தில்லியை நோக்கி
தமிழ்நாடு விரைவு வண்டி விரைந்து செல்லாமல் பனிமூட்டம் காரணமாக சாதாரண வேகத்தில்
சென்று கொண்டிருந்தது. நடுநிசியை நெருங்கிய நேரத்தில் எங்களது பெட்டியில் ஒரே
சத்தமும் குழப்பமும் ஒன்றாய்க் கலந்து செவியை எட்ட, கம்பளிக்குள் புகுந்திருந்த
நான் தலையை மட்டும் வெளியே நீட்டி பார்க்க, அடுத்த பெட்டியான Pantry
Car-ன் மூடியிருந்த இரும்புக் கதவுகளை தட்டியும், உதைத்தும் திறக்கச் சொல்லி
கதறிக்கொண்டிருந்தார் ஒரு பஞ்சாபி மூதாட்டி.
ஏற்கனவே பதிவு
செய்யாத பல பயணிகள் உட்கார்ந்து கொண்டும், தரையில் கிடைத்த இடத்தில் படுத்துக்
கொண்டும் 72 பேர் பயணிக்க வேண்டிய இடத்தில் 100 பேருக்கு மேல் பயணம் செய்து
கொண்டிருக்க, மூதாட்டியின் அழுகுரலால் அனைவரும் எழுந்து கதவுகளைத் தட்டித் திறக்க
முயற்சித்தனர். நாள் முழுதும் உணவுகளை இங்கும் அங்கும் கொண்டு சென்ற களைப்பில்
ஐ.ஆர்.சி.டி.சி. சிப்பந்திகள் நல்ல உறக்கத்தில் – உறக்கத்தின் காரணம் களைப்பு
மட்டும் தானா – அல்லது களைப்பை மறக்க எடுத்துக்கொண்ட டாஸ்மாக் சரக்கா? அவர்களுக்கே
வெளிச்சம்.
மூதாட்டியிடம் ”என்னவாயிற்று
எதற்கு அழுகை?” எனக்
கேட்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவருடன் வந்திருந்த சக மூதாட்டி ஒருவருக்கு
மூச்சு விடமுடியாது நெஞ்சில் ஏதோ ஒரு அழுத்தம். குளிர் வேறு. தட்டித் தடுமாறி
இவரது படுக்கை அருகே வந்து தனது உடல் நிலை சரியில்லை எனக் கூறி கீழே விழுந்திருக்க,
மருத்துவர் யாரேனும் இருக்கிறார்களா எனத் தெரிந்து கொள்ள, மருந்து கிடைக்குமா எனக்
கேட்க, பயணச்சீட்டு பரிசோதகரைத் தேடி வந்திருக்கிறார் இந்த மூதாட்டி.
பயணப்
பரிசோதகருக்கு இரண்டு பெட்டிகளுக்கு ஒரு இருக்கை இருந்தாலும், அதைக் கிடைத்த
காசுக்கு விற்றுவிட்டு, குளிரூட்டப்பட்ட பெட்டியில் சென்று அமர்ந்து
கொண்டுவிட்டார் போலும்! Pantry Car-ஐ தாண்டினால் தானே
குளிரூட்டப்பட்ட பெட்டிக்குச் செல்ல. எங்கள் பெட்டியிலிருந்து முதலாம் ஆண்டு
மருத்துவம் படிக்கும் பெண் தன்னிடம் இருந்த ஒரு மாத்திரையைக் கொடுத்து, அதை அந்த
மூதாட்டிக்குக் கொடுக்கும்படிச் சொல்லிவிட்டு திரும்பவும் தூக்கத்தினைத்
தொடர்ந்தார். அவரைச் சொல்லிக் குற்றமில்லை – இப்போது தானே மருத்துவம் படிக்க
ஆரம்பித்து இருக்கிறார்.
