தொகுப்புகள்

புதன், 30 ஜனவரி, 2013

பிரிந்த உயிர் – அக்கறையில்லா ரயில்வே



தில்லியை நோக்கி தமிழ்நாடு விரைவு வண்டி விரைந்து செல்லாமல் பனிமூட்டம் காரணமாக சாதாரண வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நடுநிசியை நெருங்கிய நேரத்தில் எங்களது பெட்டியில் ஒரே சத்தமும் குழப்பமும் ஒன்றாய்க் கலந்து செவியை எட்ட, கம்பளிக்குள் புகுந்திருந்த நான் தலையை மட்டும் வெளியே நீட்டி பார்க்க, அடுத்த பெட்டியான Pantry Car-ன் மூடியிருந்த இரும்புக் கதவுகளை தட்டியும், உதைத்தும் திறக்கச் சொல்லி கதறிக்கொண்டிருந்தார் ஒரு பஞ்சாபி மூதாட்டி.

ஏற்கனவே பதிவு செய்யாத பல பயணிகள் உட்கார்ந்து கொண்டும், தரையில் கிடைத்த இடத்தில் படுத்துக் கொண்டும் 72 பேர் பயணிக்க வேண்டிய இடத்தில் 100 பேருக்கு மேல் பயணம் செய்து கொண்டிருக்க, மூதாட்டியின் அழுகுரலால் அனைவரும் எழுந்து கதவுகளைத் தட்டித் திறக்க முயற்சித்தனர். நாள் முழுதும் உணவுகளை இங்கும் அங்கும் கொண்டு சென்ற களைப்பில் ஐ.ஆர்.சி.டி.சி. சிப்பந்திகள் நல்ல உறக்கத்தில் – உறக்கத்தின் காரணம் களைப்பு மட்டும் தானா – அல்லது களைப்பை மறக்க எடுத்துக்கொண்ட டாஸ்மாக் சரக்கா? அவர்களுக்கே வெளிச்சம்.

மூதாட்டியிடம் என்னவாயிற்று எதற்கு அழுகை?எனக் கேட்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவருடன் வந்திருந்த சக மூதாட்டி ஒருவருக்கு மூச்சு விடமுடியாது நெஞ்சில் ஏதோ ஒரு அழுத்தம். குளிர் வேறு. தட்டித் தடுமாறி இவரது படுக்கை அருகே வந்து தனது உடல் நிலை சரியில்லை எனக் கூறி கீழே விழுந்திருக்க, மருத்துவர் யாரேனும் இருக்கிறார்களா எனத் தெரிந்து கொள்ள, மருந்து கிடைக்குமா எனக் கேட்க, பயணச்சீட்டு பரிசோதகரைத் தேடி வந்திருக்கிறார் இந்த மூதாட்டி.

பயணப் பரிசோதகருக்கு இரண்டு பெட்டிகளுக்கு ஒரு இருக்கை இருந்தாலும், அதைக் கிடைத்த காசுக்கு விற்றுவிட்டு, குளிரூட்டப்பட்ட பெட்டியில் சென்று அமர்ந்து கொண்டுவிட்டார் போலும்! Pantry Car-ஐ தாண்டினால் தானே குளிரூட்டப்பட்ட பெட்டிக்குச் செல்ல. எங்கள் பெட்டியிலிருந்து முதலாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் பெண் தன்னிடம் இருந்த ஒரு மாத்திரையைக் கொடுத்து, அதை அந்த மூதாட்டிக்குக் கொடுக்கும்படிச் சொல்லிவிட்டு திரும்பவும் தூக்கத்தினைத் தொடர்ந்தார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை – இப்போது தானே மருத்துவம் படிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

