சனி, 31 அக்டோபர், 2015

பத்து எண்றதுக்குள்ளே!



நம்ம சினிமா டைரக்டர்களுக்கு, அவங்க எடுக்கற படத்துக்கு என்ன பேர் வைக்கறதுன்னே குழப்பமா இருக்கு.  மனசுல தோணியதை எல்லாம் பேரா வைச்சுடுறாங்க – கதைக்கும் தலைப்புக்கும் சம்மந்தம் இருக்கா, இல்லையா அப்படின்னு பார்க்கறதே இல்லை. புதுசா படம் பேரு ஒண்ணும் தோணலையா, இருக்கவே இருக்கு – பழைய படங்களோட பேரு! ஏதாவது நல்ல ஓடுன [தியேட்டர விட்டு இல்லீங்க] படத்தோட பேரை வைச்சு ஒரு படம் எடுக்கறாங்க!

வருஷத்துக்கு 300-400 படம் வெளியிட்டா என்ன தான் பண்ண முடியும்! இதுல தனது படத்துக்கான பெயர் என்று முன் பதிவு செய்து வைத்திருப்பதையும் பயன்படுத்த முடியாதே....  அதனால இப்படியெல்லாம் பேர் வைக்க வேண்டியிருக்கு! 

அது சரி படத்துக்கு பேர் வைக்கறது இருக்கட்டும்....  இந்தப் பதிவுக்கு எதுக்குப்பா பத்து எண்றதுக்குள்ள!அப்படின்னு பேர் வைச்சு இருக்கீங்க – அதைச் சொல்லுங்கப்பு முதல்ல!என்று யாரும் சண்டைக்கு வருவதற்கு முன் நானே சொல்லிடறேன் – பெரிசா ஒண்ணும் காரணமில்லை....  நீங்க பத்து எண்றதுக்குள்ள நானே சொல்லிடறேன்.  இன்னிக்கு சில படங்களோட விளம்பரம் பார்க்கப்போறோம்...  அத்தனையும் அந்தக் கால படங்கள்! சில படங்களோட பேர் கூட நம்மில் பலர் கேட்டிருக்க வாய்ப்பில்லை! கூடவே இன்னும் சில வித்தியாசமான விளம்பரங்கள்!

அந்தமான் காதலிஅப்படின்னு ஒரு படம் வந்தது... 1978-வருடம்னு நினைக்கறேன். அப்படத்திலே வரும் “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்!இன்னிக்கும் ரசிக்கும் பாடல்!  ஆனா, இன்னிக்கு நான் சொல்லப் போற படம் இது இல்ல! அந்த படம் “அந்தமான் கைதி.  எம்.ஜி.ஆர், சாரங்கபாணி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.














இப்படி சில விளம்பரங்களை இந்த சனிக்கிழமையில் பொக்கிஷப் பகிர்வாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி! என்ன நண்பர்களே... இந்த விளம்பரங்கள் பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாமே!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

வெள்ளி, 30 அக்டோபர், 2015

ஃப்ரூட் சாலட் – 150 – சிக்கல் – ஒரு வானவில் போலே - அப்பா


இந்த வார செய்தி:



எனது வலைப்பூவில் ஃப்ரூட் சாலட் பகுதி எழுத ஆரம்பித்தபோது இருந்த வரவேற்பு 150-வது பகுதியை எழுதும் இந்த வேளையிலும் இருக்கிறது என்பதை நினைக்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.  ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் நான் படித்த, பார்த்த, ரசித்த சில விஷயங்களை ஒரு தொகுப்பாக ஃப்ரூட் சாலட் தலைப்பில் வெளியிட்டு வந்திருக்கிறேன்.  அப்படி வெளியிட்ட பகுதிகள் அனைத்துமே பலரால் படிக்கப்பட்டு, கருத்துரைகளும் வந்திருக்கின்றன.

என்றாலும், இப்பகுதியை தொடர்ந்து எழுதுவதா வேண்டாமா என்ற எண்ணம் அவ்வப்போது வந்தபடியே இருக்கிறது. இந்த 150-வது ஃப்ரூட் சாலட் பகுதியோடு முடித்துக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.  என்ன தான் இப்படி பகிர்ந்து கொள்வது பிடித்திருந்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரி செய்து கொண்டிருப்பது போல ஒரு எண்ணம்.  அதனால் சற்றே இடைவெளி விட்டு எழுதலாமா அல்லது ஒரேயடியாய் ஃப்ரூட் சாலட் பகிர்வதை நிறுத்தி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் சொல்லுங்களேன்! 