மூதாட்டி, ஒரு
மூடி பிராந்தி இருந்தால் கொடுங்கள், குளிருக்குக் கொடுத்தால் கொஞ்சம் இதமாய் இருக்கும்
எனக் கேட்டுக் கொண்டிருந்தார். எப்போதும் ரயில் பெட்டியில் யாரிடமாவது நிச்சயம்
இருக்கும் – ஆனால் இன்று யாரிடமும் இல்லை – அல்லது ’அடிக்கிற
குளிருக்கு, எனக்கே கொஞ்சம் தான் இருக்கு” என்ற நினைப்பில் கொடுக்கத் தயாராய்
இல்லை! மூதாட்டியுடன் சென்று உடல் நிலை சரியில்லாதவருக்கு சக பயணிகளால் ஆன
முதலுதவிகள் செய்தோம். ஆனாலும் ஒரு பயனும் இல்லாது போயிற்று. மயங்கி விழுந்தவர்
எழுந்திருக்கவே இல்லை.
இத்தனை
விஷயங்கள் நடந்தும் ரயில்வே போலீசாரோ, பயணச் சீட்டு பரிசோதகர்களோ, கிட்டத்தட்ட ஒரு
மணி நேரத்திற்கு அந்தப் பக்கமோ, பெட்டிக்கோ வரவே இல்லை. அதற்குள் வண்டி ஜான்சி
ரயில் நிலையத்தினை அடைந்திருக்க, அங்கே இருந்த ரயில்வே போலீசிடம் சொல்லி, மருத்துவரை
அழைத்து அம்மூதாட்டி இறந்ததை உறுதி
செய்து, மூதாட்டியின் உடலையும், மூதாட்டியுடன் வந்திருந்தவர்களையும் இறக்கி
விட்டார்கள்.
ஒவ்வொரு ரயில்
பயணத்தின் போதும் இது போல அனுபவங்கள். இந்த வண்டியில் ஏறுமுன் திருச்சியிலிருந்து
சென்னை வந்த பல்லவனிலும் ஒரு பயணி இறந்தார் – சிவியர் ஹார்ட் அட்டாக். ரயில்வே நிர்வாகம் – இத்தனை பெரிய ஒரு
நிர்வாகம் – பயணிகளின் மிகக் குறைந்த தேவைகளைக் கூட பூர்த்தி செய்வதில்லை என
நினைக்கும்போது மனது அப்படியே கொந்தளிக்கிறது.
சமீபத்தில்
பயணச்சீட்டு விலைகளை அதிகரித்த – வரும் பட்ஜெட்டிலும் அதிகரிக்க நினைக்கும்
ரயில்வே அமைச்சகம், பயணச் சீட்டின் விலையை அதிகரிக்கும் அதே சமயத்தில் பயணிகளின்
ஆதாரத் தேவைகளையும் மனதில் வைத்துக் கொண்டால் தான் நல்லது. இப்படியே விலையை மட்டும் ஏற்றிக்கொண்டு,
பயணிகளுக்கு எந்த விதமான சௌகரியங்களும் தராமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம்
என்று புரியவில்லை.
பெட்டிகளில்
நம்முடனே பயணச்சீட்டு இல்லாது பயணிக்கும் கரப்பு, எலி, பூச்சிகள், முன்பதிவு
செய்யப்பட்ட பெட்டிகளில் ரைட் ராயலாக ஓபன் டிக்கெட் வாங்கிக்கொண்டு பயணிக்கும்
பிரயாணிகள், ரயிலில் தரும் வாயில் வைக்கமுடியாத உணவு, தினம் தினம் உடமைகளை இழந்து
தவிக்கும் பிரயாணிகள், சுகாதாரமில்லாத கழிப்பறைகள், தேவைக்கதிகமான பொருட்களை
எடுத்துச் செல்லும் பிரயாணிகள் என ரயில் பயணங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
"ரயிலில் ஒரு
மூதாட்டிக்கு உயிர் பிரிந்ததனால் என்ன குறைந்தது இந்திய திருநாட்டில்? நம்
நாட்டின் மக்கள் தொகை தான் வளர்ந்து கொண்டே இருக்கிறதே!" என்று நினைக்கிறதோ ரயில்வே துறை?
