செவ்வாய், 31 மே, 2016

பாசத் துணைவன்! - படமும் கவிதையும்

[படம்-2 கவிதை-4]

படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் புகைப்படத்திற்கு வந்த நான்காம் கவிதையோடு உங்களை இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதையை எழுதி அனுப்பியவர் வலைப்பதிவாளர் பி. தமிழ்முகில் அவர்கள்.  படம் பற்றிய குறிப்பும் கவிதையும் இதோ....

புகைப்படம்-2:



எடுக்கப்பட்ட இடம்:  சென்னை ECR சாலையில் முட்டுக்காடு அருகே இருக்கும் தக்‌ஷிணசித்ரா. கிராமங்களிலேயே மாட்டு வண்டிகள் இல்லாத ஒரு நிலை இன்று. அங்கே சுற்றுலா வரும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பினால் காசு கொடுத்து மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளலாம்.  அப்படி சில பள்ளிச் சிறுவர்கள் மாட்டு வண்டி பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.  பி. தமிழ்முகில் அவர்கள் எழுதித் தந்த கவிதை இதோ.....

கவிதை-4:

பாசத் துணைவன் !

ஏர்க் கலப்பையில் காளையை பூட்டி
விவசாயம் பார்த்தது
ஒரு காலம் !

உறவோடு கூடி கொண்டாட
கட்டுச் சோற்றுடன் வண்டி கட்டி
சென்றது - ஒரு காலம் !

வீரத்தின் அடையாளமாய்
பாசத் துணைவர்களை ஏர் தழுவியது
ஒரு காலம் !

சல் சல் சலங்கை கட்டி- காளை
பூட்டி வண்டி கட்டி வியாபாரம் பார்த்தது
ஒரு காலம் !

மனித வாழ்வோடு இயைந்து
வாழ்வின் ஆதாரமாய்  இருந்த
குடும்பத்தின் அங்கமாய் காணப்பட்ட
காளையும் காளை பூட்டிய வண்டிகளும்
அருங்காட்சியகத்தில் காணும் நிலை
கண்முன் அரங்கேறும் வேளையில் -

மனித  இனம் தனை
அருங்காட்சியகத்தில் காணும் நாள்
வெகுதொலைவில் இல்லை !

     பி. தமிழ் முகில்

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் படமும் பி. தமிழ் முகில்  அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் மின்னஞ்சல் ( venkatnagaraj@gmail.com ) மூலம்  எனக்கு தெரிவியுங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



திங்கள், 30 மே, 2016

அம்மா மார்க்கெட்....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 13

அம்மா மார்க்கெட்....

அம்மா தண்ணீர், அம்மா மருந்தகம், அம்மா உணவகம் வரிசையில் அம்மா மார்க்கெட்? என்று நினைக்க வேண்டாம்.... 

”இன்னிக்கு உங்களுக்கு விற்பனை எப்படி?” என்று பேசிக் கொள்கிறார்களோ?

சென்ற பகுதியில் தேவாலயத்திற்குச் சென்றது பற்றி எழுதி இருந்தேன்.  தேவாலயத்திலிருந்து அடுத்ததாய் நாங்கள் சென்றது இம்ஃபால் நகரில் இருக்கும் இமா கைதல் – அதாவது அம்மா மார்க்கெட். மணிப்பூரி மொழியில் இமா என்றால் அம்மா.  அவர்கள் நடத்தும் கடைகள் தான் இமா மார்க்கெட். Meitei ராஜாக்கள் காலத்திலிருந்தே இந்த இமா மார்க்கெட் நடந்து வந்திருக்கிறது. 

வாங்குபவர்களை எதிர்பார்த்து......

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை என்பதற்கு சரியான உதாரணமாக இந்தக் கடைகளை சொல்கிறார்கள்.  பல்லாண்டுகளாக இந்த இமா மார்க்கெட் நடத்தப்பட்டிருக்கிறது என்றாலும் சாதாரணமான கடைகளாக – அதாவது வானம் பார்த்த கடைகளாகவே இருந்திருக்கின்றன.  இக்கடைகளை ஒட்டு மொத்தமாக இடித்து விட்டு தனியார் வசம் எடுத்துக் கொள்ளவும் முயற்சிகள் நடந்திருக்கின்றன.  என்றாலும் அனைத்து மகளிர்களும் சேர்ந்து போராட்டம் நடத்தி அம்முயற்சியைத் தகர்த்து இருக்கிறார்கள்.