இந்த வார முகப்புத்தக இற்றை:

ஹெட்ஃபோன் வயர் சிக்கலை எடுக்கற அளவுக்கு பொறுமை இருந்தாலே போதும் வாழ்க்கை சிக்கலை எளிதாக வென்றுவிடலாம்....

இந்த வார குறுஞ்செய்தி:

Take good care of your “REPUTATION”.  It’s going to live longer than “YOU!”


இந்த வார புகைப்படம்:



இந்த Uncle நம்மள ஃபோட்டோ எடுக்கறாரே..... நேரே பார்க்கலாமா வேண்டாமா? சிரிக்கலாமா வேண்டாமா?

இந்த வார ரசித்த பாடல்:

பி. ஜெயச்சந்திரன் எஸ் ஜானகி ஆகியோரின் குரலில் இளையராஜாவின் இசையில் ஒரு அருமையான பாடல் – “ஒரு வானவில் போலேஇந்த வாரத்தின் ரசித்த பாடலாக......




இந்த வார விளம்பரம்:

கிசான் விளம்பரம் நேற்று பார்த்தேன் – அடுக்கு மாடி குடியிருப்புகளில் தொலைந்து விட்ட பந்தங்களை, ஒருவருக்கொருவர் தெரியாது இருப்பதை மாற்றுவது போல ஒரு விளம்பரம்.  மூன்று நிமிடங்களுக்கு சற்றே அதிகமாக இருந்தாலும், மிக அழகாய் ஒரு குறும்படம் போல எடுத்திருக்கிறார்கள். பாருங்களேன்!



படித்ததில் பிடித்தது:



சிறுவனை அழைத்துக்கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார். அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், நீ பெரிய வீரனாகி விடுவாய். இன்று இரவு முழுவதும் நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். உன் கண்கள் கட்டப்படும். ஆனாலும் நீ பயப்படக்கூடாது; வீட்டிற்கு ஓடிவந்துவிடவும் கூடாது'' என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான்.

அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும் நரி ஊளையிடுவதும் நடுக்கத்தைக் கொடுத்தது.

காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது.

மரங்கள் பேயாட்டம் ஆடின. மழைவேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. ‘’அய்யோ! இப்படி நிர்க்கதியாய்த் தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்’’ என்று பலமுறை கத்திப் பார்த்தான். பயனில்லை.

சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல். என்னதான் நடக்கும், பார்ப்போமே என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். இப்படியே இரவு கழிந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். சூரியன் உடம்பைச் சுட்டபோதுதான், கண்கட்டைத் திறந்துப் பார்த்தான். கண்ணைக் கசக்கிக்கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம்! ஆனந்தம்! அழுகையே வந்துவிட்டது. ‘’அப்பா’’ என்று கூவி அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான்.

‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும் மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, ''நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் காப்பாற்றவில்லை? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?’’ என்று கேட்டான்.

‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும் என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால் அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை. மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

வியாழன், 29 அக்டோபர், 2015

பேட் த்வாரகா – ருக்மணியின் கிருஷ்ணர்

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 17

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15 16

நன்றி: துளசி டீச்சர்....

தள்ளு மடல் வண்டி இதுபற்றி சென்ற பகுதியில் சொல்லும் போது, படம் எடுக்கவில்லை என்று சொல்லியது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அந்தப் படம் நான் எடுக்கவில்லையெனிலும், நம்ம உலகம் சுற்றும் வாலிபி [வாலிபனுக்கு பெண் பால்!] துளசி டீச்சர், பதிவு பற்றிய என்னுடைய முகப்புத்தக இற்றையில் இந்த வண்டியா பாருங்க!ன்னு படம் அனுப்பி வைச்சாங்க! அதே தான் அதே தள்ளு மடல் வண்டி தான் என்று நன்றியுடன் சேமித்துக் கொண்டேன். அந்தப் படம் மேலே!