மூதாட்டி, ஒரு மூடி பிராந்தி இருந்தால் கொடுங்கள், குளிருக்குக் கொடுத்தால் கொஞ்சம் இதமாய் இருக்கும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். எப்போதும் ரயில் பெட்டியில் யாரிடமாவது நிச்சயம் இருக்கும் – ஆனால் இன்று யாரிடமும் இல்லை – அல்லது அடிக்கிற குளிருக்கு, எனக்கே கொஞ்சம் தான் இருக்குஎன்ற நினைப்பில் கொடுக்கத் தயாராய் இல்லை! மூதாட்டியுடன் சென்று உடல் நிலை சரியில்லாதவருக்கு சக பயணிகளால் ஆன முதலுதவிகள் செய்தோம். ஆனாலும் ஒரு பயனும் இல்லாது போயிற்று. மயங்கி விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை.

இத்தனை விஷயங்கள் நடந்தும் ரயில்வே போலீசாரோ, பயணச் சீட்டு பரிசோதகர்களோ, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு அந்தப் பக்கமோ, பெட்டிக்கோ வரவே இல்லை. அதற்குள் வண்டி ஜான்சி ரயில் நிலையத்தினை அடைந்திருக்க, அங்கே இருந்த ரயில்வே போலீசிடம் சொல்லி, மருத்துவரை அழைத்து அம்மூதாட்டி இறந்ததை உறுதி செய்து, மூதாட்டியின் உடலையும், மூதாட்டியுடன் வந்திருந்தவர்களையும் இறக்கி விட்டார்கள்.

ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் இது போல அனுபவங்கள். இந்த வண்டியில் ஏறுமுன் திருச்சியிலிருந்து சென்னை வந்த பல்லவனிலும் ஒரு பயணி இறந்தார் – சிவியர் ஹார்ட் அட்டாக்.  ரயில்வே நிர்வாகம் – இத்தனை பெரிய ஒரு நிர்வாகம் – பயணிகளின் மிகக் குறைந்த தேவைகளைக் கூட பூர்த்தி செய்வதில்லை என நினைக்கும்போது மனது அப்படியே கொந்தளிக்கிறது.

சமீபத்தில் பயணச்சீட்டு விலைகளை அதிகரித்த – வரும் பட்ஜெட்டிலும் அதிகரிக்க நினைக்கும் ரயில்வே அமைச்சகம், பயணச் சீட்டின் விலையை அதிகரிக்கும் அதே சமயத்தில் பயணிகளின் ஆதாரத் தேவைகளையும் மனதில் வைத்துக் கொண்டால் தான் நல்லது.  இப்படியே விலையை மட்டும் ஏற்றிக்கொண்டு, பயணிகளுக்கு எந்த விதமான சௌகரியங்களும் தராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று புரியவில்லை.

பெட்டிகளில் நம்முடனே பயணச்சீட்டு இல்லாது பயணிக்கும் கரப்பு, எலி, பூச்சிகள், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ரைட் ராயலாக ஓபன் டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணிக்கும் பிரயாணிகள், ரயிலில் தரும் வாயில் வைக்கமுடியாத உணவு, தினம் தினம் உடமைகளை இழந்து தவிக்கும் பிரயாணிகள், சுகாதாரமில்லாத கழிப்பறைகள், தேவைக்கதிகமான பொருட்களை எடுத்துச் செல்லும் பிரயாணிகள் என ரயில் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

"ரயிலில் ஒரு மூதாட்டிக்கு உயிர் பிரிந்ததனால் என்ன குறைந்தது இந்திய திருநாட்டில்? நம் நாட்டின் மக்கள் தொகை தான் வளர்ந்து கொண்டே இருக்கிறதே!" என்று நினைக்கிறோ ரில்வுறை?

வேறொரு பகிர்வில் மீண்டும் சந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 28 ஜனவரி, 2013

ரஜினி-கமல் பார்த்த “கண்ணா லட்டு தின்ன ஆசையா?”