 வரவு செலவு எல்லாம் சரியா இருக்கா?......

தற்போது வானம் பார்த்த கடைகளாக இல்லாமல் இம்ஃபால் நகராட்சியே இவர்களுக்கு மூன்று பெரிய பெரிய கட்டிடங்களைக் கட்டிக் கொடுக்க அங்கே 400 கடைகள் இருக்கின்றன.  அனைத்துமே தாய்மார்கள் நடத்தும் கடைகள் தான். அங்கே உணவுப் பொருட்கள் முதல் உடைகள் வரை மகளிர் பல பொருட்களை விற்பனை செய்கிறார்கள்.  இங்கே சென்று கடைகளில் என்னென்ன பொருட்கள் கிடைக்கின்றன என்பதைப் பார்ப்பதோடு, முடிந்தால் அவர்களிடம் பேச வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் அங்கே சென்றோம்.

மண்பானைகளும் கருவாடும்.....

சிறு கை பை......

உணவுப் பொருட்கள், உடைகள், மண் பானைகள், காய்கறிகள், கைவினைப் பொருட்கள் என பவற்றையும் அங்கே விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.  அனைத்து கடைகளுமே பெண்களால் நடத்தப்பட்டாலும், ஒரு சில கடைகளில் வேலைக்கு ஆண்களையும் அமர்த்தியிருக்கிறார்கள்.  பல பெண்கள் தங்களது குழந்தைகளை முதுகில் கட்டியபடி அமர்ந்து கொண்டு விற்பனை செய்வதையும் பார்க்க முடிந்தது.  அங்கே நண்பர் நிறைய புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்க, நான் ஒரு சிலரிடம் பேச்சுக் கொடுத்தேன். 

எங்களைத் துரத்திய மூதாட்டி......

ஒரு மூதாட்டி அதே ஊரிலேயே பிறந்து அங்கேயே வாழ்க்கைப்பட்டு கிட்டத்தட்ட 70 வருடங்களாக இங்கே கடை நடத்துகிறாராம். அவரிடம் மேலும் பேச முனைந்தபோது “சும்மா தொந்தரவு பண்ணாம போங்க! எனக்கு நிறைய வேலை இருக்கு – ஏதாவது வாங்காமல் சும்மா பேச்சு மட்டும் உதவாது, பேசவும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் வந்தா எனக்கென்ன லாபம்? என்று சிரித்தபடியே எங்களைத் துரத்தினார்...... எங்களை எனும்போது எங்கள் குழுவில் இருந்தது அனைவரும் ஆண்கள் என்பதை நினைவு படுத்துகிறேன்.

சுடச்சுட சப்பாத்தியும் பக்கோடாவும்.....

பழங்கள் விற்கும் மூத்த பழம்.....

நிறைய இடங்களில் பதிவுக்காக, பயண அனுபவத்திற்காக பேச முயன்று, படம் எடுக்க முயன்று திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறோம் – எத்தனை முன் ஜாக்கிரதையாக இருந்தாலும்.....

வித்தியாசமான ஒரு கனி......

எத்தனை தடவை கூட்டினாலும் சரியா வரலையே.....

வித்தியாசமான சில பழங்கள், அழகிய துணிப் பைகள் என எத்தனை விஷயங்கள் அங்கே விற்பனைக்கு இருந்தன.  நண்பர்களும் நானும் சில அலங்கரிக்கப்பட்ட துணிப்பைகளை வாங்கிக் கொண்டோம். சொல்லும் விலையில் கறாராக இருக்கிறார்கள் அந்தப் பெண்கள் – விலை குறைப்பதில் அவர்களுக்கு விருப்பமில்லை.  குறிப்பாக மூதாட்டிகள்.  சில இடங்களில் பூஜைக்குத் தேவையான பொருட்களும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள் – எல்லாமே கலந்து இருக்கிறது இங்கே.