கோவிலுக்குச் செல்லும் பாதையில் இருக்கும் மக்கள் வெள்ளத்தினை கடந்து சென்றால், சில படிகள் கோவிலை நோக்கி இறங்கிச் செல்கிறது. அப்படிகள் முழுவதிலும் மக்கள் ஆங்காங்கே அமர்ந்திருக்கிறார்கள். ஒரு மணி நேரம் ஆகுமே அதுவரைக்கும் நின்று கொண்டிருக்க முடியாதே...  படிகளில் மக்கள் அமர்ந்திராத இடமாகப் பார்த்து கால்களை வைத்து ஒரு மாதிரி கீழே இறங்கினோம். கோவில் கதவுகளுக்கு வெளியே சிலர் நின்றிருக்க, நாங்களும் நின்று கொண்டோம்.



நின்று கொண்டிருந்தபோது காதைத் தீட்டி வைத்திருக்க, கோவிலுக்குள் அலைபேசி, புகைப்படக்கருவி போன்றவற்றை அனுமதிக்க மாட்டார்கள் எனத் தெரிய, அவற்றை பத்திரமாக எங்கே வைப்பது என்று பார்த்தேன்.  அதற்கும் பதில் கிடைத்தது. படிகள் வழியே மேலே போனால் பொருட்கள் பாதுகாப்பு அறை இருக்கிறது – அங்கே வைத்துக் கொள்ளலாம்! சரி என மற்ற இருவரும் வரிசையில் நிற்க, நான் மட்டும் மீண்டும் படிகளில் அப்படியும் இப்படியுமாக ஒரு வித நடனம் ஆடியபடியே முன்னேறினேன்! பாதுகாப்பு அறைக்கு வந்தால் அதுவும் மூடியிருந்தது!



சரி அப்படியே சில நிமிடங்கள் உலாத்துவோம் என நான் நடந்து கொண்டிருந்தேன். படகுத் துறையிலிருந்து மக்கள் வந்தபடியே இருந்தார்கள். உள்ளூர் மக்களுக்கு கோவில் திறக்கும் நேரம் சரியாகத் தெரியும் என்பதால், அவர்கள் கவலையில்லாது வீட்டின் வாயில்களிலே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  சின்னச் சின்ன கடைகளின் வாயில்களில் பல விதங்களில் கிருஷ்ணர் பொம்மைகளும் மற்ற பொருட்களும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  அவற்றையெல்லாம் பார்ப்பதில் சில நிமிடங்கள் கரைந்திருக்க, மீண்டும் கோவிலை நோக்கி நடந்தேன். நான் சென்று சேர்வதற்கும் பாதுகாப்பு அறையின் ஜன்னல் திறப்பதற்கும் சரியாக இருந்தது.


ஆக்கப் பொறுத்தவனுக்கு, ஆறப் பொறுக்கவில்லைஎன்று சொல்வது போல, பலர் ஜன்னலுக்குள் கைகளை விட்டு தத்தமது பொருட்களை உள்ளே கொடுக்க முயற்சித்தார்கள்.  ஜன்னலுக்குள் இருக்கும் நபர் ஒரே சமயத்தில் பத்து கைகளைக் கண்டு அதுவும், விதம் விதமான வகை அலைபேசிகளோடு நீண்ட கைகளைக் கண்டு குழம்பிவிட வாய்ப்புண்டு! பத்து கைகளோடு பதினொன்றாக நானும் கையை நீட்டினேன். கையில் இருந்த பையை எடுத்துக்கொண்டு டோக்கனை வைத்தது அப்புறத்து கை!



மீண்டும் படிகளில் நடனமாடியபடி நண்பர்கள் நின்றிருந்த இடத்திற்கு வந்து சேர, கோவில் வாயிலிலும் சலசலப்பு – கதவுகள் திறக்கப் போகிறார்கள். கதவு திறப்பதற்கு முன்னரே கோவில் பண்டிட்ஜி ஒருவர் வெளியே வந்து கோவிலின் அருமை பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தார். இக்கோவிலுக்கு வருபவர்களுக்கு இப்படி கோவிலின் கதை சொல்வது நல்ல விஷயம் – சில பல கட்டுக்கதைகளைச் சொன்னாலும் பரவாயில்லை. சொல்வதில் சில விஷயங்களாவது உண்மை இருக்குமே... 



கோவிலை நோக்கி முன்னேறும் வேளையில் கோவில் பற்றிய சில விஷயங்களையும் பார்த்து விடுவோம்.  மிகவும் பழமையானது இக்கோவில். ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னரே இப்பகுதியில் கோவில் இருந்திருக்கிறது.  பல முறை கடல் சீற்றங்களில் அழிந்து போனாலும் மீண்டும் மீண்டும் கோவிலை புதுப்பித்து இருக்கிறார்கள்.  தற்போதைய ஓக்கா துறைமுகம் கட்டப்படுவதற்கு முன்னர் [B]பேட்[t] த்வாரகா தான் துறைமுகமாக இருந்திருக்கிறது.



