக்குஉண்மைங்க...
உங்க கஷ்டமான பயண அனுபவம் ரொம்ப தமாஷா சொன்னிங்க .படிக்கச்சே அந்த பஸ்ஸில் நானும் பயணித்த போல பீலிங் .
பதிலளிநீக்குசென்னையில் பேருந்து நெரிசல் ன்னு சொல்லறவங்க எல்லோரும் உத்தர் பிரதேஷ் போயி பார்த்தால் தெரியும் நம்ம ஊரு பெருமை .
உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்த ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க..
பதிலளிநீக்குபடிக்கும்போதே நீங்க சொல்றதை கற்பனைப் பண்ணிப் பார்க்கமுடியுது..
ரொம்ப கஷ்டமான பயணம்தான்..
பான் மஸாலா போட்டு நம் கால்களுக்கு இடையே துப்புவார்களே... அதை விட்டுட்டீங்க.
பதிலளிநீக்குதமிழ் நாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டிய அற்புதம்.
உத்த்ரபிரதேஷ் முதல் பீஹார் ஒரு முறை பயணப்பட்டால் வாழ்க்கையில் எந்த பிரச்சனையையும் சமாளிக்கலாம் :)
உங்கள் அனுபவத்தை என் அனுபவத்தால் அனுபவித்தேன்.
அருமை
///ஒருவர் பல்பொடி விற்பவர். பெரிய பெரிய நிறுவனங்களின் பற்பசையால் சரிசெய்ய முடியாத பிரச்னைகளைக்கூட அவரது பல்பொடி தீர்த்துவைக்கும் எனச் சொல்லி பத்து ரூபாய்க்கு அதை விற்பார். யாராவது மஞ்சள் பல்லை காட்டியபடி இருந்துவிட்டால், அவருக்கு பல் தேய்த்துவிடக் கூடத் தயங்க மாட்டார்.///
பதிலளிநீக்குவெங்கட்! நகைசுவையோட உங்க அனுபங்களை எழுதறீங்க! வாழ்த்துக்கள்!!
@ மோகன்குமார், கோவை2தில்லி, ஈஸ்வரன், அமைதிச்சாரல், LK, முத்துலெட்சுமி, உயிரோடை, ரிஷபன், கலாநேசன், சந்த்யா, பதிவுலகில் பாபு, ஸ்வாமி ஓம்கார்,என்னது நானு யாரா?: எல்லோருக்கும் எனது நன்றி.
பதிலளிநீக்குஎன்னுடைய இந்த இடுகையைப் படித்து, இண்ட்லியில் வாக்கும், கருத்தும் அளித்து பிரபலமாக்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
நல்ல அனுபவங்கள் தான்! எங்களுக்கு ராஜஸ்தானில் இப்படி எல்லாம் நேர்ந்திருக்கிறது! :) பொதுவாகப் பேருந்துப் பயணமே வடக்கே குஜராத் தவிர்த்து மற்ற மாநிலங்களில் மோசமான அனுபவங்களே கிடைக்கும். மஹாராஷ்ட்ராவும் சேர்த்துத் தான்!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.
நீக்கு