அம்மா மார்க்கெட் - வேறு ஒரு கோணத்தில்.......

கறுப்பு அரிசி...... 

அங்கே மூன்று கட்டிடங்களில் இருக்கும் 400 கடைகளையும் பார்த்தவாறே சுற்றி வந்தோம்.  மதிய நேரம் ஆகி இருந்தது – மதிய உணவிற்கான மணி வயிற்றில் அடிக்க ஆரம்பித்திருந்தது. எங்கே சாப்பிடப் போகிறோம், என்ன சாப்பிடக் கிடைக்குமோ என்ற எண்ணத்திலேயே வெளியே வந்தோம்.  ஷரத்தின் எண்ணில் அழைக்க அது அடித்தவாறே இருந்தது! எங்களுக்கும் வயிற்றில் மணி அடித்தவாறே இருந்தது.  ஷரத் வந்தாரா, சாப்பிட எங்கே சென்றோம், என்ன சாப்பிட்டோம் என்பதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.....
  
மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


ஞாயிறு, 29 மே, 2016

சுகமான சுமைகள்! - படமும் கவிதையும்

[படம்-2 கவிதை-3]

படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் புகைப்படத்திற்கு வந்த மூன்றாம் கவிதையோடு உங்களை இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதையை எழுதி அனுப்பியவர் தில்லி நண்பர் பத்மநாபன் அவர்கள்.  படம் பற்றிய குறிப்பும் கவிதையும் இதோ....

புகைப்படம்-2:


எடுக்கப்பட்ட இடம்:  சென்னை ECR சாலையில் முட்டுக்காடு அருகே இருக்கும் தக்‌ஷிணசித்ரா. கிராமங்களிலேயே மாட்டு வண்டிகள் இல்லாத ஒரு நிலை இன்று. அங்கே சுற்றுலா வரும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பினால் காசு கொடுத்து மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளலாம்.  அப்படி சில பள்ளிச் சிறுவர்கள் மாட்டு வண்டி பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.  நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதித் தந்த கவிதை இதோ.....

கவிதை-3:

சுகமான சுமைகள்!

பூந்தளிர்கள் சுமந்து செல்ல பெருமையுடன் நிற்கின்றேன்!
பூமியில் பிறந்ததற்கே பேருவகை கொள்கின்றேன்!

பூமரங்கள் தான் சுமக்க பூமகள்தான் வருந்துவரா!
பூமகளைத் தான் சுமக்க பெருமான்தான் வருந்துவரா!

தாமரையைத் தான் சுமக்க தண்ணீரும் வருந்திடுமா!
தண்ணீரைத் தான் சுமக்க கார்மேகம் வருந்திடுமா!

நன்னீரைத் தான் சுமக்க நெடும்புனல்தான் வருந்திடுமா!
நெடும்புனலைத் தான் சுமக்க நீள்மருதம் வருந்திடுமா!

நறுமலர்கள் சுமந்து நிற்க தருவினங்கள் வருந்திடுமா!
தருவினத்தை சுமந்து நிற்க முல்லைவனம் வருந்திடுமா!

கண்ணிமையைத் தான் சுமக்க நயனங்கள் வருந்திடுமா!
நயனங்கள் தான் சுமக்க மதிவதனம் வருந்திடுமா!

கருங்கூந்தல் தான் சுமக்க கன்னிகைக்கு வருத்தமுண்டா!
கன்னிகையைத் தான் சுமக்க காதலர்க்கு வருத்தமுண்டா!

தென்றலைச் சுமந்துதர பூமரங்கள் வருந்திடுமா!
பூமரத்தை சுமந்து நிற்க பூமகளா வருந்திடுவாள்!

கார்முகிலைச் சுமந்து நிற்க கருமலைக்கும் வருத்தமில்லை!
கருமலையை சுமந்து நிற்க கண்ணனுக்கும் வருத்தமில்லை!

பூந்தளிர்கள் சுமந்து செல்ல பெருமையுடன் நிற்கின்றேன்!
பூமியில் பிறந்ததற்கே பேருவகை கொள்கின்றேன்!

