சபரிமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சபரிமலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 17 டிசம்பர், 2013

பழம் போண்டாவும் பயணத்தின் முடிவும்



[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 13]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 12]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 11]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 10]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 9]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 8]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 7]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

இந்தப் பகுதியில் முடிக்க நினைத்திருந்தேன்.  இன்னும் சொல்ல வேண்டிய ஒரு சில விஷயங்கள் இருப்பதாலும், பதிவின் நீளம் கருதியும் அடுத்த பகுதி வெளிவந்தாக வேண்டிய கட்டாயம்.  அடுத்த பகுதியில் கண்டிப்பாக நிறைவு பெறும் என்ற உறுதிமொழியோடு! இப்படிகுதியை முடிக்கிறேன்!

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ பயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

சபரிகிரி வாசனின் திவ்ய தரிசனத்திற்குப் பிறகு பம்பை நதிக்கரைக்கு வந்து சற்றே இளைப்பாறி, ஈரடி இலக்கியத்தில் சொல்லியிருக்கும் படி கொஞ்சம் வயிற்றுக்கும் கொடுத்தோம்! பிறகு அங்கிருந்து எங்கள் மகிழ்வுந்தினை நிறுத்தியிருந்த அலுவலக வளாகத்திற்கு வந்து மகிழ்வுந்தில் திருவனந்தபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தோம் என்பதையும் முந்தைய பகுதியில் சொல்லி இருந்தேன்.

அப்படி சென்று கொண்டிருந்தபோது கொஞ்சமாக பசிப்பது போல இருந்ததால் நடுவில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் இருக்கும் கடையில் நிறுத்தினோம். இங்கே கேரளத்தில் நெடுஞ்சாலை என்று பெயர் கொண்டிருக்கும் எல்லா சாலைகளுமே குறுகிய சாலைகளாக இருக்கின்றன. அதில் சிறிய கிராமங்களை கடக்கும்போது இரு மருங்கிலும் தேநீர் கடைகளும், சிறிய உணவகங்களும் உண்டு.

உணவகங்கள் என்று சொன்னால் ஏதோ பெரிய பட்ஜெட் உணவகம் என நினைத்து விடக்கூடாது. அனைத்தும் மிகச் சிறிய உணவகங்கள் தான். பெரும்பாலான கடைகளில் கண்ணாடி பெட்டிக்குள் உருண்டை உருண்டையாக ஒரு முட்டை போண்டா போல ஒன்றை வைத்திருக்கிறார்கள்! கூடவே கட்டஞ்சாய்/கட்டங்காபி. எல்லாக் கடைகளிலும் இருக்கும் இந்த உருண்டை என்ன என்பதை தெரிந்து கொள்ள நண்பரிடம் கேட்டேன் – “இது என்ன?”  அவர் சொன்ன பதில் – பழம் போண்டா!


உதவி: கூகிள்

அது என்ன பழம் போண்டா என ஒரு கடையில் டீ மாஸ்டரை வினவியபோது அவர் சொன்ன பதில் ”இதை நிச்சயம் சாப்பிடக் கூடாது” என்று எண்ண வைத்தது!

நன்கு பழுத்த வாழைப்பழத்தினை கொஞ்சம் சக்கரை சேர்த்து, தண்ணீர் சேர்க்காது மிக்ஸியில் அடித்து எடுத்துக் கொள்வார்களாம். கொஞ்சம் ஆப்பச்சோடா எடுத்து கோதுமை மாவில் கலந்து அரைது வைத்த வாழைப்பழத்துடன் சேர்த்து பிசைந்து வைக்க வேண்டுமாம். ”கொஞ்சமாக ஏலக்காய் பொடியும் சேர்த்து பிசைந்தால் வாசனை தூக்கும்!” என்று சப்புக் கொட்டியபடி சொன்னார். சுமார் இரண்டு மணி நேரம் ஊற வைத்து பின்னர் தேவையான அளவு உருண்டையாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு வாணலியில் எண்ணை ஊற்றி, நன்கு காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்!