கோவிலில் இருக்கும் கிருஷ்ணர் சிலை ருக்மணியால் உருவாக்கப்பட்டது என்றும் தற்போதைய கோவிலை வல்லபாச்சாரியார் கட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் தான் கிருஷ்ண பரமாத்மாவினை சந்திக்க அவரது  நண்பரான சுதாமா வந்தார் என்றும், கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த அவல் தந்தார் என்றும் நம்புகிறார்கள்.  அதனால் இன்றைக்கும் இங்கே வரும் பக்தர்கள் பலரும் வீட்டிலிருந்து அவலுக்கு பதில் அரிசி கொண்டு வந்து இங்கிருக்கும் பூஜாரிகளுக்கு கொடுக்கிறார்கள். அப்படி நீங்கள் அரிசியோ, தானியமோ கொண்டு வரவில்லை என்றாலும் கவலையில்லை! பணமாக கொடுத்துவிடலாம். சுதாமா கதை, கிருஷ்ணர்-ருக்மணி கதைகள் என பலவற்றையும் ஹிந்தியில் சொல்லிக் கொண்டே பணம் கொடுக்கும் வசதியையும் அறிவித்து அதற்காகவே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் பணத்தினை கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளச் சொல்கிறார்கள்.



வந்திருக்கும் அனைவருக்கும் சில அரிசி மணிகளை பிரசாதமாகவும் கொடுத்து அனுப்புகிறார்கள்.  கோவில் திறப்பதற்குள் சுற்றுப் பிராகாரத்தில் உள்ள இடங்களில் அமரவைத்து இப்படி கதைகள் சொல்வதையும், அரிசிக்கு காசு வாங்குவதையும் பார்க்க முடிந்தது. நாங்களும் இந்த கதைகளைக் கேட்டு முன்னேறினோம்.  எல்லாப் பக்கங்களிலிருந்தும் மக்கள் முண்டியடிக்க, கூட்டத்தோடு கூட்டமாக முன்னேறினோம்.  எங்களுக்கு முன்னர் சென்ற பூஜாரி கிருஷ்ணரின் கதைகள் சொல்லியபடியே வந்து கொண்டிருந்தார்.



இப்பகுதியில் தான் ஷங்காசுர வதம் நடந்ததாகவும் கதைகள் உண்டு. அந்தக் கதை – “சங்கு வடிவில் இருந்த ஒரு அசுரன் ஷங்காசுரன். மக்களை இம்சித்து அவர்களைக் கொன்று மீண்டும் சங்குக்குள் பிரவேசித்து கடலுக்கடியில் சென்று விடுவானாம் இந்த அசுரன். அவனது கொடுமைகளை அடக்க, கிருஷ்ணரும் அவனைத் தொடர்ந்து கடலுக்குள் சென்று ஷங்காசுரனை வதம் செய்து அந்த சங்கை தனக்கு அணிகலனாக ஆக்கிக் கொண்டுவிட்டாராம்.   இது இங்கே நடந்ததாகச் சொல்கிறார்கள். என்றாலும், தனது குருவான சாண்டீபனின் மகனை ஷங்காசுரன் கடத்திச் சென்று கடலுக்குள் வைத்திருப்பதாக அறிந்த கிருஷ்ணரும் பலராமனும் ஷங்காசுரனை வதம் செய்து குருவின் மகனை மீட்டதாகவும் சில கதைகள் படித்திருக்கிறேன்.



இப்படி விதம் விதமாக புராணக் கதைகள் கேட்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது.  கதைகள் கேட்டபடியே [B]பேட்[t] த்வாராகவில் குடிகொண்டிருக்கும் கிருஷ்ணனையும் தரிசித்து அங்கிருந்து வெளி வந்தோம். கோவிலுக்குள் செல்ல எத்தனை அவசரப்பட்டார்களோ, அதே போலவே வெளியே வருவதற்கும் மக்களுக்கு அவசரம். சீக்கிரமாகச் சென்று படகு பிடிக்க வேண்டுமே! நாங்கள் மெதுவாக கோவிலில் கிடைத்த அனுபவங்களை யோசித்தபடியே படகுத் துறையை நோக்கி நடந்தோம்.  மீண்டும் ஒரு படகுப் பயணம்....  அதிலும் சில அனுபவங்கள்..... அவற்றை அடுத்த பகுதியில் பார்க்கலாமே!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

டிஸ்கி: இப்பகுதியில் புகைப்படங்கள் எடுக்க அனுமதி இல்லை என்பதால், இணையத்திலிருந்து சில ஓவியங்கள்..... வரைந்த ஓவியர்களுக்கு பாராட்டுகளும் நன்றியும்.