        -   பத்மநாபன்.....

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் படமும் நண்பர் பத்மநாபன் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? இதே படத்திற்கேற்ற கவிதையை நீங்களும் எழுத நினைத்தால் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு ( venkatnagaraj@gmail.com ) அனுப்பி வைத்தால் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன்.  வேறு படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் உங்களது மின்னஞ்சலிலிருந்து எனக்கு தெரிவியுங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


சனி, 28 மே, 2016

எனக்கொன்றும் சிரமமில்லை - படமும் கவிதையும்

[படம்-2 கவிதை-2]

படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் புகைப்படத்திற்கு வந்த இரண்டாம் கவிதையோடு உங்களை இன்று சந்திப்பதில் மகிழ்ச்சி. கவிதையை எழுதி அனுப்பியவர் தில்லையகத்து க்ரோனிக்கிள்ஸ் வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி கீதா அவர்கள்.  படம் பற்றிய குறிப்பும் கவிதையும் இதோ....

புகைப்படம்-2:



எடுக்கப்பட்ட இடம்:  சென்னை ECR சாலையில் முட்டுக்காடு அருகே இருக்கும் தக்‌ஷிணசித்ரா. கிராமங்களிலேயே மாட்டு வண்டிகள் இல்லாத ஒரு நிலை இன்று. அங்கே சுற்றுலா வரும் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பினால் காசு கொடுத்து மாட்டு வண்டி பயணம் மேற்கொள்ளலாம்.  அப்படி சில பள்ளிச் சிறுவர்கள் மாட்டு வண்டி பயணம் சென்றபோது எடுத்த புகைப்படம் இது.  சகோதரி கீதா அவர்கள் எழுதித் தந்த கவிதை இதோ.....

கவிதை-2:

எனக்கொன்றும் சிரமமில்லை

ஐந்தறிவு செக்கு மாடு நான்
ஆறறிவுச் செல்வங்கள் நீங்கள்
செக்கு மாடாய் புத்தகச் சுமையைத்
தினமும் சுமந்திட
இன்று ஒரு நாளேனும்
சுமை இல்லாது மகிழ்வாய் இருந்திட
உங்களை இழுப்பதில்
எனக்கொன்றும் சிரமமில்லை
மகிழ்ச்சியுடன் இழுத்திடுவேன்!


செல்வங்களே ஒரு வேண்டுகோள்

கழனிகளில் வாழ்ந்த நாங்கள்
இன்று
கழனிகளை மனிதர்கள் தொலைத்ததால்
வீதிகளில் நாங்கள்
பாரமில்லைதான் நீங்கள், எனினும்
நாளைய செல்வங்களே
கழனிகளை மீட்டெடுத்திடுவீரெனில்
எனது அடுத்த தலைமுறையேனும்
கழனிகளில் வாழ்ந்திடுமே!

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் இரண்டாம் படமும் சகோதரி கீதா அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? இதே படத்திற்கேற்ற கவிதையை நீங்களும் எழுத நினைத்தால் எழுதி என் மின்னஞ்சல் முகவரிக்கு ( venkatnagaraj@gmail.com ) அனுப்பி வைத்தால் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன்.  வேறு படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் உங்களது மின்னஞ்சலிலிருந்து எனக்கு தெரிவியுங்கள். நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


வெள்ளி, 27 மே, 2016

ஃப்ரூட் சாலட் – 164 – [DH]தில்பாக்[G] – திருமண நாள் பரிசு – நான் எங்கே இருந்தேன்?

நல்லதே நினைப்போம்:

The Logical Indian தளத்தில் நேற்று படித்த ஒரு செய்தி:  சையது மன்சர் இமாம் என்பவர் குருகிராமத்திலிருந்து [பழைய குர்காவ்ன்] நோய்டா செல்லும்போது வழியில் ராஜீவ் சௌக் நிலையத்தில் மெட்ரோ மாற வேண்டும் – அதற்கு எந்த நடைமேடைக்குச் செல்ல வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வழிகாட்டி வரைபடத்திற்கு அருகே சென்றிருக்கிறார்.