வேறொரு
பகிர்வில் மீண்டும் சந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது இறந்தவருடன் வந்தவர் நிலை நினைத்து. அதிலும், சக பயணிகள் 'இறந்த உடலுடன்' பயணிக்கக்கூடாது என்று தகராறு செய்த நிகழ்ச்சிகளை அறிவேன். அது போல ஏதும் நடந்திருக்காது என நம்புகிறேன்.
பதிலளிநீக்குஅம்மாதிரி சக பயணிகள் யாரும் சொல்லவில்லை. முன்பொருமுறை 18 மணி நேரம் ரயில் தாமதமானதால் - அன்று கோர்ட்டில் ஆஜராக முடியாத அதிர்ச்சியில் மரணம் அடைந்த ஒருவரின் உடலுடன் பயணம் செய்த அனுபவம் இருக்கிறது.
நீக்குஆனால் இம்முறை ரயில்வே நிர்வாகமே இறக்கி விட்டார்கள்....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பந்து.
தாய்த்திரு நாட்டின் அவலங்கள். யாரிடம் முறையிடுவது?
பதிலளிநீக்குஎங்கே முறையிடுவது? பல முறை ரயில்வே துறைக்கு கடிதங்கள் எழுதினாலும் பெரியதாக மாற்றங்கள் வருவதில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.
அடப்பாவமே:((((
பதிலளிநீக்குபாவம் தான்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.
படிக்க கஷ்டமாக இருந்தது
பதிலளிநீக்குரயில் ஊழியர்களிடம் மட்டுமல்லாது
பயணிகளிடமும் மனித நேயம் இல்லாமல்
குறைந்து வருவது அதிக கவலையளிக்கத்தன் செய்கிறது
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குtha.ma 2
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் தமிழ்மணம் இரண்டாம் வாக்கிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி!
நீக்குரயில்வேயின் நல்ல முகம்[!!!] நாறுவது அவர்களுக்கே பிடிகிறது போல...!
பதிலளிநீக்குஅபாய சங்கிலியை பிடிச்சு இழுத்து ரயிலை நிப்பாட்டி இருக்கலாம்னு தோணுது நண்பா அப்பிடியாவது அந்த பரிசோதகர் வந்திருக்கக்கூடும் அல்லவா.
சிலர் சங்கிலியை பிடித்து இழுக்க முயற்சிக்க, மற்றவர்கள் தடுத்தார்கள் - நட்ட நடுக்காட்டில் நின்றால் எந்த மருத்துவ உதவியும் கிடைக்காது. விரைந்து அடுத்த ரயில் நிலையத்தினை அடைந்தால் உதவி கிடைக்கலாம் என்பது அவர்களது வாதம்.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நாஞ்சில் மனோ.
ரயில்வேயில் தொடரும் அவலம் ...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!
நீக்குஅந்த மூதாட்டி இறந்தது மிகவும் வருத்தமாக இருக்கு.
பதிலளிநீக்குஉலகத்திலேயே (இரண்டாவது?) பெரிய நிறுவனம் இந்திய ரயில்வே என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதுமா அடிப்படை வசதிகளை நன்றாக செய்ய வேண்டாமா?
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரமா ரவி.
நீக்குசென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடிப்பட்ட ஒருவனை காப்பாற்ற மருத்துவர் எட்டிபார்க்கவே ஒரு மனி நேரம் ஆயிற்று இதனை நான் கண்கூடாக கண்டேன் அப்படி இருக்கும்போது ஓடும் ரயிலில் எல்லாம் மருத்துவ உதவி எதிர்பார்பது என்பது எந்த அளவுக்கு சாத்தியம் என்று தெறியவில்லை.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புரட்சி தமிழன்.
நீக்குஅபாய சங்கிலி என்று ஒன்று எதற்கு இருக்கிறது. மற்றவர்களை குறை சொல்லியே பழகி விட்டது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோபி.....