புதன், 28 அக்டோபர், 2015

கார் சாவி

 படம்: இணையத்திலிருந்து....

நான் காஜ்லா..... தில்லியின் பிரபலமான நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்த அலுவலக சந்திப்பில் கலந்து கொண்டு வெளியே வந்தேன். டம்பப் பை முழுக்க கைவிட்டு துழாவினாலும் சாவி கிடைத்தபாடில்லை. சந்திப்பு நடந்த இட்த்திலேயே இருக்குமோ எனத் தோன்ற அங்கே சென்றால் அங்கும் இல்லை! என்னுடைய வாகனம் நோக்கி நடந்து கொண்டே வாகனத்தின் சாவியை மீண்டும் தேடியபடியே நடந்தேன்.

வழக்கமாக செய்யும் தப்பையே செய்து விட்டேனோ என நினைத்தேன். வாகனத்திலேயே சாவியை மறந்து வைத்து விடுவது எனக்கு வழக்கம்! சாவி தொலையாமல் இருக்க, சாவித் துவாரத்திலேயே வைத்து விடுவது தான் நல்லது என எனக்கு ஒரு எண்ணம்! என் கணவர் எப்போதும் சொல்வார் – இப்படி வாகனத்திலேயே விட்டுச் சென்றால் உன் வாகனத்தை திருடுவது வெகு சுலபம்!  அவர் எப்போதும் சொல்வது போலவே இன்று நடந்து விடுமோ....

ஓட்டமும் நடையுமாக வாகனம் நிறுத்தி வைக்கும் இடத்திற்கும் வந்தாயிற்று...  அங்கே அதிர்ச்சி காத்திருந்தது! வாகனம் காற்றில் மறைந்திருந்தது!  அலைபேசியிலிருந்து காவல்துறையை அழைத்து என்னுடைய வாகனம் தொலைந்து விட்டதை தெரிவித்தேன். எங்கே நிறுத்தினேன், வாகன எண், என்ன வண்ணம் என்று விவரமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்கள். வண்டியிலேயே சாவியை விட்டுவிட்ட எனது முட்டாள் தனத்தையும் சொல்லி விட்டேன்! விரைவிலேயே கண்டுபிடிக்க முயற்சி செய்வதாகச் சொன்னார்கள்....

அடுத்ததாக என்னுடைய கணவரை அழைக்க வேண்டும். நிச்சயம் முட்டாளே...  சாவியை அப்படி வைக்காதே என எத்தனை முறை உனக்கு சொல்லி இருக்கிறேன்.... இப்போது திருடு போய் விட்டது பார்என திட்டப் போகிறார். இருந்தாலும் அழைக்கத்தான் வேண்டும்.    

“நாதா.....  [இது போல தப்பு செய்த நேரங்களில் இப்படித் தான் அழைப்பது வழக்கம்!] ஒரு சிறிய பிரச்சனை. இங்கே வாகனத்தினை நிறுத்தி விட்டுச் சென்றேன். வழக்கம் போல சாவியை அதன் துவாரத்திலேயே விட்டு விட்டேன். சந்திப்பு முடிந்து திரும்பினால், வாகனம் இல்லை. களவு போய்விட்டது போலும்! நீங்கள் கவலைப் படாதீர்கள்.... காவல் துறையை அழைத்து புகார் செய்து விட்டேன். விரைவில் கண்டுபிடித்து விடுவதாக வாக்களித்து இருக்கிறார்கள்என்று தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தேன்.

எதிர் முனையில் நீண்ட மௌனம்.  ஒரு வேளை அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டதோ என திரையைப் பார்த்தேன். இல்லை... இல்லை....  சற்றே மௌனத்திற்குப் பிறகு வழக்கம் போல “முட்டாளே.... என ஆரம்பித்தார்! நான் தானே இன்றைக்கு உன்னை அந்த சந்திப்பிற்காக வாகனத்தில் கொண்டு வந்து விட்டேன். நீ வாகனம் எடுத்துச் செல்லவே இல்லையே!” 