பல முறை பார்த்த கே. பாக்யராஜ் அவர்களின் இன்று போய் நாளை வாபடத்தினை இக்காலத்திற்கு ஏற்றாற் போல ரீ-மிக்ஸ் செய்து எடுத்த படம் தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என்று வலையில் பல பக்கங்களில் விமர்சனம் வந்தாலும்ஒரு முறை பார்க்கலாம் என விமர்சனம் படித்ததாலும், தில்லியில் வெளியிட்டதாலும் இந்தப் படத்தினை சென்ற புதன் கிழமையன்று பார்த்தேன்.

'கல்யாணம் டு காரியம்’ வரை காண்ட்ராக்ட் எடுத்துச் செய்யும் 'கேக்கேசந்தானம், பவர் ஸ்ரீனிவாசன் மற்றும் வேலையில்லாது வெட்டியாகச் சுற்றிக் கொண்டு இருக்கும் சிவா [சேது எனும் புதுமுகம்] ஆகிய மூவரும் இணை பிரியா நண்பர்கள். தண்ணி அடிப்பதிலிருந்து சைட் அடிப்பது வரை எல்லாவற்றிலும் ஒற்றுமையாக இருக்கும் இந்த நண்பர்களைப் பிரித்துப் போடுகிறார் எதிர்வீட்டில் குடியேறும் அழகியான விசாகா. 

எதிர் வீட்டு ஃபிகரான விசாகா யாருக்கு என போட்டி வந்து மூன்று பேரும் அவரைக் காதலிக்க பிரம்மப் பிரயத்தனம் செய்கிறார்கள்.  சேது எல்லா வீட்டு வேலைகள் செய்ய, சந்தானம் விசாகாவின் சித்தப்பாவிடம் பாட்டு கற்றுக் கொள்கிறார்.  பவர் ஸ்டார் விசாகாவின் அப்பாவிடம் நடனம் கற்றுக் கொள்கிறார்.  சந்தானம் பல இடங்களில் கொடுக்கும் பஞ்ச்கள் சிரிக்க வைக்கின்றன. சில முகம் சுளிக்க வைக்கின்றன. எதிர் வீட்டு மாமியாக வந்து விசாகாவிற்கு ஐடியாக்கள் தரும் தேவதர்ஷினி கேரக்டரை தவிர்த்திருக்கலாமென தோன்றியது. பவர் ஸ்டாரை பாவம் போட்டு அடிஅடியென அடித்துத் துவைத்திருக்கிறார் வசனங்களால் அவரும் பாவம் எத்தனை அடி வாங்கினாலும் சிரிப்பது போலவே முகத்தினை வைத்துக் கொண்டு காமெடி பண்ணுகிறார்.

பாக்யராஜின் படத்தினைப் பார்த்து ரசித்ததாலோ என்னமோ இப்படத்தின் சில காட்சிகளை ரசிக்க முடியவில்லை. ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகு தாத்தா” போன்ற காலத்தால் அழிக்க முடியாத காட்சிகள் இப்படத்தில் நிச்சயம் இல்லை. அப்போதைய ராதிகாவை விட இப்படத்தின் விசாகா பரவாயில்லை!

பாடல்களும் மனதில் ஒட்டவே இல்லை! இ.போ.வா வில் மலேசியா வாசுதேவன் பாடிய மதன மோக ரூப சுந்தரி” இப்போதும் நினைவிலிருக்கிறது. ஆனால் இப்படப் பாடல்கள் நினைவில் நிற்குமா என்பது சந்தேகம். படத்தில் சிறப்புத் தோற்றத்தில் சிம்புவும் வந்து காதல் பற்றிய அட்வைஸ் சொல்லிச் செல்கிறார்!

ஒரு முறை பார்க்கலாம் எனச் சொன்னது போல ஒரு முறை பார்க்கலாம் திரையரங்கில் நல்ல கூட்டம் இருந்து ஆங்காங்கே வரும் கமெண்டுகள் கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கலாம்!

