தில்லியை நோக்கி
தமிழ்நாடு விரைவு வண்டி விரைந்து செல்லாமல் பனிமூட்டம் காரணமாக சாதாரண வேகத்தில்
சென்று கொண்டிருந்தது. நடுநிசியை நெருங்கிய நேரத்தில் எங்களது பெட்டியில் ஒரே
சத்தமும் குழப்பமும் ஒன்றாய்க் கலந்து செவியை எட்ட, கம்பளிக்குள் புகுந்திருந்த
நான் தலையை மட்டும் வெளியே நீட்டி பார்க்க, அடுத்த பெட்டியான Pantry
Car-ன் மூடியிருந்த இரும்புக் கதவுகளை தட்டியும், உதைத்தும் திறக்கச் சொல்லி
கதறிக்கொண்டிருந்தார் ஒரு பஞ்சாபி மூதாட்டி.
ஏற்கனவே பதிவு
செய்யாத பல பயணிகள் உட்கார்ந்து கொண்டும், தரையில் கிடைத்த இடத்தில் படுத்துக்
கொண்டும் 72 பேர் பயணிக்க வேண்டிய இடத்தில் 100 பேருக்கு மேல் பயணம் செய்து
கொண்டிருக்க, மூதாட்டியின் அழுகுரலால் அனைவரும் எழுந்து கதவுகளைத் தட்டித் திறக்க
முயற்சித்தனர். நாள் முழுதும் உணவுகளை இங்கும் அங்கும் கொண்டு சென்ற களைப்பில்
ஐ.ஆர்.சி.டி.சி. சிப்பந்திகள் நல்ல உறக்கத்தில் – உறக்கத்தின் காரணம் களைப்பு
மட்டும் தானா – அல்லது களைப்பை மறக்க எடுத்துக்கொண்ட டாஸ்மாக் சரக்கா? அவர்களுக்கே
வெளிச்சம்.
மூதாட்டியிடம் ”என்னவாயிற்று
எதற்கு அழுகை?” எனக்
கேட்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவருடன் வந்திருந்த சக மூதாட்டி ஒருவருக்கு
மூச்சு விடமுடியாது நெஞ்சில் ஏதோ ஒரு அழுத்தம். குளிர் வேறு. தட்டித் தடுமாறி
இவரது படுக்கை அருகே வந்து தனது உடல் நிலை சரியில்லை எனக் கூறி கீழே விழுந்திருக்க,
மருத்துவர் யாரேனும் இருக்கிறார்களா எனத் தெரிந்து கொள்ள, மருந்து கிடைக்குமா எனக்
கேட்க, பயணச்சீட்டு பரிசோதகரைத் தேடி வந்திருக்கிறார் இந்த மூதாட்டி.
பயணப்
பரிசோதகருக்கு இரண்டு பெட்டிகளுக்கு ஒரு இருக்கை இருந்தாலும், அதைக் கிடைத்த
காசுக்கு விற்றுவிட்டு, குளிரூட்டப்பட்ட பெட்டியில் சென்று அமர்ந்து
கொண்டுவிட்டார் போலும்! Pantry Car-ஐ தாண்டினால் தானே
குளிரூட்டப்பட்ட பெட்டிக்குச் செல்ல. எங்கள் பெட்டியிலிருந்து முதலாம் ஆண்டு
மருத்துவம் படிக்கும் பெண் தன்னிடம் இருந்த ஒரு மாத்திரையைக் கொடுத்து, அதை அந்த
மூதாட்டிக்குக் கொடுக்கும்படிச் சொல்லிவிட்டு திரும்பவும் தூக்கத்தினைத்
தொடர்ந்தார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை – இப்போது தானே மருத்துவம் படிக்க
ஆரம்பித்து இருக்கிறார்.