அடடா..... கொஞ்சம் அவசரப் பட்டு விட்டோமோ?  என மனதுக்குள் நினைத்தபடியே, “நல்ல வேளை திருடு போக வில்லை. சரி நீங்களே என்னை வந்து அழைச்சுட்டுபோங்க!என்று சொன்னேன். அதற்கு அவர் சொன்ன பதில்.....

முட்டாளே......  முதல்ல இங்கே என்னைப் பிடித்து கேள்வி கேட்கும் போலீஸ்காரரிடம் நான் உன் வாகனத்தினை திருட வில்லை என புரிய வைத்தால் தான் நான் அங்கே வந்து உன்னை அழைத்துக் கொண்டு போக முடியும்!

டிஸ்கி: ஆங்கிலத்தில் வந்த மின்னஞ்சலின் தமிழாக்கம்.

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

செவ்வாய், 27 அக்டோபர், 2015

பேட் த்வாரகா – ஒரு படகுப் பயணம்


பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 16

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7 8 9 10 11  12 13 14 15



ராஜ் பரோட்டா ஹவுஸ்-ல் மதிய உணவினை முடித்துக் கொண்டோம்.  வயிறு நிறைந்தால் மனதும் நிறைந்து விடுகிறது – சற்று நேரத்திற்கேனும்! அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் படகுத் துறைக்கு வந்து சேர்ந்தோம். சிறிது நேரத்திற்கு நிறுத்தி வைத்திருந்த படகோட்டம் ஆரம்பித்து இருந்தது.  படகு என்றால் சிறிய படகு என நினைத்து விட வேண்டாம். சற்றே பெரிய படகு – 150 முதல் 200 பேரை அதில் அடைத்துவிடுகிறார்கள் – வரிசை வரிசையாக அமர்ந்து கொள்ள பெஞ்சுகள் போடப்பட்டிருக்கிறது. பக்கவாட்டிலும் இருக்கைகள் உண்டு!



இந்த இருக்கைகள் தவிர முதல் வகுப்பு ஒன்றும் உண்டு! பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.  தலைக்கு மேல் கூரை இருக்கிறது. நான்கு சுவற்றுக்குள் அமர்ந்திருப்பது போல ஒரு அமைப்பு – கண்களுக்கு நேரே திறப்புகள். அங்கிருந்தே மற்ற படகுகளையும் காட்சிகளையும் பார்க்க முடியும் என்பதைத் தவிர வேறு ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை. சாதாரணமாக ஒரு பயணியிடமிருந்து 10 ரூபாய் வாங்குகிறார்கள். இந்த அமைப்புக்கு நான்கு முதல் ஐந்து பேர் கொண்ட குழுவாக சென்றால் 500 ரூபாய் வரை கேட்கிறார்கள். பேரம் பேசிக்கொண்டிருந்தவர்களும் உண்டு!



படகில் ஒவ்வொருவராய் ஏறிக்கொள்ள படகில் உள்ள இருக்கைகள் அனைத்தும் நிரம்பினால் தான் படகைச் செலுத்துவேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்தார் படகோட்டியும் அவரது கூட இருப்பவரும் – அப்போதே கிட்டத்தட்ட எல்லா இருக்கைகளிலும் மனிதர்கள். மிஞ்சிப் போனால் நான்கு ஐந்து இருக்கைகள் தான் காலி இருக்கும். அவர்களையும் ஏற்றிக்கொண்டு படகு புறப்பட்டது. டீசல் மோட்டார்களினால் இயக்கப்படும் படகுகள் இவை.



இந்தியாவில் உள்ள பெரும்பாலான படகுத் துறைகளில் பாதுகாப்பு குறித்த ஒரு விழிப்புணர்வு இல்லவே இல்லை. படகில் பயணம் செய்பவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உடைகள் தரவேண்டும் என படகோட்டிகளோ, அரசாங்கமோ நினைப்பதில்லை.  ஹிந்தியில் ஒரு வாசகம் சொல்வார்கள் – ”[b][g]கவான் [b]பரோசே – அதாவது ஆண்டவன் மேல் பாரத்தைப்போட்டு என்று நாம் சொல்வதைப் போல! அதே தான் இங்கே நடக்கிறது.  பேட் த்வாரகாவும் விதிவிலக்கல்ல! இத்தனை பேரை ஏற்றிக் கொண்டு செல்லும் படகுகளில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் கிடையாது.