அங்கே நின்று கொண்டிருந்த முதியவர் எங்கே செல்ல வேண்டும் என்பதைக் கேட்டு, எந்த நடைமேடைக்குச் செல்ல வேண்டும் என்பதைச் சொன்னாராம்.  நன்றி சொல்லி விடை பெற்ற பிறகு திரும்பிப் பார்த்தால் வழிகாட்டி வரைபடம் அருகே வரும் அனைத்து நபர்களுக்கும் வழி சொல்லிக் கொண்டிருக்க, அவரிடம் மீண்டும் சென்று வியப்புடன் எல்லோருக்கும் வழி சொல்லவே இங்கே நின்று கொண்டிருக்கிறீர்களா என வினவ, அந்த முதியவர் தன் கதையைச் சொல்லி இருக்கிறார்.

அவருடைய பெயர் [DH]தில்பாக்[G]. அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர். மூன்று வருடங்களுக்கு முன்னரே அவர் விரைவில் இறந்து விடக்கூடும் என நாள் குறிக்கப்பட்டவர். இறைவன் இது வரை எனக்கு வாழ்வு கொடுத்திருக்கிறார் – அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செய்வதற்காகத் தான் அந்த வாழ்வு என்று இப்படி தன்னால் முடிந்த உதவியைச் செய்து வருகிறார். தோளில் ஒரு பை – அதில் Biscuit, Chips, போன்ற குழந்தைகளுக்கான உணவுகள் இருக்க, அதை விற்பனை செய்கிறாரோ என சையது கேட்க, அவர் சிரித்த படி சொன்னது – “இல்லை, இங்கே துப்புரவு பணியாளர்கள் பணி முடிந்து வீடு திரும்புகையில் அவர்களுக்குக் கொடுப்பேன் – அவர்களின் குழந்தைகளுக்காக!என்று சிரித்தபடியே சொன்னாராம். 

இருக்கும் வரை நல்லது செய்வோம் – என்று வாழ்ந்து கொண்டிருக்கும் முதியவர் [DH]தில்பாக்[G] அவர்களுக்கு இந்த வார பூங்கொத்து....

பிரச்சனைகள்:

Problems are like Washing Machines. They twist us, spin us and knock us around. But in the end we come out cleaner, brighter and better than before.

தப்பை ஒத்துக் கொள்வோம்:

When you’ve done something wrong, admit it and be sorry.  No one in history has ever choked to death from swallowing their pride.

படமும் கவிதையும் – படம்-1, கவிதை-4

படமும் கவிதையும் தலைப்பில் பதிவுகள் வந்து கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியும்.  அந்த வரிசையில் முதல் படத்திற்கு வந்த இன்னுமொரு கவிதை இங்கே....  கவிதை எழுதியவர் முகிலின் பக்கங்கள் வலைப்பூவில் எழுதும் தமிழ்முகில் பிரகாசம் அவர்கள்.  அவர் எழுதிய கவிதை இதோ...


சோர்விலா உள்ளங்கள்

முதுகுச் சுமையேற்றி
முன்னோக்கி நகர்கிறேன் ...
சுணங்கி நிற்க நேரமில்லை
சுருண்டு படுக்கும் எண்ணமுமில்லை !

தயங்கி நிற்கும் பொழுதுகளில்
தயவு கிடைக்கும் சமயங்களில் !
ஆத்திரம் அதுவும் அதிகமானால்
உடலும் துவண்டிடும்  சாட்டையடியில் !

சுமைகளை வகைப்படுத்துவதில்லை -
முதுகிலேறும் அனைத்தும் - சுமையென
ஆகிப் போக - சுமைக்குப் பின்னே
சுகம் கிட்டுமென நாளெலாம் நகர்த்துகிறேன் !

நாளை வந்து எனை பார்த்தீர்களானால்
சுகமாய் இருப்பேனோ இல்லையோ
சுமையேற்றிச் செல்வேனொழிய
ஒருவருக்கும் சுமையாய் சுனங்கிட மாட்டேன் !

உடலது பாரம் சுமந்தாலும் -
உள்ளமதில் பாரமேற அனுமதித்ததில்லை !
அதனால் ஒவ்வொரு நாளும் புலர்கிறது
புது நாளாய் - புத்துணர்வோடு !