இது தான் பழம் போண்டா.....  வாழைப்பழமும் கோதுமை மாவும் சேர்ந்தது என்று கேட்டவுடனேயே அதைச் சாப்பிடும் ஆசை போனது!  வேறு என்ன இருக்கிறது எனக் கேட்க, ”தோசையும், சம்மந்தியும் உண்டு!” என்று சொல்லவே, தோசை தெரியும் – அது என்ன சம்மந்தி! என்று யோசித்தேன். நமக்குத் தெரிந்த ஒரே சம்மந்தி – மணப்பெண்/மணமகன் அப்பா-அம்மா தான்!

சரி ”தோசையும் சம்மந்தியும் தரு” என்று நான் பறைய, அவரும் கொண்டு வந்தார். சம்மந்தி என்ன என்று பார்த்தால் தண்ணீர் நிறைய விட்டு விளாவி இருந்த தேங்காய் சட்னி! ஆறிப்போயிருந்த தோசைக்கு நிறைய தண்ணீருடன் இருந்த சட்னி சரியாக இருக்க, லைட்டாக சாப்பிட்டோம். ஏனெனில் மதியம் ஒரு ஹெவியான சாப்பாடு காத்திருந்தது திருவனந்தபுரத்தில்!

காலை உணவு முடிந்து வண்டியில் விரைந்தோம் திருவனந்தபுரம் நோக்கி.  நண்பரின் அக்கா மகளுக்கு ஒன்றாவது வயது முடிந்து அன்று பக்கத்தில் இருக்கும் கோவிலில் “சோறுண்ணு” இருந்தது. அவர்கள் அதை முடித்து வீட்டிற்கு வந்து எங்களுக்காக காத்திருந்தார்கள். நாங்களும் ஒன்றரை மணி அளவில் திருவனந்தபுரம் வந்து சேர்ந்தோம்.

மீண்டும் சிகப்பரிசி சாதம் – கூடவே அவியல், காலன், ஓலன், உப்பேரி என திவ்யமாக ஒரு மலையாளச் சாப்பாடு. கூடவே விதம் விதமாய் மலையாள நாட்டில் தயாரிக்கப்படும் இனிப்புகள்.  அளவுக்கு அதிகமாகவே பரிமாறிவிட, அதை வீணடிக்காது சாப்பிட்டு முடித்தேன். உண்ட களைப்பு கொஞ்சம் உறங்கச் சொன்னது.  நண்பரின் வீட்டிற்கு வந்து கொஞ்சம் இளைப்பாறினேன்.

மாலையில் நண்பரின் வீட்டின் அருகே இருக்கும் ஒரு சிறிய குருவாயூரப்பன் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்தோம். அங்கிருந்து வீடு வந்து இரவு உணவு உண்டபின் திருச்சி திரும்ப ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தமையால் பேருந்து நிலையம் வந்து எனக்காகவே காத்திருந்த பேருந்தில் அமர்ந்தேன்.

செல்லும் போது இருந்த இடையூறுகள் ஏதுமின்றி அமைதியானதோர் பயணம். இரவின் இன்பம் தொடங்க, பயணம் மிகச் சிறப்பாய் அமைந்தது. ஓட்டுனர் அதி விரைவாக பேருந்தினைச் செலுத்தில் 07.30 மணிக்கு திருச்சியில் கொண்டு வந்து சேர்த்தார்.

இப்படியாக இந்த சபரிமலைப் பயணம் இனிதே முடிந்தது. இத்தனை வருடங்களில் இங்கே சென்றதில்லை என்ற ஏக்கமும் தீர்ந்தது. இனிமேலும் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

இந்தப் பயணத்தில் இக்கட்டுரை வாயிலாக என்னுடன் பயணித்த உங்கள் அனைவருக்கும் சபரிகிரிவாசனின் பூரண நல்லாசி கிடைக்க வேண்டிக்கொண்டு இந்தப் பயணத் தொடரினை நிறைவு செய்கிறேன்.  சற்றே இடைவெளிக்குப் பிறகு வேறொரு பயணத் தொடரில் சந்திப்போம்!
  