அது சரி பதிவின் தலைப்பில் ரஜினி கமல் பார்த்த” அப்படின்னு ஏதோ போட்டு இருந்ததே? எனச் சந்தேகமாகக் கேட்பவர்களுக்கு அது ஒரு பெரிய கதைங்க!  

தினம் தினம் நாளிதழில் தில்லியின் PVR CINEMA’S ல் கண்ணா லட்டு தின்ன ஆசையா” போட்டிருப்பதைப் பார்த்து விட்டு, போகலாம் என இணையத்தில் முன்பதிவு செய்ய புதன் காலை பார்த்தேன். இருபது பேர் மட்டுமே பதிவு செய்திருக்க, சரி நேராகப் போனாலே கிடைக்குமென [நேரில் 100 ரூபாய், இணையத்தின் மூலம் 115 + சேவை வரி!] மாலை 07.15 காட்சிக்குச் செல்ல முடிவு செய்தேன். தனியாகப் போக வேண்டாமென நண்பர் பத்மநாபனையும் அழைத்துக் கொண்டேன்.

அலுவலகத்திலிருந்து நண்பரது வீட்டுக்குச் சென்று பைக்கை விட்டுவிட்டு, மெட்ரோ மூலம் மாலை 06.35 மணிக்கே தியேட்டர் சென்று நுழைவுச் சீட்டுகள் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். 07.10 க்குதான் உள்ளே விடுவோமெனச் சொல்ல, வெளியே Veg Burger Combo [190/-], Chicken Burger Combo [200/-], Large Nacho Combo [240/-], Chicken Hot Dog Combo [200/-], Big Tub Combo [240/-]   என எழுதி வைத்திருந்ததை படித்து விட்டு [பின்ன இதை விலை கொடுத்து வாங்கவா முடியும்?] படம் பார்க்க காத்திருந்த சிலரை வேடிக்கைப் பார்த்து விட்டு நுழைவு வாயில் திறந்தவுடன் உள்ளே போனோம்.

உள்ளே நுழைந்த பின் திரும்பினால் எங்களுக்குப் பின்னால் கதவு மூடிக்கொண்டது. காத்திருந்த மற்றவர்கள் வேறு படத்திற்கு வந்தவர்கள் போல! 07.10 தானே ஆகுது, முன்பதிவு செய்தவர்களெல்லாம் மெதுவா வருவாங்களா இருக்குமென நினைத்து எங்கள் இருக்கைகளில் அமர்ந்தோம்.

படமும் போட்டாச்சு எங்களைத் தவிர ஒரு ஈ காக்கா வரல! மொத்தம் 187 இருக்கைகள் இருக்கிற திரையரங்கில் நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்! கொஞ்சம் பயமா கூட இருந்தது! நல்ல வேளை காமெடி மூவியா போச்சு இதே ஏதாவது டெரர் மூவியா இருந்தா என்னாவது! ஒரு 70 எம்.எம். திரையரங்கில் இரண்டு பேர் மட்டுமே பார்த்தோம் இது நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவம் தான்!உங்களத் தவிர யாரும் வரல, அதனால காசு திரும்பி தரோம்னு சொல்லியிருந்தா திரும்பி வந்துருக்கலாம். ஆனா படம் பார்த்துட்டுதான் போகணும்னு அடம் பிடிச்சாங்க! 

இதுல இடைவேளையின் போது டை கட்டிய இளைஞர் ஒருவர் வந்து “Sir, Would you like to have Coffee/Tea or anything else?” என்று வேறு கேட்டார்! அவரிடம் இணையத்தில் நிறைய முன்பதிவு செய்யப்பட்டதாகக் காண்பித்ததே என்றால் மக்களைக் கவர நாங்களே இப்படிச் செய்து வைப்போம் என்றார்.  சாப்பிட ஒண்ணும் வேண்டாமெனச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ப்ரொஜெக்‌ஷன் அறையிலிருந்து ஹிந்தியில் திட்டியபடியே இவனுங்க என்னத்த வாங்கப் போறானுங்க, அதனால் படத்தைப் போட்டுடலாம்னு சொல்லி படத்தைப் போட்டார். ஒரு காட்சிக்கு சுமார் 30,000 ரூபாயாவது [18700 நுழைவுச்சீட்டு விலை மற்றும் பொருட்கள் விற்பதில் மீதமும்] வந்திருக்க வேண்டியது ஆனால் வெறும் 200 மட்டுமே வந்ததில் கோபமோ!