     பி. தமிழ்முகில்

திருமண நாள்:

இந்த வாரம் – எனது திருமண நாள் [24 May]. அதற்கு என் மகள் வரைந்து தந்த நினைவுப் பரிசு.....


ராஜா காது கழுதை காது..... 

திருவரங்கம் செல்லும் 1 நம்பர் பேருந்து – அப்பாவும் மகனும் [நான்கு அல்லது ஐந்து வயதிருக்கலாம்] பேசியபடியே வந்து கொண்டிருந்தார்கள்.  மகனின் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியபடியே வந்து கொண்டிருந்தார் அந்த அப்பா....  திருவரங்கத்தின் பங்கஜம் நர்சிங் ஹோம் அருகே வந்ததும் அப்பா சொன்னார் – “நீ இங்கே தான் பிறந்தடா செல்லம்.....”  அதற்கு மகனின் கேள்வி – “எங்கேயிருந்து பிறந்தேன், அதுக்கு முன்னாடி எங்கே இருந்தேன்என வரிசையாக நான்கைந்து கேள்விகள்.....  அப்பாவிடம் பதில் இல்லை.  பேருந்து அதற்குள் திரும்ப, “ஸ்டாண்ட் வந்துடுச்சு. இறங்கி பாட்டி வீட்டுக்குப் போகலாம்! வா  

படித்ததில் பிடித்தது:

மன்னிக்கும் குணம் என்னிக்கும் நலம்!

ஒரு ஊரில் ஒரு கழுதை இருந்தது..அந்த கழுதையைப் பார்த்தால் எல்லாருக்கும் இளப்பம்.ஒரு நாள் அந்த கழுதை ஒரு பள்ளத்தில் விழுந்து விட்டது..அதைப் பார்த்த சிலர் பள்ளத்தில் விழுந்த கழுதை மேல் குப்பைகளைக் கொட்டினர்..சிலர் கற்களை வீசினார்கள்..அந்த கழுதை தன் மேல விழுந்த குப்பைகளையும் கற்களையும் உதறிக் கொண்டு அவற்றின் மீதே ஏறி பள்ளத்தில் இருந்து வெளியே வந்தது..

இதை எதுக்கு சொல்றேன்னா பொறாமைக் காரர்களின் நம்மைப் பற்றிய மட்டமான பேச்சுக்களையும் வசவுகளையும் இப்படித்தான் உதறித் தள்ளி அந்த வார்த்தைகளாலே நம்மை வலிமையுடவராக்கிக் கொண்டு உயரக் கற்றுக் கொள்ள வேண்டும்..

அதற்கு மன்னிக்கும் குணம் வேண்டும்..

அடுத்தவர் நமக்கு இழைத்த தீங்குகளை நாம் நினைத்துக் கொண்டே இருந்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் கடந்த காலத்தின் கைதியாகவே இருப்போம் ..

#கொசுறு அடுத்தவர்களை மன்னிப்பது என்பது நாம் அவர்களுக்கு தரும் பரிசோ சலுகையோ அல்ல ..அது நமக்கு நாமே தரும் பரிசு. நம்மை அந்த இறுக்கமான மனநிலையில் இருந்து விடுவித்துக் கொள்ளும் வித்தை – மன்னிப்பு.

செல்லி ஸ்ரீனிவாசன்

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து.....

வியாழன், 26 மே, 2016

தேவன் கோவில் மணியோசை.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 12

மணிப்பூர் அருங்காட்சியகத்திலிருந்து வெளியே வந்து கர்நாடகத்தினைச் சேர்ந்த பாதுகாவலரிடம் பேசிக் கொண்டிருந்த போதே ஓட்டுனர் ஷரத்-ஐ அலைபேசியில் அழைத்தோம். அவர் வண்டியோடு வர அடுத்தது எங்கே செல்லப் போகிறோம் எனக் கேட்க அவர் சொன்ன பதில் கொஞ்சம் பயம் அளித்தது – [ch]சரஸ் என்றார்.  ஹிந்தி மொழியில் [ch]சரஸ் என்றால் கஞ்சாவாச்சே, நம்மை கஞ்சா தோட்டத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறாரோ என்று மனதிற்குள் ஒரு அபாய மணி அடித்தது. புரியாத மாதிரி மீண்டும் அவரிடம் வினவ, அவர் மீண்டும் [ch]சரஸ் என்றே சொன்னார்.