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 9 டிசம்பர், 2013

சபரியின் உழைப்பாளிகள்



[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 12]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 11]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 10]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 9]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 8]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 7]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

தன்னை வணங்க வரும் பக்தர்கள் அனைவரும் தனது நல்ல நண்பரான வாவரையும் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கேயே அவருக்கும் ஒரு வழிபாட்டு ஸ்தலம் இன்றளவும் இருக்கிறது. தகவல்கள் அனைத்தும் படித்து நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் முடிக்க நினைத்திருக்கிறேன்! பார்க்கலாம்!

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ பயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

இப்படியாக, இந்த சபரிமலைப் பயணத்தில், முதல் நாள் இரவும், அடுத்த நாள் காலையும் சபரிகிரிவாசனின் திவ்ய தரிசனம் கிடைத்தது. கூடவே மாளிகைப்புரத்து அம்மனும், வாவரும், நவக்கிரகங்களும் எங்களுக்கு அருள, மீண்டும் எப்போது வருவோம் என்ற நினைவுகளுடன் மலையிலிருந்து கீழே இறங்க ஆரம்பித்தோம்.



நாங்கள் மலைமீது ஏறும்போது இரவு. அதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. நாங்கள் இறங்கும் நாள் அன்று தான் அந்த மாதத்தில் கோவில் நடை திறந்திருக்கும் கடைசி நாள். அதனால் மேலே சென்று கொண்டிருக்கும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.



ஏற்றத்தினை விட மலை இறக்கம் இன்னும் கடினமாக இருந்தது! கொஞ்சம் வழுக்கினாலும் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து விடும் அபாயம். அதனால் காலை நன்கு பதித்து நடக்க வேண்டியிருந்தது. கொஞ்சம் ஏமாந்தாலும் காலை வாரி விட்டு கீழே விழ வைக்கும் நோக்கத்துடன் பாறைகள் இருப்பதாகப் பட்டது!



காலை வேளை என்பதால் அங்கே நிறைய பால்கிவாலாக்களைப் பார்க்க முடிந்தது. மலையேற முதியவர்களால் முடியாது என்பதால், ஒரு இருக்கையில் அமரவைத்து அதில் இரண்டு பக்கமும் கட்டி இருக்கும் மரக்கம்புகளை தனது தோளில் சுமந்து இருக்கையில் உட்கார்ந்து இருக்கும் பக்தரையும் சுமந்து மலையேறிக் கொண்டிருக்கும் பல உழைப்பாளிகளைக் காண முடிந்தது. இவர்களுக்கான கூலியை தேவஸ்தானமே நிர்ணயித்து வைத்திருக்கிறது.



இவர்களை நினைத்தால் பாவமாக இருந்தாலும், இது தான் இவர்களுக்குத் தொழில் என்பதால் முடிந்தவரை அவர்களுக்கு காசு கிடைக்கட்டும் என்ற நினைவுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்தோம்.  எங்கே பார்த்தாலும் “ஸ்வாமியே ஐயப்போ!” கேட்டுக் கொண்டிருக்க, மனதுக்குள் அமைதி குடி கொண்டிருந்தது. கீழே இறங்கும்போது புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம் என நினைத்ததால், கேமராவினை கழுத்தில் மாட்டியபடியே வந்தேன். ஆங்காங்கே சில படங்கள் எடுத்துக் கொண்டேன்.



வழுக்கும் பாறையில் வரும்போது இப்படி புகைப்படம் எடுப்பது தேவையா என்ற எண்ணமும் அவ்வப்போது வராமல் இல்லை! இப்படி கீழே வந்து கொண்டிருக்கும்போது பல கடைகளை ஆங்காங்கே காண முடிந்தது. கீழே இறங்கி வரும் பக்தர்கள் வேர்க்கடலையும், வெள்ளரிப்பிஞ்சும் வாங்கி உண்டபடி வந்தார்கள். 