பயணம் செய்யப்போவது என்னமோ குறைவான தூரம் தான் என்றாலும் கொஞ்சமாவது பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டாமோ? அதுவும் நல்ல ஆழமான பகுதியில் தான் பயணம் செய்கிறார்கள் – கூடவே படகில் இருக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகம் எனும்போது தப்பித்தவறி விபத்து ஏற்பட்டால் இழக்கப்போகும் மனித உயிர்கள் நிறையவே என்பதை யோசிப்பதே இல்லை. எப்போதாவது இப்படி விபத்து ஏற்படும் போது கொஞ்சம் கெடுபிடிகள் இருக்கும் – பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து போக, அடுத்த விபத்து ஏற்படும் வரை சுணக்கம் தான்.



படகில் பயணித்தபடியே மற்ற படகுகளையும், மற்ற காட்சிகளையும் படமெடுத்துக்கொண்டே வந்தேன். சில நிமிடப் பயணத்திற்குள்ளாகவே இறங்க வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்துவிட்டோம். இத்தனை நேரம் உட்கார்ந்திருந்த மனிதர்களுக்கு கரை வந்தவுடன் அப்படி ஒரு அவசரம். படகு நிற்பதற்குள் கரைக்கு தாவிடுவார்கள் போல! எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு செல்ல நாங்கள் கொஞ்சம் பொறுமையாகவே முன்னேறினோம். எப்படியும் கோவில் வாயிலில் சென்று காத்திருக்க வேண்டும்!



கோவில் மூடிய பிறகு அங்கிருந்து புறப்பட்ட மக்கள் படகைப் பார்த்ததும் அதில் ஏறிக்கொள்ள முண்டியடித்து வருகிறார்கள். அவர்களை சமாளித்து நாம் முன்னேற வேண்டும்.  சாதாரணமாகவே இது போன்ற கோவில்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் எப்போதுமே மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அரசு தரப்பிலோ, மாவட்ட நிர்வாகம் தரப்பிலோ இது போன்ற இடங்களில் தகுந்த Crowd Management செய்ய வேண்டும் என்றாலும் செய்வதில்லை என்பது நிதர்சனம்.



படகிலிருந்து படகுத் துறையில் இறங்கியபின்னும் கொஞ்சம் தூரம் நடக்க வேண்டும். நடக்க முடியாதவர்களுக்கு ஒரு ஏற்பாடு இங்கே உண்டு.  நமது ஊரில் தள்ளுவண்டி இருக்கிறதே அதைப் போல இங்கேயும் சில தள்ளுவண்டிகள் வைத்துக் கொண்டு சிலர் நிற்பார்கள். தள்ளுவண்டியின் மேலே ஏறி நீங்கள் உட்கார்ந்து கொண்டால் உங்களை தள்ளிக்கொண்டு போய் விடுவார்கள்!  “தள்ளு மடல் வண்டி இது தள்ளி விடுங்க!என்று நீங்களே பாடிக்கொள்ள வேண்டியது தான் பாக்கி! இந்த வண்டியில் ஏறி உட்கார அவஸ்தைப் படுபவர்களைப் பார்த்தபோது “இந்த அவஸ்தைக்கு இவர்கள் நடந்தே போயிருக்கலாம் எனத் தோன்றியது!



அப்படியும் அந்த குறுகலான பாதையில் நடந்து முன்னேறினோம். சில படங்கள் எடுக்க நினைத்தாலும், நான் ஒரு பக்கமும் கேமரா ஒரு பக்கமும் இழுத்துக் கொண்டு போக வாய்ப்புகள் அதிகம் என்பதால் ஒரே ஒரு படம் மட்டும் எடுத்துக் கொண்டு முன்னேறினேன்.  கோவில் வாயில் சென்று சேர, அங்கே ஏற்கனவே பக்தர்கள் காத்திருந்தார்கள்.  கதவு மூடியிருந்தது.  காத்திருந்தவர்களோடு நாங்களும் சேர்ந்து காத்திருக்கத் தொடங்கினோம். 



ஐந்து மணிக்குத் தான் நடை திறக்கும் என்றார்கள். நாங்கள் அங்கு சென்று சேர்ந்தபோது நான்கு மணிதான். எப்படியும் ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டும். காத்திருந்தோம்....  நீங்களும் காத்திருங்கள் – அடுத்த பகுதி வரை!

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.