ரஜினி கமல் ஆகியோருக்கு சந்தானம் தனிக் காட்சி போட்டுக் காண்பித்தாரோ இல்லையோ எங்களிருவருக்கும் அதாங்க எனக்கும் பத்மநாபன் அண்ணாச்சிக்கும் தனிக்காட்சி காண்பித்தார்கள்! அதான் ஒரு கிக்குக்காக இந்த டைட்டில்!

சரி நண்பர்களே.....  மீண்டும் வேறு ஒரு சுவையான அனுபவத்தோடு அடுத்த பகிர்வில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

ஒரே கோட்டில் வரைந்த ஓவியம்



சாதாரணமாக ஓவியம் வரைவதென்பதே கடினமான விஷயம். இதில் ஒரே கோடில் ஓவியம் வரைய வேண்டுமென்றால் – யோசிக்கும்போதே அதன் கடினம் மனதிற்குப் புரிகிறதல்லவா.  சமீபத்தில் அப்படி ஒரே கோட்டில் வரைந்த ஒரு ஓவியத்தைப் பார்த்தேன்.

ஒரு புள்ளியில் ஆரம்பித்து அப்படியே பலப் பல நுணுக்கமான வேலைப்பாடுகளோடு கூடிய குழலூதும் வேணுகோபாலனின் ஓவியத்தினை பசுவோடு வரைந்திருக்கிறார் இந்த ஓவியர். இத்தனைச் சிறப்பு வாய்ந்த ஓவியத்தினை வரைந்தவர் யார் என்று தானே கேட்டீங்க? சொல்றேன்.



சுதேச மித்திரன் பத்திரிக்கையின் 1957-ஆவது வருட தீபாவளி மலரில் வெளிவந்த இந்த ஓவியத்தினை வரைந்தது திரு ரகமி. 

என்ன நண்பர்களே....  ஓவியத்தினை ரசித்தீர்களா? மீண்டும் வேறொரு புகைப்படத்தோடு அடுத்த ஞாயிறன்று உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

ஃப்ரூட் சாலட் – 30: சி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்ற பெண் – ரத்த தானம்


இந்த வார செய்தி:

 குடும்பத்தினருடன் செல்வி பிரேமா.....

மும்பையின் மலாட் பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுனர் திரு ஜெயகுமார் பெருமாள் அவர்களின் புதல்வி செல்வி பிரேமா தேசிய அளவில் நடந்த சி.ஏ. தேர்வில் முதலிடம் பெற்றுள்ள செய்தி இரண்டு நாட்களாக நாளிதழ்களிலும் தொலைகாட்சி செய்திகளிலும் வந்த வண்ணமிருக்கிறது. 

அதுவும் சாதாரண குடும்பத்தில் பிறந்து 300 சதுர அடி அறையில் வசித்துக் கொண்டு, இத்தனை கடினமான ஒரு தேர்வில் 607/800 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றது நிச்சயம் பாராட்டுக்குரியது.  இன்னொரு சந்தோஷமான விஷயம் இவரது சகோதரனும் இத்தேர்வில் வெற்றி பெற்றது தான். தேசிய அளவிலான இத்தேர்வில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கு பெற்றாலும் இந்த வருடத்தின் தேர்ச்சி பெற்றவர்கள் வெறும் 12% மட்டுமே. அதிலிருந்தே இத்தேர்வு எவ்வளவு கடினம் என்று புரியும்.