St. Joseph's Cathedral, Manipur

சரி கேள்வியை மாற்றிக் கேட்போம் என “அங்கே என்ன இருக்கிறது?என்று கேட்க, என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அது கிறிஸ்துவர்களின் ஆலயம் என்றார்!  அட செம பல்பு வாங்கிவிட்டேனே என நினைத்துக் கொண்டு, ஓ சர்ச்-ஆ?என்று கேட்டு விட்டு, அங்கே விடுங்கள் வண்டியை எனச் சொல்லி விட்டேன்.  மணிப்பூர் நகரின் மையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இடம் மந்த்ரிபுக்ரி.  இந்த இடத்தில் அமைந்துள்ள அருமையான கிறிஸ்துவ தேவாலயம் தான் St. Joseph’s Cathedral.

ரோமன் கத்தோலிக் பிரிவினைச் சேர்ந்த கிறிஸ்துவர்களின் தேவாலயம் இது.  வாயிலில் இருந்த பதாகை வழிபாட்டு நேரமாக காலை 07.30 மணி என அறிவித்தது. நாங்கள் சென்றது மதியம் உச்சி வெய்யில் அடிக்கிற நேரம்.  பிரார்த்தனை இல்லாவிட்டாலும் உள்ளே சென்று அமைதியாக சில நிமிடங்கள் அமர நினைத்து, யாரைக் கேட்பது என பாதுகாப்பு அறையில் தேடினோம். ஒருவருமே இல்லை.  ஓட்டுனர் ஷரத்-ஐ கேட்க, எங்காவது போயிருப்பார், நீங்கள் வெளியிலிருந்து பார்த்து வாருங்கள் எனச் சொல்லி விட்டார். 

நண்பர்களுடன் தேவாலயத்திற்கு முன்...

ஒரு அழகிய தோட்டத்தில் Anglo-Manipuri கட்டிடக் கலையில் கட்டப்பட்டிருக்கிறது St. Joseph’s Cathedral.  பின் புலத்தில் மலைகள் தெரிய  மிக அருமையாக வடிவமைக்கப்பட்ட சர்ச் இது.  முன்புறத்தில் ஒரு பெரிய ஏசு கிறிஸ்துவின் சிலை இரு கரங்களையும் விரித்து மக்களை அழைக்கிறார்.  நானும் நண்பர்களும் அழைப்பினை ஏற்று உள்ளே நுழைந்தோம். சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு சர்ச் வாயில் வரை சென்று பூட்டியிருந்த கதவுகளுக்கு அருகே நின்று சில நிமிடங்கள் அனைவரது நலனுக்காகவும் பிரார்த்தனை செய்தோம்.

மணிப்பூர் மாநிலத்தில் மற்ற வடகிழக்கு மாநிலங்கள் போலவே கிறிஸ்துவமும் உண்டு.  மற்ற மாநிலங்களில் கிறிஸ்துவமே அதிகம் என்றாலும், வைஷ்ணவ மாநிலமான மணிப்பூரிலும் கிறிஸ்துவம் இருக்கிறது. அவர்களுக்கான பல வழிபாட்டுத் தலங்களும் இருக்கின்றன.  இம்ஃபால் நகரின் இந்த St. Joseph’s Cathedral 1980-களில் அமைக்கப்பட்டது என்று தெரிகிறது.  சிறப்பான கட்டிட அமைப்பாக இருந்ததைப் பார்த்து விட்டு அங்கிருந்து புறப்பட்டோம் – சர்ச் திறந்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் உள்ளே சென்று அமர்ந்திருந்து, மேலும் சில புகைப்படங்களை எடுத்திருக்கலாம். 

அங்கிருந்து நாங்கள் அடுத்ததாய் சென்ற இடம், அது என்ன இடம் என அடுத்த பதிவில் பார்க்கலாமா?

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.