நீக்குஇது போன்ற நிகழ்வுகள் ரயில்களில் மட்டுமல்ல, அரசு பேருந்துகளிலும் தனியார் பேருந்துகளிலும்,
பதிலளிநீக்குநடைபெறத்தான் செய்கின்றன.
ஒரு பத்து ஆண்டு கட்கு முன்னால் ஒரு ரயில் அமைச்சர் தனது பட்ஜெட்டில், மருத்துவர்கள் பிரயாணிகள்
தம்மை மருத்துவர் என அடையாளம் காட்டி, சில அடிப்படை உயிர் காக்கும் மருந்துகளுடன் தனது விழ்பிரயாணத்தை
துவங்கினால், அவருக்கு கட்டணத்தில் 30 முதல் 50
விழுக்காடு சலுகை தருவதாக சொன்னார். ஆனால், பின் வந்த விதி முறைகள் ப்ராக்டிகலாக இல்லை. மருத்துவ
பிரயாணி இந்த சலுகையை பெறுவதற்கு பூர்த்தி செய்யவேண்டிய பாரங்கள், அதை அனுமதிக்கும் அதிகாரி
எடுத்துக்கொள்ளும் நேரம் இவற்றையெல்லாம் பார்த்தால் , எந்த ஒரு மருத்துவரும் இந்த சலுகையைப் பெற
நினைக்க கூட முடியாது.
அடுத்து, தொலை தூர ரயில்களில் மருத்துவர்களை நியமிக்கலாம். இருந்தாலும் இதில் சில சங்கடங்கள் இருக்கின்றன. அவர் அதிக பட்சம் முதலுதவியோ அல்லது ஒரு சிம்ப்டமேடிக் க்யூராக மாத்திரைகள் மட்டுமே தர இயலும். திடீரென
மாரடைப்போ அல்லது ஸ்ட்ரோக் வரும் பிரயாணிகளுக்கு சிகிச்சை என்ன தருவது ?
முதலுதவிக்கான பெட்டி ஒவ்வொரு ரயிலிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், யார் பொறுப்பேற்றுக்கொள்வது?
எனக்குச் சரியான மாத்திரை தரவில்லை என்ற குற்றச்சாட்டு வரும். தண்டவாள் மறியல் வரும். மற்ற பிரயாணிகள் தானே அவஸ்தை படவேண்டும்.
அதிக பட்சம், மிகவும் மோசமான நிலையில் இருப்பவரை, அடுத்த ஸ்டேஷனில் இறக்கி விடலாம். ஆனால், அந்த இடத்தில் தகுந்த மருத்துவ மனைகள் இருக்க இயலுமா ?
ஆகையால்தான், கண்ணதாசன் அன்றே எழுதினார் என நினைக்கிறேன்.
போனால் போகட்டும் போடா,
சுப்பு தாத்தா.
தங்களது வருகைக்கும் விரிவான கருத்திற்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
நீக்குமூதாட்டி இறந்தது மனதுக்கு கஷ்டமாய் உள்ளது.
பதிலளிநீக்குபயணப் பரிசோதகர் பற்றி சொல்லவே வேண்டாம் ஏன் அவர்கள் இப்படி இருக்கிறார்கள்!
கவலை தரும் பதிவு.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஇம்மாதிரி இக்கட்டான சூழ்நிலைகளில் உதவணும்ன்னுதான் டிக்கெட் வாங்கும்போதே டாக்டர்கள் யாராவது ரயிலில் பயணம் செய்யறாங்களான்னு கேக்கறாங்க. அப்படியும்கூடவா ஒருத்தரும் உதவிக்கு வரலை?..
பதிலளிநீக்குபாவம்தான்.
தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.
நீக்குஆமாம் !நாஞ்சில் மனோ சொன்னது போல செய்திருக்கலாமே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா....
நீக்குஇறப்பது இறைவன் கையில் இருக்கிறது. உயிரைக் காப்பாற்ற ரயில்வேயால் முடியாமல் போனது அனியாயம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வல்லிம்மா.
நீக்குஎன்ன சொல்வது .. யாரை நோவது !