தேர்வில் முதலிடம் பெற்ற செல்வி பிரேமாவிற்கு தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பத்து லட்சம் பரிசுத் தொகையும், மத்திய அமைச்சர் திரு ஜி.கே. வாசன் அவர்கள் ஐந்து லட்சம் பரிசுத்தொகையும், தமிழினத் தலைவர் டாக்டர் கருணாநிதி அவர்கள் ஒரு லட்சம் பரிசுத் தொகையும் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். நம்மால் பணமாக ஒன்றும் கொடுக்க முடியாவிடினும், செல்வி பிரேமாவின் முயற்சிக்குப் பாராட்டாக ஒரு பூங்கொத்தினை வழங்கி பாராட்டுவோமே!


இந்த வார முகப்புத்தக இற்றை:

ஹிந்தியில் வந்ததை, தமிழில் தருகிறேன்: 

பிறந்தவுடன் நமக்குப் போட்டுவிடும் துணியில் பாக்கெட் [ஜேப்] இல்லை.  இறந்த பின் நமக்குப் போர்த்தும் வெள்ளைத் துணியிலும் பாக்கெட் இல்லை! பிறகு வாழ்நாள் முழுதும் பாக்கெட்டினை பணத்தால் நிரப்ப ஏன் இந்த ஓட்டம்....


இந்த வார குறுஞ்செய்தி

PAST OF ICE IS WATER AND FUTURE OF ICE IS WATER TOO…  SO LIVE LIKE ICE, NO REGRETS FOR PAST, NO WORRIES ABOUT FUTURE…..  JUST ENJOY EVERY MOMENT….

ரசித்த புகைப்படம்: 



மேல் நோக்கிய மகிழ்ச்சியான பார்வை....
நாளைய நல்வாழ்வின் அடையாளம்....
குழந்தையின் மகிழ்ச்சி கண்டு நானும் மகிழ்ச்சி அடைந்தேன்!
  
ரசித்த பாடல்

மேகமே தூதாக வா....  அழகின் ஆராதனை என்ற இப்பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று. இளையராஜாவின் இசையில் எஸ்.பி.பி மற்றும் பி. சுசீலா குரல் கொடுக்க சிவக்குமார் மற்றும் சுமித்ரா நடிப்பில் இடம் பெற்ற படம் “கண்ணன் ஒரு கைக்குழந்தை”.  நீங்களும் ரசிக்க – இதோ காணொளி!




ரசித்த காணொளி:

சமீபத்தில் ரத்த தானம் செய்வது பற்றிய ஒரு காணொளி பார்த்தேன். தலேசிமீயா இருக்கும் ஒரு பெண் வந்து ரத்தம் கொடுத்ததற்கு நன்றி எனச் சொல்லும் இந்தக் காணொளி – மிகவும் பிடித்தது – காணொளி அனைவரையும் ரத்த தானம் செய்ய வைக்குமென நம்புகிறேன்.


படித்ததில் பிடித்தது:

பெண்மை

அஞ்சரைப் பெட்டியிலும்,
அழுக்குத் துணி மூட்டையிலும்
கரைந்து போன....
அம்மாவின் வாசங்கள்....
கடிகார முட்களோடு...
போட்டிபோட்ட அவள் வேகம்...
அரசு விடுமுறையாம்!
என் வீட்டு அடுக்களைக்கும்,
அம்மாவுக்கும் கிடைக்காமல் போன....
விடுமுறை நாட்கள்....

இது தான் தாய்மையோ?

படித்த மாதிரி இருக்கிறதே எனத் தோன்றுகிறதா? இருக்கலாம் – இக்கவிதை சக வலைப் பதிவர் திருமதி சசிகலா சங்கர் அவர்களின் தென்றலின் கனவு”  தொகுப்பிலிருந்து.  [விரைவில் இப்புத்தகம் வாசித்த அனுபவம் பதிவாக வந்தாலும் வரலாம்!]

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.