மூதாட்டி, ஒரு
மூடி பிராந்தி இருந்தால் கொடுங்கள், குளிருக்குக் கொடுத்தால் கொஞ்சம் இதமாய் இருக்கும்
எனக் கேட்டுக் கொண்டிருந்தார். எப்போதும் ரயில் பெட்டியில் யாரிடமாவது நிச்சயம்
இருக்கும் – ஆனால் இன்று யாரிடமும் இல்லை – அல்லது ’அடிக்கிற
குளிருக்கு, எனக்கே கொஞ்சம் தான் இருக்கு” என்ற நினைப்பில் கொடுக்கத் தயாராய்
இல்லை! மூதாட்டியுடன் சென்று உடல் நிலை சரியில்லாதவருக்கு சக பயணிகளால் ஆன
முதலுதவிகள் செய்தோம். ஆனாலும் ஒரு பயனும் இல்லாது போயிற்று. மயங்கி விழுந்தவர்
எழுந்திருக்கவே இல்லை.
இத்தனை
விஷயங்கள் நடந்தும் ரயில்வே போலீசாரோ, பயணச் சீட்டு பரிசோதகர்களோ, கிட்டத்தட்ட ஒரு
மணி நேரத்திற்கு அந்தப் பக்கமோ, பெட்டிக்கோ வரவே இல்லை. அதற்குள் வண்டி ஜான்சி
ரயில் நிலையத்தினை அடைந்திருக்க, அங்கே இருந்த ரயில்வே போலீசிடம் சொல்லி, மருத்துவரை
அழைத்து அம்மூதாட்டி இறந்ததை உறுதி
செய்து, மூதாட்டியின் உடலையும், மூதாட்டியுடன் வந்திருந்தவர்களையும் இறக்கி
விட்டார்கள்.
ஒவ்வொரு ரயில்
பயணத்தின் போதும் இது போல அனுபவங்கள். இந்த வண்டியில் ஏறுமுன் திருச்சியிலிருந்து
சென்னை வந்த பல்லவனிலும் ஒரு பயணி இறந்தார் – சிவியர் ஹார்ட் அட்டாக். ரயில்வே நிர்வாகம் – இத்தனை பெரிய ஒரு
நிர்வாகம் – பயணிகளின் மிகக் குறைந்த தேவைகளைக் கூட பூர்த்தி செய்வதில்லை என
நினைக்கும்போது மனது அப்படியே கொந்தளிக்கிறது.
சமீபத்தில்
பயணச்சீட்டு விலைகளை அதிகரித்த – வரும் பட்ஜெட்டிலும் அதிகரிக்க நினைக்கும்
ரயில்வே அமைச்சகம், பயணச் சீட்டின் விலையை அதிகரிக்கும் அதே சமயத்தில் பயணிகளின்
ஆதாரத் தேவைகளையும் மனதில் வைத்துக் கொண்டால் தான் நல்லது. இப்படியே விலையை மட்டும் ஏற்றிக்கொண்டு,
பயணிகளுக்கு எந்த விதமான சௌகரியங்களும் தராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்
என்று புரியவில்லை.
பெட்டிகளில்
நம்முடனே பயணச்சீட்டு இல்லாது பயணிக்கும் கரப்பு, எலி, பூச்சிகள், முன்பதிவு
செய்யப்பட்ட பெட்டிகளில் ரைட் ராயலாக ஓபன் டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணிக்கும்
பிரயாணிகள், ரயிலில் தரும் வாயில் வைக்கமுடியாத உணவு, தினம் தினம் உடமைகளை இழந்து
தவிக்கும் பிரயாணிகள், சுகாதாரமில்லாத கழிப்பறைகள், தேவைக்கதிகமான பொருட்களை
எடுத்துச் செல்லும் பிரயாணிகள் என ரயில் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
"ரயிலில் ஒரு
மூதாட்டிக்கு உயிர் பிரிந்ததனால் என்ன குறைந்தது இந்திய திருநாட்டில்? நம்
நாட்டின் மக்கள் தொகை தான் வளர்ந்து கொண்டே இருக்கிறதே!" என்று நினைக்கிறதோ ரயில்வே துறை?
வேறொரு
பகிர்வில் மீண்டும் சந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.