அங்கே வரும்வழியில் பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்தவர் பலூன் விற்றுக் கொண்டிருந்தார். பத்து ரூபாய்க்கு ஒரு பலூன்.  இவரைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியிருக்கிறேன்.  அந்தப் பதிவு உங்களுக்கு நினைவிலிருக்கும் என நம்புகிறேன். அதை அப்போது படிக்காதவர்களின் வசதிக்காக அந்தப் பதிவிற்கான சுட்டி இதோ - பலூன் வியாபாரியும் படகோட்டியும்.



மேலும் சிலரிடம் பேசியபடியே, சபரியைக் காணச் செல்லும் பக்தர்களை ஊக்கப்படுத்தியபடியே கீழே இறங்கினோம். சுற்றிலும் மலைப்பகுதி என்பதால் இயற்கை எழில் கொஞ்சி விளையாடியது.  காலை எட்டரை மணிக்குள் பம்பா நதியை வந்தடைந்து விட்டோம். கீழே இறங்கி வந்தபிறகு கொஞ்சம் சிரமப் பரிகாரமாக கொஞ்சம் தேநீரோ/காபியோ குடிக்க நினைத்து ஒரு கடையில் ஒதுங்கினோம்.


அங்கே ஏற்கனவே ஒரு தமிழ் குடும்பம் காபி குடித்துக் கொண்டிருந்தார்கள்.  நானும் நண்பர்களும் கடையில் மலையாளத்தில் சம்சாரித்துக் கொண்டிருக்க, அந்த தமிழர் குடும்பத்து பெண்மணி சொன்னது – “இந்த மலையாளிகளுக்குச் சுட்டுப் போட்டாலும் காபி போட வராது!”.  உண்மை தான் என்றாலும் அங்கே சொல்லி இருக்க வேண்டாம்!  கொஞ்சம் தமிழ் தெரிந்த என் நண்பன் அவரை முறைக்க, நானும் என் பங்குக்கு, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது! அது உண்மையாகவே இருந்தாலும்!” என தமிழில் சொல்ல அவர்கள் சிரித்தபடி, “சாரிங்க, ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது!” என்றார்கள்.



மறப்போம், மன்னிப்போம் என்று நண்பரிடம் சொல்லி, நாங்களும் காபி குடித்து விட்டு அங்கிருந்து நகர்ந்தோம்.  எங்கள் காரை நிறுத்தியிருந்த அலுவலகத்திற்கு வந்து காரை எடுத்துக் கொண்டு திருவனந்தபுரம் நோக்கி பயணிக்கத் தொடங்கினோம். வழியெங்கிலும் ரப்பர் மரங்களும் காடுகளும் தோட்டங்களும், அழகான வீடுகளும் என்னை அப்படியே ஆட்கொண்டது!



வரும்போது வந்த வழியாகச் செல்லாது வேறு வழியாக செல்லலாம் என முடிவெடுத்து வந்து கொண்டிருந்தார் நண்பர்.   அப்படி வரும் வழியே ஒரு கிராமத்தில் மிகவும் பழமையான ஒரு பாலத்தினைக் காண்பித்தார்.  ஆங்கிலேயர் காலத்தில் கட்டிய பாலம் என்றும் இன்றைக்கும் அது சேதமில்லாது அப்படியே இருக்கிறது எனச் சொன்னதால் அங்கே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு விரைந்தோம்.

இந்தப் பகுதியில் முடிக்க நினைத்திருந்தேன்.  இன்னும் சொல்ல வேண்டிய ஒரு சில விஷயங்கள் இருப்பதாலும், பதிவின் நீளம் கருதியும் அடுத்த பகுதி வெளிவந்தாக வேண்டிய கட்டாயம்.  அடுத்த பகுதியில் கண்டிப்பாக நிறைவு பெறும் என்ற உறுதிமொழியோடு! இப்பகுதியை முடிக்கிறேன்!
    
மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 2 டிசம்பர், 2013

மாளிகைப்புரத்து அம்மனும் வாவரும்



[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 11]

முந்தைய பகுதிகள் படிக்க, சுட்டிகள் கீழே:

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 10]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 9]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 8]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 7]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 6]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 5]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 4]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 3]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 2]

[கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை – பகுதி 1]

சபரி மலை பெயர்க் காரணத்தினைப் பார்த்தோம். அப்படியே சபரியை மீண்டும் தரிசித்தோம். ஐயனை தரிசனம் செய்த பிறகு அங்கே இருக்கும் மற்ற சன்னதிகளையும் மீண்டுமொரு முறை தரிசித்தோம்.  என்ன சன்னதிகள், அங்கே என்ன விசேஷம் என்பதையெல்லாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

உங்கள் நினைவுக்காக: [என் நினைவுக்காகவும் தான்!] – ‘கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ பயணத் தொடரின் முந்தைய பகுதியை இப்படித்தான் முடித்திருந்தேன்.

என் அப்பன் ஐயப்பன் என பலரும் சொல்லும் ஐயனை தரிசனம் செய்தபிறகு சன்னிதானத்தின் அருகே இருக்கும் மற்ற கோவில்களுக்கும் செல்ல ஆரம்பித்தோம். மனது நிறைந்த அமைதியுடன் ஒவ்வொரு பகுதியாகச் சென்று தரிசனம் செய்தோம்.

ஐயனின் சன்னதியின் அருகே இடப்பக்கத்தில் மாளிகைப்புரத்து அம்மன், மஞ்சள் மாதா பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இவரின் கதையையும் கொஞ்சம் பார்க்கலாம்.

ஐயப்பனின் அவதார நோக்கமே தேவர்களை துன்புறுத்தி வந்த மஹிஷியை சம்ஹாரம் செய்வது தான். புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்ற ஐயப்பன் அங்கே மஹிஷியோடு போர் புரிகிறார். மஹிஷியுடன் போரிட்டு அவளை அப்படியே தூக்கி அலசா நதியில் [தற்போது அழுதா நதி என அழைக்கப்படுகிறது] எறிந்து விடுகிறார். மஹிஷிக்கு ஒரு வரம் உண்டு. அப்படியே கீழே விழுந்தாலும், மீண்டும் பலத்தோடு எழுந்து விடுகிற சக்தி அவளுக்கு உண்டு.

அதனால் அவள் எழா வண்ணம் சபரிகிரிவாசன் அவள் உடல் மீது ஏறி நின்று கொண்டு நர்த்தனம் ஆடுகின்றார். அவளுடைய பலம், அகங்காரம் போன்றவை நீங்கி, உயிர் உள்ளும் புறமும் ஊசலாடுகிறது. ஐயனின் திருவடி அவள் மேல் பட்டதும், மஹிஷியாக இப்பிறவியில் இருந்தாலும், முற்பிறப்பில் தான் யார் என்பது நினைவுக்கு வருகிறது.
ஒரு சமயம் தத்தாத்ரேய ரிஷிக்கும், அவரது மனைவியான லீலாவதிக்கும் தங்களது பக்தியில் யாருடையது சக்தி வாய்ந்தது  என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. தனது சக்தியினால் ஆணவம் கொண்டிருந்த லீலாவதி தனது கணவரையே “நீர் மஹரிஷி அல்ல மஹிஷி!” என திட்டிவிட தத்தாத்ரேயருக்கு கோபம் வந்தது. ரிஷிகளுக்கு கோபம் வந்தால் உடனே கொடுப்பது சாபம் தானே! உடனே கமண்டலத்திருந்து தண்ணீர் எடுத்து, சாபம் கொடுத்தார் – ”பிடிவாதம் கொண்ட எருமை போல இருக்கிறாயே, நீ அசுரகுலத்தில் மஹிஷியாக பிறக்கக் கடவது!” எனச் சபித்து விட்டார்.

ரிஷிபத்னிக்கும் கோபமும் சக்திகளும் உண்டே, அவளும் தத்தாத்ரேயருக்கு ”நீயும் சுந்தரமஹிஷமாக அசுர குலத்தில் பிறந்து எனக்கு கணவனாகக்கடவது!” என்ற சாபத்தினை அளித்தாள்! இருவரின் சாபமும் பலித்தது!