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரவாணி.
நீக்குதங்கள் பதிவை படித்தவுடன் மனதில் நெருடல்தான்! ரொம்பவும் முடியாதவர்கள் முடிந்தவரை பயணத்தை தவிர்த்து விடுவதுதான் நல்லது. யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!
நீக்குமேக்ஸிமம் எந்த டாக்டரும் தன்னை டாக்டர் என்று சொல்லி டிக்கெட் பதிவு செய்வதில்லை.எதுக்கு வம்பை விலை கொடுத்து வாங்கணும் என்ற “நல்ல எண்ணம்” தான்.திருப்பதியில் தரிசனம் செய்ய கூண்டில் இருக்கும் போது அங்கேயே வைகுண்டம் காம்ப்ளக்சில் வைகுண்டம் சென்றார் ஒருவர்.இத்தனைக்கும் அங்கே உடனடி மருத்துவ வசதி உள்ளது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.
நீக்குபயணத்துக்கு நடுல எல்லா விதமான காட்சிகளையும் பாக்க வேண்டி இருக்கு! :(
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தக்குடு.
நீக்குநம்ம ஊர் ரயிலில் போவதும், விண்வெளி ஓடத்தித்தில் பயணிப்பதும் ஒரே மாதிரி ரிஸ்க்குதான் போல. ஒருவேளை சங்கிலியைப் பிடித்து இழுத்து இருந்தால் இன்னும் கொஞ்சம் கவனத்தை ஈர்த்து இருக்கலாமோ!! என்னத்தச் சொல்லி என்னத்த செய்ய. போன உயிர் போனதுதானே.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி [ஈஸ்வரன்].
நீக்குமுதலுதவிபயிற்சி பெற்றவர் ஒருவர் தொலை தொடர் வண்டிகளில் பணியில் இருந்தால் முயற்சி செய்து இருக்கலாம் .நிர்வாகத்தை மட்டும் குறை கூற முடியாது , மக்களின் முதலுதவி பற்றிய விழிப்புணர்வு இல்லாததும் பெரும் குறை .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஸ்ரீனி வாசன்.
நீக்குபடிக்கும்போது கஷ்டமாகத்தான் இருந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குசங்கடப்படுத்தியது..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
நீக்குபடிக்கவே பகீர்னு இருக்கு. யாரையும் குத்தம் சொல்ல முடியாது. நம்ம உடல்நிலைகளைத் தெரிஞ்ச நாம, நமக்குத் தேவையான மருந்துகளைக் கையில் எடுத்துகிட்டு போகவேண்டியது. அதுக்கும் மேலே, ஏதாவதுன்னா, ஆண்டவன்மேலே பாரத்தைப் போட வேண்டியதுதான்.
பதிலளிநீக்குடிடிஆர் அவரோட இடத்தில் இருந்திருந்தா, குறைந்தபட்சம் ஏதாவது முயற்சியாவது செஞ்சிருக்கலாம்னு தோணுது. ஆனால், ஒருவேளை மருத்துவர் யாரும் இல்லைன்னா...
கொஞ்ச நாள் முன்னாடி, டிவி செய்தி வாசிப்பவர் (வரதராஜன் என்றூ நினைக்கிறேன்) இதேபோல மருத்துவ உதவி கிடைக்காமல், ரயிலில் தன் மனைவி இறந்ததைப் பற்றி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஹுசைனம்மா.
நீக்குவயதானவர்கள் தனியே பயணம் செய்வது கூடவே கூடாது. வயதானவர்கள் தங்களை வயதானவர்கள் என்று ஒப்புக்கொள்வதில்லையே!
பதிலளிநீக்குசின்ன வயசு என்றாலும் திடீரென்று ஏதாவது ஆனால் என்ன செய்வது?
இப்படியெல்லாம் நடந்தது என்று கேட்டாலே வருத்தம் தான் மிஞ்சுகிறது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.
நீக்குசங்கடப்படுத்தும் செய்தி
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குட்டன்.
நீக்கு