இந்த நினைவு அவளுக்கு வர, தன்னுடைய தவறுகள் புரிந்தது. மஹிஷியாக இருந்த உடலிலிருந்து உயிர் ஒளிமயமான பெண் வடிவெடுத்து மஞ்சள் மாதாவாக ஐயனின் திருப்பாதங்களில் விழுந்து தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டுகோள் விடுக்கிறார்.

அதை மறுக்கும் ஐயப்பன், ”என்னுடைய அவதார நோக்கமே மஹிஷி சம்ஹாரம் தான். எனக்கு அதுதவிர தாயின் தலைவலி நீக்க புலிப்பால் கொண்டு செல்ல வேண்டும். அதனால் உடனே செல்கிறேன். உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது, என்னால் உயிர் பெற்ற காரணத்தினால் நீ எனக்கு சகோதரி முறையாவாய். என்னை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும் “மாளிகைப்புரத்து அம்மன் [மஞ்சள் மாதா] என்ற பெயருடன் அருள் புரிவாயாக!” எனச் சொல்ல, தற்போதும் மாளிகைப்புரத்தம்மன் இங்கே குடிகொண்டிருக்கிறார் என்கிறார்கள்.

மஞ்சள் மாதா சன்னதிக்கு அருகிலேயே நாகர், நவக்கிரஹங்கள் ஆகியோருக்கும் சன்னதிகள் உண்டு.  அருகிலேயே சில கொடுகொட்டி கலைஞர்கள் அமர்ந்து கொண்டிருப்பார்கள்.  ஒருவித வாத்தியத்தினை வாசித்துக் கொண்டு பாடல் பாடுகிறார்கள்.  ஜாதக ரீதியாக சனிதோஷம் உள்ளவர்கள் கொடுகொட்டிகளுக்கு சன்மானம் அளிக்க அவர்கள் வாத்தியத்தினை வாசித்து பாடல்களை பாடுகிறார்கள். அதில் மகிழ்ந்த மஞ்சமாதாவும் பக்தர்களின் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை.

தலைப்பில் சொன்ன ஒருவரைப் பார்த்தாயிற்று. அடுத்தவரைப் பார்ப்போமே....  ஐயப்பன் சன்னதிக்குச் செல்லும் பதினெட்டு படிகளுக்கு கீழே கிழக்காக வாவருக்கென தனி வழிபாட்டு ஸ்தலம் இருக்கிறது. இங்கே ஒரு இஸ்லாமியர்  வழிபாடுகளைச் செய்ய உதவுகிறார். வாவருக்கு நெல், நல்மிளகு, சந்தனம், சாம்பிராணி, பன்னீர், நெய், தேங்காய் போன்றவற்றை காணிக்கையாகச் செலுத்தலாம். வாவரின் வழிபாடு எதற்கு என்பதற்கான விடை இதோ....

ஐயப்பன் [மணிகண்டன்] இருக்கும் பந்தள தேசத்தை கொள்ளையிடுவதற்காக படைவீரர்களோடு துர்க்கிஸ்தானிலிருந்து வந்த கடல் கொள்ளைக்காரன் வாவர்.  அவரிடம் போரிடாது தனது அன்பு வார்த்தைகளால் கட்டுப்படுத்தி, அவரைத் தனது நண்பனாகவும் ஆக்கிக்கொண்ட ஐயப்பன், தனது தேசத்தில் தங்க வைத்துக் கொண்டார்.  பந்தள நாட்டை ஆக்கிரமிக்க வந்த உக்கிரசேனன்/பத்திர சேனன் படைகளை வாவருடன் சேர்ந்து வென்று பந்தள நாட்டை ஆபத்திலிருந்து காப்பாற்றினாராம்.

தன்னை வணங்க வரும் பக்தர்கள் அனைவரும் தனது நல்ல நண்பரான வாவரையும் வணங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கேயே அவருக்கும் ஒரு வழிபாட்டு ஸ்தலம் இன்றளவும் இருக்கிறது. தகவல்கள் அனைத்தும் படித்து நீங்களும் ரசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த பதிவில் முடிக்க நினைத்திருக்கிறேன்! பார்க்கலாம்!

மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.